மரணமற்ற மனிதன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6404
வயதான கிராமத்தின் தலைவனின் எச்சரிக்கை நிறைந்த கண்கள் சந்தோஷத்தால் படபடத்தன. கேப்டன் பல வண்ணங்களைக் கொண்ட சில்க் துணித் துண்டுகளை எடுத்து பரிசாகத் தந்தபோது, “இவை அனைத்தும் இந்தியா என்ற பெரிய நாட்டின் மிகப் பெரிய மனிதர்கள்மீது அன்பு வைத்திருக்கும் ... யின் பரிசுப் பொருட்கள்'' என்று தித்தோரிவா கூறினான். கிராமத்தின் தலைவனின் சிறிய கண்களில் நீர் நிறைந்து விட்டது. கேப்டன் ஒரு கோணிப்பையை கிழவனிடம் சுட்டிக் காட்டினார். சந்தோஷத்தால் உணர்ச்சிவசப்பட்ட கிழவன் குடிசைகளை நோக்கி கண்களைச் செலுத்தினான். மரக்கால்களில் உயர்த்தப்பட்டிருந்த குடிசைகளில் இருந்த பெண்கள் ஆர்வத்துடன் பட்டாளக்காரர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கிராமத்தின் தலைவன் அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தான். அவன் கேப்டனுடன் சேர்ந்து சுமை தூக்குபவர்கள் சீர் செய்து கொண்டிருந்த இடத்தைப் பார்ப்பதற்காக நடந்தான். “இப்போது கிராமத்தில் ஆண்கள் இல்லை. அனைவரும் வேட்டைக் காகச் சென்றிருந்தார்கள். அவர்கள் வந்த பிறகு உங்களுடைய ஆசைக்கும் தேவைக்கும் ஏற்றபடி எதையும் செய்யலாம்'' என்று கூறினான் கிராமத்தின் தலைவன்.
சிறிய வில்களையும் அம்புகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு நிர்வாண கோலத்தில் இருந்த குழந்தைகள் சற்று தூரத்தில் நின்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு தங்களுக்கென்றிருந்த சிந்தனைகளில் மூழ்கிய அவர்கள் உயர்ந்த மரக் கிளைகளில் இருந்த விருப்பமான இலைகள்மீது குறி வைத்து அம்பு எய்து விளையாட ஆரம்பித்தார்கள்.
உணவு தயாரானவுடன் கேப்டனும் ஹவில்தார்களும் குடிப்பதற்காக உட்கார்ந்தார்கள். ஹன்ஸராஜ் தூங்கிக் கொண்டிருந்த ராமச்சந்திரனுக்கு அருகில் சென்று பார்த்தான். ஆழ்ந்த தூக்கமாக இருந்தது! அசைவு இல்லை... பேச்சு இல்லை. மூச்சு கூட இல்லை என்று தோன்றியது. பாவம்... மிகவும் களைத்துப் போய் விட்டிருக்க வேண்டும்.
ஹன்ஸராஜுக்கு அந்த மதராஸி நண்பன்மீது பிரியம் இருந்தது. அவர்களுடைய கூட்டத்தில் ஒரே ஒரு மதராஸிதான். அதற்காக அவனுக்கு எந்தவொரு கூச்சமும் இல்லை. எப்போதும் உற்சாகமும் எச்சரிக்கையும் நிறைந்த இப்படிப்பட்ட மனிதர்கள் உடன் இருக்கும் போது அவரவர்கள் மனதில் தங்கியிருக்கும் கவலைகள் மறந்து போய் விடுகின்றன.
நண்பனை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது ஹன்ஸராஜுக்கு ஏதோ சந்தேகம் உண்டானது. இப்படி ஒரு தூக்கமா? அப்போது அவன் சுபார்ஜின் நதியைப் பற்றியும் மண்ணுக்கும் கீழே போன செங்குத்தான மலைச்சரிவைப் பற்றியும் நினைத்துப் பார்த்தான்.
கடவுள்!
அது கடவுளின் கருணையாக இருந்தது.
இடையில் ராமச்சந்திரன் அசையவும் முனகவும் செய்தான். பாதியாகத் திறந்த சிரிப்பின் வழியாக எச்சிலும் கபமும் வெளியே வந்தன.
“ராமச்சந்திரன்!'' திடீரென்று அழைத்தான். அதைத் தொடர்ந்து அவன், ராமச்சந்திரனின் நெற்றியை மெதுவாகத் தொட்டான்.
ஓ!
கை தெறித்து விடும்போல இருந்தது.
அவனுக்கு பயங்கரமான காய்ச்சல்.
“ராமச்சந்திரன்!'' அவன் நின்று கொண்டே அழைத்தான்.
ஹவில்தார் கங்கா பிரசாத் கேப்டனின் மடியின்மீது விழுந்தான். அவன் அழுது கொண்டே முன்பு செய்ததைப்போல பொன்னைப் போன்ற ஸாபிடம் தன்னுடைய முடிவற்ற புகழுரைகளை வெளியிட் டுக் கொண்டிருந்தான்.
