ஒளிவிளக்கு - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
மழைக்காலத்தின்போது கட்டட வேலை செய்பவர்கள், தொழிலாளிகள், மரவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு பெரும்பாலும் வேலை இருக்காது. அதனால், என்னுடைய ஆட்களை ஒன்றுதிரட்டுவதில் எனக்கு எந்தவொரு சிரமமும் இருக்கவில்லை. காரணம்- அவர்கள் வேறெங்கும் வேலையில் ஈடுபடாமல் இருந்ததுதான். வெகுசீக்கிரமே என்னுடைய பத்தாயிரம் ஆட்களும் நகரத்தைவிட்டு அதன் பல வாசல்கள் வழியாக, யாருக்கும் தெரியாமல், யாருடைய கவனங்களையும் ஈர்க்காத வகையில் வெளியேறினார்கள். பிற்பகல் மூன்று மணி ஆனபோது, பல்வேறு குழுவினரும் நகரத்திலிருந்து ஆறு மைல்களுக்கப்பால் சந்தித்துக் கொண்டார்கள்.
அந்த இடத்திலிருந்து கங்கை மற்றும் ஷோன் நதிகள் சங்கமிக்கும் இடம் நூறு கல் தொலைவில் இருந்தது. அதைக் கடப்பதற்கு ஒருநாள் பயணம் செய்ய வேண்டும். சில விஷயங்களை விவாதித்த பிறகு, இரவு வந்துசேரும் வரை நாங்கள் பயணிப்பது என்ற முடிவிற்கு வந்தோம். இரவு வேளையில் சாலையோரத்தில் தங்கியிருந்துவிட்டு, காலையில் வெகுசீக்கரமே நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிப் புறப்படுவதென்று தீர்மானித்தோம். பிற்பகலில் நாங்கள் பாடலி கிராமத்தை அடைவோம். ராணுவத்தின் படை வீரர்களைப்போல நாங்கள் அணிவகுத்துச் சென்றோம். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குளிர்ந்த ஈரமான காற்று வீசிக் கொண்டிருந்தது. இரவில் கட்டாயம் மழை பெய்யும். ஆனால், நாங்கள் யாருமே அதற்காக கவலைப்படவில்லை. உற்சாக மனநிலையுடன் எல்லாரும் சேர்ந்து உரத்த குரலில் பாடிக்கொண்டே முன்னோக்கிப் பயணித்தோம்.
அந்தக் காலத்தில் மகத நாட்டிலிருந்து பல நல்ல சாலைகள் இருந்தன. அரசாங்கத்தின் கருவூலத்திலிருந்து அந்த சாலைகளுக்காக மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டது. பல சாலைகள் கற்களால் ஆனவை. சாலைகளின் ஓரத்திலேயே கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன. பயணிகளுக்கு நிழல் தருவதற்காக மரங்கள் நடப்பட்டிருந்தன. பல இடங்களில், சாலைகளுக்கு குறுக்காக ஓடிக்கொண்டிருந்த நதிகளுக்கு மேலே பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் படகுகள் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு மக்களை ஏற்றிச் சென்றன. வர்த்தகர்களும் பொருட்கள் விற்பவர்களும் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மீது ஏறி, அந்தச் சாலைகளின் வழியாக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு விலைமதிப்பு கொண்ட பொருட்களுடன் பயணித்தார்கள். பல இடங்களில் கலைஞர்கள்கூட ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பயணித்தார்கள். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு குதிரைகளின்மீது செல்லும் தூதுவர்களை மிகவும் வேகமாக அனுப்புவதற்கு அந்தச் சாலைகளைத்தான் அரசர்கள் பயன்படுத்தினார்கள்.
சாலைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு உள்ளதாக இருக்காது. திருடர்களிடமிருந்தும் பயங்கரமான காட்டுவாழ் மனிதர்களிடமிருந்தும் ஆபத்துகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இத்தகைய தாக்குதல்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலும், எங்கோ ஒரு சில இடங்களிலும்தான் நடந்தன. சாலையின் ஓரங்களில் முகாம்கள் அமைத்து கூட்டம் கூட்டமாக தங்கியிருந்த வீரர்கள், அந்தச் சாலைகளை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொண்டதே அதற்குக் காரணம் நாங்கள் கடந்துசென்ற சாலை வடக்கு திசையில் பாகீரதி நதி ஓடும் இடம்வரை நீளமாகப் போய்க்கொண்டிருந்தது. வெகு சீக்கிரமே இருள்வந்து மூடியது. மழை மேகங்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. காற்று தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தது. சாலையில் ஓரத்திலிருந்த வயல்களில் கூட்டம் கூட்டமாக நாங்கள் தங்கினோம். நாங்கள் எங்களுடைய இரவு உணவை எடுத்து வந்திருந்தோம். எங்களில் சிலர் சமையல் செய்வதற்காகவும், உணவை சூடு படுத்துவதற்காகவும் நெருப்பை எரிய வைத்தனர். ஆனால், காற்று மிகவும் பலமாக வீசிக்கொண்டிருந்ததால், அது எளிதான செயலாக இருக்கவில்லை. ஆங்காங்கே நெருப்பை மூட்டிக்கொண்டு பாதியளவு இருட்டை விரட்டியடித்த அந்த முழுக் காட்சியும், ஆவிகள் பங்குபெறும் ஒரு கொண்டாட்டத்தைப்போல தோற்றம் அளித்தது. அந்த மெல்லிய இருட்டில் குரல்கள் கேட்டன. பாடுவது, உரையாடுவது, இன்னும் சொல்லப்போனால்- சண்டை போடுவது. அணையும் நிலையிலிருந்த நெருப்பின் பாதி வெளிச்சத்தில் முகங்கள்கூட சரியாகத் தெரியவில்லை. நான் சிறிது மானின் மாமிசத்துடனும், சில பழங்களுடனும் என்னுடைய உணவை முடித்துக்கொண்டேன்.
