மரணமற்ற மனிதன் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6404
வேக வைத்த புல்லை ஈரம் காய்வதற்கு முன்பே வாழையிலையிலோ மரத்தாலான சிறிய பெட்டியிலோ நிறைத்து, குளிர்ச்சியான இடத்தில் கட்டித் தொங்க விட்டு, அதிலிருந்து எடுக்கப்படும் இந்த சாராயத்தில் பச்சை மருந்துகளைக் கலந்து அவனுக்காக அவளுடைய தந்தை கொடுத்து அனுப்புவதை அவள் கொண்டு வந்து தருவாள். தந்தை கொடுத்தனுப்பினாரா, தாய் கொடுத்து விட்டாளா என்பதை அவளிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. வார்த்தைகள் தெரியாது. அவளுடைய அகலமான நீல நிறக் கண்களும் மெல்லிய, துடித்துக் கொண்டிருக்கும் சிவந்த உதடுகளும் ரத்த வண்ணத்தில் இருந்த விரல் நுனிகளும் வார்த்தைகளை விட தெளிவாகப் பேசின. தந்தையையும் தாயையும் அடையாளம் சொல்லக் கூடிய அவளுடைய சைகைகள், நாகரீக மனிதர்களாக இருப்பதால் நமக்கு ஆபாச மாகத் தோன்றும். பெண்- ஆண் இனத்தின் மிகவும் முக்கியமான வேறுபாட்டை அவள் சைகைகளால் செய்து விளக்கிக் கூறுவாள். அவளுக்கு அப்படிச் செய்வதில் நாணமோ கூச்சமோ இல்லை. பழகிப் போய்விட்ட காரணத்தால், அவனுக்கு அதில் இருந்த ஆபாசம் புதுமை அற்றதாக இருந்தது.
முதல்நாள் அவளுடைய தோளைப் பிடித்துக் கொண்டு அவன் அங்கு ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தான். தன்னுடைய தெறித்து நிற்கக் கூடிய நிலையில் இருந்த சதைப் பிடிப்பான மார்பகத்தை நோக்கி அவள் அவனை இறுகப் பிடித்து அணைத்துக் கொண்டிருந்தாள். மரத்தின் நிழலில் இருந்த பாறையின்மீது அவள் உட்கார்ந்து கொண்டிருக்க, அவளுடைய சதைப்பிடிப்பான மடியில் அவன் தன்னுடைய தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தான். அவளுடைய நீல நிறக் கண்களைப் பார்க்கும்போது, தன்னுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒரு ஆன்மாவை அவனால் காண முடிந்தது. அவளுடைய கதைகள் பேசும் கண்கள் ஒரு மனதின் முழு வெளிப்பாடுகளையும் அவனிடம் கொண்டு போய் சேர்த்தது.
தூரத்தில் மலைச்சரிவுகளில் அரை நிர்வாண கோலத்தில் இருந்த பெண்கள் கத்திகளைப் பயன்படுத்தி நிலத்தைக் கொத்திக் கிளறி, நெல் விதைக்கவோ, விளைந்த கதிர்களை அறுக்கவோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது. எப்போதும் விதைக்கலாம், எப்போதும் அறுவடை செய்யலாம். விளைந்த நெல்மணிகளை கதிருடன் அறுத்து மூங்கில் பெட்டிகளில் போட்டு அடைத்து, அதே வயலில் அவற்றை அவர்கள் வாழையிலைகளைக் கொண்டு மூடி வைப்பார் கள். தேவையானதை அன்றன்று அதிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். மரத்தாலான உலக்கையும் மரக்கட்டையில் நெருப்பை வைத்து துளைத்து உண்டாக்கிய உரலும் அவர்களிடம் இருந்தன. அரிசியை மூங்கிலாலான பெட்டிகளில் வைத்து அடுக்கி, சுற்றிலும் நெருப்பு வைத்து வேக வைத்து எடுத்து, வாழையிலையில் கொண்டு வந்து கொட்டும் அவர்களுடைய சாதம் புட்டைப்போலவே இருக்கும்.
அவள் அவனுக்காக எதை வேண்டுமானாலும் கொஞ்சம் கொண்டு வருவாள். அவனுடைய உரோமங்கள் நிறைந்த மார்பிலிருந்து அவள் தினமும் ஈரையும் பேனையும் கிள்ளி எடுப்பாள். அவனுடைய உடலில் இருந்த சொறியையும் படையையும் இல்லாமற் செய்ய வேண்டும். அவள் அப்போதும் "அடி” என்றும் "கிலாய்' என்றும் மட்டுமே கூறுவாள். "பாபுஜி, எழுந்திருங்க' என்பதுதான் அதற்கு அர்த்தம் என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். மிகவும் சிரமப்பட்டு கைகளால் சைகைகள் செய்து கேட்டு அவளுடைய பெயரை அவன் தெரிந்து கொண்டான். பின்னி!
வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தவுடன் அவள் திரும்பிச் செல்வாள். வலை வைத்துப் பிடித்த காட்டெருமைகளை மலைக் கொடிகளைப் பிரித்து உண்டாக்கிய கயிற்றில் கட்டி, நான்கு பக்கங்களிலும் நின்று வட்டமிட்டவாறு அவர்கள் கிராமத்திற்குக் கொண்டு வருவார்கள். உயரம் குறைவான, சிறிய கால்களைக் கொண்ட அந்த மனிதர்களுக்கு மிருகங்களை உயிருடன் பிடித்தால் மட்டுமே வேட்டையாடுவதில் சந்தோஷம் உண்டாகும் என்பதைப் போல தோன்றும். பிறகு, விறகை வைத்து நெருப்பு எரித்து, எருமையின் கழுத்திற்கு நேராக இரும்புக் கம்பியை இறக்குவார்கள்.
மூங்கில் பெட்டிகளிலிருந்து எடுக்கப்பட்ட மினுமினுப்பான சாதத்தை, மூங்கிலின் சிறு கிளைகளை வெட்டித் துண்டு துண்டாக்கி, பின்னி, மடித்து உண்டாக்கப்பட்ட பாத்திரங்களில் பரிமாறுவார்கள். காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டுத் தூள் தூளாக்கி, பெரும் நிதியைப் போல மூங்கில் பாத்திரங்களில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும் கல் உப்பைச் சேர்த்து, சுட்ட மாமிசத் துண்டுகளுடன் அவர்கள் நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடித்தவுடன், மூங்கில் பாத்திரங்களில் இருந்து பஞ்சப் புற்களைக் காய்ச்சி எடுக்கும் மதுவைப் பருகி ஆடவும் பாடவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
போர்வையைக் கொண்டு மூடி, தூங்குவதற்காகப் படுத்திருந்த ராமச்சந்திரன் அவர்களுடைய சமூக வாழ்க்கையைப் பற்றி நினைத் திருக்க வேண்டும். என்ன ஒரு பொருத்தம்! என்ன ஒரு எளிமை! தூக்கம் வரும்போது அவன் பின்னியைப் பற்றி நினைத்திருப்பான். அவளை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, இளம் நீல நிறத்தில் புடவையை அணிவிக்கவும் செய்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்திருப்பான். அதே நேரத்தில் எப்படி இருக்கும் என்று சில நாட்களாகவே அவன் கனவு கண்டு கொண்டிருக்கிறான். பிறகு, அவளுடன் சேர்ந்து தன்னுடைய கிராம பஞ்சாயத்து பாதை யின் வழியாக நடந்து செல்லும்போது... தூக்கம் இனிய கனவுகளைக் காட்டின.
இந்தச் சூழ்நிலையில் ஆதிவாசிகளுக்கு மத்தியில் ஒரு திருமணம் நடைபெற்றது. கிராம சபை கூடி, அரை நிர்வாண கோலத்தில் இருந்த மணமக்களை அங்கு அழைத்துக் கொண்டு வந்தது. தரையில் நெருப்பு குண்டத்திற்கு அருகில் ஹோமமோ பூஜையோ நடந்தது. தொடர்ந்து கிராமத்தின் தலைவனின் உத்தரவுப்படி மணமகள் பூஜை செய்யப்பட்ட ஒரு பிடி மண்ணை எடுத்து மணமகனிடம் தந்தாள். அவன் அதை உண்ண வேண்டும். அதற்குப் பிறகு மணமகன் ஒரு பிடி மண்ணை எடுக்கிறான். மணமகளிடம் தருகிறான். அத்துடன் மணமகனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் மணமகளின் பெற்றோர்களுக்கு நஷ்ட பரிகாரம் என்ற வகையில் இரண்டு எருமைகளைக் கொடுத்த பிறகு, மணமகன் மணமகளைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறான்.
அவள் அவனுக்கு சொந்தமானவளாக ஆகிவிட்டாள். இந்த பூமி இருக்கும் வரை அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், மண்ணுடன் கலக்கும் வரை அவன் அவளுக்குச் சொந்தமானவன்.
அவனுக்கு தலைப்பாகையும் சிறகும் வைத்த பிறகு, ஒருநாள் முன்னோக்கிப் போயிருந்த ராணுவப் பிரிவு திரும்பி வந்தது. அவன் வெளியே நடந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் கேப்டனுக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாயின. ஹவில்தார் கங்கா பிரசாத் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான்.