ரவியின் கதை - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7535
பல நேரங்களிலும் அவள் அவனுடன் அந்த பழைய மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து பயணம் செய்தாள். பல வேளைகளிலும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஏரியின் ஓரத்தில் இருந்த புல்வெளியில் உட்கார்ந்து உரையாடிகனார்கள். பல நேரங்களில் ஒருவரையொருவர் பார்த்தவாறு அன்புடன் சிரித்தார்கள். தாங்கள் செய்வது எதுவும் தவறானது என்று அவர்களுக்கு எந்தச் சமயத்திலும் தோன்றியதில்லை. முதுமையும் சிறிது வறுமையும் தளர்வடையச் செய்த ஒரு தந்தையையும், எதிர்காலத்தைப் பற்றிய பல கவலைகளையும் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கும் அனுதாபம் தேவையாக இருந்தது. அவளுக்கோ? அவன் அவளுடைய வாழ்க்கையின் அர்த்தமாக இருந்தான். அவளுடைய எதிர்காலத்திற்கான சாவி அவனுடைய அந்தக் கைகளில் இருந்தது.
ஒரு நாள் மாலை நேரத்தில் லில்லி ரவியிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்று கேட்டைத் திறந்த போது, தோட்டத்தில் இருந்த சாய்வு நாற்காலியை விட்டு அவளுடைய தந்தை திடீரென்று எழுந்தார்.
"இதுவரை எங்கே போயிருந்தாய்?"
"நான் வாக்கிங் போயிருந்தேன்." அவளுடைய குரல் பதைபதைப்பால் தடுமாறியது.
"வாக்கிங் போயிருந்தியா? பொய் சொல்றியா? மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞனுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு சவாரி போனாய். அப்படித்தானே?"
அவளுடைய தந்தையின் முகம் சிவந்து பயங்கரமாக இருந்தது. லில்லி தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தாழ்வான குரலில் அவள் சொன்னாள்:
"நான் லேக் வரை போயிருந்தேன். அவ்வளவுதான்."
"எனக்கு முன்னால் நிற்காமல் போ. இல்லாவிட்டால் நான் உன்னை கொன்னுடுவேன். வெட்கம் இல்லாதவளே! அவலட்சணம் பிடித்த பெண்ணே... இங்கேயிருந்து போ... போ..."
அவள் வேகமாக உள்ளே சென்றாள். தோட்டத்தில் இருந்த அவளுடைய தந்தை மீண்டும் கோபத்துடன் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருந்தார்.
"இனிமேல் அவனை இங்கே எங்கேயாவது பார்த்தால், நான் போலீஸிடம் ஒப்படைத்துவிடுவேன். ரௌடி!"
பிறகு அவள் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட ஒரு கிளியைப் போல ஆகிவிட்டாள். தன்னுடைய தந்தை தன் ஆன்மாவை இறுகக் கட்டிப் போட்டுவிட்டார் என்று அவளுக்குத் தோன்றியது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்துவிட்டால், அதற்குப் பிறகு மறுநாள் காலையில் தான் கேட்டைக் கடந்து வெளியே வர முடியும். திரைப்படம் பார்க்க வில்லை. வாக்கிங் போகவில்லை. அவள் சாளரததின் கம்பிகளில் சாய்ந்து நின்று கொண்டு ரவியைப் பற்றி நினைத்துப் பார்ப்பாள். கேட்டின் அருகில் ரவி ஏன் வரவில்லை? தன் தந்தை அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனைத் திட்டியிருப்பாரோ? ரவியை தன் தந்தை அவமானப்படுத்திவிட்டிருப்பாரோ? ரவி என்ற பெயரை சத்தம் போட்டு உச்சரிப்பதற்கே அவளுக்கு பயமாக இரந்தது. ஆனால், தூங்குவதற்குப் படுத்திருக்கும் போது, ஒரு கடவுளின் பெயரைக் கூறுவதைப் போல அந்த இரண்டு எழுத்துக்களையும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன. ரவி! எந்த அளவிற்கு முழுமையான ஒரு பெயர் அது! ரவி! சூரியன்! அதற்கு வர்ணனைகள் தேவையில்லை. அலங்காரங்கள் தேவையில்லை. வெப்பத்தையும் உயிர்ப்பையும் அளிக்கும் சூரியனுக்கு விளக்க வார்த்தைகள் தேவை இல்லையே!
லில்லி கல்லூரியில் சேர்ந்தாள். அதற்குப் பிறகும் அவளை புடவை அணிய அவளுடைய தாய் அனுமதிக்கவில்லை.
