நிர்வாண நிஜம்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9000
சுராவின் முன்னுரை
திரையுலகம் பலருக்கும் கனவுலகம். நுழைய முடியாத வாயில். எட்டிப்பிடிக்க முடியாத கனி. ஆசைப்படும் எல்லோருமே இதற்குள் நுழைந்துவிட முடியாது. நூறு பேர் முயற்சி செய்தால் ஒருவர்தான் இதற்குள் நுழைய முடியும். அவருக்கு மட்டுமே வாய்ப்பு. எஞ்சிய நபர்கள் வெறுமனே படவுலகை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
வேறு வழி? அதற்காக தங்களின் ஆசையை அடியோடு அறுத்தெறிந்துவிட்டு அவர்கள் ஓடிவிடுவார்களா என்ன? அதுதான் இல்லை. மீண்டும் என்றாவதொரு நாள் படவுலகிற்குள் நுழைந்துவிட முடியாதா என்று தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நிமிடங்கள் பலவற்றையும் தியாகம் செய்து சென்னைத் தெருக்களில், கோடம்பாக்கம் வீதிகளில் தங்களின் கனவுகளை மனம் முழுக்க தேக்கி வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பார்கள். சிலருக்கு அப்போது படவுலக கோட்டைக் கதவு திறந்து வழிவிடுவதும் உண்டு. கதவு மீண்டும் அடைக்கப்பட்டு வெளியே ஒரு கூட்டமே நின்று கொண்டிருக்கும். அப்போதும் அவர்களின் முயற்சி முற்றுப்புள்ளிக்கு வராது. பயணம் நிற்காது. ஆசை அடங்காது. கனவுகள் கலையாது. அவர்களின் ஆசைக் கனவுகள் மீண்டும் கோடம்பாக்கம் வீதிகளில் நித்தமும்... இதற்காகத்தான் திரையுலகிற்கு கனவுலகம் என்று பெயர் வந்திருக்குமோ?
வாய்ப்பு கிடைக்காதவர்களின் நிலை இதுவென்றால், வாய்ப்பு பெற்றவர்களின் நிலை? இங்கு நுழைந்த எல்லோருமே பீம்சிங்காகவும், ஸ்ரீதராகவும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனாகவும், கே.பாலசந்தராகவும், பாரதிராஜாவாகவும், மகேந்திரனாகவும், பாலுமகேந்திராவாகவும், மணிரத்னமாகவும், ஷங்கராகவும், பாலாவாகவும், சேரனாகவும், அமீராகவும், எம்.எஸ்.விஸ்வநாதனாகவும், இளையராஜாவாகவும், ஏ.ஆர்.ரஹ்மானாகவும் வந்துவிட முடிகிறதா என்ன?
சிலர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தங்களின் கலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சில வெற்றிகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பிறகு படவுலகை விட்டு காணாமலே போய்விடுகிறார்கள். வேறு சிலரோ படவுலகிற்குள் நுழைந்து தோல்விகளைத் தந்து துவண்டு போய், உயிரிருந்தும் பிணமென அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அத்தகைய பல மனிதர்களின் கதைதான் ‘நிர்வாண நிஜம்’ (Nirvana Nijam).
இந்தத் தொடரில் இடம் பெற்றிருக்கும் எல்லோரும் என் கலைப் பயணத்தில் நான் சந்தித்த மனிதர்கள். எனக்கு நெருக்கமாகப் பழக்கமானவர்கள். பலர் என் நெருங்கிய நண்பர்கள். இந்தத் தொடரில் வரும் பலர் பல வெற்றிகளைத் தந்தவர்கள். சாதனைகள் பல புரிந்தவர்கள். இருப்பினும், பல்வேறு காரணங்களால் படவுலகம் ஒரு நாள் அவர்களில் சிலரின் பழைய சாதனைகளை மறந்து, அவர்களை வெளியே விட்டெறிந்திருக்கிறது. வேறு சிலரோ தோல்விகளைத் தந்து காணாமலே போயிருக்கின்றனர். இன்னும் சிலர் விட்ட கோட்டையைப் பிடிக்கும் முயற்சியில் தளர்ந்து போன கால்களுடனும், சுருக்கங்கள் விழுந்த முகத்துடனும், நரை விழுந்த தலை முடியுடனும் நம்பிக்கை என்ற வாளையும், முயற்சி என்ற கேடயத்தையும் கையில் தாங்கிக் கொண்டு எனக்கு எதிரில் நடந்து வந்து கொண்டிருப்பதை நாளும் பார்க்கிறேன்.
இப்போதைய தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைக்கும் இந்த மனிதர்கள் பாடமாக இருக்கட்டும், வேதமாக விளங்கட்டும். நடந்து செல்லும் பாதை இருட்டாக இருக்கிறது என்று சொல்வதல்ல என் எண்ணம். மாறாக, இருண்டு கிடக்கும் பாதையில் இந்த கட்டுரைகள் மூலம், இதில் இடம் பெற்றிருக்கும் மனிதர்களின் வாழ்க்கைகளின் மூலம் ஒரு அகல் விளக்களவு ஒளியாவது அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் நான் செய்யும் செயல் இது.
நான் நேசிக்கும் கலைத் துறைக்குள் சாதனைகள் பல படைக்கும் திறமை கொண்டவர்கள் பலரும் வரவேண்டும், முத்திரைகள் பல பதிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு சிறிதளவிலாவது இந்த நூல் பயன்பட்டால், மனப்பூர்வமாக நான் மகிழ்ச்சி அடைவேன்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)