ஒளிவிளக்கு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
ஆர்வத்துடனும், அச்சத்துடனும், திகைப்புடனும் நான் மேலும் சில நிமிடங்களைச் செலவிட்டேன். அதேநேரத்தில் அரசனின் கட்டளைகளை பொருட்படுத்தாமலும் இருக்க முடியாது. நான் மன விருப்பத்துடன் செல்லவில்லையென்றால், என்னை பலவந்தமாக அழைத்துச் சென்றுவிடுவார்கள். அதனால், ஒரு சால்வையால் என்னை மூடிக்கொண்டு, விதியின் கையில் என்னை ஒப்படைத்துவிட்டேன்.
நகரத்தின் வடக்கு திசையில் என்னுடைய வீடு இருந்தது. தலைமை அமைச்சரின் வீடு நகரத்தின் மையப் பகுதியில் இருந்தது. தெருக்களில் யாருமே இல்லை. தெருக்களின் ஓரத்தில் இருந்த வீடுகள் இருளில் மூழ்கிக் கிடந்தன. நகரம் முழுமையான உறக்கத்தில் இருந்தது. இங்குமங்குமாக, கல் வடிவத்திலிருந்த பெண் கடவுள்களின் உள்ளங்கைகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்கின் ஒளிக் கீற்றுகள் விழுந்துகொண்டிருந்த இடங்களில் இருட்டு சிதறப் பட்டிருந்தது.
தலைமை அமைச்சரின் பிரம்மாண்டமான அரண்மனையின் வெளிவாசலை அடைந்தேன். வெளியே மிகவும் இருட்டாக இருந்தது. வாயிற்காப்போன் யாரும் இல்லை. ஆனால், வெளிவாசல் நன்கு திறக்கப்பட்டுக் கிடந்தது. நான் ஒரு நிமிடம் தயங்கினேன். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாசலுக்குள் நுழைந்தேன். திடீரென்று ஒரு ஈட்டியின் கூர்மையான நுனிப்பகுதி என் தொண்டையைக் குத்தியது. இருட்டுக்குள்ளிருந்து என்னை நோக்கி ஒரு குரல் வந்தது: “நீ யார்?”
நான் அந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனேன். அந்த ஈட்டி என் தொண்டையைத் தொட்டுக்கெண்டிருந்தது. அது இன்னும் கொஞ்சம் தாண்டியிருந்தால், நான் செத்தே போயிருப்பேன். சிறிது நேரத்திற்கு நான் ஒரு சிலையைப் போல நின்றிருந்தேன். பிறகு காம்புடன் இருந்த தாமரை மொட்டினை மேல்நோக்கி உயர்த்தி, குரல் வந்த திசையை நோக்கி அதைக் காட்டினேன்.
குரல் கேட்டது “அது என்ன? பெயரைக் கூறு...”
நான் சொன்னேன். “ஒரு காம்பிலிருக்கும் தாமரை மொட்டு.”
இனம்புரியாத ஒரு குரல் வினவியது: “நீ இதை எப்படி குறிப்பிடுவாய்?”
வாசலிலிருந்த காவலாளிதான் அவன் என்பதை நான் புரிந்துகொண்டேன். மலரின் இதழ்களில் எழுதப்பட்டிருக்கும் ரகசிய வார்த்தையை நினைத்துப் பார்த்த நான் கூறினேன். “குத்மல்.”
என்னுடைய தொண்டையைவிட்டு ஈட்டி விலக்கப்பட்டது. காவலாளி என் கைகளைப் பிடித்து இருட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றான். தொடர்ந்து இன்னொரு மனிதன் என்னை உள்ளே அழைத்துச் சென்றான். பிறகு நான் ஒரு மூன்றாவது மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டேன். என்னை அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு செல்லும் வேலையை ஐந்து நபர்கள் செய்தார்கள். பிறகு நான் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு சிறிய அறையை அடைந்தேன்.
அறையின் மையத்தில், மான் தோலாலான மெத்தையில் தலைமை அமைச்சர் அமர்ந்து சில கையெழுத்துப் பிரதிகளைக் கூர்மையான கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அறையில் வேறு யாருமில்லை. நான் அவரைப் பார்த்து வணங்கினேன். தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த ஒரு மெத்தையைச் சுட்டிக்காட்டிய அவர் சொன்னார். “உட்கார்.”
நான் அமைதியாக அவர் கூறியதைச் செய்தேன். தலைமை அமைச்சர் கேட்டார். “அந்தப் பெண் துறவியிடமிருந்து பெற்ற தகவலை எங்கே வைத்திருக்கிறாய்?”
