ரவியின் கதை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7535
"நான் பேபி அண்ணனைப் பார்க்கணும். நான் பேபி அண்ணனைப் பார்த்தே ஆகணும். நான்..."
இறுதியில் அனுமதி கிடைத்தபோது அவள் தன்னுடைய அண்ணனின் கட்டிலின் அருகில் சென்றாள்.
"பேபி அண்ணா..."
அவன் எதுவும் பேசவில்லை.
"தூங்குகிறாரா?" அவள் நர்ஸிடம் கேட்டாள்.
"உங்களுடைய அண்ணன் உறங்கிக் கொண்டிருக்கிறார்."
"நான் பிறகு வர்றேன்."
அவள் நடுங்கிக் கொண்டிருக்கும்ம கால்களுடன் அறையை விட்டு வெளியேறி ஓடினாள். அன்று இரும்பால் ஆன வெளிவாசலுக்கு அருகில் தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது, ரவி தன்னுடைய கிரிக்கெட் மட்டையுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
"லில்லி..."
"ம்...?"
"பேபிக்கு எப்படி இருக்கு?"
"பரவாயில்லை. இப்போ தூங்கிக் கொண்டிருக்கிறார்."
"நான் போகட்டுமா?"
"ம்..."
ரவி போன பிறகு, அவளுக்கு அழுகை வந்தது. அதற்கான காரணமும் அவளுக்குத் தெரியவில்லை.
ஒரு நாள் மாலை நேரத்தில் ரவியும் ரவியின் தந்தையும் பேபியைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். வரவேற்பறையில் லில்லியின் தாயைத் தவிர வேறு யாரும் இல்லை. அவளுடைய தாய் ஒரு பைத்தியம் பிடித்தவளைப் போல ஓடி வந்து ரவியின் தந்தையின் கைகளைப் பிடித்தாள்.
"டாக்டர்... என் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும்" அவள் சொன்னாள்: "என் பேபியின் உடல்நலக் கேட்டை உங்களால் குணப்படுத்த முடியாதா?"
"டாக்டர் மஜும்தார்தானே பார்த்துக் கொள்கிறார்? அந்த அளவிற்கு ஒரு நல்ல டாக்டர் கல்கத்தாவிலேயே இல்லை. கவலைப்பட வேண்டாம்." ரவியின் தந்தை சொன்னார்.
"என் பிள்ளையைக் காப்பாற்றுங்க... என் குழந்தையைக் காப்பாற்றுங்க..."
லில்லியின் தாய் கூறிக் கொண்டேயிருந்தாள்.
அன்ற இரவு உறங்குவதற்காகப் படுத்த பிறகும் நீண்ட நேரம் லில்லி அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். "சொர்க்கத்தில் இருக்கும் கர்த்தாவே! உங்களின் காதுகளில் விழவில்லையா," அவள் இருட்டைப் பார்த்துக் கேட்டாள்: "என் தாயின் வார்த்தைகளை நீங்களும் கேட்கக் கூடாதா?"
ஆனால், துக்கம் ஒரு பெரிய கையைப் போல அந்த குடும்பத்தின் மீத வந்து விழுந்தது. பேபியின் மரணத்திற்குப் பிறகு, சிறிது காலத்திற்க அந்த வீட்டில் சந்தோஷத்தின் ஒரு அடையாளம் கூட இல்லாமல் போய்விட்டது. விருந்துகள் இல்லை. சந்தோஷச் சிரிப்புகள் இல்லை. பேபிக்கு கணக்குப் பாடம் கற்றுத் தந்த தலை நரைத்த ட்யூஷன் மாஸ்டர் ஒரு நாள் லில்லியின் தாயைப் பார்ப்பதற்காக வந்திருந்தபோது, அவளின் தாய் திடீரென்று தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு, படிகளில் ஏறிப் படுக்கையறைக்குச் சென்று குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவளுடைய தாய் வெளிறிப் போய் காணப்பட்டாள். உடல் மெலிந்து போனது. அவளுடைய பிரகாசமான தோற்றம் முற்றிலும் இல்லாமற் போனது. இடையில் அவ்வப்போது லில்லி தன் தாயின் அருகில் சென்று உட்கார்ந்து எதையாவது கூற ஆரம்பிப்பாள். ஆனால், அவளுடைய அன்னை அவை எதையும் காதிலேயே வாங்குவதில்லை.
