ஒளிவிளக்கு - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
அவர் என்னை சந்தேகத்துடன் பார்த்தார். “நான் உன்னுடைய ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கணக்கிட்டுப் பார்க்க முயற்சிக்கிறேன். ஜோதிடத்தைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? இல்லாவிட்டால், உன்னால் எதையும் புரிந்துகொள்ள முடியாது.”
நான் பணிவுடன் மிகவும் அமைதியாக இருந்தேன். அந்தத் துறவி தரையில் எழுதுவதைத் தொடர்ந்துகொண்டிந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் தன்னுடைய முகத்தை உயர்த்திச் சொன்னான் : “நீ இன்னொரு நாட்டிற்கு ஒரு ரகசிய வேலையாகச் சென்று கொண்டிருக்கிறாய். ஜாதகத்தில் நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தைப் பார்க்கும்போது, நீ ஏதோ போர் சம்பந்தப்பட்ட சூழ்நிலையில் ஈடுபட்டிருப்பதைப்போல தோன்றுகிறது.” இதைக் கூறிவிட்டு, அவன் கேள்வி கேட்கும் பாவனையில், மீதிவிஷயங்களை என்னிடமிருந்து எதிர்பார்ப்பதைப்போல பார்த்தான்.
நான் புகழும் குரலில் கூறினேன் : “நீங்கள் மிகப்பெரிய மனிதர். உண்மையாகவே உங்களால் எதிர்காலத்தைப் பார்க்க முடியும். எல்லா விஷயங்களையும் நீங்கள் புரிந்துவைத்திருக்கிறீர்கள். அரசரின் ஆணைப்படி நான் லிச்சாவிக்குச் சென்று கொண்டிருக்கிறேன். உங்களிடமிருக்கும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டு, நான் ஏன் அங்கு செல்கிறேன் என்பதற்கான காரணத்தைக் கட்டாயம் நீங்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு நான் அதைக் கூற வேண்டிய தேவை இல்லை. இப்போது என்னுடைய மிகவும் நெருங்கிய நண்பனின் எதிர்காலத்தைப் பற்றி தயவுசெய்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். காவலாளியே, வயலின் தூரத்து எல்லையிலிருக்கும் மரத்திற்குக்கீழே அமர்ந்திருக்கும் மிகிர்மித்ராவை தயவுசெய்து அழைத்து வா.”
மிகிர் தலைமை கட்டடக்கலை நிபுணராகவும், என்னுடைய மிக நெருங்கிய நண்பனாகவும் இருப்பவன். அவன் சிறந்த கலைஞன் மட்டுமல்ல; திறமையான ஜோதிடனும்கூட மிகிர்மித்ரா அங்குவந்து சேர்ந்தவுடன், எனக்கருகில் அவனை உட்காருமாறு கூறிவிட்டு, அந்த மனிதனைச் சுட்டிக்காட்டிக்கொண்டே சொன்னேன். “இவர் மிகப்பெரிய துறவி மற்றும் ஜோதிடர். உனக்காக இவர் உன்னுடைய எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவார்.”
மிகிர்மித்ரா அந்த துறவி இருந்த பக்கம் திரும்பி, அவரை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு, தன்னுடைய உள்ளங்கையை அந்த மனிதன் பார்க்கும் வண்ணம் நீட்டியவாறு சொன்னான் : “நான் எந்த ராசியில் பிறந்தேன்?”
அந்த மனிதர் சிறிது பதைபதைப்புடன் காணப்பட்டார். மிகிர்மித்ராவின் நீட்டப்பட்ட கையை பார்க்கக்கூட செய்யாமல் அவர் கூறினார். “நீ ஒரு விபத்தில் சிக்கி மரணத்தைச் சந்திப்பாய்.”
மிகிர் சொன்னான் : “அது இருக்கட்டும்... என்னுடைய கேள்விக்கு பதில் கூறுங்கள். நான் எந்த ராசியில் பிறந்தேன்?”
சிறிது தயங்கிவிட்டு, அந்த மனிதர் சொன்னார் : “துலா ராசியில்.”
“உண்மையாகவா? எனக்கு மேலும் சில தகவல்களைக் கூறுங்கள்.”
ஜோதிடம் பற்றிய மேலும் சில கேள்விகளை அவன் அவரைப் பார்த்து கேட்டான். நடுங்கிக்கொண்டே தன்னுடைய உலர்ந்துபோன உதடுகளை நக்கிய அந்த மனிதன், தயங்கித் தயங்கி அவனுடைய கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, மிகிர்மித்ரா சிரித்துக் கொண்டே என்னை நோக்கி திரும்பிச் சொன்னான் : “இந்த மனிதன் ஒரு கயவன். ஜோதிடத்தைப் பற்றி இவனுக்கு எதுவுமே தெரியவில்லை.”
