நிர்வாண நிஜம் - Page 8
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
ஷகீலாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தூக்கில் தொங்கினார்!
சுரா
ஆர்.டி.சேகர் - அவர் எனக்கு அறிமுகமானது 1992-ஆம் ஆண்டில். அப்போது சுரேஷ் மேனன் கதாநாயகனாக நடித்து 'புதிய முகம்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார், அந்தப் படத்திற்கு நான் பி.ஆர்.ஓ. சுரேஷ்மேனனின் படத்திற்கு சேகர்தான் பட தொகுப்பாளர்.
ஒல்லியான உருவம்- ஆள் சிறுத்துப் போய் காணப்படுவார். அலட்சியமாக வாரப்பட்டிக்கும் தலைமுடி. அதிகம் பேசமாட்டார். தேவைப்பட்டால்தான் வாயைத் திறப்பார். பெரும்பாலும் சிகரெட் அவருடைய உதட்டில் இருக்கும்- இதுதான் ஆர்.டி.சேகர். பார்த்த கணத்திலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாலு மகேந்திரா இயக்கிய 'சந்தியா ராகம்' என்ற அருமையான டெலிஃபிலிமிற்கு சேகர்தான் படத் தொகுப்பாளர். பரதன் இயக்கிய மிகச் சிறந்த படமான 'வைஷாலி'க்கு எடிட்டராகப் பணிபுரிந்தவரும் சேகர்தான். திறமை வாய்ந்த, மாறுபட்ட படங்களை உருவாக்கும் படைப்பாளிகளிடம் அவர் பணி புரிந்ததாலோ என்னவோ, ஆர்.டி.சேகரிடம் ஆரம்பத்திலேயே எனக்கு ஒரு ஒட்டுதல் உண்டாகிவிட்டது.
தனித்திருக்கும் வேளைகளில் பரதன், பாலுமகேந்திரா ஆகியோரின் படைப்புத் திறன் குறித்து நேரம் போவதே தெரியாமல் நானும், சேகரும் பேசிக் கொண்டிருப்போம். அவர்களின் படங்களை அலசிப் பார்த்து பல விஷயங்களை நான் கூறுவேன். சேகரும் பல தகவல்களைக் கூறுவார்.
சில நாட்கள் கழித்து 'சந்தியா ராகம்' டெலிஃபிலிமை தொலைக்காட்சியில் நான் பார்க்க நேர்ந்தது. ஒரு காவியத்தைப் போல பாலுமகேந்திரா உருவாக்கியிருந்த அந்த டெலிஃபிலிமை பிரமாதமாக எடிட் செய்திருந்தார் சேகர். அதைப் பார்த்தபோது சேகரின் திறமை மீது எனக்கு மேலும் மரியாதை உண்டானது.
'புதிய முகம்' படம் திரைக்கு வந்து நன்றாக ஓடியது. ஆர்.டி.சேகரின் எடிட்டிங் திறமையை சுரேஷ்மேனனும், யூனிட்டில் பணிபுரிந்த மற்றவர்களும் மனம் திறந்து பாராட்டினார்கள். ஆங்கிலப் படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டிருந்த அந்த மாறுபட்ட படத்தை மிகவும் அருமையாக எடிட் பண்ணியிருந்தார் சேகர் என்பதே உண்மை.
அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கே.எஸ்.அதியமான். சேகரின் எடிட்டிங் திறமையை எத்தனையோ முறை என்னிடம் பாராட்டிக் கூறியிருக்கிறார் அதியமான். 'சேகர் அருமையான எடிட்டர், அண்ணே. அவன்கிட்ட நல்ல திறமை இருக்கு. இப்போ இருக்குற மிகச் சிறந்த எடிட்டர்கள்ல சேகரும் ஒருவன்' என்று கூறுவார் அதியமான்.
சுரேஷ் மேமன் இயக்கி, அரவிந்த்சாமி- ரேவதி நடித்து வெளியான 'பாச மலர்கள்' படத்திற்கும் ஆர்.டி.சேகர்தான் படத் தொகுப்பாளர். 'ஆவிட் எடிட்டிங்' முறையைப் பயன்படுத்தி தமிழில் எடிட் செய்யப்பட்ட முதல் படம் 'பாசமலர்கள்'தான். ஆர்.டி.சேகர் மைலாப்பூர் 'டெலிடேப்' எடிட்டிங் அறையில் 'ஆவிட் சிஸ்டம்' முன்னால் அமர்ந்து எடிட் செய்ததை இப்போது கூட நான் நினைத்துப் பார்க்கிறேன்.