நேரம் அதிகமாகி விட்டிருந்ததால், ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஒரு துணியை விரித்துப்போட்டு, அந்த இரவுப் பொழுதைக் கழிப்பதற்கு தயாரானேன். அப்போது எனக்கு முன்னால் இரண்டு மனிதர்கள் வந்து நின்றார்கள். நான் கேட்டேன் : “யாரது?” ஒரு மனிதன் கூறினான். “அய்யா, நான் இந்த இடத்தின் காவலாளி. சாலையின் ஓரத்தில், கிணற்றுக்கு அருகில் யாரென்று தெரியாத ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். நான் அவரை உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்.”
நான் சொன்னேன் : “ஒரு பந்தத்தைப் பற்ற வை.”
பந்தத்தை எரியவைத்தபோது, அந்த காவலாளி ஒரு உயரமான, கிட்டத்தட்ட நிர்வாண நிலையிலிருக்கும், தாடி வளர்ந்திருந்த, வளைவான மூக்கைக் கொண்டிருந்த, கூர்மையான கண்களைக் கொண்டிருந்த மனிதனை அழைத்து வந்திருப்பதைப் பார்த்தேன். நான் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டேன் : “அந்த கிணற்றுக்கு அருகில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
அந்த மனிதன் சிறிதுகூட கண்களை இமைக்காமல் என்னைப் பார்த்துக்கொண்டே கூறினான்: “நீ இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பாய். உன்னுடைய நெற்றியில் அரச களையை நான் காண்கிறேன்.”
புகழ்ச்சிகளைக் கேட்டு சந்தோஷப்படும் வயதை நான் கடந்து வந்துவிட்டேன். போதாதற்கு, தலைமை அமைச்சர் வேறு என்னுடையமனதை சந்தேகத்தால் நிரப்பிவிட்டிருந்தார். அந்த வினோதமான மனிதரைப் பார்த்ததும், அது மீண்டும் கிளர்ந்தெழுந்து மேலே வந்தது. நான் போலியான மரியாதையுடன் சொன்னேன் : “நீங்கள் ஒரு மிகப்பெரிய ஜோதிடர். தயவு செய்து அமருங்கள்.”
விரிப்பில் அமர்ந்ததும் அந்த மனிதன் சொன்னான் : “நான் சிவனை வழிபடக்கூடிய ஒரு மனிதன். கடவுளால் மூன்றாவது கண் வழங்கப்பட்டவன் நான். ஒரே ஒரு நொடியில் என்னால் கடந்த காலத்தையும் பார்க்க முடியும். நிகழ்காலத்தையும் பார்க்க முடியும். வெகு சீக்கிரமே நீ அரச சிம்மாசனத்தில் அமர்வாய் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. இதற்குமுன் ஆண்ட அரசர்களின் புகழை, உன்னுடைய புகழ் மங்கச்செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.” நான் அந்த மனிதன் கூறுவதை உடனடியாகப் புரிந்துகொண்டேன். மரியாதை கலந்த குரலில் நான் சொன்னேன்: “நீங்கள் ஒரு மிகப்பெரிய துறவி! நான் சிரமங்கள் நிறைந்த ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இதில் நான் வெற்றிபெறுவேனா?”
எதிர்காலத்தைப் பார்க்கக்கூடிய அந்த மனிதன் தன் கண்களை சிறிதுநேரம் மூடிக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டான்: “நீ எங்கே போகிறாய்?”
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் : “நீங்களே சொல்லுங்கள்.”
அந்த மனிதன் தரையில் கிறுக்க ஆரம்பித்தான்.
நான் கூறினேன் : “என் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு இதையெல்லாம் நீங்கள் வரையவேண்டுமா என்ன?”