நிர்வாண நிஜம் - Page 7
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
சத்யஜித்ரேக்கு மலர் சூட்டிய மகேந்திரன்!
சுரா
இயக்குநர் மகேந்திரன்- தமிழ்த் திரைப்பட உலகின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு பெயர் இது. 1978ஆம் வருடத்தில் இவர் இயக்கி திரைக்கு வந்த 'முள்ளும் மலரும்' படத்தை இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மால் மறக்க முடியுமா? உமாசந்திரன் எழுதிய ஒரு நாவலின் திரை வடிவமே 'முள்ளும் மலரும்'. அண்ணன்- தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட அந்தக் கதையில் முற்றிலும் மாறுபட்ட அருமையான பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். ரஜினியின் இயல்பான நடிப்பையும், சரத்பாபுவின் பாத்திரப் படைப்பையும், ஷோபாவின் நிகரில்லாத நடிப்புத் திறமையையும், 'படாபட்' ஜெயலட்சுமியின் இயற்கையான நடிப்பையும், பாலு மகேந்திராவின் அற்புதமான ஒளிப்பதிவையும், இளையராஜாவின் இசையில் அமைந்த 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்', 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' ஆகிய பாடல்களையும், வாழ்க்கையைப் படமாக, கவித்துவம் மேலோங்க இயக்கியிருந்த மகேந்திரனின் முத்திரையையும்- இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடலெங்கும் சிலிர்ப்பு உண்டாகிறது. தமிழ்த் திரைப்பட உலகத்தின் பொற்காலம் அது.
அடுத்து மகேந்திரன் இயக்கிய படம் 'உதிரிப்பூக்கள்'. புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' என்ற குறுநாவலின் திரைவடிவமே அது. அப்படியொரு படம் இன்று வரை தமிழில் வந்ததில்லை என்பதே உண்மை. கவிதையென வடிக்கப்பட்டிருந்த அப்படம் 175 நாட்கள் ஓடியது என்பது உண்மையிலேயே ஒவ்வொருவரும் மனதில் பெருமைப்பட வேண்டிய விஷயம்!
ரஜினி நடிக்க, மகேந்திரன் இயக்கிய படம் 'ஜானி'. அடிதடி ஆக்ஷன் கதாநாயகனான ரஜினியை வைத்து இப்படிக் கூட ஒரு கவித்துவமான ஆக்ஷன் படத்தை இயக்க முடியும் என்பதை எல்லோருக்கும் காட்டியவர் மகேந்திரன். இளையராஜாவின் இசையில் அமைந்த 'காற்றில் எந்தன் கீதம்' என்ற பாடல் இப்போது கூட மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அசோக்குமாரின் அருமையான ஒளிப்பதிவுக்குச் சான்று அந்தப் படம்.
மகேந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியான படம் 'நண்டு'. சிவசங்கரியின் ஒரு நாவலைப் படமாக இயக்கியிருந்தார். பல காட்சிகள் வட இந்தியாவில் படமாக்கப்பட்டன. வட இந்தியர்கள் வீட்டிற்குள் பேசும்போது, இந்தி மொழியை அப்படியே பயன்படுத்தியிருந்தார் மகேந்திரன். வட இந்திய நகரமொன்றில் பனிப் படலம் விலகாத காலைப் பொழுதில் படத்தின் கதாநாயகன் வீட்டின் மாடியில் நின்றிருப்பான். அந்த அதிகாலை வேளையில் அந்த நகரம் எப்படி இருக்கும் என்பதை 'அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா' என்ற பாடல் மூலம் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரும், இயக்குநர் மகேந்திரனும் சேர்ந்து ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள்.
