நிர்வாண நிஜம் - Page 14
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9005
பாரதிராஜாவை ஏமாற்றிய இயக்குநர்!
சுரா
தசரதன்- 1980ஆம் ஆண்டில் இவர் எனக்கு அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் 'மாஸ்டர் தசரதன்' என்ற பெயரில் நடித்தவர் அவர். 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திர```மாக அறிமுகமாக, அதே படத்தில் இன்னொரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் இந்த தசரதன். கே.பாலசந்தர் இயக்கிய 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் தையல் கடைக்காரராக வரும் நாகேஷுக்கு உதவியாளராக காஜா தைக்கும் பையனாக வருவார் தசரதன். அதில் வரும் 'கல்யாண சாப்பாடு போடவா', 'ஒரு நாள் யாரோ' என்ற இரண்டு பாடல் காட்சிகளிலும் நாகேஷுடன் சேர்ந்து மிகவும் இயற்கையாக ஆடி நடித்திருப்பார் அவர். அதை நான் பலமுறை மனதிற்குள் நினைத்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.
எனக்கு தசரதன் அறிமுகமான காலகட்டத்தில், அவர் இயக்குநர் அங்கியை அணிந்திருந்தார். 'சரணம் ஐயப்பா' என்ற பெயரில் பக்திப் படம் ஒன்றை அவர் சொந்தத்தில் தயாரித்து இயக்கியிருந்தார். ரஜினி, கமல், பாடகர் ஜேசுதாஸ் என்று பலரும் அதில் நடித்திருந்தார்கள். தன் பல வருட பட உலக அனுபவத்தைக் கூறி அவர்களை எப்படியோ தன் படத்தில் அவர் இடம் பெறச் செய்திருந்தார். எப்போது பார்த்தாலும் காவி வேஷ்டி, காவிச் சட்டையுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் இருப்பார் தசரதன். தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் 'சரணம் ஐயப்பா' ஓடிக் கொண்டிருந்தது. அவரே படத்தை விநியோகமும் செய்திருந்தார். அந்தத் தியேட்டருக்கு ஆட்டோவில் படத்தின் பிரிண்டுகளைக் கொண்டு வருவது, ஓடிய பிரிண்டை இன்னொரு தியேட்டருக்கு எடுத்துக் கொண்டு போவது- எல்லாமே தசரதன்தான். இந்த 'ஒன் மேன் ஷோ'வை நான் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிப்பேன். இன்று பிஸியான கேமராமேனாக இருக்கும் கிச்சாஸ் ஒளிப்பதிவாளராக அந்தப் படத்தில்தான் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியது.
அதற்கடுத்து 'கடவுளை நம்புங்கள்' என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தார் தசரதன். அவர்தான் படத்தின் இயக்குனரும். ராதாரவி எனக்கு அப்போதுதான் அறிமுகமானார். அவர் அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறார். ராதாரவி, மனோரமாவின் மகன் பூபதி, சக்ரவர்த்தி- இவர்கள்தான் அந்தப் படத்தின் கதாநாயகர்கள். நிகழ் காலத்தை மட்டுமே நினைத்து வாழும் பூபதி, கடந்த காலத்தையே பேசிக் கொண்டிருக்கும் மனோரமா, எதிர்காலத்தை மட்டுமே மனதில் நினைத்து நடைபோடும் சக்ரவர்த்தி, எல்லா காலங்களையும் சமமாக எடைபோட்டு, அலசிப் பார்த்து வாழும் ராதாரவி- இவர்களில் யார் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதை. தசரதன் அந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பன்று பாரதிராஜாவை தசரதன் வரச் செய்திருந்தார். படப்பிடிப்பு நடந்த இடம் நடிகர் சங்க ஆடிட்டோரியம். படத்தின் கதைப்படி நாடக நடிகராக வரும் சக்ரவர்த்தி பல மொழிகளிலும் பேசி நடிக்க, அவரை பாரதிராஜா பாராட்டிப் பேசி, தான் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவதாக மேடையில் பேசுவார். அங்கு வரும்வரை பாரதிராஜாவுக்கு இந்த விஷயமே தெரியாதாம். கடைசி நாள் படப்பிடிப்பை விழா மாதிரி கொண்டாடுகிறார்கள், அதற்குத்தான் தன்னை தசரதன் அழைத்திருக்கிறார் என்றுதான் பாரதிராஜா நினைத்து வந்தாராம். அங்கு வந்த பிறகுதான் அவருக்கே தெரியுமாம்- தன்னை படத்திற்காக பேசி நடிக்க வைத்து ஷூட் பண்ணப் போகிறார்கள் என்பதே. பாரதிராஜா 'யோவ் தசரதா... இரு உன்னை உதைக்கிறேன்' என்று விரலால் சிரித்தவாறே காட்டியதை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் வியாபாரம் ஆகாததால், திரைக்கு வராமலே நின்று விட்டது.