படங்களுக்கு எடிட்டராகப் பணி புரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில் மீரான் சாஹிப் தெருவில் தனக்கென்று பட விநியோக நிறுவனம் ஒன்றை வைத்துக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்களை விநியோகம் செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தார் சேகர். பட வேலைகள் இல்லாத நேரங்களில் சேகர் பொதுவாக அங்குதான் இருப்பார்.
இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் சேகர் என்னைத் தேடி வந்தார் ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற பெயரில் படமொன்றை சொந்தத்தில் தான் தயாரித்து இயக்க திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். கவர்ச்சி அம்சங்கள் கொண்ட ஒரு கதை அது. படத்தின் கதாநாயகியாக ‘சில்க்’ ஸ்மிதாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறினார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம்.ஸ்டுயோவில் நடைபெற்றது. ஆர்.டி.சேகர், கே.எஸ்.அதியமான், நான் மூவரும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வயதான அம்மா ஒருவர் இரு இளம் பெண்களுடன் அங்கு வந்து நின்றார். அவர்கள்- சில வருடங்களுக்கு முன்பு கேரளத்தையே கலக்கிய ஷகீலாவும், அவரின் தங்கை ஷீத்தலும். ஷகீலா அதற்கு முன்பு எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அப்போது அவருக்கு வயது 16 இருக்கும். இரண்டு சகோதரிகளுமே படத்தில் நடித்தார்கள். ஷகீலா, 'சில்க் 'ஸ்மிதாவிற்குத் தங்கையாக- படம் முழுக்க வருகிற முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
'ப்ளே கேர்ள்ஸ்' முற்றிலும் முடிவடைந்தது. சேகர் நினைத்த அளவிற்கு படம் வினியோகம் ஆகவில்லை. எனினும், படத்தை எப்படியோ திரைக்குக் கொண்டு வந்துவிட்டார். படம் ரிலீஸாவதற்கு முதல் நாள் நான் சேகரை மீரான் சாஹிப் தெருவில் உள்ள அவரின் அலுவலகத்தில் பார்த்தேன். 'நஷ்டத்துலதான் சார் படத்தை ரிலீஸ் பண்றேன்' என்றார். அதுதான் நான் சேகரை இறுதியாக பார்த்தது.
'ப்ளே கேர்ள்ஸ்' படம் திரைக்கு வந்து பல மாதங்களுக்குப் பிறகு என் காதில் ஒரு செய்தி வந்து விழுந்தது. எடிட்டர் ஆர்.டி.சேகர் தூக்குப் போட்டு இறந்துவிட்டார் என்பதே அது. என்னால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. 'ப்ளே கேர்ள்ஸ்' படத்திற்காக வாங்கியிருந்த கடன்களாலும், பணத்தைத் தந்தவர்கள் உண்டாக்கிய தொந்தரவுகளாலும் மனமுடைந்து போன சேகர் தன் வீட்டின் ஒரு அறையில் தூக்குப் போட்டு தொங்கிவிட்டார் என்று கூறினார்கள்.
மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு, மரணத்தைத் தானே தேடிக் கொண்ட ஆர்.டி.சேகரின் செயல் மீது எனக்கு உடன்பாடில்லைதான். 'ப்ளே கேர்ள்ஸ்' படத்தைச் சொந்தத்தில் எடுக்காமல், வெறும் எடிட்டராக மட்டுமே இருந்திருந்தால், நிச்சயம் சேகர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்.
'சில்க்'ஸ்மிதா இறந்து போனதால் கிடைத்த அனுதாபத்தாலும், மலையாளப் பட உலகில் கொடி கட்டிப் பறந்த ஷகீலா இருப்பதாலும் 'ப்ளே கேர்ள்ஸ்' இப்போது திரையிடப்படும் இடங்களிலெல்லாம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் இப்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தயாரித்த சேகர் 'ப்ளே கேர்ள்ஸ்' படத்தின் போஸ்டர்களில் மட்டுமே இருக்கிறார்.