அந்த மிகப்பெரிய துறவி வேகமாக எழுந்து, இருட்டில் ஓட ஆரம்பித்தான். மிக வேகமாக ஓடக்கூடியவனாகவும், மிகுந்த பலசாலியாகவும் அவன் இருந்தான். ஆனால், என்னுடைய இருபது ஆட்களுடன் அவன் எப்படி சண்டை போட முடியும்? அவன் ஒரு பலமான கயிறைக் கொண்டு கட்டப்பட்டான். அவன் என்னைப் பார்த்து பரிதாபமான குரலில் சொன்னான் : “என்னைக் கட்டாதீர்கள். நான் ஒரு சாதாரண பிச்சைக்காரன். ஜோதிடம் பற்றி எனக்கிருக்கும் அறிவைக்கொண்டு உங்களைக் கவர்ந்து சிறிது பணம் சம்பாதிக்க எண்ணினேன். ஆனால், நீங்கள் மிகவும் புத்திசாலி. என்னைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். நான் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தைக் கற்றுக்கொண்டேன். இப்போது என்னை விட்டுவிடுங்கள்.”
நான் சொன்னேன் : “நீங்கள் ப்ரிஜி அல்லது கோசலை நாட்டின் ஒற்றுவேலை பார்க்கும் மனிதராக இருக்க வேண்டும். என்னிடமிருந்து நீங்கள் தகவல்களைப் பெறுவதற்காக முயற்சித்தீர்கள்.”
அதைக்கேட்டு அந்தத் துறவி பயத்தால் அழ ஆரம்பித்தான். அவன் சொன்னான் : “நான் எல்லா கடவுள்களின் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன். நான் ஒற்றனல்ல. ஒரு பிச்சைக்காரன். தயவு செய்து என்னைப் போகவிடுங்கள். இன்னொரு முறை இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் எந்தக் காலத்திலும் செய்யமாட்டேன். நான் மிகவும் தாகத்துடன் இருக்கிறேன். எனக்கு நீர் தாருங்கள்.” அவன் கூறிக்கொண்டிருந்ததை உடனடியாக நிறுத்திக்கொண்டான்.
நான் ஒரு காவலாளியை அந்த மனிதனுக்கு கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவதற்காக அனுப்பினேன்.
காவலாளி அந்த மனிதனுக்கு நீர்கொண்டு வந்து தந்தபோது, அவன் நீர் பருகுவதில் அந்த அளவுக்கு ஆர்வமாக இல்லை. நான் சொன்னேன் : “நீங்கள் மிகவும் தாகமாக இருப்பதாகக் கூறினீர்கள். பிறகு ஏன் நீரை அருந்தவில்லை?”
அந்த மனிதன் மிகவும் பலவீனமான குரலில் கூறினான் : “நான் நீரை அருந்த மாட்டேன்.”
திடீரென்று நீர் கொண்டுவந்த காவலாளி அதைக்கீழே கொட்டிவிட்டு, தரையில் விழுந்து வெறிபிடித்தவனைப்போல கதற ஆரம்பித்தான். தொடர்ந்து அவன் தாங்கமுடியாத வேதனையால் துடித்தான். அவன் ஒரு ஆவியைப்போல வெளிறிப்போய் காணப்பட்டான். அவனுடைய கண்கள் வெளியே துருத்திக்கொண்டிருந்தன. அவனுடைய சரீரம் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அவனுடைய வாயிலிருந்து நுரை வெளியே வந்து கொண்டிருந்தது. அவனுடைய தொண்டையிலிருந்து எந்தவொரு ஓசையும் வரவில்லை. நாங்கள் அவனைச் சுற்றி நின்று கொண்டு, பதைபதைப்புடன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தோம். அவன் கீழே விழுந்த நீர் கொண்டுவந்த பாத்திரத்தை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தான். அடுத்த அரைமணி நேரத்தில் அவன் தன் இறுதி மூச்சை விட்டான்.
உடனடியாக எல்லாரும் அந்த கபடதாரியை - போலித் துறவியை நோக்கித் திரும்பினார்கள். அந்த மனிதன் பயத்தில் உறைந்துபோய் காணப்பட்டான். ஒரே நிமிடத்தில் அந்தக் கூட்டம் அந்த மனிதனைத் தாக்கி கொலையே செய்திருக்கும். அதற்குள் தலைமைத் தொழிலாளியும், உயரமான மனிதனும், சுறுசுறுப்பு நிறைந்தவனுமான டிங்கானாக் முன்னால் வந்து நின்றான். அவன் அந்த மனிதனை முடியைப் பிடித்து இழுத்தவாறு சொன்னான் : “நண்பர்களே, இந்த மனிதன் எதிரிகளின் ஒற்றன். இவன் நம் எல்லாரையும் கொல்வதற்காக கிணற்று நீரில் விஷத்தைக் கலந்திருக்கிறான். அவனுக்கு கிடைக்கவேண்டிய ஒரே தண்டனை மரணம்தான். நாம் இவனுக்கு கட்டாயம் தண்டனை தர வேண்டும். ஆனால், இப்போதல்ல. நாம் நம்முடைய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் ஒரு மனித உயிரை பலிகொடுக்க வேண்டுமென்பது நம்மிடையே இருக்கக்கூடிய ஒரு சடங்கு என்ற விஷயம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படிச் செய்தால்தான் நம்முடைய முயற்சியில் நாம் வெற்றி பெற முடியும். கடவுள்களுக்கு மனிதர்களை பலி கொடுக்காமல், நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவே கூடாது. அதனால் இப்போது நீங்கள் யாரும் இவனை துன்புறுத்தக் கூடாது. உரிய நேரத்தில் நாம் இவனை கங்கை நதியின் கரையில் உயிருடன் புதைப்போம்.