மரணமற்ற மனிதன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6404
அவரவர்கள் தாங்கள் வெட்டி எடுத்த மண்டை ஓடுகளை காட்சிப் பொருளாக வைத்திருக்கும் மனித இனத்தைப் பற்றி எப்போதோ படித்த விஷயங்கள் நினைவுக்கு வரும். காட்டுவாழ் மனிதர்களின் ஆட்டமும் பாட்டும் ஆரவாரங்களும் கூக்குரல்களும் முடியும்போது, நீங்கள் போர்வையை மூடிக் கொண்டு கட்டிலில் படுத்து வானத்தையும் நட்சத்திரங்களையும் கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உறக்கத்தில் பயப்படக் கூடிய கனவுகளைக் கண்டு, வாய்விட்டு கூப்பாடு போடுவீர்கள்.
மறுநாள் இருப்பிடங்களில் இருந்து மரப் பட்டைகளால் ஆன ஆடைகளைக் கொண்டு நாணத்தை மறைத்திருந்த பெண்கள் பதுங்கிப் பதுங்கி எட்டிப் பார்ப்பதைப் பார்க்க முடிந்தது. அவர்களுடைய வெண்மையாகவும் கொழுத்து தடித்தும் இருந்த கால்கள் கடைந்தெடுத்த அழகை வெளிப்படுத்தின. ராணுவப் பிரிவு ஒன்றோ இரண்டோ நாட்கள் அந்த இடத்தில் தங்கியிருப்பதாக இருந்தால், இந்தப் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாவதற்கு இடம் இருக்கிறது. அவர்களுடைய சதைப் பிடிப்பான மார்பகங்களும் ரத்த நிறத்தில் இருந்த உதடுகளும் சிவந்த கன்னங்களும் நீல நிறக் கண்களும் மாறி மாறி பார்க்கும்போது... நீங்கள் அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஆரம்பத்தில் பதைபதைப்பு அடைவீர்கள். அவர்கள் ஆண்களுடன் சேர்ந்து பட்டாளத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகுகிறார்கள். கால் முதல் தலை வரை உரோமத்தால் ஆன துணியால் மூடப்பட்டு, முகம் நிறைய வளர்ந்திருக்கும் தாடி உரோமங்களுடன் இருக்கும் அந்த நாகரீக மனிதர்களும் ஆச்சரியப்படத்தக்க நிலையில் உள்ள மனிதர்கள்தான், ஆக்கிரமிப்பதற்காக வந்தவர்கள் அல்லர் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியதிருந்தது. அவர்களுக்கும் அது ஆச்சரியத்தை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. எப்போ தும் குளிர் நிறைந்திருக்கும் அந்த இமயமலைப் பகுதிகளில் இருக்கும் மனிதர்களுக்கு தாடி உரோமம் இல்லாமலிருந்தது. சில நேரங்களில் புருவம்கூட இல்லாத முகங்களும் இருந்தன. அழுக்கில் புரண்ட தங்கத்தைப் போன்றிருந்த அவர்களுடைய மேனியும், உரோமங்களைக் கொண்டவர்களும் ஆடைகள் அணிந்தவர்களுமான புதிய மனிதர் களுடைய சரீரமும் எவ்வளவுதான் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டாலும், அந்த பெண்களிடம் உண்டான ஆர்வம் சிறிதும் மறையவே இல்லை.
பெண்களுடன் தனிப்பட்ட முறையில் பழகக் கூடாது என்ற பலமான உத்தரவு இருந்தது. ஆதிவாசிகளுக்கு மத்தியில் விபச்சாரமும் பலாத்காரமும் மிகப் பெரிய குற்றச் செயல்களாகக் கருதப்பட்டன. ஆனால், விருப்பப்பட்ட பெண்களை நீங்கள் எல்லாருக்கும் தெரியும் படி தழுவலாம். பட்டாளக்காரர்களிடமிருந்து பெரும்பாலான பொருட்களை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை. ஹாவர் ஸாக்குகளின் பித்தளை பக்கில்களைப் பிய்த்து தர வேண்டுமென்று அவர்கள் கையால் சைகை செய்து கெஞ்சிக் கேட்பார்கள். காதில் கட்டித் தொங்க விடுவதற்குத்தான். அலுமினியத்தால் ஆன சோப்பு டப்பாவை ஒருத்தி கேட்டாள். உப்பைப் போட்டு வைப்பதற்குத்தான். அவர்களை சந்தோஷப்படுத்தி விட்டால் போதும்; அந்த எந்தவித தொந்தரவுகளையும் தராத பெண்கள் ஆட்டுக் குட்டிகளைப் போல உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார்கள். அப்போது பட்டாளக் காரர்கள் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு, அவர்களை கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்கச் செய்து, முத்தம் கொடுத்து, மார்புடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொள்வார்கள்.
