திலகன் என்ற மகாதிலகம் - Page 7
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6285
கிரீடத்தையும் செங்கோலையும் படைத்த ராஜகுரு
-இயக்குனர் சிபி மலயில்
தமிழில் : சுரா
சண்டை போட்டுக் கொண்டு நிற்கும்போது, கள்ளங்கபடமற்ற தன்மை விலகிப் போயிராத ஒரு குழந்தையைப் பற்றிய ஞாபகங்கள், திலகன் அண்ணனுடன் உண்டாகும் பழக்கத்தின் ஆரம்ப காட்சிகளில் தோன்றும். பேபி ஷாலினியை மலையாள மக்களுக்கு மிகவும் பிடித்தவராக ஆக்கிய ‘என்றெ மாமாட்டுக்குட்டியம்மைக்கு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் அது நடந்தது. இயக்குநர் ஃபாஸில் வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்றபோது, ஒரு வார காலத்திற்கு கேமராவிற்குப் பின்னால் நிற்கக் கூடிய பொறுப்பு இணை இயக்குனராக இருந்த என்னிடம் வந்து சேர்ந்தது. இப்படி தற்காலிகமாக இயக்குனர் தொப்பியை அணிபவர்களின் மீது பல நேரங்களில் நடிகர்கள் நம்பிக்கை வைக்க தயங்குவார்கள். அதற்கு அவர்களை குறை கூறவும் முடியாது. நான் சில காட்சிகளை எடுத்தபோது, திலகன் அண்ணனுக்கும் இப்படிப்பட்ட சந்தேகம் உண்டானது. ஆனால், என்னுடைய விளக்கங்களில் அவர் திருப்தியடைந்து விட்டார். எங்களுடைய நட்பு அங்கு தொடங்கியது.
நான் இயக்குனரான ‘ராரீரம்’ என்ற திரைப்படத்தில் திலகன் அண்ணனுக்கு டாக்டர் வேடம். டப்பிங் முடிந்து கிளம்பியபோது, அவர் ‘உங்களுடைய குணத்திற்கு ஏற்ற ஒரு ஆளை எனக்கு தெரியும். சாலக்குடியைச் சேர்ந்தவன். விருப்பம் இருந்தால், அந்த ஆளை வந்து பார்க்கச் சொல்கிறேன்’ என்றார். அந்த வார்த்தைகளைப் பின் தொடர்ந்து, எனக்கு முன்னால் வந்து நின்ற மனிதர் – பிற்காலத்தில் மலையாளப் பட உலகிற்கு தன்னுடைய பேனாவின் முனையில் கூடு உண்டாக்கிய லோஹிததாஸ். சாலக்குடி சாரதி தியேட்டர்ஸின் நாடகங்களை திலகன் அண்ணன் இயக்கிக் கொண்டிருந்த காலத்தில் லோஹி அந்த நாடகக் குழுவிற்கு உதவியாக இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தின் பாதைதான் என்னை நோக்கி நீண்டிருக்கிறது.
அது என்னுடைய வாழ்க்கையையும், லோஹியின் வாழ்க்கையையும் புதிய ஒரு திசையை நோக்கி திருப்பிவிட்டது. ‘ஹிட் காம்பினேஷன்’ என்ற வார்த்தையில் ஒலிக்கும் வர்த்தக ரீதியான வெற்றியைவிட, சில நல்ல திரைப்படங்களை உருவாக்கிய இரசாயன முயற்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அதன் காரணகர்த்தாவாக திலகன் அண்ணன் இருந்தார். கிரீடத்தையும், செங்கோலையும் எப்போதும் ராஜகுருக்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள். என்னையும் லோஹியையும் ஒன்று சேர்த்த செயலின் மூலம், அவர் அப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் மலையாளப் பட உலகில் ஏற்றிருந்தார்.
