நிர்வாண நிஜம் - Page 12
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9005
பத்து நாட்கள் கழித்து ஒரு நாள் அந்தப் படத்தின் அலுவலகத்தில் நல்ல நாள் என்று ‘ஆபீஸ் பூஜை’ போட்டார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர்களில் ஒருவரே இசையமைப்பாளர். அவர் தனியார் தொழிற்சாலையில் உயர் அதிகாரியாக இருப்பவர். அவரை எனக்கு முருகானந்தம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் இருக்கும் மனமகிழ்மன்றம் நடத்தும் விழாக்களில் அவர்தான் இசையமைப்பாராம். இந்த ஒரு விஷயம் போதாதா என்று அவரையே படத்தின் இசையமைப்பாளராக்கி விட்டார் முருகானந்தம். ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பார்கள். ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றால், பல மனிதர்களையும் அனுசரித்துப் போய்த்தான் ஆக வேண்டும். தயாரிப்பாளரே கதை எழுதுவார், அவரே இசையமைப்பார், ஏன்- ஒளிப்பதிவு கூட செய்வார். எல்லாவற்றுக்கும் ஒரு இயக்குனர் தன் தலையை ஆட்டி ஒத்துக் கொள்ள வேண்டும். முருகானந்தம் அதைத்தான் செய்திருந்தார். நாய் வேடம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்! பூஜையில் கலந்து கொண்டபோதே ஒருவருக்கொருவர் ஒட்டுதலே இல்லாமல் தனித்தனி தீவுகளாக இருந்தார்கள். நான் அதைப் பார்த்தபோதே, இந்தப் படம் வளர்வதற்கு வாய்ப்பு இருக்குமா என்று சந்தேகப்பட்டேன். முருகானந்தம் ஏதோ ஆர்வக் கோளாறில் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார், இந்தப் படம் படப்பிடிப்பு அளவிற்குப் போவதற்கு வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன்.
நான் எண்ணியது மாதிரிதான் நடந்தது. அந்தப் படம் எடுக்கப்படவில்லை. சில மாதங்களில் அதற்கென எடுக்கப்பட்டிருந்த அலுவலகம் காலி செய்யப்பட்டது. மீண்டும் டைரியுடன் சாலைகளில் தென்பட ஆரம்பித்தார் முருகானந்தம். படத்திற்காக முயற்சி பண்ணுகிறேன் என்று அதிகமாக அலைந்ததாலோ என்னவோ, அவரின் முகம் கறுத்துப் போய்விட்டது. அவரின் மனக் கவலை முகத்தில் தெரிந்தது. வெயிலில் அலைந்ததால், அவரின் ஆடைகள் பல நேரங்களில் மிகவும் அழுக்கடைந்து காணப்படும். இவை எல்லாவற்றையும் மீறி- என்னை எங்கு பார்த்தாலும், 'எப்படி சார் இருக்கீங்க?' என்று பளீர் சிரிப்புடன் நலம் விசாரிப்பார் முருகானந்தம். இவ்வளவு போராட்டங்களையும், முயற்சிகளையும், கவலைகளையும், ஏமாற்றங்களையும் மனதிற்குள் வைத்துக் கொண்டு எப்படி இந்த மனிதரால் இப்படி நிர்மலமாகச் சிரிக்க முடிகிறது என்று நான் ஆச்சரியப்படுவேன்.
பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அவரை மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடா சாலையில் பார்த்தேன். ''சென்னைத் தொலைக்காட்சிக்காக ஒரு டி.வி. சீரியல் பண்ண முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன். படத்தைத் தயாரிக்க, சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கல. படச் செலவு ரொம்பவும் அதிகமாயிச்சு. 'புதிய சரித்திரம்' படம் பண்ணின காலத்துக்கும், இப்போ இருக்குறதுக்கும் ரொம்பவும் வித்தியாசம் இருக்கு. அதனால இப்போதைக்கு டி.வி. சீரியல் ஒண்ணை டைரக்ட் பண்ணுவோம், நேரம் வர்றப்போ படத்தை இயக்குவோம்ன்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். தூர்தர்ஷன்ல இது விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன். ஒரு கதை ஏற்கனவே வேறொரு ஆளுக்கு ஓகே ஆகியிருக்குது. அவங்க இதைப் பண்ண விரும்பல. நல்ல ஒரு விலைக்கு விற்பதற்குத் தயாரா இருக்காங்க. அதுக்குத்தான் ஒரு பார்ட்டியைத் தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். ஆள் கிடைச்சாச்சின்னா, டி.வி. சீரியல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்'' என்றார் முருகானந்தம்.
இந்தச் சந்திப்பு நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, என் அலுவலகத்திற்கு வந்து என்னை அவர் சந்தித்தார். தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் வாங்கும் சம்பளம், தயாரிப்புச் செலவு, டெக்னீஷியன்களின் சம்பளம், விளம்பர நிறுவனங்களின் விவரங்கள் போன்றவற்றை என்னிடம் அவர் தெரிந்து கொண்டு போனார். அதுதான் நான் முருகானந்தத்தைப் பார்த்த கடைசி முறை. அதற்குப் பிறகு முருகானந்தம் என் கண்களில் எங்கும் படவே இல்லை.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எதேச்சையாக நான் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்- முருகானந்தம் மரணத்தைத் தழுவிவிட்டார் என்று! என்னால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. 'நிச்சயமா இருக்காது. வதந்தியா இருக்கும்' என்றேன் நான். 'இல்லை சார்... அவர் இறந்தது உண்மைதான்' என்றார் அவர் உறுதியான குரலில்.
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, இயக்குநர் ராபர்ட்டை நான் காமராஜர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது சந்தித்தேன். அவரிடம் முருகானந்தத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் ‘நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான்' என்றார். வருடக்கணக்கில் வெயிலிலும் மழையிலும் தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்ததில் முருகானந்தத்தின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிறகு, பல நண்பர்களும் சொல்லி எப்படியோ முருகானந்தம் தன் மனைவி, குழந்தைகளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு வீட்டைப் பார்த்து வைத்து, குடும்ப வாழ்க்கையை சென்னையில் தொடர்ந்திருக்கிறார். விதி அவரை மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்க்கையை வாழ விடவில்லை. 'ஹார்ட் அட்டாக்' வடிவத்தில் வந்து அவரை இந்த உலகத்திலிருந்தே எடுத்துக் கொண்டு போய்விட்டது.
படத்தை இயக்க வேண்டும் என்ற வெறியுடன், கஜினி முகமதுவைப்போல சிறிதும் முயற்சி தளராமல் கடுமையான வெயிலிலும், அடாத மழையிலும், கொடுமையான குளிரிலும் சென்னை நகரத்தின் சாலைகளில் டைரியைக் கையில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் அலைந்து கொண்டிருந்த முருகானந்ததத்தின் அந்த வெள்ளைச் சிரிப்பையும், கள்ளம் கபடமில்லாத குழந்தைத்தனம் குடி கொண்டிருக்கும் முகத்தையும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், என்னால் மறக்கத்தான் முடியுமா?