ஒளிவிளக்கு - Page 8
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
அடுத்து என்ன செய்வதென்ற கவலையில் நான் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். திடீரென்று அந்த இடத்தின் காவலாளி அங்குவந்து, தலைமழிக்கப்பட்ட சில பிச்சைக்காரர்கள் நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும், அதனால் அவர்களைப் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினான்.
அதைக் கேட்டு டிங்கானாக் மிகுந்த சந்தோஷத்திற்கு ஆளானான்.
“கடவுள்கள் கருணை மனம் கொண்டவர்கள். பலி கொடுக்கப்படும் மனிதனை அவர்களே நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.”
நானும் சந்தோஷப்பட்டேன். இந்த பிரச்சினைக்கு இவ்வளவு சீக்கிரம் தீர்வு கிடைக்கும் என்பதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பிச்சைக்காரர்களைவிட சிறந்த பலியாக வேறு யார் கிடைப்பார்கள்? கடவுள்கள் உண்மையிலேயே கருணை மனம் கொண்டவர்கள்தாம்!
அவர்கள் நான்கு அல்லது ஐந்துபேர் இருப்பார்கள். அவர்கள் காவி உடைகள் அணிந்திருந்தார்கள். யாசகத்திற்கான பாத்திரங்களை கையில் வைத்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நடுத்தர வயதைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஒரே ஒருவரைத் தவிர. அவர் மிகவும் வயதானவராகவும், சுமார் எழுபது வயது நிறைந்தவராகவும் இருந்தார்.
வயதான மனிதர் ஒரு புன்னகையுடன் கூறினார் : “உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!”
நான் அந்த வயதான பெரியவரைப் பார்த்ததுதான் தாமதம், என்னுடைய ஆன்மாவை ஒரு மின்னல் தொட்டதைப்போல உணர்ந்தேன். நான் யார், நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்து விட்டேன். இனம்புரியாத, கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகள் எனக்குள் அலைமோதிக் கொண்டிருப்பதைப்போல உணர்ந்தேன். அவர் யார்? இந்த அளவிற்கு பேரழகு படைத்த இந்த அளவிற்கு கருணை தாண்டவமாடும் ஒரு முகத்தை என் வாழ்க்கையில் நான் எந்தச் சமயத்திலாவது பார்த்திருக்கிறேனா? கடவுள்களிடம் எந்த அளவுக்கு ஒளி நிறைந்திருக்கும் என்று நான் கற்பனை செய்து வைத்திருந்தேனோ, அது அந்த மனிதரிடம் நிறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த ஒளியும் சாந்த நிலையும் அவருடைய கண்களில் தெரிந்தன. அவருடைய கண்கள்க ஒரு சக்தி படைத்த பிரகாசத்துடன் ஒளிர்ந்துகொண்டிருந்தன.
என்னுடைய இதயம் திரும்பத் திரும்ப கூறியது: ‘ஒளிவிளக்கு! ஒளி விளக்கு!’
திகைத்துப்போய் நான் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவர் திரும்பவும் புன்னகைத்தார். அவருடைய முகம் பிரகாசத்துடன் காணப்பட்டது. அவர் சொன்னார் : “மகனே, நாங்கள் ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கும் பிச்சைக்காரர்கள். நாங்கள் குஷி நகருக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்றிரவு உங்களுடைய முகாமில் தங்குவதற்கு எங்களுக்கு தயவ>செய்து இடம் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.”
பதைபதைப்பு நிறைந்த குரலில் நான் கேட்டேன் : “நீங்கள் யார்?”
அவருடன் நின்றுகொண்டிருந்த ஒரு மனிதர் சொன்னார் : “சாக்கிய நாட்டு இளவரசர் கௌதமரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?”
தன்னுடைய சிம்மாசனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வந்த இளவரசன் இவர்தான்! தலைமை அமைச்சர் வர்ஷாகரின் வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த்தேன். அவர் இந்த மனிதரை தந்திர குணம் கொண்டவர், அயோக்கியர், பேராசை பிடித்தவர் என்று கூறினார். நான் எனக்குள் சிரித்துக்கொண்டேன். இந்த மனிதர் எப்படி தந்திர குணம் கொண்டவராகவும் பேராசை பிடித்தவராகவும் இருக்க முடியும்? இதுபோன்ற ஒரு மனிதரை நான் இதற்குமுன்பு எந்த சமயத்திலும் பார்த்ததே இல்லை. இந்த மனிதரைச் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய அதிர்ஷ்டம் இல்லாமற்போன தலைமை அமைச்சருக்காக நான் வருத்தப்பட்டேன்.
எனக்குள் உண்டான அளவற்ற உணர்ச்சிகளின் பெருக்கால் நான் நடுங்க ஆரம்பித்தேன். என்னுடைய கண்கள் தடை செய்ய முடியாத அளவிற்கு கண்ணீரால் நிறைந்தன. என்னுடைய கடந்தகால வாழ்க்கை பயனற்ற செயல்களால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது என்பதைப்போல நான் உணர்ந்தேன்.
