திலகன் என்ற மகாதிலகம் - Page 6
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6285
ஒரு மிகப் பெரிய நடிகரின் பிரிவு!
நடிப்பின் எல்லையற்ற தன்மையை வெளிப்படுத்திய திலகன்!
-மலையாள மனோரமா (தலையங்கம்)
தமிழில்: சுரா
மலையாள திரையுலகின் மரியாதைச் சின்னமாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்தார் திலகன். திரைச் சீலையில் நடிக்கக் கூடிய இடங்களின் சாத்தியங்களையும், திறமையையும் வெளிப்படுத்தி விட்டுத்தான் அவர் அரங்கத்தை விட்டு வெளியேறிச் செல்கிறார். இணை கூற முடியாதது என்று சாதாரணமாக கூறக் கூடிய சொற்களை கம்பீரமாக திலகன் என்ற பெயருடன் சேர்த்து நாம் இனிமேல் எல்லா காலங்களிலும் நி்னைத்துப் பார்ப்போம்.
எந்த இடத்திலும் தலை குனியாத போராளியாக இருந்தார் திலகன். சாதாரணமாக ஒரு நடிகனைச் சோதித்துப் பார்க்கும் கதாபாத்திரங்களை, அந்த காரணத்தால்தான் அவரால் மிகவும் அனாயாசமாக தோற்கடிக்க முடிந்தது. ஒரு மிகச் சிறந்த திறமையைக் கொண்ட நடிகரால் முடியக் கூடிய வகையில், அவர் தன்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அபூர்வமான உயிர்ப்பையும், சக்தியையும் அளித்து அவர்களை திரையுலக வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறச் செய்தார். திலகன் உயிர் கொடுக்காத அவருடைய கதாபாத்திரங்களின் பெயரை ஞாபகப்படுத்தி கூறும்படி சொன்னால், மலையாளிக்கு பதில் கூற முடியாது என்பது உறுதி. தானே கற்றுக் கொண்டும், கற்பித்துக் கொண்டும் இருந்த தன்னுடைய நடிப்புப் பள்ளியை வளர்த்து, அதைப் பெரியதாக ஆக்கி, திலகன் எப்போதும் மனதில் வைத்துக் கொண்டு நடந்தார். திரையுலகைத் தேடி வரும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு, தான் படித்த பாடங்களை அன்புடன் சொல்லிக் கொடுத்தார். முன்னால் அமர்ந்திருக்கும் மிகப் பெரிய நடிகருக்குள் இருந்த பொக்கிஷத்திற்கு நிகரான நடிப்பு பல்கலைக் கழகத்தை அவர்கள் வியப்புடன் தெரிந்து கொண்டார்கள்.
இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, நாடக மேடையில் ஏறிய அந்தச் சிறுவனில் இருந்து, இந்த வருடம் திரைக்கு வந்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில் வரும் கதாபாத்திரம் வரை உள்ள தூரம், மலையாள திரையுலக வரலாறு கண்ட பெரிய நடிகர்களில் ஒருவரின் புதுமை நிறைந்த நடிப்பின் வரலாறும் கூட. கடல் ஆர்ப்பரிக்கக் கூடிய குரலில், ஒழுங்கும் தெளிவும் உள்ள உடல் மொழியில், உணர்ச்சிகளின் முழுமையில் – அந்த நடிகர் தன்னுடைய கதாபாத்திரங்களுக்குள் சுரேந்திர நாத திலகன் என்ற முத்திரையைப் பதித்தார். திரைப்படம் என்ற ஒன்று உருவான காலத்திலிருந்து, பலரும் பல தடவைகள் வெளிப்படுத்திய பாசத்தையும், அன்பையும், இரக்கத்தையும் கொடூரத்தையும், பகையையும், தோல்வியையும், வெற்றியையும் அந்தத் திலகம் அணிந்து கொண்டு, திரைச் சீலைக்கு வந்தபோது இதுவரை பார்க்காத வகையில், அவை மிகவும் வித்தியாசமாக வெளிப்படுவதை நாம் பார்த்தோம்.
கவனித்தலின் ஆழத்தாலும், அனுபவங்களால் மெருகேற்றப்பட்ட பாடங்களாலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்குள் இருக்கும் நடிகனை புதுமையாக காட்டிய செயலில் திலகன் வேறுபட்டு நின்றார். அந்த கதாபாத்திரங்கள் சாகாவரம் பெற்றவையாக ஆயின. தன்னுடைய நெஞ்சுக்குள் அமைதியாக ஒலித்துக் கொண்டிருக்கும் உளியின் அழுகையை, திரை அரங்குகளின் அழுகையாக மாற்ற முடிந்த பெருந்தச்சன், ‘மூணாம் பக்கம்’ கடல் உண்டாக்கிய பெரிய இழப்பின் கையைப் பிடித்துக் கொண்டு, ஆழங்களுக்குள் கால் இடறாமல் இறங்கிச் செல்லும் தாத்தா, கவலை நிறைந்த விதியின் விளைவுகளான ‘கிரீட’த்தையும் ‘செங்கோ’லையும் அணிய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான மகனுக்காக, அமைதியை இழந்து துடித்த தந்தை, ஏதோ கணக்கு புத்தகத்தில் வாழ்க்கை ‘ஸ்படிக’த்திற்கு நிகராக பிரகாசிப்பதையும், விழுந்து உடைவதையும் பார்க்க நேர்ந்த சாக்கோ மாஷ்... திலகனின் உணர்ச்சிகள் நிறைந்த கதாபாத்திரங்களை ஒரு வெறும் பட்டியலில் எப்படி ஒதுக்கி நிறுத்த முடியும்? திரையுலகிற்குள் திரும்பி வரும் செயலை ஒரு நடிகர் எந்த அளவிற்கு மிக உயர்ந்த ஒரு செயலாக ஆக்க முடியும் என்பதை அவர் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார். அமைதி நிறைந்த இடைவெளிக்குள்ளிருந்து உணர்ச்சி நிறைந்த உத்வேகத்துடன் மீண்டும் ‘இந்தியன் ருப்பி’ படத்தின் மூலம் திரைக்கு வந்தபோது, ‘இவ்வளவு காலமும் எங்கே இருந்தீங்க?’ என்று உடன் வரும் கதாபாத்திரம் கேட்டது- அந்தத் திரும்பி வந்த செயலை சூசகமாக வினவியதைப் போலவே இருந்தது.
கடுமையான கலகத்தையும், அதை விட கடுமையான அன்பையும் கொண்டு எழுதப்பட்ட சுயசரிதைதான் திலகனுடையது. நடிப்பு என்பது – குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால் – அவரவர்களுடைய ஆனந்தமே என்ற விஷயத்தை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதை ரசிகனுக்கு வெளிப்படுத்துவது என்பது ஒரு கலைஞனுக்கு கிடைத்த பாக்கியம் என்ற விஷயத்தையும் அவர் உணர்ந்திருந்தார். வேடத்தை அணிந்த மனிதர் இல்லாதபோதும், வேடங்கள் நீண்ட காலம் நிலை பெற்று நின்று கொண்டிருக்கும் என்ற உண்மையை திலகன் புரிந்து வைத்திருந்தார். அந்தப் புரிதலை அவர் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையின் உண்மையாக ஆக்கினார்... அழகாகவும் ஆக்கினார்...