மரணமற்ற மனிதன்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6405
சேக்கெ என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், பரவலான அர்த்தத்தில் பார்க்கப்போனால், அது ஒரு கிராமம் அல்ல. வசதிக்காக காட்டுவாழ் மனிதர்களின் அந்தக் குடியிருப்புப் பகுதியை கிராமம் என்று கூறிக் கொள்வார்கள். அந்த காட்டுவாழ் மனிதர்களும் கிராமம் என்ற பெயரை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், கிராமத்தின் தலைவரை நாகரீகமான முறையில் அவர்கள் காம்படா என்று அழைத்தார்கள்.
உயரமான மரக் கால்களை ஊன்றி, மேற்கூரை அமைத்து, மலை வாழையால் வேயப்பட்ட உயரமான குடிசைகளில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அடுப்பும் நெருப்பும் அந்தக் குடிசைகளுக்குள் இருந்தன. எப்போதும் பனி விழுந்து கொண்டிருந்த அந்த இமயமலைப் பகுதிகளில் நெருப்பைச் சுற்றிலும் படுத்து உறங்கத்தான் முடியும். குடிசையில், குழைத்த மண்ணால் உருவாக்கப்பட்ட அடுப்பில் விறகை வைத்து எரியச் செய்து, இங்குமங்குமாக தாயும் பிள்ளைகளும் அண்ணனும் தம்பிமார்களும் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
அடர்த்தியான காடுகளில் வசிக்கக் கூடிய இந்த ஆதிவாசிகளின் குடியிருப்புகளுக்கு இந்திய ராணுவத்தின் ஒரு சிறிய பிரிவு சென்றிருந்தது. சிறிய பிரிவு என்று எதற்காகக் கூற வேண்டும்? அவர்கள் மொத்தம் பதினான்கு பேர் இருந்தார்கள். ஏதோ "ஃபீல்ட் சர்வேயிங்” கம்பெனியிலிருந்து ஒரு கேப்டனும் ஒரு நாயக்கும் மூன்று சிப்பாய்களும் சிக்னல்ஸிலிருந்து ஒரு ரேடியோ மெக்கானிக்கும் ஒரு ஆப்பரேட்டரும், அவர்களுக்கு உதவுவதற்காக அஸ்ஸாம் ரைஃபில்ஸிலிருந்து ஆறு சிப்பாய்களும் ஒரு ஹவில்தாரும். விருப்பமிருந்தால் பதினான்கு பேர் இருக்கிறார்களா என்று கணக்குப் போட்டு பார்க்கலாமே! இவர்கள் தவிர, இவர்களுடன் ஆதிவாசிகளின் மொழியைத் தெரிந்திருக்கும் மொழிபெயர்ப்பாளரும் இருந்தார்.
வட கிழக்கு எல்லைப் பகுதிகளில் இருக்கும் மலைச் சரிவுகளிலும் அடர்ந்த காடுகளிலும் வசிக்கும் இந்த ஆதிவாசிகளின் குடியிருப்பு களுக்கு அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். காடுகளிலும் மலைகளிலும் நதிகளின் கரைகளிலும் என்று அவர்கள் ஒன்றோ ஒன்றரையோ வருடங்கள் இருந்தார்கள். எனினும், அவர்கள் எதற்காக அந்த இடங்களில் வந்து தங்கியிருக்கிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. எல்லையை உறுதி செய்து சர்வே எடுப்பதற்காகவும் திபெத் வழியாக தேவையற்ற நோக்கங்களுடன் வெளி நாட்டினர் கடந்து வருகிறார்களா என்பதைக் கண்டு பிடிப்பதற்காகவும் வந்து தங்கியிருக்கிறார்கள் என்ற கருத்து அவர்களிடையே இருந்தது. இந்தியாவின் நான்கு எல்லைகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கும் அந்த நாகரீகமற்ற மனிதர்களுக்கு, சுதந்திர இந்தியாவின் வாழ்த்துகளும் மரியாதைகளும் கிடைத்திருக்கின்றன என்று தோன்றியது. ஏனென்றால், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏராளமான பரிசுப் பொருட்களையும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வெள்ளை நிற உப்பையும் இந்த ராணுவப் பிரிவினர் தனிப்பட்ட கவனம் செலுத்தி கொண்டு சென்றிருந்தார்கள். ஒரு நாள் அஸ்ஸாம் ரைஃபில்ஸில் பணியில் இருந்த மொழி பெயர்ப்பாளர் தித்தோரிவா, கிராமத்தின் வயதான மனிதர்களிடம் பேசி ராணுவப் பிரிவின் மிகப் பெரிய சுமைகளைத் தூக்கிச் செல்லக் கூடிய ஆட்களைத் திரட்டினான். அவர்கள் நீண்ட நாட்களுக்கு பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டிய உணவுப் பொருட்களையும் கூடாரங்களையும் கேன்வாஸ்களையும் எடுத்துக் கொண்டு சென்றார் கள். இன்னும் சொல்லப்பேனால், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் அவர்களுக்குத் தேவையான அவசியப் பொருட்களை அவர்கள் இருக்கும் இடங்களில் பாராசூட்களில் போடுவார்கள். எல்லைப் பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருக்கும் காலம் வரை இந்தப் பட்டாளக்காரர்களின் குடும்பங்களுக்கு கடிதத் தொடர்புகள் நடத்திக் கொண்டிருந்தவர்களும் பணம் அனுப்பிக் கொண்டிருந்தவர்களும் அவரவர்களுடைய யூனிட்டைச் சேர்ந்த கமாண்டர்கள்தான்.
