நிர்வாண நிஜம் - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9004
அழ வைத்த கேயார்
சுரா
திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வந்து, படவுலகிற்குள் புயலென நுழைந்து பல சாதனைகளைப் புரிந்தவர் இவர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முக்கிய பொறுப்பில் இருந்து படவுலகிற்கு பல நல்ல காரியங்களைச் செய்த போதும், 'மை டியர் குட்டிச்சாத்தான்', 'பூவே பூச்சூடவா' போன்ற படங்களை விநியோகம் செய்தபோதும், கவிதாலயா நிறுவனம் உருவாக்கிய பல படங்களை தொடர்ந்து வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு இவர் விநியோகம் செய்து வந்தபோதும், 'பாடும் வானம் பாடி', 'சின்னப் பூவே மெல்லப் பேசு', 'சோலைக்குயில்' ஆகிய படங்களின் முழுமையான ஆக்கத்திற்கு முதுகெலும்பாக இவர் இருந்தபோதும், 'ஈரமான ரோஜாவே' படத்தைத் தயாரித்து முதல் தடவையாக இயக்குநர் அங்கியை அணிந்த போதும் கேயாரை ஆர்வத்துடனும், நல்ல எண்ணத்துடனும் நான் பார்த்து மனதிற்குள் வாழ்த்தியிருக்கிறேன்.
எனினும், கேயாரை நெருங்கிப் பார்த்து, அவரின் நல்ல குணத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு 1990-ஆம் ஆண்டுவாக்கில் கிடைத்தது. அப்போது, சில திரைப்படங்களையும், சில தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்த அழகன் தமிழ்மணி, சரத்குமாரை வைத்து 'சித்திரைப் பூக்கள்' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்.எஸ்.ஸி. என்று அழைக்கப்படும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவுக்காக ஒரு தொகையை கேயாரிடம் கேட்டிருக்கிறார் தமிழ்மணி. கேயாரும் 'நாளைக்கு ஒப்பந்தப் பத்திரத்தை டைப் பண்ணிக் கொண்டு வா. நான் வீட்டில் இருப்பேன். சரியாக காலை பத்து மணிக்கு வந்துவிட வேண்டும். என் தாயார் உடம்புக்குச் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். நாளைக்கு அட்வான்ஸாக ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். உன்னிடம் பணத்தைக் கொடுத்த பிறகு, நான் மருத்துவமனைக்கு அம்மாவைப் பார்க்கப் போக வேண்டும்' என்று முதல் நாளே தமிழ்மணியிடம் கூறியிருக்கிறார் கேயார்.
இந்த விஷயத்தை மறுநாள் என்னிடம் கூறினார் தமிழ்மணி. ஒப்பந்தப் பத்திரத்தை டைப் பண்ணி எடுத்துக் கொண்டு கேயாரை பார்ப்பதற்காகச் சென்ற தமிழ்மணியுடன் சேர்ந்து நானும் போனேன். தேனாம்பேட்டை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரிக்கு எதிரில் இருக்கும் தெருவில் இருந்தது கேயாரின் வீடு. நாங்கள் கேயாரின் வீட்டிற்குள் நுழைந்தபோது, சரியாக காலை பத்து மணி. கேயார் தமிழ்மணிக்காக தன் மடியில் ஒரு ப்ரீஃப்கேஸை வைத்துக் கொண்டு காத்திருந்தார். தமிழ்மணியைப் பார்த்தவுடன் 'உனக்காகத்தான் காத்திருக்கிறேன். இந்தா... 50,000 ரூபாய் இருக்கு. இந்தப் பணம் போனாத்தான் ஊட்டியில் படப்பிடிப்பு நடக்கும்னு சொன்னே. போ... போயி ஆக வேண்டிய வேலைகளைப் பார்' என்று சொன்ன கேயார், ஐந்து 100 ரூபாய் கட்டுகளை எடுத்துத் தந்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட தமிழ்மணி, அம்மாவுக்கு எப்படிண்ணே இருக்கு?' என்று கேட்டார். அதற்கு கேயார் 'ஹாஸ்பிட்டலுக்குப் போயி அம்மாவோட பாடியை இனிமேல்தான் வாங்கணும்' என்றார். அப்போதுதான் கேயாரின் தாயார் இறந்துபோன விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது.
