நிர்வாண நிஜம் - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
கடுமையான பணிகளுக்கு நடுவிலும் கண்ணூர் ராஜன் இசையில் பாடினார் இளையராஜா. அந்த அளவுக்கு கண்ணூர்ராஜன் மீது இளையராஜாவுக்கு மரியாதை! இளையராஜாவை ‘ராஜா’ என்று ஒருமையில் கூப்பிடுகிற அளவுக்கு ராஜனும் நட்பு பாராட்டினார், அந்த உரிமையில்தான், தான் தமிழில் இயக்க முடிவு செய்திருந்த படத்தின் பூஜை தொடர்பான விளம்பரத்தில் இளையராஜாவின் தோள்மீது தான் கைபோட்டபடி நிற்கிற படத்தை கண்ணூர்ராஜன் இடம்பெறச் செய்தார். அதுதான் வில்லங்கமானது! ராஜாவுக்கு அது பிடிக்காமல் போனது. நட்பு என்ற உணர்வோடு ராஜன் செய்த அந்த விளம்பரத்தை இளையராஜாவிடம் சிலர் தவறாக அர்த்தம் கொடுத்து போட்டுக் கொடுத்துவிட்டார்கள், அதனால் ராஜா பூஜைக்கு வர மறுத்துவிட்டார்....
அந்த விஷயம் ராஜனை அதிகம் பாதித்துவிட்டது. இளையராஜா வராமல் போனதை ஒரு மானப்பிரச்சினையாக அவர் கருதினார். இளையராஜாவை வரவேற்று தான் அமைத்திருந்த பேனர்களை அகற்றிவிட்டு படத்திற்கு பூஜை போட்டார்.
அன்றிலிருந்து ராஜன் மனம் நொந்து போய்விட்டார். மலையாளத்தில் மரியாதைக்குரிய இசையமைப்பாளராக வலம் வந்த கண்ணூர் ராஜனுக்கு தமிழ் திரையுலகம் ஆரம்பம் முதலே சோதனையாகத்தான் இருந்தது.
நான் பி.ஆர்.ஓ.வாக இருந்த ஒரு நிறுவனத்தின் தமிழ் திரைப்படத்திற்கு ராஜன்தான் இசையமைப்பாளர். அந்த வகையில் அவரைச் சந்தித்தபோதுதான் எங்களுக்குள் நட்பு மலர்ந்தது. அதுதான் ராஜனுக்குக் கிடைத்த முதல் தமிழ்ப்படம்.
அந்தப் படத்தில் வரும் ஆறு பாடல்களையும் தயாரிப்பாளரான இளைஞரே எழுத, அற்புதமாக இசையமைத்திருந்தார் ராஜன். அதில் வரும் ஒரு பாடலை, அப்போது மலையாளத்தில் பிரபலமாக இருந்த பாடகி அம்பிளி பாடினார். ஆறு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஆனால் தயாரிப்பாளர் மேற்கொண்டு பணம் புரட்ட முடியாத காரணத்தால் தன்னுடைய ஊரைத் தேடிப் போய்விட, ராஜன் இசையமைத்த ஆறு பாடல்களும் வெளிவராமல் முடங்கிவிட்டன.
மனதிற்குள் அந்த வருத்தம் இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்துதான் தானே இசையமைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்தப் பட பூஜையில் கசப்பான அனுபவத்தைப் பெற்ற ராஜன் தொடர்ந்து போராடினார்,
சோதனை அவரை விடவில்லை. படத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பணம் கிடைக்கவில்லை. அதனால் தயாரிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. பின்னர் ஒரு கட்டத்தில் அது நின்றே போனது.
என்னுடைய கடுமையான வேலைகளின் காரணமாக அதற்குப் பிறகு நீண்ட காலம் கண்ணூர்ராஜனை என்னால் சந்திக்க முடியவில்லை. மாதங்கள் பல வேகமாக ஓடி முடிந்தன. அப்படி இருக்கையில் ஒரு நாள் ராஜனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஒரு நண்பரை தற்செயலாகச் சந்தித்தேன்.
அவரைப் பார்த்ததும் எனக்கு ராஜனின் நினைவு வர, அவரிடம் விசாரித்தேன்.
'அடடே, உங்களுக்கு விஷயமே தெரியாதா? அவர் ஹார்ட் அட்டாக்ல இறந்து இரண்டு வருடங்கள் ஆயிடுச்சு, சார்' என்றார் அந்த நண்பர்.
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.
கண்ணூர்ராஜனின் புன்னகை தவழும் முகம் என் கண்களுக்கு முன்னால் தோன்றியது. அவர் எத்தகைய அவமானங்களையும், ஏமாற்றங்களையும் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கு திரையுலகின் மீது ஒரு இனம்புரியாத கோபம் உண்டானது.
அவர் குடும்பம் என்ன ஆனது என்பதைப் பற்றி எனக்கு இதுவரை எதுவும் தெரியாது.
கண்ணூர்ராஜன் இன்று உயிருடன் இல்லை. எனினும், அவர் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய இனிமையான குரலில் ‘நானோ வாச முல்லை’ என்று தான் இசையமைத்த ஒரு பாடலை அவர் எனக்கு பாடி காட்டிய மறக்க முடியாத சம்பவம் என்னுடைய மனத்திரையில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.