"உங்களுடைய மகன் நாட்டிற்காக மிகப் பெரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறார். தைரியமாக இருங்கள்.”
"உங்களுடைய தைரியமான கணவர் நாட்டிற்குச் சேவை செய்வதற்காக தியாகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியும்போது உங்களுக்கு மதிப்பு உண்டாகும். நலமாக இருக்க வாழ்த்துகள்!'
ராமச்சந்திரனின் தாய்க்கும் நலம் விசாரித்து கடிதங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அவனோ, சேக்கெ என்ற கிராமத்தில் ஜுரத்தால் பாதிக்கப்பட்டு அங்கும் போக முடியாமல் இங்கும் போக முடியாமல் படுக்கையில் படுத்திருந்தான்.
வீட்டிற்கு தன்னைப் பற்றி யாராவது ஏதாவது எழுதுகிறார்களா என்று ராமச்சந்திரனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் அவனுடைய எதிர்ப்பிற்கு உரிமை இல்லை என்று நம்பலாம். அவன் எப்போதும் தன் தாயை ஏமாற்றிக் கொண்டிருந்தான். ஒரு பாராசூட் வீரனின் வாழ்க்கையைப் பற்றி அவனுக்கு வேண்டியவர் களுக்கு எதுவுமே தெரியாது. அவன் பரந்து கிடக்கும் வெட்ட வெளியில், விரியும் சில்க் குடையில் தொங்கியவாறு இறங்கிக் கொண்டிருப்பான். நான்கு நாட்களுக்கு முன்னால் தான் நலமாக இருப்பதாக அவன் எழுதிய கடிதத்தை அப்போது அவனுடைய தாய் வாசித்துக் கொண்டிருப்பாள். பாராசூட்டில் மெதுவாக இறங்கும் போது அவன் இந்த தமாஷான விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பான்.
சுருண்ட தலைமுடியையும் நடுத்தர உயரத்தையும் மங்கலான நிறத்தையும் கொண்டிருக்கும் அந்த இளைஞன் எதற்கும் எப்போதும் தயாராக இருப்பான். எல்லா பிரச்சினைகளிலும் சற்று தலையிட்டுப் பார்க்கக் கூடிய ஆர்வம் அவனுடைய கருப்பு நிறக் கண்களில் தங்கி நிற்பதைப்போல தோன்றும். ஹவில்தார் கங்கா பிரசாத்திற்கு இந்த விஷயம் நன்றாகத் தெரியும். அதனால் தான் செல்லக்கூடிய இடங் களுக்கெல்லாம் ராமச்சந்திரன் தன்னுடன் வரவேண்டும் என்று அவன் வற்புறுத்திக் கூறுவான். ஸ்பெஷல் முகாம்களுக்கு ஹவில் தாருடன் இயல்பாகவே ராமச்சந்திரனும் பயணிக்க வேண்டியது வந்தது.
வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வதற்கு அவன் ஆசையுடன் இருந்தான். மரணத்தை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு விளையாடும்போது மட்டும்தான் அந்த பாழாய்ப்போன இளைஞனுக்கு சந்தோஷமே உண்டாகும். தன் தாயின் நூறாயிரம் மனக் குறைகள் அவனுக்கு முன்னால் கிடந்தன. "உன் முகத்தைப் பார்த்து விட்டு நான் கண்களை மூட வேண்டும்' என்று அவள் கூறுவாள். "நான் இப்போது என்ன சாகப் போகிறேனா?” என்று உடனே அவன் கேட்பான்.
ராமச்சந்திரன் இறந்துவிடுவான். கேப்டனும் ஹவில்தாரும் நண்பர்களும் நம்பிக்கையை இழந்து விட்டிருந்தார்கள்.
மாதக் கணக்காக ஆபத்தோ விபத்தோ இல்லாமல் அவர்கள் பயணம் செய்தார்கள். அடுக்கடுக்காக இருக்கும் மலைகளில் ஏறி இறங்கி, நதிகளைக் கடந்து, கிராமங்களை விட்டு கிராமங்களுக்குப் பயணம் செய்தார்கள். இயற்கையுடன் சேர்ந்து மனுதர்களும் மாறி விட்டிருந்தார்கள். நன்கு பழகிவிட்ட அனைத்து சமூக மரியாதை களையும் மோகன்வார்டி புகை வண்டி நிலையத்திலேயே விட்டு விட்டு வந்து விட்டார்கள்.