மரணமற்ற மனிதன் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6404
“நான் கடக்கட்டுமா?'' ராமச்சந்திரன் கேப்டனிடம் கேட்டான். புன்னகைப்பதற்காக மலர்ந்த அவனுடைய உதடுகளுக்கு நடுவில் சற்று அகலமான முன்வரிசைப் பற்கள் தெரிந்தன. வெறும் ஆர்வத்தால் மட்டும் பாலத்தைக் கடக்கப் போவதைப் பார்த்துக் கொண்டு அவன் நின்றிருந்தான். கேப்டன் வாய் முழுக்க சிரித்தார்.
“கடந்து செல்.''
ரைஃபிலைத் தோளில் அணிந்து சரி செய்து கொண்டு ராமச்சந்திரன் மரத்தில் ஏறி, மூங்கில் வளையத்தின்மீது கால்களை எடுத்து வைத்தான். எலிப்பொறியின் ஞாபகம்தான் வந்தது. ஆள் தடுமாறி கீழே விழுந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் நெருக்கமாகப் பின்னப்பட்ட அந்த வளையம் ஆட்டத்தை ஆரம்பித்தது. நிமிர்ந்து நிற்க முடியாது. பாதியாக குனிந்த அவன் ஒரு அடி எடுத்து வைத்து கீழே மிதித்தான்.
நதியின் நடுப்பகுதியை அடைந்தபோது, அவன் தன்னையே மறந்து விட்டிருந்தான். பாலம் ஊஞ்சலைப்போல ஆடிக் கொண்டிருந்தது. தவிட்டு நிறத்தில் நதி நுரையுடன் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது அவன் தன் தாயைப் பற்றி நினைத்துப் பார்த்தான். தூக்கம் வருவது வரை அவனுடைய தாய் அவனை தொட்டிலில் படுக்க வைத்து ஆட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அவனோ வேண்டுமென்றே உறங்காமல் படுத்திருப்பான். அவனுடைய அன்னை கதைகள் கூறுவாள். உறங்கிவிட்டால் பாதி கதையைத்தான் கேட்க முடியும் என்பதற்காக தொட்டிலை ஆட்ட சம்மதிக்க மாட்டான். அவனுக்கே தெரியாமல் உடல் வளர்கிறது, மனம் விசாலமாகிறது. ஓ... நாசம்! எந்தவொரு முடிவுமே இல்லாத ஊஞ்சலாட்டம் இது! என் அன்னையே! அந்தக் கரையை அடைந்த வுடன் அவன் முழுமையாக வியர்த்து குளித்திருந்தான்.
ராமச்சந்திரனை அடியொற்றி ஒவ்வொருவராக அவர்கள் நதியைக் கடந்தார்கள். இந்தக் கரையை அடைந்தவுடன் ஒவ்வொரு வரும் கீழே விழுந்தார்கள். வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருந்த நதியைப் பார்த்தபோது, அவர்களுடைய மனம் நடுங்க ஆரம்பித்தது. அந்தப் பக்கமாகக் கடக்க வேண்டும். ஹே! இனி முடியாது.
ஓய்வெடுத்து விட்டு, உணவு சாப்பிட்டு முடித்து அவர்கள் மீண்டும் புறப்பட்டார்கள். நதிக்கரையின் வழியாக அவர்கள் நடந்தார்கள். நடக்கும்போது சிரமங்கள் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வந்தன. செங்குத்தான மலையில் இருந்த பாதையில் மெதுவாக நகர்ந்து ஏறினார்கள். மலையின் இடுக்கின் வழியாக நதி சீறிப்பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. மலையின் ஆழமான பள்ளங்களில் வளர்ந்திருந்த மஞ்சள் நிறப் பாசிகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. மலையின் கூர்மையான நெற்றியின் வழியாக கவனமாகப் பார்த்து அடிகளை எடுத்து வைக்க வேண்டும். ஒரு சிறிய வரப்பை விட அகலம் குறைவான இடைவெளியில் பூட்ஸ் அணிந்த கால்களால் தட்டுத் தடுமாறி நடக்கும்போது, அவர்களுடைய தொடை நடுங்க, அவர்கள் தலை குனிந்து நின்றிருந்தார்கள். இடையில் எல்லாரும் நின்றார்கள்.
என்ன வேண்டும்?
ராமச்சந்திரன் பின்னால் பார்த்தான். அவனுக்குப் பின்னால் சுமைகளைத் தூக்கியிருப்பவர்கள். கேப்டனையோ ஹவில்தாரையோ பார்க்க முடிகிறதா என்று சாய்ந்து கொண்டே பார்த்தான். பார்க்க முடிந்தது. கேப்டன் ஹண்டு கையை விரித்துக் காட்டினார். அவருடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை என்ன காரணத்தாலோ பார்க்க முடியவில்லை.
நடக்கலாமா?
கேப்டன் கையால் சைகை காட்டினார். ராமச்சந்திரன் கீழே பார்த்தான். நதி சத்தம் எழுப்பிக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது. செங்குத்தான மலைச்சரிவில் நின்று கொண்டு கீழே பார்த்தபோது, மிகவும் வேகமாகச் சுற்றக் கூடிய ஒரு மிகப் பெரிய ஃப்ளைபல்ட்டைப் போல இருந்தது.