‘கிரீட’த்தைப் பற்றி நினைத்தபோது, அச்சுதன் நாயராக எங்களால் வேறொரு முகத்தை கற்பனை பண்ணி பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால், அந்தச் சமயத்தில் திலகன் அண்ணன் கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருந்தவர்களைவிட, மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் ‘சாணக்யன்’ என்ற திரைப் படத்திலும், பகலில் ‘வர்ண’த்திலும் நடித்துக் கொண்டிருந்தார். தூக்கம் கூட இல்லாத நடிப்பு வாழ்க்கை... அவர் அந்தப் படங்களில் நடித்து முடித்துவிட்டு வருவதை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தால், மோகன்லாலின் கால்ஷீட் தேதிகளில் பிரச்னை வந்து விடும். நேரில் சென்று திலகன் அண்ணனைப் பார்த்தேன். அண்ணன் இல்லையென்றால், அந்த திரைப்படம் எடுப்பதையே கைவிட வேண்டியதிருக்கும் என்று கூறியபோது, அவர் சிறிது நேரம் என்னுடைய முகத்தையே பார்த்தார். பிறகு ‘நான் அந்த அளவிற்கு அவசியம் வேண்டும் என்று தோன்றினால், வருகிறேன். ஆனால், பகலிலும் இரவிலும் கிடைக்கக் கூடிய ஒன்றோ இரண்டோ மணி நேரங்களில் மட்டுமே முடியும்’ என்று சொன்னார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். அச்சுதன் நாயர், திலகனுக்கென்றே பிறந்த கதாபாத்திரம். அவர் இல்லையென்றால், அச்சுதன் நாயர் மரணமடைந்து விட்டார் என்பதுதான் உண்மை.
இரண்டு திரைப்படங்களுக்கு நடுவில் கிடைக்கும் இடைவெளி நேரங்களில் திலகன் அண்ணன் ‘கிரீட’த்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வருவார். வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் ‘இப்போது... மூணு... நாலு மணி நேரங்கள் ஃப்ரீயா இருக்கு. ஷாட்டிற்கு தயாராகிக் கொள்ளுங்கள்’ என்று கூறுவார். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, நம்பவே முடியவில்லை. யாராக இருந்தாலும், மூச்சுவிட முடியாத அளவிற்கு இருந்த சூழ்நிலையிலிருந்து ஓடி வந்துதான் திலகன் என்ற நடிகர், அச்சுதன் நாயர் என்ற தந்தையின் முள் கிரீடத்தைத் தன் தலையில் அணிந்தார்.
‘கிரீட’த்தின் உச்சக் கட்ட காட்சி படமாக்கப்படும் நாள். ‘சாணக்ய’னின் படப்பிடிப்பிலிருந்து அவரை விடவில்லை. கீரிக்காடன் ஜோஸை ஒரு வழி பண்ணி விட்டு, சேது மாதவன் கத்தியை வீசுவது வரை படம் பிடித்தாகிவிட்டது. வெளிச்சம் போவதற்கு அதிகபட்சம் போனால், ஒரு மணி நேரம் ஆகும். இனி திலகன் அண்ணன் வரும் காட்சியைத்தான் எடுக்க வேண்டும். மீதியை பின்னால் இன்னொரு நாள் ‘ஷூட்’ பண்ணிக் கொள்ளலாம் என்பது முற்றிலும் இயலாத காரியம். கன்டின்யுட்டி உட்பட பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். அதை நன்கு புரிந்து கொண்டிருந்த காரணத்தால், திலகன் அண்ணன் ‘சாணக்யன்’ படப்பிடிப்பு குழுவினரிடம் ‘என்னைப் போக அனுமதிக்கவில்லையென்றால், நான் இந்த படத்தை முடித்துக் கொள்கிறேன். நான் போயே ஆக வேண்டும். நான் போவேன்...’ என்று கூறியிருக்கிறார். ‘சாணக்ய’னின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் நகரத்தில் நடந்து கொண்டிருந்தது. ‘க்ரீட’த்தின் படப்பிடிப்பு 22 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஆர்யநாட்டில்... அந்த தூரத்தையும், எதிர் குரல்களையும் கடந்து வந்து சூரியன் மறைவதற்கு முன்னால் திலகன் அண்ணன் சொன்னார் : ‘சேது, கத்தியைக் கீழே போடுடா... அப்பா சொல்றேன்டா...’
‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படம்தான் நாங்கள் இறுதியாக ஒன்று சேர்ந்து செய்த படம். அதன் திரைக்கதாசிரியரும் திலகன் அண்ணனுக்குத் தெரிந்த ஆள்தான். டி.எ.ரஸாக்... உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததற்கு மத்தியில் அவர் நடிப்பதற்கு வந்திருந்தார். ஆனால், கேமராவிற்கு முன்னால் வந்து நின்றதும், எல்லா வேதனைகளையும் மறந்துவிட்டார். முழுமையாக சினிமாவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது திலகன் அண்ணனின் வாழ்க்கை. முழுமை என்ற விஷயத்தில் சிறிதும் குறைபாடே இல்லாத நான்கு எழுத்துக்கள்... அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு நடுவில் அவர் இன்னொரு திரைக்கதாசிரியரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரின் பெயர் கெ.கிரீஷ்குமார் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் உண்டான நட்பு.... திலகன் அண்ணனின் மூலம் என்னிடம் வந்து சேர்ந்த மூன்றாவது ஆள் – கிரீஷ்.
