ஒளிவிளக்கு - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
அவர் விரலை உயர்த்தி என்னுடன் பேச ஆரம்பித்தார்: “மிகவும் கவனமாகக் கேள். இப்போது மழைக் காலம். இளவேனிற் காலம் வர ஆரம்பித்தவுடன், சாலைகளிலும் தெருக்களிலும் ஈரம் உலர ஆரம்பித்து விடும். அதைத் தொடர்ந்து போர்களும் சண்டைகளும் தொடங்கிவிடும்... இரண்டு பக்கங்களிலுமிருந்தும் நாம் தாக்கப்படுவோம். நம் நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது. அதனால் இந்த முறை போர் தொடங்குவதற்கு முன்பே, வெல்ல முடியாத அளவிற்கு ஒரு கோட்டையை பாகீரதி, ஹிரன்யாபாகு (கங்கை-ஷோன்) நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நாம் கட்டியாகவேண்டும். அந்தக் கோட்டை ஐம்பதாயிரம் போர் வீரர்கள் தங்கக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். அவர்கள் அங்கு நிரந்தரமாக இருப்பார்கள். இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. இந்த முறை கோசலை, ப்ரிஜி ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர் வீரர்கள் ஆற்றைக் கடந்து நம்மைத் தாக்கும்போது, அவர்கள் நம்முடைய பிரம்மாண்டமான, வெல்லமுடியாத அளவிலிருக்கும் கோட்டையைப் பார்த்து திகைத்துப்போய் நிற்க வேண்டும்.”
இவ்வளவு நேரமும் நீருக்கு வெளியே இருக்கும் ஒரு மீனைப்போல என்னை நான் உணர்ந்திருந்தேன். இப்போதுதான் சாதாரண நிலைக்கு என்னால் வர முடிந்தது. தலைமை அமைச்சர் என்ன பேசுகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். கட்டடனம் கட்டுவதுõன் என்னுடைய தொழில். நான் அவர் கூறிய விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.
நான் சொன்னேன் : “பத்தாயிரம் பணியாட்களை வைத்து மூன்றே மாதங்களில் என்னால் ஒரு கோட்டையைக் கட்டிமுடிக்க முடியும். ஆனால், சாலைகளும் போக்கக்கூடிய பாதைகளும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. கோட்டை கட்டப்படும் இடத்திற்குத் தேவையான பொருட்களை நான் எப்படி கொண்டுசெல்வது?”
“அது உன்னுடைய வேலையல்ல. கோட்டையைக் கட்டும் வேலையில் மட்டுமே நீ கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்குத் தேவையான பொருட்களை நான் ஏற்பாடு செய்துதருகிறேன். நாட்டிலுள்ள அனைத்து யானைகளும் கற்களைச் சுமந்துவரும். அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.”
“அப்படியென்றால், மூன்றே மாதங்களில் நான் கோட்டையைக் கட்டி முடிக்கிறேன்” என்றேன் நான்.
வயதான அந்த மனிதர் சொன்னார் : “உன்னால் அப்படி கட்டி முடிக்க இயலாமல் போனால்...?”
“அதற்காக என் தலையையே துண்டித்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எப்போது நான் வேலையை ஆரம்பிப்பது?”
தலைமை அமைச்சர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு சொன்னார் : “நான்கு நாட்களுக்குப் பிறகு சந்திரன் சுவாதி நட்சத்திரத்தில் இருப்பான். அந்த விசேஷ நாளன்று நீ உன்னுடைய வேலையை ஆரம்பிக்கலாம்.”
“நீங்கள் கூறியபடி நடக்கட்டும்.”
சிறிது நேர அமைதிக்குப்பிறகு தலைமை அமைச்சர் சொன்னார் : “நான் உன்னிடம் கூறப் போவதை மிகவும் கூர்ந்து கவனித்துக்கேள். உனக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அந்த முக்கியமான இடத்தில் நாம் ஒரு கோட்டையைக் கட்டுகிறோம் என்ற தகவலை எதிரிகள் தெரிந்துகொண்டார்களேயானால், அதைக் கட்டி முடிப்பதற்கு அவர்கள் எந்தக் காலத்திலும் விடமாட்டார்கள். எங்கு பார்த்தாலும் எதிரிகள் நடந்து திரிகிறார்கள். அவர்கள் கோட்டை கட்டும் தகவலை கோசலை மற்றும் லிச்சாவி நாடுகளின் அரசர்களுக்குக் கூறுவார்கள். அந்த வகையில் அவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும். அதனால் நீ மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். கங்கை மற்றும் ஷோன் நதிகள் சந்திக்கும் இடத்தை நோக்கி உன்னுடைய பத்தாயிரம் ஆட்களுடன் நீ புறப்படு. யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு உன்னுடைய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைந்துவிட்டால், அதற்குப்பிறகு எந்தவித பிரச்சினையுமில்லை. ஏனென்றால், அந்த இடம் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டதாகவும், காடுகளால் சூழப்பட்டதாகவும் இருக்கும். அதே நேரத்தில் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு முன்பே, வழியில் நீ ஒற்றன் என சந்தேகப்படும் யாரையாவது சந்திக்க நேர்ந்தால், உடனடியாக அவனைக் கொலை செய்வதற்கு சிறிதும் தயங்காதே. நீ வேலை செய்யும் இடத்திற்குப் போய் சேர்ந்தபிறகு, மகத நாட்டு கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திரு. அந்தக் கடிதத்தில் கோட்டையைப் பற்றிய வரைபடமும், என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற தகவல்களும் எழுதப்பட்டிருக்கும். அதில் கூறப்பட்டிருக்கும் திட்டங்களின்படி கோட்டையைக் கட்டும் பணியை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள். இந்த வேலைக்குப் பொறுப்பாளராக இருக்கும் ஒரே மனிதன் நீதான். இந்த திட்டம் தோல்வியடைந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் நீ மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும்.”