ஒவ்வொரு வருடமும் எது நடக்கிறதோ இல்லையோ- ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுகிற மாதம் வந்துவிட்டால், தசரதன் ஐயப்பனைப் பற்றி படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார். படவுலக நண்பர்கள் கூட கிண்டலாக சில நேரங்களில் கூறுவார்கள்- 'என்ன சார்... சபரிமலை ஐயப்பனுக்கு எல்லாரும் மாலை போட ஆரம்பிச்சிட்டாங்க. தசரதனோட புதுப்பட அறிவிப்பை இன்னும் காணோமே' என்று! அப்படி தசரதன் ஆரம்பித்த படம்தான் 'அருள் தரும் ஐயப்பன்'. ரகுவரன், சரண்ராஜ் இருவரும் அந்தப் படத்தில் நடித்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் இருவருமே மிகவும் பிஸியான நடிகர்களாக இருந்தார்கள். ஐயப்பனின் பெயரைக் கூறி, ‘ஐயப்ப சாமியை பற்றி படம் எடுக்கறேன். நடிக்க முடியாதுன்னு சொல்லிடாதீங்க. கட்டாயம் நீங்க நடிக்கணும்’ என்று அவர்களை பயமுறுத்தியே அவர் கால்ஷீட் வாங்கியிருப்பார்! தசரதன் எப்போது படத்தை ஆரம்பிப்பார் என்றும் தெரியாது, எப்போது படத்தை முடிப்பார் என்பதும் தெரியாது. அவ்வளவு விரைவாக படத்தை அவர் முடித்து விடுவார். அதுவும் மிக மிக குறைந்த பட்ஜெட்டில்... சொல்லப்போனால்- தசரதன் அளவுக்கு படு சிக்கனமாக யாருமே படம் எடுக்க முடியாது. படத்திற்கென அலுவலகம் இருக்காது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் நின்றுகொண்டுதான் படம் சம்பந்தப்பட்ட எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும். தன் கஷ்ட நிலைமைகளைக் கூறி, நடிகர், நடிகைகளிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, அவர்களுக்கு ஒரு சாதாரண தொகையைத் தந்து... இல்லாவிட்டால் சம்பளமே கூட தராமல் அவர்களின் கால்ஷீட்டை வாங்கி... தசரதனைத் தவிர, வேறு யாராலும் இப்படி வெற்றிகரமாக காரியத்தை நிறைவேற்றவே முடியாது. படத்தில் வேலை பார்ப்பவர்களுக்குக் கூட செலவுக்கு ஏதோ தருவார். அவ்வளவுதான்... இருந்தாலும், தசரதன் மீது கொண்ட அன்பால், அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் யாருமே காசை ஒரு பொருட்டாக நினைக்காமல் வேலை செய்வார்கள். தசரதனுக்கு அப்படி ஒரு ராசி! 'அருள் தரும் ஐயப்பன்' திரைக்கு வந்தது. சில மாதங்கள் கழித்து அவர் கார்த்திக், பார்த்திபன் நடிக்க 'எங்கள் சாமி ஐயப்பன்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி திரைக்குக் கொண்டு வந்தார்.
அதற்கடுத்து தசரதன் 'எல்லாம் ஐயப்பன்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். 'முருகா ஓடி வா' என்ற பெயரில் தேனாம்பேட்டை காய்கறி மார்கெட்டிற்கு அருகில் ‘க்ளினிக்’ வைத்திருந்த ஒரு டாக்டர் படத்தைத் தயாரிக்க, அந்தப் படத்தை தசரதன் இயக்கினார். அந்த இரு படங்களும் முற்றிலும் முடிவடைந்தும், வியாபாரம் ஆகாததால் இன்றுவரை திரைக்கு வராமலே போயின. அந்த இரண்டு படங்களுக்கும் பணம் முதலீடு செய்த ஃபைனான்ஸியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நிலைமையை நான் இப்போது கவலையுடன் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எத்தனை லட்சங்களை அந்தப் படங்களில் இழந்திருப்பார்கள்! அவர்களுடைய தொழில் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும்!