மகேந்திரன் இயக்கத்தில் உருவான படம் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' சுஹாசினி அதில் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகன்- மோகன். அதில் 'பருவமே...' என்றொரு பாடல் வரும். அடடா...! அதற்கு இணையான ஒரு பாடலை நம்மால் காட்ட முடியுமா? மகேந்திரனின் கற்பனையை எங்கு கொண்டு போய் சிம்மாசனம் போட்டு உட்கார வைப்பது? மகேந்திரன், இளையராஜா, அசோக்குமார் இந்த மூன்று மேதைகளும் முத்திரை பதித்த அந்தப் படம் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
மகேந்திரன் இயக்கத்தில் அடுத்து திரைக்கு வந்த பூட்டாத பூட்டுக்கள், மெட்டி இரண்டுமே மிகச் சிறந்த படங்கள்தான். எனினும், வர்த்தக ரீதியாக அவை வெற்றி பெறவில்லை. ரஜினிகாந்த் நடித்து மகேந்திரன் இயக்கிய 'கை கொடுக்கும் கை'யில் கூட மகேந்திரனின் முத்திரை இருக்கவே செய்தது.
சில வருடங்களுக்கு முன்பு, அரவிந்த்சாமி- கவுதமி நடிக்க, மகேந்திரன் இயக்கிய ‘சாசனம்’ கூட நல்ல படமே.
'ஜானி' படப்பிடிப்பின்போது சென்னை கல்லூரி சாலையில் இருந்த ஒரு வீட்டில் இயக்குநர் மகேந்திரனை 1980-ஆம் ஆண்டில் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவிசங்கர் இயக்கிய 'அன்புள்ள மலரே' என்ற படத்திற்கு மகேந்திரன் வசனம் எழுதினார். அப்போது நுங்கம்பாக்கம் கண்பத் ஹோட்டலில் அவருடன் நீண்ட நேரம் நான் உரையாடியிருக்கிறேன். மகேந்திரனுடன் செலவிட்ட அந்த ஒப்பற்ற நிமிடங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சுகமாகவே இருக்கிறது.
வி.அழகப்பன் இயக்கத்தில் உருவான 'இரண்டில் ஒன்று' என்ற படத்திற்கு வசனம் எழுத வந்த மகேந்திரனுடன், பல சந்தர்ப்பங்களில் பேசி, பல விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நடிகர் நெப்போலியனுடன், இயக்குநர் மகேந்திரனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். கால் மணி நேரம் அவருடன் பேச முடிந்தது. மகேந்திரன் பேசியபோது, அவருக்குப் பின்னால் கறுப்பு- வெள்ளை புகைப்படத்தில் சிந்தனை செய்து கொண்டிருந்தார் சத்யஜித்ரே. அந்தப் புகைப் படத்திற்கு புதிதாகப் பறிக்கப்பட்ட ஒரு செம்பருத்திப் பூவைச் சூடியிருந்தார் மகேந்திரன். அவரின் அந்தச் செயல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சுரேஷ்மேனன், ரேவதி தயாரித்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான ஒரு சீரியலை மகேந்திரன் இயக்கினார். அதே நிறுவனம் தயாரித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'சியாமளா' என்ற மெகா சீரியலுக்கு கதை- வசனம் எழுதினார் மகேந்திரன். அப்போது பல முறை 'டெலிஃபோட்டோ எண்டர்டெயின்மென்ட்ஸ்' அலுவலகத்தில் அவரைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். 'நீங்கள் இயக்கிய படங்கள் வெளியான காலம் தமிழ்ப்பட உலகின் பொற்காலம். அந்த மாதிரியான படங்களை இனி எப்போது பார்க்கப் போகிறோம்? உங்களுக்கு நிகர் நீங்கள்தான்' என்று நான் சொன்னதற்கு. 'அப்படியெல்லாம் நான் பெரிதாக எதுவுமே செய்துவிடவில்லை, மிஸ்டர் சுரா. நான் ஏதோ எனக்கு தெரிஞ்சதை செய்திருக்கிறேன். அவ்வளவுதான்' என்று சர்வசாதாரணமாக கூறினார் மகேந்திரன். அவரின் கூற்றுக்குப் பின்னால் மறைந்திருந்த அடக்கத்தையும் எளிமையையும் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன்.
நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் பல புரிந்து, தமிழ் பட உலகில் சாகா வரம் பெற்ற பல திரைப்படங்களை இயக்கி, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குநர் மகேந்திரனை நினைக்கும்போதெல்லாம், அவருடைய வீட்டில் செம்பருத்தி மலருடன் இருக்கும் சத்யஜித்ரேயின் புகைப்படமும் என்னுடைய ஞாபகத்தில் வருகிறது.