நான் தாமரை மொட்டினை வெளியே எடுத்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு சொன்னார்: “அதைத் தின்றுவிடு.”
அவர் என்ன கூறுகிறார் என்பது புரியாததால் நான் அவரையே முட்டாள்தனமாக பார்த்துக்கொண்டிருந்தேன். நான் ஏன் ஒரு தாமரை மலரைத் தின்ன வேண்டும்?
தலைமை அமைச்சர் மீண்டும் கூறினார்: ”அந்த தகவலைத் தின்று விடு.”
அப்படிப்பட்ட ஒரு கட்டளையை ஏற்றுக்கொள்வதற்கு என் மனம் மறுத்தது. இது என்ன வேடிக்கையான ஒரு விஷயமாக இருக்கிறது? இரவு வேளையில் என்னை அங்கு அழைத்து, ஒரு மலரைத் தின்னும்படி கூறுவது என்றால்...? அவர் வேண்டுமானால் தலைமை அமைச்சராக இருக்கலாம்! அதற்காக...
அந்தக் கிழவரின் உதடுகள் எரிச்சலுடன் துடித்தன. அவர் மிகவும் தாழ்வான குரலில் கூறினார்: “எல்லா இடங்களிலும் ஒற்றர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டியதிருக்கிறது. அந்த மலரின் மொட்டு சுவையான உணவாக இருக்கும் என்பதற்காக அல்ல...”
அதைத் தொடர்ந்து நான் அந்த தாமரை மலரின் இதழ்களைச் சுவைத்தேன். சிறிது நேரத்திற்கு பேரமைதியான சூழல் நிலவிக்கொண்டிருந்தது. தலைமை அமைச்சரின் மென்மையான முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வெளிப்பாடும் இல்லை. விளக்கின் ஒளி சிமிட்டிக் கொண்டிருந்ததை நிறுத்தியது. நான் ஆர்வத்துடன் காத்திருந்தேன்- அடுத்து என்ன நடக்கும்?
திடீரென்று அவர் கேட்டார்: “சாப்பலா என்ற நடனப் பெண்ணின் வீட்டிற்கு நீ அடிக்கடி செல்வதுண்டா?”
திடீரென்று கேட்கப்பட்ட அந்தக் கேள்வியால் நான் சற்று அதிர்ச்சியடைந்துவிட்டேன். அந்தப் பெண் அரசவையில் நடனப் பெண்ணாக இருப்பவள். இந்த மாதிரியான தனிப்பட்ட விஷயம் பற்றிய கேள்விகளை அந்த வயதான மனிதர் என்னைப் பார்த்து ஏன் கேட்க வேண்டும்? அதே நேரத்தில் - அந்தக் கிழவர் மிகவும் எச்சரிக்கையான மனிதர் என்பதையும், என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்பே தனக்கு தேவைப்படும் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பார் என்பதையும் நான் அறிந்திருந்தேன்.
சற்று தடுமாறிய குரலில் கூறினேன். “நான் ஒரே ஒருமுறை சென்றிருக்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் செல்லக்கூடிய இடமல்ல அவளுடைய வீடு. அதனால் அதற்குப்பிறகு அவளுடைய வீட்டிற்கு நான் செல்லவில்லை.”
வயதான அந்த மனிதர் சொன்னார் : “நல்லது! லிச் சாவியைச் சேர்ந்த ஒற்று வேலை பார்க்கும் பெண் அவள்.”
அறைக்குள் மீண்டும் அமைதி ஆட்சி செய்தது. அந்த மனிதர் தியானத்தில் இருப்பதைப்போன்ற ஒரு சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இன்னொரு இடி முழக்கத்தை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன்.
“உனக்குக் கீழே நீ எத்தனை பணியாட்களை வைத்திருக்கிறாய்?”
“எல்லாரையும் சேர்த்து சுமார் பத்தாயிரம்.”
“உன்னிடம் இருக்கும் தச்சர்கள், கட்டடம் கட்டும் மனிதர்கள் ஆகியோர் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”
“ஆறாயிரம்.”
“மரவேலை செய்பவர்கள்?”
“மூவாயிரத்துக்கும் அதிகமாக...”
“சிற்பிகள்?”
“அந்த அளவிற்கு அதிகமாக இல்லை.... நூறுக்கும் குறைவாகத்தான் இருப்பார்கள்”
திடீரென்று சாதாரணமாக இ-ருந்த தலைமை அமைச்சரின் சரீரம், ஏதோ மந்திர சக்தியால் தட்டி எழுப்பப்பட்டதைப் போல புத்துணர்ச்சி பெற்று தோன்றியது. அவருடைய மங்கலான, கிழட்டுக் கண்கள் பிரகாசிக்க ஆரம்பித்தன.