ஒளிவிளக்கு - Page 7
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
அதன்மூலம் இந்த நயவஞ்சக மனிதனின் ஆன்மா, நாம் கட்டப்போகும் கோட்டையை எதிர்காலத்தில் காப்பாற்றும்.”
அந்த வார்த்தைகளைக் கேட்டு, எல்லாரும் மிகவும் அமைதியாக இருந்தார்கள். தொடர்ந்து நாங்கள் இறந்த காவலாளியின் உடலை ஒரு மரத்திற்குக்கீழே புதைத்துவிட்டு, ஒற்றனை அருகிலிருந்த ஒரு மரத்தில் கட்டிப்போட்டோம்.
மறுநாள் காலையில் சீக்கிரமே புறப்பட்டு, பாடலி கிராமத்தை பிற்பகல் மூன்று மணிக்கு அடைந்தோம். கங்கை நதியின் கரையில் இருந்த ஒரு மிகச் சிறிய கிராமம் அது. அந்த கிராமத்தில் சுமார் ஐம்பது ஏழைக் குடும்பங்கள் வசித்துக்கொண்டிருந்தன. அந்த கிராமத்தில் இருந்தவர்கள், ஒன்று வேட்டையாடக் கூடியவர்களாக இருந்தார்கள்; அல்லது மீனவர்களாக இருந்தார்கள். சில நேரங்களில் அவர்கள் நிலத்தைக் கிளறி, சில பயிர்களை வளர்ப்பதற்காக தயார் செய்தார்கள்.
நாங்கள் ஏராளமான பேர் அங்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களைத் தாக்குவதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் காட்டிற்குள் ஓடினார்கள். அவர்களுக்கு எந்தவித கெடுதலையும் நாங்கள் செய்யப்போவதில்லை என்பதைப் பற்றி திருப்பத் திரும்ப உறுதியான குரலில் கூறியும், அவர்கள் காட்டிலிருக்கும் மானைப்போல பாய்ந்தோடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்டுச்சென்ற உணவுப் பொருட்கள் என்று என்னவெல்லாம் இருந்தனவோ, அவை அனைத்தையும் நாங்கள் சாப்பிட்டோம். ஒரே மாலை வேளையில், ஆட்களின்றி காலியாகக் கிடந்த அந்த கிராமத்தில், அவர்கள் வைத்துவிட்டுப்போன உணவுப்பொருட்கள் அனைத்தையும் நாங்கள் பத்தாயிரம் பேரும் சாப்பிட்டு முடிந்தோம். எல்லாரும் மிகவும் களைத்து விட்டிருந்ததால், ஒரு இடத்தைப் பார்த்ததுதான் தாமதம், உடனடியாக அங்குபோய் தூங்க ஆரம்பித்தோம்.
மறுநாள் காலையில் வெகுசீக்கிரமே வேலை தொடங்கியது. கட்டடம் கட்ட தேவைப்படும் பொருட்கள், உணவு, மற்ற முக்கியமான பொருட்கள் - அனைத்தும் யானைகளின் மூலம் எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சிலர் கூடாரங்கள் அமைப்பதில் மிகவும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வேறு சிலர் யானைகளிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அன்று முழுவதும் நாங்கள் மிகவும் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம்.
தலைமை அமைச்சர் கோட்டையைப் பற்றிய வரை படத்தை அனுப்பி வைத்திருந்தார். நான் மிகிர்மித்ராவையும் டிங்கானாக்கையும் அழைத்துக்கொண்டு, இரண்டு நதிகளும் சந்திக்கும் இடத்தில் கோட்டை கட்டப்போகும் இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றேன். ஆற்றில் பருவ மழையின் காரணமாக நீர் மிகவும் பலத்துடன் கரைபுரண்டு பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. கங்கை நதியின் நீர் சாம்பல் நிறத்தில் கலங்கலாக இருந்தது. ஷோன் நதியின் நீர் பொன்னிறத்தில் இருந்தது. இரண்டு நதிகளும் சங்கமமாகும் இடத்தில் ஒரு பெரிய சுழலைப்போல நீர் காட்சியளித்தது.
அந்தச் சந்திப்பின் தெற்குப் பக்கத்தில் நாங்கள் நின்றுகொண்டு, ஷோன் நதிக்கு அருகில் தனியாக ஒரு நிலப்பகுதி இருப்பதைப்பார்த்தோம். நதிகள் தங்களுடைய கைகளை நீட்டி அந்த நிலப்பகுதியை அணைப்பதைப்போல எங்களுக்குத் தோன்றியது. நீண்டநேர ஆராய்ச்சி மற்றும் விவாதத்திற்குப்பிறகு, அந்த இடத்தில் கோட்டையைக் கட்டுவதென்று நாங்கள் தீர்மானித்தோம். கோட்டையின் இரண்டு பக்கங்களையும் நதிகள் பாதுகாத்துக் கொண்டிருந்தால், அகழிக்கான தேவையே அங்கு இல்லை.
