மரணமற்ற மனிதன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6404
பிறகு பல வண்ணங்களையும் கொண்ட அடர்த்தியான துணியால் உண்டாக்கப்பட்ட மார்புக் கச்சைகளை அணிந்திருக்கும் பெண்கள் பெரிய கத்தியைக் கொண்டு நிலத்தைக் குத்திக் கிளறி சேறாக ஆக்கி நாற்று நடுவதைப் பார்த்தார்கள். இரண்டு பக்கங்களிலும் மூக்கில் ஓட்டை போட்டு வளையம் அணிந்து பெரிதாக்கப்பட்ட அவர்களுடைய முகம் முழுவதும் பச்சை குத்தி அலங்கோலமாக்கப்பட்டிருந்தது.
காட்டுவாழ் மனிதர்களின் குடியிருப்பை அடைந்தவுடன் தித்தோரிவா, காம்படாவை அழைப்பான். பட்டாளக்காரர்கள் வந்திருக்கும் தகவலை கிராமம் முழுவதும் ஏற்கெனவே தெரிந்து கொண்டிருப்பார்கள். இந்த ஆதிவாசிகளுக்கு அவர்களுக்கென்றே உள்ள தகவல் பரிமாற்ற முறைகள் இருந்தன. நிர்வாண கோலத்தில் இருக்கும் ஆண்கள் குடிசைகளை விட்டு வெளியே வருவார்கள். பெண்கள் அங்கு எங்கும் இருப்பது மாதிரியான ஒரு அடையாளமும் இருக்காது. ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட நாகரீக மனிதர்களுக்கு பயந்து பெண்கள் குடிசைகளுக்குள் மறைந்து கொண்டு இருப்பார்கள்.
முதலில் டிட்டாச்மெண்ட்டிற்கென்று இடத்தைப் பிடிக்க வேண்டும். சம நிலையில் இருக்கும் நிலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கொண்டு வந்திருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி காட்டு வாழ் மனிதர்கள் காட்டை வெட்டி நிலத்தைச் சீர் செய்து மரக் கொம்புகளை ஊன்றி கொம்புகளைப் பரப்பி கட்டில்கள் உண்டாக்கு வார்கள். இன்னொரு இடத்தில் பொருட்களை வைக்கக் கூடிய வசதியை உண்டாக்குவார்கள். அவர்கள் நெருப்பை மூட்டி, ஊற்றுக் களில் இருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட நீரைக் கொதிக்க வைப்பார்கள். ராமச்சந்திரனும் கங்கா பிரசாத்தும் வயர்லஸ்ஸைத் திறந்து தங்களுடைய அப்போதைய நிலையையும் சூழ்நிலையையும் தலைமை அலுவலகத்திற்கு அறிவிப்பார்கள்.
மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் கேப்டன் ஹண்டுவும் காம்படாவும் பேசிக் கொள்வார்கள். டிட்டாச்மெண்ட் அங்கு இரண்டோ மூன்றோ நாட்கள் தங்கவேண்டும். விறகும் நீரும் வேண்டும். ஆதிவாசிகள் வேட்டைக்குப் போவதாக இருந்தால், மான் மாமிசம் கிடைத்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் டிட்டாச்மெண்ட் நாளையே புறப்பட்டு விடும். சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கு கூலிக்காரர்கள் வேண்டும். இன்றைய ஆட்கள் தங்களு டைய கிராமத்திற்குத் திரும்பச் செல்கிறார்கள். கிராமத்தின் தலைவன் எல்லா உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளிப்பதாக வாக்குறுதி அளிப்பான். அவனுக்கு தனிப்பட்ட வகையிலும், கிராமத்திற்குப் பொதுவாகவும் வெள்ளை நிற உப்பையும் துணிகளையும் பரிசுப் பொருட்களாகக் கொடுப்பார்கள்.
எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட பிறகு, கேப்டனும் ஹவில்தார்களும் நாயக்கும் வட்டமாக உட்கார்ந்து குடிப்பார்கள். "ரேங்க்” பற்றிய எல்லா வேறுபாடுகளும் அப்போது இல்லாமற் போய் விட்டன. குடித்து நிதானத்தை இழந்தவுடன், ஹவில்தார் கங்கா பிரசாத் கேப்டனின் மடியின்மீது விழுவான். அவன் அழுது கொண்டிருப்பான்.
“ஸாப்... என் தங்கமான ஸாப்..''
“என்ன கங்கா பிரசாத்?''
“என் தங்கமான ஸாப்.. நாங்கள் எந்த அளவிற்கு அதிர்ஷ்டசாலிகள்! உங்களைப்போன்ற ஒருவருடன் வேலை செய்யக் கூடிய அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடைத்ததே!''
