ரவியின் கதை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7535
தன்மீது பள்ளிக்கூடத்தில் இருப்பவர்களில் ஒருவருக்கு கூட அன்பு இல்லை என்று அவள் எப்படித் தன் தாயிடம் கூறுனாள்? அவளுடைய தாயால் அப்படிப்பட்ட ஒரு நிலைமையை நம்பவே முடியாதே! பல நேரங்களில் தன்னை ஆணவம் பிடித்தவள் என்றும் மகாராணி என்றும் அழைத்து கிண்டல் பண்ணக் கூடிய தன்னுடைய தோல்களை அவள் நினைத்துப் பார்த்தாள். தோழியா? தனக்கு எந்தத் தோழி இருக்கிறாள்?
ஒரு நாள், அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த தன் தந்தையிடம் லில்லி சொன்னாள்:
"அப்பா... இனி ஜனவரியில் இரந்து நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கட்டுமா? தேர்வு நெரங்கிக் கொண்டிருக்கிறதே! வீட்டில் இரந்து படித்தால், நன்றாகப் படிக்க முடியாது."
"ஹாஸ்டலிலா?"
லில்லி தலையைக் குலுக்கினாள். அவர் தன்னுடைய வளர்ந்த மகளைப் பார்த்து, ஒரு சிறிய ஆச்சரியத்துடன் கேட்டார்: "அது ஏன்? வீட்டில் இருப்பதற்கு உனக்கு விருப்பமில்லாமல் போய்விட்டதா?"
"அது இல்லை, அப்பா... என்னால் தனியாக இருந்து படிக்க முடியவில்லை. வேறு பிள்ளைகளிடம் ஒவ்வொரு சந்தேகத்தையும் கேட்பதற்கு.."
"வேறு பிள்ளைகளிடம் நீ சந்தேகம் கேட்பதா? முட்டாள்தனமாகப் பேசாதே லில்லி. உன் அளவிற்கு அறிவைக் கொண்ட எந்தவொரு பிள்ளையும் அந்தப் பள்ளிக்கூடத்தில் இல்லை. பள்ளிக்வடத்தில் மட்டுமல்ல- இந்த கல்கத்தாவிலேயே இல்லை.
லில்லிக்கு பதினைந்து வயது ஆனபோது, ஒருநாள் அவள் மீண்டும் ரவியைப் பார்த்தாள். அவள் கேட்டைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தபோது, ரவி அந்தத் தெருவின் வழியாக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். ரவி மேலும் சற்று வளர்ந்திருப்பதைப் போல அவளக்குத் தோன்றியது. அவன் வியர்வையில் நனைந்திருந்த ஒரு நீல நிற சட்டையையும் வெள்ளை நிறத்தில் பேன்ட்டையும் அணிந்திருந்தான். முகத்தில் முன்பு இருந்ததைப் போலவே சிறிய பருக்கள் இருந்தன. தலைமுடி முன்பைப் போலவே சுருண்டு கட்டுப்பாடே இல்லாமல்... அந்தப் புன்சிரிப்பும் முன்பு இருந்ததைப் போலவேதான்...
"ரவி!" அவள் அழைத்தாள்.
"என்ன... இவ்வளவு நாட்களாகவே வரவே இல்லை?"
"காரணம் எதுவும் இல்லை..." அவன் தன்னுடைய கையில் இருந்த கிரிக்கெட் மட்டையைத் தன் காலுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டே சொன்னான்.
"ரவி, நீங்க தடிமனா ஆகியிருக்கீங்க." அவள் சொன்னாள்.
"ம்... லில்லி, நீயும் தடிச்சிருக்கே."
"ம்... நான் உயரமா ஆகியிருக்கேன். பிறகு... என் பற்களைப் பாருங்க. இப்போ வெளியே நீட்டிக் கொண்டு இல்லையே!"
"நல்ல அழகியா இருக்கே."
ரவி சிரித்தான். தன்னுடைய உலகத்தில் சிரிப்பு முற்றிலுமாக வற்றிப் போய்விட்டது என்று நினைத்திருந்த லில்லிக்கு திடீரென்று சந்தோஷத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு துள்ளல் உண்டானது. ரவியின் கைகளைப் பற்ற வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. புதிதாகப் பிறந்த ஒரு வெட்கத்துடன் அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
"நான் போகட்டுமா?"
அவள் தலையை ஆட்டினாள்.
"என்ன?"
"ஏன் இவ்வளவு அவசரமா போறீங்க. ரவி, நான் உங்களைப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன."
"எனக்கு..."
"போகணும்... அப்படித்தானே? சரி... போங்க. இங்கு உங்களுக்குன்னு யாரும் இல்லை அல்லவா? பேபி அண்ணன் இல்லையே!"