நான் சொன்னேன்: “என்ன வேண்டுமானாலும் நீங்கள் கூறுங்கள். ஆனால், என்னுடைய பத்தாயிரம் ஆட்களுக்குத் தேவைப்படும் பொருட்களை நான் எங்கிருந்து பெறுவது?”
தலைமை அமைச்சர் கூறினார்.: “கங்கையும் ஷோன் நதியும் சந்திக்கும் இடத்தில் பாடலி கிராமம் என்ற பெயரில் ஒரு சிறிய கிராமம் இருக்கும். ஒரு இரவு வேளையின்போது நீங்கள் அந்த கிராமத்தில் தங்கிக் கொள்ளுங்கள். இரண்டாவது நாள், நான் உனக்கும் உன்னுடைய மனிதர்களுக்கும் எவ்வளவு உணவு வேண்டுமோ, அவற்றை நான் அனுப்பி வைக்கிறேன்.”
பொழுது புலரும் நேரத்தில், தலைமை அமைச்சர் எனக்கு விடை கொடுத்தார். நான் புறப்படுவதற்கு முன்பு என்னிடம் கூறினார் : “சமீப காலமாக பௌத்தர்கள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுவரும் தகவலை கட்டாயம் நீ கேள்விப்பட்டிருப்பாய். ‘கடவுளை எந்தக் காலத்திலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது’ என்ற கொள்கையைக் கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் மிகவும் தந்திரசாலிகள். பிராமணர்களுக்கு எதிரானவர்கள். அவர்களுடைய தலைவராக இருப்பவர் சாக்கியவம்சத்தின் இளவரசர்... அந்த இளவரசரைப் பற்றி குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால்... அவர் கைதேர்ந்தவர்- பேராசை படைத்தவர்-பொறாமை குணம் கொண்டவர்- நயவஞ்சக எண்ணம் கொண்டவர். இப்போதைய அரசனின் தந்தை பிம்பிசாரனைக் கவர்வதற்கு அவர் முயற்சி செய்தார். மகதநாட்டில் புத்த மதத்தை நிறுவுவதற்கு விரும்பினார்... சமீபத்தில் இந்த நாட்டிலிருந்து அஜாதசத்ருவால் அவர் தூக்கி எறியப்பட்டார். அஜாதசத்ருதான் தீவிரமான இந்துமதப் பற்றாளராயிற்றே! இந்த புத்த மதத்தினரை நம்பாதே. அவர்கள் மகதநாட்டிற்கு எதிரிகள். கோட்டை கட்டப்படும் இடத்திற்கு அருகில் நீ அவர்களைப் பார்க்க நேர்ந்தால், இரக்கமே இல்லாமல் அவர்களைக் கொன்றுவிடு.”
..நிகழ் காலத்தின் ஆரம்பத்திலும் கடந்த காலத்தின் முடிவிலும் நின்றுகொண்டு, நடந்த சம்பவங்களை நான் நினைத்துப் பார்க்கும்போது, விதியின் எள்ளல் என்னுடைய உதடுகளில் ஒரு புன்னகையை அரும்பச் செய்கிறது. மகத வம்சத்தின் பிரகாசமான காலத்தில் சக்தி படைத்த தலைமை அமைச்சர் வர்ஷாகரின் பெயர், நேரத்தின் மணல்களுக்குள் எந்தவிதமான பதிவையும் பதிக்காமலேயே மூழ்கிப்போய்விட, எதுவுமே இல்லாத சிம்மாசனமில்லாத அந்த சாக்கிய இளவரசர், வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டு, இன்றுவரை அவருடைய தத்துவங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கும் பாதையைக் காட்டிக் கொண்டிருப்பார் என்பதை யார் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கடந்த காலத்தில் பலம் மிக்கவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்துகொண்டு, பூமியின் செல்வங்களைத் திருடிக்கொண்டிருந்த அனைவரையும் மறந்தே விட்டார்கள். அதே நேரத்தில் - நல்வாழ்வு பற்றிய எட்டு அடுக்குகள் கொண்ட பாதையை உபதேசம் செய்தவரும், அந்தக் காலத்தில் நிர்வாண நிலையில் உயர்வுத் தன்மை கொண்ட யாசகருமான மனிதரை இப்போது ஆசியாவின் பாதிப்பகுதி அரசர்களின் அரசராக நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறது.