மரணமற்ற மனிதன் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6404
அவள் மிகவும் மெதுவாக அவனுடைய தாடையைத் தடவி, அழகாக சிரிப்பைத் துடைத்தாள். சொல்லப்போனால், அவளுக்கு அழ வேண்டும்போல இருந்தது.
“என்னை தெரியவில்லையா?''
இல்லை. அவள் கேட்கவில்லை. ஆனால், அவளுடைய கண்களில் அந்த உள்ளே எழுந்து கொண்டிருந்த கேள்வி எழுதி வைக்கப்பட்டி ருந்தது. அன்பு நிறைந்த விரல் முனையால் அவள் அவனுடைய மனதின் வீணைக் கம்பிகளை மீட்டி தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.
“என் தேவா, கண் விழியுங்கள்... கண் விழியுங்கள்...''
இந்த இனிமையான கனவில் இருந்து கண் விழிப்பதற்காகவோ என்னவோ, ராமச்சந்திரன் சிறிது நேரம் மேலும் கீழும் மூச்சு விட்டான். ங்ஹே! இடுப்புப் பகுதியும் மார்பும் வலிக்கின்றனவே! எனினும், திடீரென்று சுய உணர்விற்கு வந்த அவனுடைய மூளை தனக்கு முன்னால் குனிந்து கொண்டு நின்றிருந்த அவளுடைய முழு உருவத்தையும் அடையாளம் கண்டு பிடித்தது. அவளுடைய பொன்னுக்கு நிகரானதும் நிர்வாணமானதுமான உடலில் அவனு டைய கண்கள் நிலைகுத்தி நின்றன. அந்த கடைந்தெடுத்த அழகில் மூழ்கிய இதயம் புன்னகைத்தது.
ஓ!
அவன் தன்னைப் பார்த்து விட்டான் என்பதையும், யார் என்று அடையாளம் தெரிந்து கொண்டான் என்பதையும் உணர்ந்தபோது, அவளுடைய ரத்தம் ததும்பிக் கொண்டிருந்த விரல் நுனிகள் அவனு டைய கன்னங்களில் மெதுவாக ஊர்ந்து, சிலிர்ப்படைந்தன. பதினான்கு நாட்களாக அவள் அவனை பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஆபத்தில் சிக்கிக் கொண்ட அந்த வெளியூர்க்காரனை அவனுடைய ஆட்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு ராணுவ வீரனின் உயிரைவிட மிக உயர்வான சேவையைச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் முன்னோக்கிச் சென்றார்கள். ஒரு நாள் அவனை நெருப்பில் எரிப்பதற்குக்கூட கேப்டன் தீர்மானித்து விட்டார். கிராமத்தின் தலைவனிடம் விறகுகளை வெட்டிச் சேர்க்கும்படி கூறியபோது, சம்பவம் இன்னொரு வழிக்குத் திரும்பியது. “அவனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் முன்னோக்கிச் செல்லுங்கள்!''
கிழவனான கிராமத்தின் தலைவன் தன் மனைவியையும் மகளையும் ராமச்சந்திரனை பத்திரமாகக் கவனித்துக் கொள்வதற்காக அனுப்பி வைத்தான். அதற்குப் பிறகு தாய்க்கு வேலைகள் இருந்தன. மகள் அவனைப் பார்த்துக் கொண்டாள். அழுக்குகளைக் கழுவி சுத்தம் செய்து, விரிப்பைச் சலவை செய்து விரித்தாள். அந்த நாகரீக மற்ற மனிதக் கூட்டத்திற்கு பெண்- ஆண் வேறுபாடு எந்தச் சமயத்தி லும் சுவரென எழுந்து நின்றதில்லை. அவர்கள் சமுதாயத்தில் சரி நிகர் உயிர்களாக இருந்தனர்.
அவன் கண் விழித்து விட்டான் என்ற விஷயம் தெளிவாகத் தெரிந்தவுடன், அவள் மகிழ்ச்சியால் துள்ளி எழுந்தாள். “கிலோ! ஹிலோ!''
அவளுடைய கிளிக்குரலை மட்டும் அவன் கேட்டான். “கண் விழிங்க... எழுந்திருங்க'' என்று அவள் கூறுவதை அவன் புரிந்து கொள்ளவில்லை. முழுமையான சுய உணர்வுடன் அவளுடைய மெல்லிய சிவந்த உதடுகளையே அவன் உற்றுப் பார்த்துக் கொண்டே படுத்துக் கிடந்தான்.
மெல்லிய காலடிச் சத்தம் கேட்டது. யார் அது என்று சாய்ந்து பார்க்க வேண்டும்போல இருந்தது. கழுத்தைச் சாய்க்கக் கூடாது. தான் எங்கு இருக்கிறோம் என்று அவன் நினைத்துப் பார்த்தான். காதில் முழக்கம் கேட்டது. மரத்தின் பச்சை நிறத்தின்மீது தங்கத்தை உருக்கி ஊற்றி விட்டதைப்போல.. இந்த உலகம் நிறைய தங்கத்தை வாரி இறைத்திருப்பதைப்போல... தெளிவான முடிவுகள் கிடைக்க வில்லையே!