அவளுடைய உதடுகள் துடித்தன. ரவி தன் கிரிக்கெட் மட்டையால் தெருவின் ஓரத்தில் கிடந்த சில செங்கற்களைத் தட்டி உடைத்துக் கொண்டிருந்தான். அவன் எதுவும் கூறவில்லை.
"எனக்குன்னு ஒரு ஆள்கூட இல்லை. ரவி, எனக்குன்னு ஒரு ஆள் கூட இல்லை."
அவள் தன்னுடைய முகத்தைக் கைகளில் மறைத்து வைத்துக் கொண்டு அழுதாள்.
"லில்லி..." ரவி அழைத்தாள். அவனுடைய குரல் மிகவும் மென்மையாக இருந்தது. "லில்லி, அழாதே."
"ரவி, இப்போ போங்க. ஆனால், நாளைக்கு இந்தத் தெரு வழியா வருவீங்களா?"
"ம்..."
"தினமும் வருவீங்களா?"
"ம்..."
ரவியின் உருவம் கண்களை விட்டு மறைந்தவுடன், மாலை நேரம் ஒரு பேர்வையைப் போல அந்த தோட்டத்தில் வந்து விழுந்தது.
அவன் சென்றதற்கும் திடீரென்று வந்து பரவிய அந்த இருட்டிற்குமிடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதைப் போல லில்லிக்குத் தோன்றியது.
ரவி இன்டர்மீடியட் வகுப்பில் மூன்ற முறை தோல்வியைச் சந்தித்தான். கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு நாள் அவனுடைய தந்தை லில்லியின் வீட்டிற்கு வந்தார்.
"அலுவலகத்தில் வேலையா? இப்போது வேக்கன்ஸி எதுவும் இல்லையே?" லில்லியின் தந்தை சொன்னார்.
அவருக்கு உடலுறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நோயாளிகள் மீதும் பொதுவாகவே தோன்றக்கூடிய வெறுப்பு அந்த வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.
"நான் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்."
அன்று இரவு லில்லியின் தாய் அவளின் தந்தையிடம் சொன்னாள்: "அந்த ரவிக்கு எப்படியாவது ஒரு வேலையைக் கொடுக்கணும். அவன் நம்முடைய பேபியின் நெருங்கிய நண்பனாக இரந்தான்."
"வேலை விஷயத்தில் சென்டிமெண்ட் எதையும் காட்டி பிரயோஜனமே இல்லை." லில்லியின் தந்தை சொன்னார்: "எந்தவொரு உபயோகமும் இல்லாதவர்களையெல்லாம் என்னுடைய கம்பெனியில் வேலைக்கு எடுத்தால், அது அழிவிற்கு ஒரு எளிய வழியாக ஆகிவிடும். போதாத குறைக்கு, இப்போது மோட்டார் கார் வர்த்தகத்திற்கு பாதிப்பு உண்டாகிவிட்டிருக்கிற காலம் வேறு... நானே கிட்டத்தட்ட முந்நூறு தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
அடுத்த அறையில் படுத்திருந்த லில்லி அந்த வார்த்தைகளைக் கேட்டு வெறுப்புடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். சாளரத்திற்கு வெளியே வானம் கறுத்த வெல்வெட்டைப் போல மென்மையாகக் காணப்பட்டது. தான் ரவிமீது அன்பு வைத்திருக்கிறோம்... தந்தையையும் தாயையும் விட அதிகமான அன்பு வைத்திருக்கிறோம் என்று அவளுக்கு திடீரென்று புரிந்தது.
"ஓ... ரவி... ரவி... ரவி... என்னுடைய ரவி..." அவள் இருட்டில் முணுமுணுத்தாள்.
ரவி ஒரு ஏழை இன்ஷுரன்ஸ் ஏஜென்டாக ஆனான். அவன் சற்று பழையதாக இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினான். அதன் மீது மிகுந்த சத்தத்தை உண்டாக்கிக் கொண்டு அவன் பயணிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் சாயங்காலம் லில்லி கேட்டிற்கு அருகில் நின்றிருந்தபோது, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அவளிடம் கேட்டான்.
"என்ன லில்லி ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி போய்விட்டு வரலாம் என்ற தோன்றுகிறதா?"
"என்னை உட்கார வைத்துக் கொண்டு போவீர்களா?"
சாயங்கால நேரத்து சூரியன் பொன் துகளைப் போல அவனுடைய கண்களில் விழுந்து கொண்டிருந்தது. அவள் மோட்டார் சைக்கிளில் ஏறி, அவனுக்குப் பின்னால் முதுகுடன் சேர்ந்து உட்கார்ந்தாள்.