வருடத்தின் 365 நாட்களில் 250 நாட்கள் தசரதன் மாலையுடனும், காவி ஆடைகளுடனும்தான் இருப்பார். அப்போது அவர் சிறு பையனைக் கூட 'சார்’ என்றோ, ‘வாங்க போங்க' என்றோதான் அழைப்பார்; தசரதன் காட்டும் மரியாதையைப் பார்த்து நமக்கு அவர் மீது உயர்ந்த அபிப்ராயம் தோன்றும். மாலை போடாமல் இருக்கும் நாட்களில் இதற்கு நேர்மாறாக நடப்பார் தசரதன். எப்போதும் மதுவின் ஆட்சியிலேயே இருப்பார். பகலில் கூட மது அருந்தி விட்டு அவர் பண்ணும் அட்டகாசங்களைத் தாங்க முடியாது. 'சார்' என்று யாரை முன்னர் அழைத்தாரோ, அதே நபரை மது உள்ளே சென்றுவிட்டால், பெயரைக் கூறி அழைக்க ஆரம்பித்து விடுவார் தசரதன். 'வாங்க' என்று அழைத்தவர்களை 'வாடா' என்று அழைப்பார். அதைப் பார்த்து நமக்கு அவர் மீது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். இப்படியொரு விசித்திரமான குணத்தைக் கொண்ட வினோத மனிதர் தசரதன்!
என்மீது தசரதனுக்கு எப்போதுமே அளவற்ற அன்பு உண்டு. நான் மொழிபெயர்க்க இலக்கிய நூல்களை வாசித்துவிட்டு, மனம் திறந்து பாராட்டுவார். நான் அவருடைய வீட்டில் பலமுறைகள் உணவருந்தியிருக்கிறேன். ஒரு முறை தேனாம்பேட்டையில் ஒரு குறுகிய தெருவின் மாடியில் இருந்த அவருடைய வீட்டில் சுமார் இரண்டு மணி நேரம் நான் தசரதனுடன் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தேன். இரவு கிட்டத்தட்ட பத்து மணி ஆகிவிட்டதால், நான் கிளம்பினேன். அப்போது தசரதன் முழு போதையில் இருந்தார். என் கையைப் பிடித்துக் கொண்டு ‘நீ புறப்பட்டுப் போகக் கூடாது. இதையும் மீறி போய்விட்டால், நான் வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து விடுவேன்’ என்று கூறினார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தசரதனின் அந்த நடவடிக்கைகளை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், அவருடைய மனைவியும், மகளும், அண்ணனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தசரதனின் அண்ணன் என்னிடம் ‘நீங்க கிளம்பிப் போங்க சார். போதையில் இவன் இப்படித்தான் சொல்லுவான். எதுவுமே நடக்காது. கவலைப்படாம போங்க’ என்றார். நான் ஒருவித கவலையுடனே அங்கிருந்து கிளம்பினேன். மறுநாள் ஒரு இடத்தில் தசரதனைச் சந்தித்தேன். முதல் நாள் இரவு நடைபெற்ற எந்த விஷயமும் ஞாபகத்தில் இல்லாததைப் போல அவர் என்னிடம் பேசினார்.
ஒரு நீண்ட இடைவேளிக்குப் பிறகு, தசரதனுக்கு பாலுமகேந்திரா இயக்கிய ‘ராமன் அப்துல்லா’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை என்னிடம் பெருமையாக கூறி மகிழ்ந்தார் தசரதன். இப்போது தசரதன் யாருக்காவது ஞாபகத்தில் வருகிறார் என்றால், அது அந்தப் பாடல் காட்சியின் மூலமாகத்தான் இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு தசரதன் திடீரென்று ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவரின் மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் அனாதை ஆனார்கள். நடிகர் சங்கத்தில் அவரின் இறந்த உடல், பார்வைக்காக வைக்கப்பட்டது. தசரதனின் சம்பாத்தியம் என்றோ, சேமிப்பு என்றோ ஒரு பைசா கூட இல்லை. நடிகர் சங்கம்தான் அவரின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளைச் செய்தது.
ஒவ்வொரு வருடமும் தவறாமல் சபரிமலை ஐயப்பன் சீசன் வரத்தான் செய்கிறது. ஆனால், ஐயப்பனைப் பற்றி தவறாமல் படமெடுக்கும் தசரதன்தான் இல்லாமற்போனார்.