"உனக்கு இப்போது ஃப்ராக்தான் பொருத்தமாக இருக்கும். எதற்கு புடவையைச் சுற்றிக் கொண்டு இந்துப் பெண்களைப் போல நடந்து திரிய வேண்டும்? உனக்கு அந்த அளவிற்கு வயதென்றும் ஆகவில்லை." அவளுடைய தாய் சொன்னாள்.
லில்லி நிலைக் கண்ணாடியைப் பார்த்து, தன்னுடைய மெலிந்து போய் காணப்பட்ட கால்களைச் சபித்தாள்.
சமையல்காரன் வேலைக்காரியிடம் சொன்னான்: "எனக்கு இவற்றையெல்லாம் பார்க்குறப்போ ஒரு சிரிப்புத்தான் உண்டாகுது... பத்து பதினாறு வயதான பெண்கள் முழங்காலை மறைக்காத உடுப்பை அணிந்து அப்படியே நடந்து திரியிறது என்றால்... வெட்கம் ஒண்ணும் இல்லையா? பொண்ணு வயசுக்கு வந்து கடைசியில குளத்துல குதிக்கப் போகுது. பார்த்துக்கோ."
ஒருநாள் லில்லி தோட்டத்தில் ஒரு புத்தகத்துடன் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தபோது, மதிலுக்கு அப்பால் பாதையில் ரவி நடந்து போவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.‘
"ரவி..." அவள் சத்தம் போட்டு அழைத்தாள். வீட்டிற்க வெளியே வேறு யாரும் இல்லை. அவள் ஓடி, கேட்டைத் திறந்து தெருவை நோக்கி ஓடினாள். ரவி புள்ளிகள் போட்ட ஒரு தவிட்டு நிற சட்டையையும் காக்கி நிறத்தில் பேன்ட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய அந்த தோற்றத்தையும், மிகவும் பழக்கமான அந்த வேகமான நடையையும் பார்க்கும்போது, அவளுடைய தொண்டையில் ஒரு தேம்பல் சத்தம் உண்டானது.
"ரவி... நில்லுங்க.." அவள் அழைத்துச் சொன்னாள்: "தயவு செய்து கொஞ்சம் நில்லுங்க. நான் பார்க்கணும்."
அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான்.
அவள் தெருவில் ஓடிச்சென்று, அவனுக்கு முன்னால் போய் நின்று மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு சொன்னாள்: "ரவி, கொஞ்சமாவது இரக்கம் வைத்து நில்லுங்க. எனக்கு கொஞ்சம் பார்க்கணும்னு எந்த அளவிற்கு ஆசை இருக்கிறது தெரியுமா?"
ரவி எதுவும் பேசவில்லை. அவன் சிரிக்கவும் இல்லை.
அவள் கேட்டாள்: "ரவி, என் மீது கோபமாக இருக்கிறீர்களா? நான் என்ன செய்வது, என் தந்தை என்னைக் கொன்று விடுவதாகக் கூறினார். அப்பா..."
"அப்பா..." ரவி கோபத்துடன் சொன்னான்: "அப்பா... அவருடைய செல்ல மகளை நான் திருடிக் கொண்டு போய்விடுவேன் என்று உன் அப்பா நினைத்து விட்டாரா? அவருடைய அனைத்து அழகுகளையும் கொண்ட அருமை மகளை? ஃபூ! எனக்கு அவருடைய பணமும் வேண்டாம். அவருடைய மகளும் வேண்டாம்.
நான் என்ன குருடனா? அப்பா? அப்பாவின் அழகான மகளும்... பலகைப் பற்களும்... துருத்திக் கொண்டிருக்கும் முழங்கால்களும்... நீக்ரோவின் நிறமும்! ப்பூ! எனக்கு உன்னைப் பார்த்து மோகம் என்று நினைத்துவிட்டாயா?"
"ஓ... ரவி..." அவன் கூறிக் கொண்டிருந்ததை நிறுத்தியவுடன், அவள் ஒரு சிலையைப் போல அசைவே இல்லாமல் நின்றுவிட்டாள். தன்னுடைய உதடுகள் எவ்வளவோ முறை அழைத்துப் பழகிய அந்தப் பெயரைக் கூறுவதற்கு சிரமமாக இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.
"நான் உங்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை. உங்களிடமிருந்து எந்தவொரு உதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னைத் தொந்தரவு செய்யாமல் வெறுமனே விட்டால் போதும்... நாங்கள் அப்பிராணி ஏழைகள். எப்படியாவது வாழ்ந்து கொள்கிறோம்." ரவி சொன்னான்.
லில்லி அந்த தெருவின் காங்க்ரீட்டால் ஆன ஓரத்தில், அந்த தூசி படிந்த தரையில் முழங்கால்களால் நின்று கொண்டு தளர்ந்து போன குரலில் சொன்னாள்: