ஒளிவிளக்கு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
ஒளிவிளக்கு
சாராதிந்து பந்தோபாத்யாய்
தமிழில் : சுரா
நன்கு படித்த ஒரு மனிதரின் பெயரை, நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு செயலுடன் இணைத்துவிட்டால், யாருமே அதை நம்பாமல் இருக்க மாட்டார்கள். ‘இன்றிரவு அடர்த்தியான இருட்டில்நடந்து போய்க் கொண்டிருந்தபோது நான் ஒரு பேயைப் பார்த்தேன்’ என்று கூறினால், என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘இந்த மனிதன் ஒரு பொய்யனாக இருக்க வேண்டும் அல்லது ஒரு குடிகாரனாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள்.
ஆனால், சர் ஆலிவர் லாட்ஜ், ‘நூற்றுக்கணக்கில்... ஆயிரகணக்கில்... உடம்பிலிருந்து வெளியேறிய ஆவிகள் உலகமெங்கும் சுற்றித் திரிகின்றன’ என்று எழுதியபோது, மக்கள் அதை ஆர்வத்துடன் வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை - அதை ஏற்றுக்கொள்வதைப்போல தங்களின் தலைகளையும் ஆட்டினார்கள். இந்த காலகட்டமே நம்பிக்கையின்மையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையில்லாத நிலையும் நிறைந்திருக்கும் ஒன்றே. அதே நேரத்தில் ஒரு புகழ்பெற்ற மனிதரின் பெயரை இணைத்துவிட்டால் அதே சம்பவத்தை மக்கள் மத்தியில் நம்பும்படி செய்வது மிகவும் எளிதான விஷயமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அவ்வாறு இணைக்கப்படும் பெயர், ஒரு பெரிய நவீன மேற்கத்திய அறிஞரின் பெயராக இருக்கவேண்டும். பண்டைய அல்லது ஒரு இந்திய அறிஞரின் வார்த்தைகளுக்கு எந்தக் காலத்திலும் அதற்கு நிகரான மதிப்பு இருக்கவே இருக்காது.
இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய முற்பிறவியில் நடைபெற்ற சம்பவங்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதன் நான் என்ற உண்மையை மக்களிடம் கூறி, அவர்களை அந்த விஷயத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வது என்பதில் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் இருந்தது. நான் மேற்கத்திய அறிஞர் யாருடைய பெயரையாவது பயன்படுத்த முடியாது. நான் ஒரு சாதாரண நிலையிலிருக்கும் ரயில்வே க்ளார்க். நீண்ட பதின்மூன்று வருடங்கள் வேலைபார்த்த பிறகும், நான் ஒரு மாதத்திற்கு எழுபத்தாறு ரூபாய்தான் சம்பளமாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கடந்த பிறவிகள் சம்பந்தப்பட்ட கதைகளை நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறதா? இது நகைக்கக்கூடிய ஒரு விஷயமாக இல்லையா?
ராஜ்கிர்ரின் சிதிலமடைந்து கிடக்கும் இடங்களைப் போய் பார்க்க வேண்டும் என்பதற்காக, ரயில்வேயின் இலவச அனுமதிச் சீட்டுக்கு ஏற்பாடு செய்தேன். ஒரு அடர்த்தியான காட்டின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, உடனடியாக என்னுடைய கண்களுக்கு முன்னால் நேரத்தின் திரைச்சீலை விலகியது. அப்போது நான் பார்த்தவை எவ்வளவு பழமையானவை என்பதை என்னால் கூற முடியவில்லை. அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தையவையாக இருக்குமா? அல்லது மூன்று...? ஆனால், நான் நினைக்கிறேன் - அந்தச் சமயத்தில் பூமி இளமையாக இருந்திருக்க வேண்டும். வானம் நீல நிறத்தில்... புல் பச்சையாக...
கடந்தகாலப் பிறவிகளைப் பற்றி என்னைப் போன்ற ஒரு சாதாரண க்ளார்க் நினைத்துப் பார்ப்பதென்பது நகைப்பிற்குரிய ஒரு விஷயமே. அதே நேரத்தில்... தீர்மானமான குரலில் என்னால் கூற முடியும். இப்போது பாரதம் என்றோ இந்தியா என்றோ அழைக்கப்படும் இந்த நாட்டில் நான் மீண்டும் மீண்டும் பிறவி எடுதிருக்கிறேன். சில நேரங்களில் ஒரு அடிமையாக... சில நேரங்களில் ஒரு அரசனாக. என்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, நான் சிரிக்கிறேன். ஒரு காலத்தில் அழகான இளம்பெண்களைக் காப்பாற்றிய, போர்களில் ஈடுபட்ட, போர்களில் வெற்றி பெற்ற அந்த மனிதனா நான்? சில நேரங்களில் அலுவலகத்தில் என்னுடைய பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, நான் வாய்விட்டு சிரித்துவிடுவேன்.
ஆனால், ராஜ்கிர்ரின் காடுகளின் சிதிலங்களுக்கு நடுவில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த இடம் ஏற்கெனவே எனக்கு நன்கு தெரியும் என்பதாகவே உணர்ந்தேன். இப்போது இருப்பதைப்போல அப்போது அந்த இடமில்லை. கட்டடங்கள், சாலைகள், நன்கு ஆடைகள் அணிந்த ஆண்கள், பெண்கள்... சில நேரங்களில் “நான் ஒரு அருங்காட்சியகத்திற்குச் செல்லும்போது, கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான சிற்பத்தைப் பார்ப்பேன். அப்போது என்னுடைய இதயத்தில் ஒரு அதிர்ச்சி உண்டாகும். என்னுடைய குரல் உணர்ச்சிகளுக்குள் சிக்கி பேசமுடியாத அளவிற்கு ஆகிவிடும். அந்த அழகான சிற்பத்தைச் செதுக்கியவனே நான்தான். மன்னர் கனிஷ்கரின் காலத்தில் ஒரு புத்த மடத்திற்காக நான் அந் சிற்பத்தைச் செதுக்கினேன். நான் அரண்மனைச் சிற்பியாக அப்போது இருந்தேன். அரசனின் நாட்டியப் பெண்ணால் அந்தப் பிறவியில் நான் விஷம் ஊட்டப்பட்டேன். அவள் கூறியபடி, அவளை நான் காதலிக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்.
அறையின் ஒரு மூலையில் நான் எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று என்னுடைய பார்வையிலிருந்து இப்போதைய உலகம் மறைந்துவிடுகிறது. ஒரு மிகப்பெரிய துறவியின் முகத்தை நான் பார்க்கிறேன் - ‘இருட்டுக்குள்ளிருந்து வெளிச்சத்திற்கு என்னை வழிநடத்திச் செல்லுங்கள். நிலையற்ற தன்மையிலிருந்து நிலைத்து நிற்கும் தன்மைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்.’ நான் அந்த மிகப்பெரிய மனிதரைப் பார்த்திருக்கிறேன். அவருடைய குரலைக் கேட்கவும் செய்திருக்கிறேன். ஆனால், ஒரு ஒரு முறை. கடந்த காலத்தின் ஆழங்களுக்குள்ளிருந்து நான் அந்த நினைவுகளை எழுதப்போகிறேன்.
மன்னன் அஜாதசத்ரு எல்லா பக்கங்களிலுமிருந்தும் தொந்தரவுகளை சந்தித்துக்கொண்டிருந்தான். அவனுடைய நாட்டின் வடக்கு திசையில் லிச்சாவி இருந்தது. அது அவனுடைய தாய்வழியைச் சேர்ந்தவர்களுக்குரியது. மேற்கு திசையில், தாய்வழியைச் சேர்ந்த இன்னொரு உறவினருக்கு சொந்தமான நாடு இருந்தது. அந்த மன்னன் கோசலை நாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அவனுடைய தந்தை பிம்பிசாரன் அமைதியை விரும்பக்கூடிய ஒரு மனிதன். போர்களில் ஈடுபட்டு சண்டை போடுவதற்கு பதிலாக, லிச்சாவி, கோசலை நாடுகளின் இளவரசிகளை அவன் மணம் செய்துகொண்டான். அஜாதசத்ரு மாறுபட்டவனாக இருந்தான். அமைதியாக இருப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் பதிலாக அவன் போர்களில் ஈடுபடுவதையே விரும்பினான். அதனால் தன்னுடைய தந்தையின் ‘எதிர்பார்த்திராத’ மரணத்திற்குப் பிறகு, அஜாதசத்ரு போர்களில் ஈடுபடுவதில் தன் கவனத்தைச் செலுத்தினான்.
ஆனால், அவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. இரண்டு பக்கங்களிலும் பகைவர்கள் இருந்தார்கள். மேற்கிலிருந்து வடக்கு வரை. அவன் கவனத்தை வடக்குதிசை நோக்கித் திருப்பினால், மேற்கு திசைகளிலிருந்து யாராவது உள்ளே நுழைந்துவிடுவார்கள். மேற்கு திசை நோக்கி கவனத்தைத் திருப்பினால், வடக்கிலிருந்து நுழைந்து விடுவார்கள். மகதநாட்டு அரசன் அஜாதசத்ருவிற்குக் கீழிருந்த சிற்றரசர்கள் ஒன்று பயந்து நடுங்கி ஓடினார்கள். அல்லது எதிரிகளுடன் சேர்ந்துகொண்டார்கள். நாட்டில் சிறிதுகூட அமைதி என்பதே இல்லாமலிருந்தது. மக்கள் சந்தோஷமில்லாமலும், எந்தவித திருப்தியும் இல்லாமலும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். மன்னன் மிகவும் தைரியசாலி; ஆனால் புத்திசாலித்தனம் இல்லாதவன் என்று அவர்கள் நினைத்தார்கள். அவன் ஆட்சி பீடத்தில் இருக்கும் காலம் வரை, நாட்டில் சமாதான சூழ்நிலையும் செல்வச் செழிப்பும் இருக்கவே இருக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், மக்கள் அப்படி நினைத்தது தவறு. அஜாதசத்ரு புத்திசாலித்தனம் இல்லாதவனும் இல்லை - முட்டாளும் இல்லை.