‘பெருந்தச்சன்’ என்ற வார்த்தை திலகன் அண்ணனைப் பற்றி உள்ள கட்டுரைகளிலெல்லாம் இருக்கும். பயன்படுத்தி தேய்ந்து போன உளியைக் குறிப்பிடுவதைப் போல... அப்படி அவர்கள் பல நேரங்களில் பயன்படுத்துவது – அவருக்குள் இருக்கும் சிற்பியைப் புரிந்து கொண்டு அல்ல. ஆனால், என்னுடைய அனுபவத்தில் நடிகர் என்பதைத் தாண்டி, திலகன் அண்ணனிடம் மிகப் பெரிய ஒரு ஆற்றல் இருந்தது. அது – திறமை கொண்டவர்களை மெருகேற்றி உருவாக்கக் கூடிய ஆற்றல். லோஹியும் ரஸாக்கும் கிரீஷூம் அந்த விரலின் மூலம் படவுலகிற்கு வந்தவர்கள்.
ஒரு முழுமையடையாத நிலையுடன்தான் திலகன் என்ற நடிப்பு மேதை இங்கிருந்து சென்றிருக்கிறார். தகுதி உள்ளவராக இருந்தும், எவ்வளவோ தடவைகள் தேசிய விருது அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கிறது. அதனால் உண்டான வேதனை இறுதி வரை திலகன் அண்ணனின் இதயத்தில் இருந்தது. திலகன் என்ற திறமை வாய்ந்த நடிகருக்கு இந்தியாவின் மிகச் சிறந்த நடிகருக்கான விருது மரணம் வரை கிடைக்கவில்லை என்ற விஷயத்தில் வெட்கப்பட வேண்டியது அவரல்ல... இந்திய படவுலகம்தான்.
திலகன் அண்ணன் கோபித்துக் கொண்டிருக்கிறார். பல தடவைகள்... ‘தனியாவர்த்தனம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு மத்தியில் மம்மூட்டி மிகவும் பிஸியாக இருந்ததால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டியதிருந்தது. செய்வது தவறு என்று தெரிந்திருந்தது. ஆனால், வேறு வழியில்லை. அந்த விஷயம் திலகன் அண்ணனை வேதனைப்படச் செய்தது. ‘ஷாட்’டிற்கு அழைத்தபோது, அவர் வரவில்லை. நான் சென்று அழைத்தபோது, திலகன் அண்ணன் ‘நீங்கள் கூறும்போது, என் முகத்தில் உணர்ச்சிகள் வரும் என்று நினைக்கிறீர்களா? அது உணர்வு ரீதியான ஒரு செயல். நேற்று எடுத்த காட்சியின் எஞ்சிய பகுதியில், அப்போது இருந்த உணர்ச்சிகள் இப்போதும் இருக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?’ என்று கேட்டார். என்னிடம் பதிலெதுவும் இல்லை. ஆனால், அவர் அப்போதே வந்து நடித்தார். அதே நேரத்தில் – முகத்தில் ஒரு வருத்தம் சிவந்து காணப்பட்டது. அதற்குப் பிறகு திரையுலக அமைப்பின் மீது உண்டான வாக்குவாதங்கள் உட்பட என் மீது கருத்து வேறுபாடு கொண்டார். எதையும் மனம் திறந்து கூறக் கூடிய குணத்தின் அடையாளம் அது. கூற வேண்டியதை முகத்தைப் பார்த்து கூறுவார். கோபப்படுவார். ஆனால், அது நீடித்து நிற்காது.
வெளியே நாம் பார்க்கும் திலகனுக்குள் ஒரு சிறு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைதான் நம்மிடம் கோபித்துக் கொண்டு இருந்ததும், சண்டை போட்டதும்... முதல் காட்சியில் பார்த்ததைப் போலவே, திலகன் அண்ணனின் இறுதி காட்சியிலும் ஒரு குழந்தையின் இருத்தலை நான் உணர்கிறேன்....