அவன் கேப்டனின் வளர்ந்த நரைத்த தாடியைத் தடவ ஆரம்பிப்பான். தாறுமாறாக வளர்ந்திருக்கும் தாடியின் முடிகளைக் கிள்ளி வேதனை உண்டாகும்படி செய்வான். ஹவில்தாரின் கன்னத் தில் தொடர்ந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும். ராமச்சந்திரன் இந்த புதிய உத்தியைப் பற்றி ஆச்சரியப்பட்டிருக்கிறான். கங்கா பிரசாத் மிகச் சிறந்த காக்கா பிடிப்பவன் என்று அவனுக்குத் தெரியும். புதிய இடத்தில் புதிய உத்தி!
ராமச்சந்திரன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தை கங்கா பிரசாத் தெரிந்து கொண்டான்.
“என்ன தங்கமான ஸாப்!'' அவன் தேம்பியவாறு அழைத்தான்.
“என்ன?”
“என் ராமச்சந்திரனைப் பாருங்க. என்ன ஒரு ஜவான்! என்ன ஒரு மெக்கானிக்! அவன் தொட்டால் எப்படிப்பட்ட செட்டும் பாட ஆரம்பித்து விடும். ஸாப். எனக்கு அவனைப் பற்றித் தெரியும். அவன் இல்லாமல் நான் ஒரு வயர்லெஸ் செட்டையும் ஏற்றுக் கொள்மாட்டேன். நீங்கள் ராமச்சந்திரனை நினைக்க வேண்டும். அவனுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். அவன் கைமீது கோடுகள் வைக்கப்பட்டு நான் பார்க்க வேண்டும். எனக்கு இருப்பது அந்த ஒரே ஒரு ஆசைதான். ஸாப், நீங்க எவ்வளவு நல்லவர்!''
கேப்டன் ஹண்டுவின் தலைக்குள் வெப்பம் உண்டாகி இருக்க வேண்டும். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவரவர்கள் தங்களுடைய ஆட்களைப் பிடித்து வைக்கப் பயன்படுத் தும் குறுக்கு வழிகளைப் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.
“சரி... பிரசாத்ஜி...''
கேப்டன் கூறுவார்.
“ஏய் ஹவில்தார் கோச்... நாயக் பாபுராம்... காதில் விழுந்ததா? நீங்கள் எல்லா சிப்பாய்களின் பெயர்களையும் எழுதி இன்றே என்னிடம் தர வேண்டும். நம்முடைய மதிப்பு மிக்க இந்தப் பதவியைவிட்டு போவதற்கு முன்னால், அவர்களையெல்லாம் பதவி உயர்வு அளித்து மேலே கொண்டு செல்ல வேண்டும். ராமச்சந்திரனும் ஹம்ஸராஜூம் பிக்குவும்... அவர்கள் எல்லோரும் கோடு வைத்துக் கொள்ளட்டும். அழக்கூடாது! என் கங்கா பிரசாத், நீ அழுவதைப் பார்க்கும்போது எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது. பிறகு, நானும் அழுது விடுவேன். ஒரு கேப்டன் அழுகிறான் என்றால், அது எந்த அளவிற்கு கேவலமான விஷயமாக இருக்கும்!'
அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த பிக்குவும் சர்வே செய்யும் ஹம்ஸராஜும் காட்டுவாழ் மனிதர்களின் மொழியில் சண்டை போட ஆரம்பித்திருந்தார்கள்.
“அபு அலமா!''
“அலுது அலுது அலு... ஆயா...''
பிக்குவிற்கு முழுமையாகக் கூறத் தெரியாது. உப்பைக் கொடுத்து பெண்களை வசீகரிக்கலாம் என்று அவன் தன் நண்பனுக்கு ஆலோசனை கூறுகிறான்.
அடுப்பிற்கு விறகை வெட்டித் தரும்போது ஒருவன் "டப் டப்” என்று ஆரம்பித்து "லெஃப்ட் ரைட்'டில் முடிந்த ஒரு பாடலை உண்டாக்கி பாடினான். எல்லாரும் ஒரு நாளைய களைப்பையும் பல நாட்களின் கவலைகளையும் மறந்து விட்டிருந்தார்கள்.
இருட்ட ஆரம்பித்தவுடன், ஆதிவாசிகள் கிராமத்திற்கு அருகில் விறகை வைத்து நெருப்பு பற்ற வைத்தார்கள். வேட்டைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்கான நேரமாகி விட்டது. அவர்கள் மாமிசத் துண்டுகளை நெருப்பில் சுட்டவாறு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருந்தார்கள். முதலில் எடுத்தவுடன் உங்களுக்கு பயம் தோன்றும். மனித மாமிசத்தைச் சாப்பிடும் ஏதோ காட்டு வாழ் மனிதர்களைப் பற்றிய நினைப்பு வரும். அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த சிப்பாய்கள் குண்டுகள் நிறைக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் காவல் காத்துக் கொண்டு நிற்கிறார்களே என்று மனதில் சமாதானம் நிலவச் செய்யலாம். அவர்கள் அம்பு, வில் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடியவர்கள்.