சொல்லப்போனால், டிட்டாச்மென்ட் மறுநாளே புறப்பட இருக்கிறது. கிராமத்தின் தலைவன் சுமை தூக்குபவர்களை அழைத்துக் கொண்டு வந்தான். பெண்களும் இருந்தார்கள். அவர்கள் மரப் பட்டையையோ பின்னப்பட்ட புற்களையோ கொண்டு நாணத்தை மறைத்திருப்பார்கள். பட்டாளக்காரர்கள் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். கீழே பார்ப்பார்கள்!
“என் தம்பிரானே!''
“நில்லு... நில்லு...'' கேப்டன் உரத்த குரலில் கூறினார்.
மொழிபெயர்ப்பாளர் இடையில் புகுந்து கேட்டான்: “என்ன?''
“அவர்களுக்கு கொஞ்சம் துணிகளைத் தர வேண்டும்.''
கிராமத்தின் தலைவன் பெண்களை அழைத்துக் கொண்டு குடிசைகளுக்குத் திரும்பச் சென்றான். பட்டாளக்காரர்களும் ஆண்களும் அமர்ந்து பழைய துணிகளைக் கொண்டு சிறிய ஆடைகளை அதற்குப் பிறகு தைப்பார்கள். அடுத்த கிராமத்திற்குச் சென்றால், கிராமத்தின் தலைவனிடம் சுமைகளைத் தூக்குவதற்காக வரும் பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அவர்களுக்காக முந்தைய நாளே சிறிய ஆடைகளைக் கொடுத்தனுப்பி விடுவார்கள். பெண்கள் இடுப்பையும் மார்பையும் மறைத்துக் கொண்டு பட்டாளக் காரர்களுக்கு மத்தியில் சுமைகளைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் மீண்டும் அடுக்கடுக்காக இருந்த மலைகளில் ஏறி இறங்கினார்கள். ஊஞ்சலைப் போல ஆடிக் கொண்டிருந்த மூங்கிலால் ஆன பாலங்கள் தொங்கிக் கொண்டிருந்த நதிகளைக் கடந்து சென்றார்கள். தொலை தூரத்தில் நீல நிற வான விளிம்பில் வெள்ளித் துண்டுகளைப்போல இமயமலைத் தொடர்கள் தெரிந்தன. எப்போதும் மழை பெய்து கொண்டோ பனி விழுந்து கொண்டோ இருக்கும். பாதை முழுவதும் பாறைகளின் இடுக்குகள் வழியாக ஊற்றுகள் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தன. குண்டுகள் நிரப்பப்பட்ட ரைஃபில்களைத் தோளில் அணிந்திருந்த பட்டாளக்காரர்கள் ஐந்தோ ஆறோ சுமை தூக்குபவர்களுக்கு இடைவெளி விட்டு பாதங்கள் பதித்து நடந்து சென்றார்கள். அவர்கள் தங்களு டைய கேடு கெட்ட நிலைமையை நினைத்து மனதில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய குடும்பங்களைப் பற்றிய ஆழமான சிந்தனைகளில் மூழ்கியவாறு, அவர்கள் வழி தெரியாமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
எப்போதும் ராமச்சந்திரன்தான் முன்னால் செல்வான். வாரங்களும் மாதங்களும் கடந்த பிறகும் இந்த வாழ்க்கைமீது நெருக்கம் அதிகரித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. வசதிகள் ஒரு முறைதான் கிடைக்கும். கிடைத்த வசதிகளை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை இருக்கும் நிலையிலேயே பார்த்து அறிந்து கொள்ளக் கூடிய தன்னுடைய செயலை அவன் எந்தச் சமயத்திலும் தளர்ந்து போவதற்கு சம்மதித்ததே இல்லை.
வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் மூங்கிலால் ஆன பாலத்திற்கு முன்னால் ஒருநாள் கேரவன் (பயணக் குழு) திகைப்படைந்து நின்று விட்டது. இந்த ஆதிவாசிகள் மூங்கில் வளையங்களாகப் பின்னி, தொட்டிலைப்போல இரண்டு கரைகளிலும் நின்று கொண்டிருக்கும் மரங்களில் கட்டித் தொங்க விடப் பட்டிருந்த அந்த பாலம் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. நீரலை அசைய, பாய்ந்து கொண்டிருந்த நதியிலிருந்து கிளம்பிய நுரையும் குமிழ்களும் தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் பாலத்தின்மீது வேகமாக மோதித் தெறித்துக் கொண்டிருந்தன. கேப்டன் ஹண்டு தன்னுடைய பட்டாளக்காரர்களின் முகத்தைப் பார்த்தார். அவர்களோ, கால் சுவடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமச் சந்திரன் முன்னோக்கி வந்தான். கேப்டன் தன்னுடன் இருந்த அந்த ஒரே ஒரு மதராஸியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
“கடக்கலாமா?'' கேப்டன் கேட்டார்.
“ஜி, ஸாஹேப்.''
குறும்புத்தனம் நிறைந்த அவனுடைய கண்கள் பிரகாசிப்பதை கேப்டன் பார்தார்.