
‘‘நான் தேநீருக்குப் பிறகு உறங்கிவிட்டேன். இப்போதான் கண் விழித்தேன். அம்மாவும் தூங்குவதற்காகப் படுத்தாங்க.’’
‘‘நான் அவள் புறப்பட்ட பிறகுதான் விஷயத்தையே தெரிந்து கொண்டேன். எனினும், நான் விமானத்தில் நேற்று இரவே இங்கே வந்து விட்டேன். நான் அவளை என்னுடன் அழைத்துக் கொண்டு போவது என்று தீர்மானித்தேன். ஒதுக்கி வைக்கப்பட்டவளாக அவளுடைய தந்தையையும் தாயையும் தேடி அவள் திரும்பி வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு பொறுப்பற்றவனாக இருக்கலாம். ஆனால், மனிதன் அல்லவா? இப்போது அவள் எங்கே போயிருப்பாள்?’’
‘‘அம்மா ஏதாவது செய்யக் கூடாததைச் செய்திருப்பார்களோ? தற்கொலை...’’
‘‘இல்லை... அவள் அதைச் செய்ய மாட்டாள். மாநிறமும் சுருண்ட முடியையும் கொண்ட அந்தக் குழந்தை பிறந்து, அவனை வளர்க்க வேண்டும் என்ற ஆசையுடன் அவள் இருந்தாள். அந்த விஷயம் எனக்குத் தெரியும்.’’
தன்னுடைய மனதில் அதுவரை இருந்த பகையும் வெறுப்பும் எந்தவொரு காரணமும் இல்லாமலே விலகிச் செல்வதைப் போல உணர்ந்த அந்தப் பையன் ஹலீதிற்கு அருகில் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு கேட்டான்:
‘‘அம்மா உயிருடன் இருப்பாங்க இல்லையா?’’
‘‘ம்... மகனே நாம் அவளைக் கண்டுபிடிப்போம். அவளைக் கண்டுபிடித்து என்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போன பிறகுதான் எனக்கு இனிமேல் ஓய்வே இருக்கும். காரணம்- உயிரைவிட அதிகமாக அவள்மீது அன்பு வைத்திருக்கிறேன். அவளுக்குக்கூட இது தெரியாது. நான் என்னுடைய ரகசியத்தை உன்னிடம் கூறுகிறேன். நான் அவளைக் காதலிக்கிறேன். வள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. உனக்கு இதெல்லாம் புரியாது. நீ எவ்வளவு சிறிய ஒரு பையன்...!’’
பதினெட்டு வயது கடந்தும், அழுகையையும் சிரிப்பையும் தேவையான இடத்தில் கட்டுப்படுத்த படித்திராத அந்தப் பையன் ஹலீதின் கையை திடீரென்ற எடுத்து அன்புடன் அழுத்தினான். இந்த உலகத்தில், பாவம் என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் குறைந்த ஒரு பொருளாக இருக்கிறது என்ற உண்மை அப்போது அவனுக்குப் புரிந்தது.
ப்ளாட்ஃபார்மில் இருந்த மஞ்சள் நிற விளக்குகளைச் சுற்றி மண்ணின் வாசனையைக் கொண்ட மழைப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook