ரவியின் கதை - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7535
"மன்னிக்கணும், ரவி... நான் தவறு செய்தவள் அல்ல... அப்பா..."
"அப்பா! நான் எதையும் கேட்க விரும்பவில்லை... எழுந்து போ... இனி போ. இனிமேல் இதையெல்லாம் பார்த்து உன்னுடைய அப்பாவோ டிரைவரோ வேறு யாரோ வந்தால், நானும் என் தந்தையும் மாநிலத்தை விட்டே போக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்."
"ரவி..." அவள் அழுதுகொண்டே சொன்னாள்: "ரவி, என் மீது உங்களுக்கு கோபம் இருக்கும். ஆனால், நான் உங்களைக் காதலிக்கிறேன். என்னால் இப்படி வாழ முடியாது. என்னை எங்காவது அழைத்துக் கொண்டு செல்லுங்கள்."
ரவி அவளைப் பிடித்து எழுந்திருக்கச் செய்தான். தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் கண்களால் பார்த்துக் கொண்டே சொன்னான்:
"சாயங்காலம் ஆகிவிட்டது. சீக்கிரமா வீட்டிற்குத் திரும்பிப் போ. நான் இங்கு நிற்பது நல்லது இல்லை."
"ரவி... என்னை விட்டுப் போகாதீங்க. என்னால் இந்த வீட்டில் வாழ முடியாது. ரவி... ரவி..."
"லில்லி, நான் நாளைக்கு வர்றேன். இது சத்தியம். நான் நாளைக்கு சாயங்காலம்வர்றேன். இல்லாவிட்டால் நான் நாளை மூணு மணிக்கு விக்டோரியா மெமோரியலின் கிழக்குப் பக்க கேட்டிற்கு அருகில் வந்து நின்று கொண்டிருப்பேன். இப்போ புறப்படு..."
இரக்கம், அன்பு, அனுதாபம்- இவை அனைத்தும் அவர்களுக்கு இடையே இருந்தன. கைகளைப் கோர்த்துப் பிடித்துக் கொண்டு ஆட்கள் அவ்வளவாக இல்லாத தெருக்களின் வழியாகவும், மதிய வெயில் பற்றி எரிந்து கொண்டிருந்த மைதானங்களிலும் அவர்கள் நடந்து திரிந்தார்கள். அவர்கள் பணத்தைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கவே இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், உண்மையைக் கண்டடைந்த அவர்களுக்கு மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? மதங்கள் என்பவை கண்மூடித்தனமான நம்பிக்கைகள். 'நான் ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக இருப்பவன்' என்று ஒருவன் கூறுகிறான். இன்னொரு ஆள் 'நான் கிறிஸ்துவ மதத்தில் ஒரு உறுப்பினர்' என்று கூறுகிறான். வேறொரு மனிதன் கூறுகிறான், 'நான் குட்டிச்சாத்தான் உண்டு என்று நம்புபவர்கள் இருக்கும் க்ளப்பின் உறுப்பினர்' என்று. பல வகையான நம்பிக்கைகள்... அவ்வளவுதான்.
ரவி, சூரிய வெளிச்சம் வந்து விழுந்த கண்களால் அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்:
"லில்லி... இனிமேல் நான் உன்னை எப்போதும் விட்டுப் போக மாட்டேன். இது சத்தியம்..."
"காரணம்?"
"நீ அழுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை."
"எப்போதும் விட்டுப் போக மாட்டீர்கள் அல்லவா?"
"போக மாட்டேன். எப்போதும் விட்டுப் போக மாட்டேன்."
ஆனால், அவர்கள் பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டானது. அவர்களுடைய சந்திப்புகளைப் பற்றி லில்லியின் தந்தை தெரிந்து கொண்டார். வீட்டில் மீண்டும் கோபமான காட்சிகள் நடந்தன. மீண்டும் அழுகைகள். இறுதியில் லில்லியின் தந்தை தன்னுடைய உலக அனுபவம் இல்லாத மகளுக்கு ஒரு திருமணத்தை முடிவு செய்தார். உரில் இருந்த ஒரு உறவினரின் மூத்த மகன். முப்பத்து இரண்டு வயது கொண்ட ஒரு டாக்டர். பார்ப்பதற்கு மோசம் இல்லை.
லில்லியின் தந்தை நண்பர்கள் கேட்டார்கள். "பொண்ணு வயதில் மிகவும் குறைவானவளாக இருக்கிறாளே! இவ்வளவு அவசரப்பட்டு எதற்குத் திருமணம் செய்ய வேண்டும்?"