அந்த நிலப்பகுதியை சீர்படுத்துவதற்காக அங்கிருந்த மரங்களையும் செடிகொடிகளையும் அழிப்பதற்கு நாங்கள் ஆட்களை நியமித்தோம். வெட்டப்பட்ட பெரிய மரங்களின் பாகங்களை யானைகள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. மரங்கள் கீழே விழும் சத்தத்தாலும், வேலை செய்து கொண்டிருந்த ஆட்களின் ஆரவாரங்களாலும், யானைகளின் சத்தங்களாலும், குதிரைகளின் கனைப்புகளாலும் அந்த முழுப் பகுதியும் உயிரோட்டத்துடன் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஒரு அரக்கன் கண் விழித்துவிட்டான் போலிருக்கிறது என்பதைப்போல அந்த இடம் இருந்தது.
அன்று முழுவதும் நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்தோம். இரவில் உணவுண்டோம். இரவில் நான் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, டிங்கானாக் எனக்கருகில் வந்து சொன்னான்: “அய்யா, நாளை காலையில் கோட்டை கட்டும் பணி ஆரம்பமாவதற்கு முன்பு, இன்று நள்ளிரவில் நாம் கடவுள்களுக்கு பலி கொடுத்தாக வேண்டும்.”
நான் கேட்டேன் : “என்ன பலி?”
“என்ன... மறந்துவிட்டீர்களா அய்யா? அந்த போலித் துறவியை, கடவுள்கள் சந்தோஷப்படும் வண்ணம் உயிருடன் புதைப்பது என்று தீர்மானித்தோமே?”
”உண்மைதான்... நான் அதைப்பற்றி மறந்துவிட்டேன். நாம் அந்த ஒற்றனை இறக்கச் செய்வதன் மூலம், இரண்டு காரியங்கள் நிறைவேறுகின்றன. சரி... பலி கொடுக்கும்போது செய்ய வேண்டிய சடங்குகளைப் பற்றி உனக்கு தெரியுமா?”
டிங்கானாக் சொன்னான் : “சடங்குகள் மிகவும் எளிமையானவை. நாம “அந்த மனிதனை போதை தரும் பானங்களை அருந்தச் செய்ய வேண்டும். பிறகு அவனுடைய செவிகளில் மெதுவான குரலில் ‘நீ ஒரு ஆன்மாவாக இந்தக் கோட்டையை எப்போதும் காவல் காக்க வேண்டும்’ என்று முணுமுக்க வேண்டும். தொடர்ந்து அவனை உயிருடன் புதைக்க வேண்டும்.”
நான் சிறிது ஆச்சரியத்துடன் கேட்டேன்: “இந்த அளவிற்கு சடங்குகளைப் பற்றி நீ எப்படி தெரிந்துகொண்டாய்?”
டிங்கானாக் சிரித்தான். “நான் இதற்கு முன்பே இதைச் செய்திருக்கிறேன். மிகப்பெரிய வர்த்தகரான தனஸ்ரீ தன்னுடைய கருவூலத்தை பூமிக்கு அடியில் கட்டும்போது, நான்தான் தொழிலாளர்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தேன். அந்த சமயத்தில் காட்டுக்குள்ளிருந்து ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டான். தொடர்ந்து இந்த முறையில்தான் அவன் புதைக்கப் பட்டான்.”
நான் சொன்னேன் : “அப்படியென்றால் என்ன செய்யவேண்டுமோ, அதை நீ செய்.”
டிங்கானாக் சொன்னான் : “அதைச் செய்வதற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அதே நேரம்... அய்யா... நீங்களும் அந்த பலி கொடுக்கப்படும்போது உடனிருக்க வேண்டும்.”
“சரி...”
டிங்கானாக் அங்கிருந்து புறப்பட்டான். ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு என்னை நோக்கி ஓடிவந்த அவன் சொன்னான் : “அய்யா... அந்த மனிதன் நம்மை ஏமாற்றிவிட்டான்!”
“நம்மை ஏமாற்றிவிட்டானா? எப்படி?”
“அவன் விஷத்தை உட்கொண்டுவிட்டான். அது அவனுடைய மோதிரத்திற்குள் மறைந்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நாம் என்ன செய்வது?”
“அதன் அர்த்தம் என்ன?”
ஒரு மனிதனை நாம் பலி கொடுக்கப்போவதாக கடவுள்களிடம் கூறிவிட்டோம். ஒருவேளை நாம் நம்முடைய வாக்கைக் காப்பாற்ற வில்லையென்றால், அவர்களுடைய கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டியதிருக்கும்.”
உண்மைதான்! பதைபதைப்பை உண்டாக்கக்கூடிய விஷயம்தான் அது. அந்த மனிதன் மேலும் சிறிது நேரம் மரணத்திற்காக ஏன் காத்திருக்கக் கூடாது? தான் எந்த அளவிற்கு சுயநலம் கொண்டவன் என்பதை அவன் செயல்வடிவில் காட்டிவிட்டானே! நள்ளிரவின் இந்த நேரத்தில் நாம் பலி கொடுப்பதற்கு ஒரு மனிதனுக்கு எங்கு வோவோம்?