நான் அவருடைய பாதங்களில் விழுந்து சொன்னேன் : “நான் குருடனாக இருக்கிறேன், கடவுளே ! எனக்குப் பாதையைக் காட்டுங்கள்.”
அவர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டே கூறினார்: “மகனே, என்னுடைய ஆசீர்வாதங்கள் உனக்கு இருக்கின்றன. நீ உண்மையை உணர்ந்து, சரியான பாதையில் நடப்பாய்.”
நான் சொன்னேன் : “கடவுளே ! என்னை உங்களின் அடுக்குகளுக்குள் சிறகுகளுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தெய்வீக ஒளியில ஒரு சிறிய பகுதியை எனக்கு அளியுங்கள்.”
சாக்கிய நாட்டின் இளவரசர் கூறினார் : “அப்படியே நடக்கட்டும்..”
அவர் தன்னுடைய உள்ளங்கையை என் தலையில் வைத்தவாறு கூறினார் : “நான் உன்னை என்னுடைய உலகிற்குள் வரும்படி செய்கிறேன். இப்போதிருந்து நீங்கள் எட்டு அடுக்குகள் கொண்ட பாதையைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு நிரந்தரமான அமைதி கிடைக்கும். இதுதான் நான் உங்களுக்கு அளிக்கும் ஆசீர்வாதம்.”
நான் அவருடைய பாதத்திற்கு அருகில் அமர்ந்து மூன்று புனித வார்த்தைகளை அதாவது... புத்தமதத்தின் மூன்று வைரங்களை உச்சரித்தேன்.
சம்பவம் நடந்துகொண்டிருந்த இடத்தைவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தான் டிங்கானாக். குரூரத்தன்மை கொண்டவனாகவும், பலசாலியாகவும் இரக்க குணமே இல்லாதவனாகவும் இருந்த அதே டிங்கானாக்கின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் தழுதழுத்த குரலில் தொடர்ச்சியே இல்லாமல் வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
பூகம்பம் உண்டாகி எங்களுடைய பழைய வாழ்க்கையைப் புரட்டிப்போடுவதைப்போல உணர்ந்தோம். நாங்கள் புழுக்களாக இருந்தோம். இந்த மிகப்பெரிய ஞானியைச் சந்தித்ததும் மனிதர்ளாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதைப்போல உணர்ந்தோம்.
மறுநாள் காலையில் மிகப்பெரிய ஞானியான கௌதமர் குஷி நகரை நோக்கிப் புறப்பட்டார். அவர் ஆற்றின் கரையில் நின்றுகொண்டு, தன் கையில் என் கையை எடுத்து வைத்தவாறு சொன்னார்: “மகனே, நயவஞ்சகம் நயவஞ்சகத்தை உற்பத்தி செய்கிறது. அமைதிக்காக உழை.”
நான் ஆர்வத்துடன் கேட்டேன் : “மீண்டும் உங்களை நான் எப்போது பார்ப்பேன், கடவுளே?”
அவர் அந்த அற்புத புன்னகையை வெளியிட்டவாறு சொன்னார் : “நான் குஷி நகருக்குச் செல்கிறேன். திரும்பவும் வரமாட்டேன்.”
தொடர்ந்து இரண்டு நதிகளும் சங்கமமாகும் இடத்தை தன்னுடைய கண்களைக் கொண்டு தூரப்பார்வை பார்த்த அவர், வினோதமான, தீர்க்க தரிசனம் நிறைந்த குரலில் கூறினார்: “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உன்னுடைய வேலை புகழப்படும் என்பதை என்னால் பார்க்கக முடிகிறது... இந்தச் சிறிய பாடலி கிராமமும் நீங்கள் கட்டப் போகும் கோட்டையும் ஒரு புகழ்பெற்ற நகரமாக வளரும். கலாச்சாரமும், வர்த்தகம், கலை, அறிவியல் ஆகியவற்றின் மைய நகரமாக அது இருக்கும். இந்த பெரிய நகரத்தில் என்னுடைய வழிகாட்டல்கள் ஆழமாக வேரூன்றி நிற்கும். உன்னுடைய படைப்பு காலத்தைக் கடந்து நிலைபெற்று விளங்கட்டும்.”
அவர் என்னை மீண்டும் ஆசீர்வதித்தார். தொடர்ந்து நிர்வாண நிலையை... எல்லையற்ற பரம்பபொருளுடன் சங்கமமாகும் நிலையை நோக்கிய தன் பயணத்தை அவர்தொடர்ந்தார்.
டிங்கானாக் பின்னர் டிங்காச்சாரியர் என்ற ஒரு புகழ் பெற்ற புத்தமத தத்துவவாதியாக அறியப்பட்டான். இந்தப் பிறவியில் ஏழை ரயில்வே க்ளார்க்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான், ஒரு காலத்தில் பாடலி புத்திரம் என்ற நகரத்தைக் கட்டிய, புத்தர் என்ற சக்தி படைத்த மனிதரை எதிர்பாராமல் சந்தித்த அந்தச் சிறிய இடைவெளியில் தன் வாழ்க்கையில் வியக்கத்தக்க ஒரு மாற்றத்தை அடைந்த, புகழ்பெற்ற குமாரதத்தனாக இருந்தவன்.