“ஸாப்... பாருங்க... என் ராமச்சந்திரனைப் பாருங்க. நான் சொன்னேன் அல்லவா? இவன்தான் என் உயிர்...''
அப்போது ஹன்ஸராஜ் ராமச்சந்திரனை அழைப்பது கேட்டது. கேப்டனும் ஹவில்தார் கோம்புவும் திரும்பிப் பார்த்தார்கள். கங்கா பிரசாத்துக்கு எதுவுமே புரியவில்லை.
“என் ராமச்சந்திரனைப் பாருங்க ஸாப்! இவன் ஒரு பட்டாளக்காரன். இவன்தான் நம்முடைய உயிர். இவன்தானே..''
கேப்டன் எழுந்தார். ஏதோ விபரீதம் இருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்தது. அவர் ராமச்சந்திரனின் கட்டிலை நோக்கி அமைதி யாக நடந்தார்.
அவர்கள் ஒவ்வொருவராக அவனைத் தொட்டுப் பார்த்தார்கள். அழைத்தார்கள். அசைத்தார்கள். இல்லை... அசைவில்லை. பேச்சு இல்லை.
கடவுளின் விதி!
ஹன்ஸராஜ் அருகிலிருந்த கட்டிலில் படுக்கையை விரித்துப்படுத்துக் கொண்டான். அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த சிப்பாய் கள் அவனுடைய கட்டிலுக்கு அருகில் காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அவன் முனகும்போதெல்லாம் அவர்கள் பதை பதைப்புடன் குனிந்து பார்த்தார்கள். இல்லை... அவன் கண் விழிக்கவேயில்லை.
அவன் அதே நிலையில் பதினான்கு நாட்கள் படுத்திருந்தான். சுய உணர்வு வந்தபோது வாய் கசக்கிறது என்று எடுத்தவுடன் அவனுக்குத் தோன்றியது. ஆனால், கசப்பு அல்ல. எரிச்சலாக இருக்க வேண்டும். துப்ப வேண்டும் என்று தோன்றியது. சிரிப்பின் வழியாக எச்சில் வெளியே வந்தது. வெறுப்பும் வேதனையும் இருந்தன. துடைப்பதற்காகக் கையைத் தூக்கினான். கைகள்! கையை தூக்க முடியவில்லை. கைகள் இல்லையா? அசைத்துப் பார்த்தான். இருந்தன. அசைந்தான். அப்போது உடலைப் பற்றிய நினைப்பு வந்தது. மொத்தத்தில்- கட்டி லில் ஒடுங்கிக் கொண்டு படுத்திருந்தான். கால்களை அசைத்துப் பார்த்தான். இல்லை. அசைக்க முடியவில்லை. என் கால்கள்! என்ன இதெல்லாம்? கண்களை விழித்துப் பார்க்கலாம். கண்கள் விழிக்கவில்லை. எதிலோ ஒட்டிக் கொண்டதைப்போல... எனினும், எதையோ பார்க்கிறோம் என்று தோன்றியது. எதுவும் தெளிவாகத் தெரிய வில்லை. ஒரு மூடல் இருந்தது. இளம் நீல நிறமோ மஞ்சள் நிறமோ கலந்த மூடல் மஞ்சளாக உலகம் தெரிந்தது.
கட்டில் அசைவதைப்போல தோன்றியது. தூங்குவதற்காகப் படுத்தால், அம்மா வந்து பார்த்துக் கொண்டிருந்தாள். போர்வையை சரி செய்து, கட்டிலில் கையை ஊன்றி குனிந்து நின்று கொண்டு தன் மகனின் அமைதியான முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட்டுத்தான் அம்மா தூங்குவதற்கே செல்வாள். அம்மா வந்து கட்டிலை அசைத்திருக்க வேண்டும். அம்மாவைப் பற்றி நினைத்ததும், அவனுடைய சோர்வடைந்து போயிருந்த கண்கள் திறந்தன.
ஓ!
அவன் ஒரு பேரழகு படைத்த தேவதையின் நீல நிறக் கண்களில் கண் விழித்தான். அவளுடைய பொன்னைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த கன்னங்கள் சிவந்து, நீல நிறக் கண்கள் ஒளிர்ந்தன. ராமச்சந்திரனுக்கு தன் முகத்தைத் துடைக்க வேண்டும்போல இருந்தது. ஏதோ இனிமையான கனவைக் கண்டு கொண்டிருக்கி றோமோ என்று அவன் நினைத்தான்.
அவனுடைய சோர்வடைந்த கண்கள் திறந்தபோது அவன் மேலும் சற்று குனிந்து கொண்டு பார்த்தான். அவளுடைய கண்கள் முழுக்க ஆர்வமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் ஆச்சரியப்பட்ட நிலையில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய தளர்ந்து போய் காணப்பட்ட கன்னங்களில் அவள் மிகவும் மெதுவா கத் தன்னுடைய விரல்களைக் கொண்டு வருட ஆரம்பித்தாள். அவன் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான்.