கேயார் சொன்னதைக் கேட்டு தமிழ்மணி கண்கலங்கி விட்டார். 'ஏண்ணே ஹாஸ்பிட்டலுக்குப் போகாம இங்கே இருக்கீங்க?' என்று கேட்ட தமிழ்மணியிடம், 'உன்னை நான் காலையில் பத்து மணிக்கு வரச் சொல்லிட்டேன். நான் பணம் தந்தால்தான் நீ ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த முடியும். அதற்காகத்தான் நீ வரட்டும்னு நான் பணத்தோட உனக்காக காத்திருந்தேன். என்னால் உன் படத்தின் ஷூட்டிங் பாதிக்கக் கூடாது இல்லையா?' என்றார் கேயார். நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் வராமல் கேயாரின் காலில் விழுந்து வணங்கினார் தமிழ்மணி. அந்தக் கணத்திலேயே என் மனதில் கேயார் என்ற மனிதர் ஆழமாக பதிந்துவிட்டார்.
சில வருடங்களுக்குப் பிறகு கேயார் சொந்தத்தில் பரதன் இயக்கத்தில் 'ஆவாரம்பூ' என்ற படத்தையும், சிவாஜியைக் கதாநாயகனாக வைத்து 'சின்ன மருமகள்' என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வேலர்ஸ் ரோட்டில் இருந்த கேயாரின் அலுவலகத்தில் தினமும் அவரை நான் சந்திப்பேன். அவரின் பல வருட பட உலக அனுபவங்களைப் பற்றி நான் கேட்க, அவரும் ஆர்வத்துடன் அதைக் கூறுவார். 'சின்ன மருமகள்' படத்தின் கதாநாயகன் சிவாஜி என்பதாலும், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர் என்பதாலும், அப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் நடிகர் திலகத்தின் புகைப்படங்களை ஏராளமாக வரச் செய்தேன். அதைப் பார்த்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு வயதான திரைப்பட விநியோகஸ்தர் கேயாரைப் பார்த்து, 'சிவாஜியின் புகைப்படங்களை இவர் அதிகமாக பத்திரிகைகளில் வரச் செய்கிறார். சிவாஜியின் படத்தைப் பார்த்து, இப்போது யார் படம் பார்க்க வருகிறார்கள்? அதனால் அவருடைய புகைப்படங்களை குறைவாக பத்திரிகைகளில் இடம்பெறச் செய்யும்படி சாரிடம் சொல்லுங்க, கேயார்' என்றார். அவர் சென்ற பிறகு கேயார், என்னைப் பார்த்து 'இந்த ஆள் சொல்கிறார் என்று நீ எதுவும் நினைக்காதே. அடிப்படையில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான மனிதர். அந்தக் காலத்தில் சிவாஜியின் படங்களை வாங்கி பல கோடிகள் சம்பாதித்தவர். இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு நன்றியில்லாமல் பேசுகிறார். இதுதான் படவுலகம். நீ அந்த ஆள் கூறியதை பொருட்படுத்தாதே. சிவாஜிக்கு எல்லா விளம்பரங்களிலும் நல்ல முக்கியத்துவம் கொடு. அவரின் புகைப்படங்கள் ஏராளமாக வருவது மாதிரி பார்த்துக் கொள். இந்த நூற்றாண்டில் சிவாஜியைப் போல ஒரு நடிப்பு மேதையை நம்மால் பார்க்க முடியுமா? சிவாஜியின் புகைப்படம் பத்திரிகைகளில் வருவதைப் பார்த்து, யாரும் படம் பார்க்க ஒருவேளை வராமல் போனால், பரவாயில்லை. அந்த நஷ்டத்தை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். அதற்காக அந்த மகத்தான கலைஞனை நாம் களங்கப்படுத்தக் கூடாது. இன்னும் சொல்லப் போனால்- எனக்கு இந்தப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. சிவாஜியை விட்டால், இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு எந்த நடிகரையும் போட முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் எந்த அளவிற்கு பிரமாதமாக சிவாஜி நடித்திருக்கிறார் தெரியுமா? நான் கூறுகிறேன்- நிச்சயம் இந்த படம் மக்களின் ஆதரவைப் பெற்ற சிறப்பாக ஓடும்' என்றார்.
கேயார் கூறியது மாதிரியே 'சின்ன மருமகள்' திரைக்கு வந்து நன்றாக ஓடியது.
கேயாரை நான் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம், இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தவறாது என் மனதில் வலம் வரும். அந்தச் சமயத்தில் கேயாரின் முகத்தையே மதிப்புடன் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.