“நான் நடக்கிறேன்!''
அவன் கையைக் காட்டினான். ரைஃபிலைப் பிடித்துக் கொண்டு அவன் காலை எடுத்து வைத்தான். மிகவும் வேகமாக சுற்றக் கூடிய ஒரு மிகப் பெரிய ஃப்ளைபல்ட்டிற்கு மேலே காலை எடுத்து வைத்து நடப்பதைப்போல இருந்தது. சீறிப் பாய்ந்து கொண்டிருந்த நதி யையோ செங்குத்தான மலைச் சரிவையோ அவன் பார்க்கவில்லை. வரப்பை விட அகலம் குறைவான மலையின் நெற்றியில் இருந்த பாதையைப் பற்றி நினைக்கவில்லை. ரைஃபிலை இறுககையில் பிடித்துக் கொண்டு அவன் ஒரு அடியை எடுத்து வைத்தான். அடி தவறி விட்டது என்பதை அவன் அறியவில்லை. ஒரு வேகம் தோன்றியது. அப்போது வெட்ட வெளியில் பாராசூட்டில் குதித்தபோது தோன்றியதைப்போல அவனுடைய மனம் மலையின் நெற்றியின் வழியாக மேலே பறந்து சென்றது.
ராமச்சந்திரன் விழுந்ததை கேரவன் முழுவதும் பார்த்தது. அடி தவறி தலை குப்புற விழுந்ததைத் தொடர்ந்து அவன் வேகமாகக் கீழ் நோக்கி உரசியவாறு இறங்கிக் கொண்டிருந்தான்.
சுய உணர்வு வந்தபோது அவன் மல்லாக்க படுத்திருந்தான். எவ்வளவோ முறை பாராசூட்டில் குதித்திருப்பதால், அவனுடைய ஐந்து புலன்களுக்கும் பக்குவம் வந்து சேர்ந்திருந்தது. விமானத்தின் படியில் கால் இடறினால், உடனடியாக கிளி பறந்து போய் விடும். சில்க் குடை மெதுவாக விரியும்போதுதான் காலில் படும் சணலின் ஞாபகமே வரும். உடனே கைகள் பரபரக்கின்றன... அவன் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அப்போது நதியின் பயங்கரமான சத்தமும் இரைச்சலும் காதுகளில் எதிரொலித்தன. அவன்மீது படும் கயிறைப் பற்றிய புரிதல் அவனுக்கு இருந்தது. அதனால் முழுமையான சுய உணர்வுடன் கயிறின் முனையில் இருந்த முடிச்சை அவன் இறுகப் பற்றிக் கொண்டான். கைகளுக்கு பலமில்லை. என் தாயே! அப்போதும் அவன் தன் தாயை நினைத்தான். மீண்டும் ஒருமுறை விரல்கள் அழுத்திப் பிடித்தன. சுமை தூக்குபவர்கள் அவனை மிகவும் மெதுவாகப் பிடித்து மேலே கொண்டு வந்தார்கள். மேலே வந்து சேர்ந்தபோது, அவன் நன்கு நனைந்து விட்டிருந்தான். மெதுவாக நகர்ந்தபோது பைத்தியம் பிடித்திருப்ப தைப்போல தோன்றியது. நதியின் இரைச்சல் சத்தம் அவனுடைய காதுகளில் பெரிதாக முழங்கிக் கொண்டிருந்தது.
அவர்கள் அன்று சேக்கெ என்ற கிராமத்தை அடைந்தார்கள். சுமைகளைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள் நிலத்தைக் கொத்தி சீர் செய்து, மரக்கொம்புகளைக் கொண்டு கட்டி கட்டில்கள் அமைத்தார்கள். ராமச்சந்திரனுக்கு படுத்தால் போதும் என்றிருந்தது. சுமை தூக்குபவனிடம் சைகை செய்து அவன் தன்னுடைய கம்பளிக் கட்டை வாங்கினான். சுமை தூக்கியவனே கட்டிலில் கம்பளியை விரித்தான். ஆடைகளைக்கூட கழற்றாமல் அவன் கட்டிலில் விழுந்தான்.
தித்தோரிவாவுடன் சேர்ந்து கிராமத்தின் தலைவன் கேப்டனைப் பார்ப்பதற்காக வந்தான். அவன் வெட்டப்பட்ட புற்களைக் கொண்டு இடுப்பை மறைத்திருந்தான். அவனுடைய உருண்டு கொழுத்த சதைப் பிடிப்பான கைகளில் அம்பும் வில்லும் இருந்தன.
கேப்டன் "வணக்கம்” சொன்னபோது, தித்தோரிவா, “கேப்டனும் டிட்டாச்மென்ட்டும் இந்தியா என்ற பெரிய நாடும் கிராமத்தின் தலைவனையும் அவனுடைய கிராமத்தையும் வாழ்த்துகிறார்கள்' என்று கூறினான்.