காலப்போக்கில், லில்லியின் அன்னை பேபியை மறந்து விட்டாள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வேதனையே இல்லாமல், அவனைப் பற்றி நினைப்பதற்குக் கற்றுக் கொண்டாள். மீண்டும் அந்த வீடு அழகானதாக ஆனது. புதிய திரைச் சீலைகள், தோட்டத்தில் புதிய பூஞ்செடிகள், வரவேற்பறையில் புதிய மகங்கள்... பேபியின் புகைப்படங்கள், அவன் பயன்படுத்திக் கொண்டிருந்த பொருட்கள் ஆகியவை காணாமல் போன பொருட்களாக ஆயின. அவனுடைய அறை பொருட்களை வைக்கும் ஒரு அறையாக மாறியது. இனிப்புப் பலகாரங்களும் பிற பொருட்களும் அங்கு சுவரில் இருந்த அலமாரிகளில் இடம் பிடித்தன. ஆனால், லில்லியின் வாழ்க்கையிலிருந்து பேபி விலகிச் செல்லவில்லை. காலையில் எல்லாரும் தூக்கத்திலிருந்து கண் விழிப்பதற்கு முன்னால், அவள் படிகளில் இறங்கிப் படிக்கும் அறைக்குச் செல்லும் போது, வெளியே யாருக்கும் தெரியாமல் தன் அண்ணன் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறான் என்று அவளுக்குத் தோன்றியது. தவிட்டு நிறத்தைக் கொண்ட பைஜாமாவும் சட்டையும் அணிந்திருக்கும் பேபி அண்ணன்... மேஜைக்கு அருகில் அமர்ந்து கொண்டு அவள் மெதுவான குரலில் கூறுவாள்:
"எனக்கு பார்க்கணும் போல இருக்கு."
வெளியே தெரியாத அந்த அண்ணனின் வெளியே தெரியாத ஒரு கையைத் தடவியவாறு அவள் கூறுவாள்.
"என் பேபி அண்ணா... பேபி அண்ணா..."
குளிர்காலம் முடிவடைந்து, மீண்டும் மஞ்சள் வெயில் தோட்டத்தில் வந்து விழ ஆரம்பித்த போது லில்லிக்கு தன்னுடைய இழப்பைப் பற்றிய முழுமையான ஒரு புரிதல் உண்டானது. இனி எந்தக் காலத்திலும் தன்னுடைய அண்ணன் புல்லின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டு, பொழுது போக்கிற்காக எதையாவது கூறி குலுங்கிக் குலுங்கி சிரிக்கப் போவதில்லை. 'எந்தச் சமயத்திலும் இல்லையா?' அவள் தோட்டத்தில் இருக்கும் செடிகளின் மேற்பகுதிகளை அசைத்துக் கொண்டிருக்கும் காற்றிடம் கேட்டாள்:
'எந்தக் காலத்திலும் இல்லையா?'
இல்லை... இல்லை... இல்லை... தன்னுடைய இதயம் ஒரு அறையாக இருந்தால், பேபி அண்ணன் இருந்த மூலை இப்போது வெறுமையாகவே இருக்கிறது. இதயத்தின் மூலை மட்டுமா? வாழ்க்கையே எந்த அளவிற்கு இருண்டு போனதாக ஆகிவிட்டது! திறந்து விட்டால் காற்றில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் அந்த இரும்பு கேட்டைப் பிடித்துக் கொண்டு லில்லி தெருவையே பார்த்தாள். ரவி ஏன் வரவில்லை? ரவி சமீப நாட்களாக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி வைத்து விட்டானா? ரவியைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன! ரவியும் தன்னை மறந்துவிட்டானா?
அவளுடைய கண்கள் நிறைந்துவிட்டன. அந்தத் தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு நிலக்கடலை விற்பனை செய்பவன் தன்னுடைய கூடையைத் தரையில் இறக்கி வைத்துவிட்டு, அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
"கடலை வேணுமா?"
அவள் தலையை ஆட்டினாள்: "வேண்டாம்."
ஒன்றோ இரண்டோ வருடங்கள் ஓடி முடிந்தன. லில்லி மேலும் சற்று வளர்ந்தாள். அவளுடைய உடல் சற்று சதைப்பிடிப்பு கொண்டதாக ஆனது. கூந்தலின் நீளம் அதிகமானது. ஆனால், அவளுடைய அமைதியான குணமும் கேள்விகள் கேட்கக்கூடிய அந்த பெரிய கண்களும் மற்றவர்களிடமிருந்து அவளை விலகி இருக்கச் செய்தன. சில நேரங்களில் அவளுடைய தாய் கேட்டாள்: "லில்லி, நீ உன்னுடைய தோழிகளில் யாரையாவது இங்கே அழைக்கக் கூடாதா?"
"யாரை அழைப்பது?"
"உன்னுடைய நண்பர்கள்... உனக்கு குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எந்தவொரு தோழியும் இல்லையா?"
லில்லி பதில் எதுவும் கூறாமல் எழுந்து நடப்பாள்.