“அபு... அபு கிலாய்..'' சந்தோஷத்துடன் அவள் கட்டிலை விட்டு எழுந்து நின்றாள். அரை நிர்வாண கோலத்தில் இருந்த அவளுடைய மார்பகங்கள் பெருமூச்சு விட்டதில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன. ஹன்ஸராஜ் ஓடி வந்தான்.
“கண் விழிச்சாச்சா?'' இடையில் புகுந்து அவன் கேட்டான்.
“கிலாய்...'' அவளுடைய கிளிக்குரல் எழுந்தது.”என் ராமச்சந்திரன்...'' என்று அழைத்தவாறு ஹன்ஸராஜ் ஓடி வந்தான். தளர்ந்த நிலையில் கண்களை விழித்துக் கொண்டு படுத்திருந்த தன் நண்பனை இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவன் பார்த்துக் கொண்டு நின்றான். நீண்ட நேரம் கடந்த பிறகுதான் அவனுக்கு ஞாபகமே வந்தது.”நீர் குடிக்கணுமா?''
ராமச்சந்திரன் எதுவும் வாய் திறக்கவில்லை. முனகக்கூட இல்லை. அவனுடைய மூளையில் ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கும் நினைவுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முழு சக்தியையும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஹை பவர் ட்ரான்ஸ்மீட்டரில் இருக்கும் கணக்கற்ற வயரிங்கைப்போல அவனுடைய மூளையின் ஒவ்வொரு நரம்பிலும் மின் சக்தி பாய்ந்து கொண்டிருந்தது.
ஹன்ஸராஜை அவன் அடையாளம் கண்டு கொண்டான். அப்போது காதுகளில் சத்தம் எதிரொலிப்பதைப் போல தோன்றியது. பைத்தியம் பிடித்த சுபார்ஜின் நதியின் பயங்கரமான சத்தமும் இரைச்சலும் காதுகளில் முழங்கிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. ஆச்சரியப்பட்ட நிலையில் அவன் கேட்டான்: “என் ரைஃபில் எங்கே?''
ஹன்ஸராஜ் திகைத்துப் போய் நின்றான். “ரைஃபிலா?''
அவனே அப்போதுதான் நினைத்துப் பார்த்தான். மலைச் சரிவில் விழுந்தபோது, ரைஃபில் காணாமல் போயிருந்தது. யாருக்கும் அதைப்பற்றிய நினைப்பே இல்லை. பதினான்கு நாட்கள் சுய உணர்வு இல்லாமல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்த ராமச்சந்திரன் இதோ கண் விழித்தவுடன் ரைஃபிலைக் கேட்கிறான். மனிதனின் மூளையைப் பற்றி முடிவற்ற ஆச்சரியத்துடன் அவன் நினைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஹன்ஸராஜ் வந்தவுடன் சற்று விலகி நின்றிருந்த அந்த வன தேவதை, அவர்கள் ஏதோ பேச ஆரம்பித்தவுடன் எதையோ நினைத் ததைப் போல அங்கிருந்து ஓடினாள். பிறகு கூட்டமாக ஆட்கள் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. கிராமம் முழுவதும் அவனைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தது. கிராமத்தின் தலைவனும் அவனுடைய மனைவியும் அவனுடைய அழகான மகளும் முன்னால் நடந்து வந்தார்கள். அவர்கள் அபு என்றும் கிலாய் என்றும் ஜிஞ்ஜிங் என்றும் நமக்குப் புரியாத நூற்றுக்கணக்கான சொற்களை, மூச்சுக்கூட விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். கிளிகளின் கூட்டத்திற்குள் கற்களை எறிந்து விட்டதைப்போல அதைப் பார்க்கும்போது தோன்றும்.
கிராமத்தின் தலைவன் ராமச்சந்திரனையே நின்று பார்த்துக் கொண்டே, மேலே பார்த்து வணங்கினான். தான் கொண்டு வந்தி ருந்த ஒரு திரவத்தை அவனுடைய வாயில் ஊற்றினான். அப்போது அவன் எந்தவித மறுப்பும் கூறாமல் அதைக் குடித்தான். வாயில் இருந்த கசப்பும் எரிச்சலும் இல்லாமற் போய் விட்டதைப்போல தோன்றியது. கொஞ்ச நாட்களாகவே அவன் ராமச்சந்திரனுக்கு மருந்துகளையும் பாலையும் கொடுத்துக் கொண்டு வந்தான். வாழ்க்கையிலேயே மிகப் பெரிய செயலைச் செய்து முடித்த சந்தோஷத்துடன் அவன் திரும்பிச் சென்றான். அப்போதும் அன்பு நிறைந்த அந்த இளம் பெண் அவனுடைய கட்டிலை உரசியவாறு நின்று கொண்டிருந்தாள்.