"எங்களுடைய குடும்பத்தில் உள்ள எல்லாரும் மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வார்கள். நான் பதினைந்தாவது வயதில் திருமணம் செய்து கொண்டேன். லில்லிக்கு பதினாறு வயது முடிந்துவிட்டது."
அன்றிலிருந்து லில்லியின் தாய் லில்லியைக் கட்டாயப்படுத்தி புடவை அணியச் செய்தாள். வீட்டில் மலையாளரத்தில் உரையாடுவதற்கு உற்சாகப்படுத்தினாள்.
"நீ இப்படி ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொண்டு திரிந்தால், உன்னுடைய மாமியார் என்ன சொல்லுவாங்க?" அவளுடைய தாய் கேட்டாள்.
லில்லி பதில் எதுவும் கூறவில்லை. தன்னுடைய கருத்தைத் தெரிந்து கொள்ளும் ஆசை யாருக்கும் இல்லை என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். ஆனால், தலைமுடியை வாரிக் கொண்டிருந்த வேலைக்காரியிடம் ஓரிரு முறை அவள் சொன்னாள்: "எனக்கு விஷம் அருந்தி இறக்க வேண்டும் போல இருக்கு."
வேலைக்காரி மிகவும் பதைபதைப்படைந்து விட்டாள். அவள் சமையல்காரனிடம் அதைக் கூறினாள். சிறிது அழுதாள். ஆனால், சமையல்காரன் தனக்கே உரிய கிண்டல் குரலில் சொன்னான்.
"இறக்கப் போகிறாங்க! அதையெல்லாம் கேட்கவே வேண்டாம். திருமணம் நடக்க இருக்கறப்போ, பெண்கள் சாகப் போறாங்களா? திருமணம் நடக்கட்டும். அப்போ வர்ற ஆளை விடமுடியாத நிலையில் இருப்பாங்க. இதையெல்லாம் நம்புற அளவுக்கு நீ ஒரு முட்டாளா இருக்கியே...! இறக்கப் போறாங்களாம்! அதைக் கேக்குறப்பவே சிரிப்பு வருது!"
லில்லி ஒரு மனைவியாக ஆனாள். நாயின் கழுத்தில் பட்டையைத் தொங்க விடுவதைப் போல அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டி அடிமைத்தனத்தை சுமக்கச் செய்தார்கள். அவளையும் அழைத்துக் கொண்டு அந்தக் கணவன் தான் ப்ராக்டீஸ் செய்யும் இடத்திற்குச் சென்றான்.
அவளுடைய நடவடிக்கைகளில் ஆணவத்தின் ஒரு சிறிய அடையாளத்தைக் கூட அவன் பார்க்கவில்லை. எனினும், அவன் இடையில் அவ்வப்போது கூறினான்:
"நான் மோட்டார் கார் நிறுவனத்தின் டைரக்டர் இல்லை. ஒரு நடுத்தரமான டாக்டர் மட்டுமே. அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் கூற ஆரம்பித்தால், நான் பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்வேன்."
அவள் எதையும் கேட்கவில்லை. அந்தச் சிறிய அறைகளில் இறந்த ஒரு ஆன்மாவைப் போல எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து திரியும் அந்த இளம் பெண்ணை மனப்பூர்வமாகக் காதலிக்க அந்தக் கணவனால் முடியவில்லை. அவள் ஏன் சிரிக்கவில்லைல? அவளுக்கு தன்மீது அன்பு இல்லையோ? அவனுடைய மனதில் நூறு சந்தேகங்கள் எழுந்து கொண்டிருந்தன. ஒரு நாள் அவன் கேட்டான்: "உனக்கு இந்த திருமணத்தில் முழுமையான விருப்பம் இல்லை. அப்படித்தானே?"
"நீங்க ஏன் அப்படிக் கேட்குறீங்க?"
"நீ என்னை வெறுக்கிறாய் என்று எனக்கு சில நேரங்களில் தோன்றுகிறது."
"நான் யாரையும் வெறுக்கவில்லை."
"உன்னுடைய கண்களில் நான் ஒரு முழு கிராமத்து மனிதனாகவும் ஒரு தரித்திரனாகவும் தெரியலாம்."
"அது எதுவும் உண்மை இல்லை."
"நீ சொல்லு... சத்தியம் பண்ணிச் சொல்லு லில்லி, உனக்கு என்மீது அன்பு இல்லையா?"
அவள் அவனுடைய கண்களையே பார்த்தாள்.
தொடர்ந்து தலையைக் குலுக்க மட்டுமே செய்தாள்.
தன்னுடைய குறைகளை மறைப்பதற்காக மட்டுமே அவன் அவளுடைய குறைகளை வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். சமையல்காரனை வேலையை விட்டு வெளியேற்றியபோது, அவள் சமையல்காரியாக ஆனாள்.