மரணமற்ற மனிதன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6404
அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களையும் ராமச்சந்திரன் அடையாளம் தெரிந்து கொண்டான். பிக்கு அவனிடம் என்னவோ பேசிக் கொண்டிருந்தபோது, மீண்டும் சுய உணர்வு இல்லாமற் போனது. ஆனால், அதற்குப் பிறகு அங்கு கனவுகள்தான். கண் விழித்தபோது, அவனால் எல்லா விஷயங்களையும் நினைவில் கொண்டு வர முடிந்தது.
சீறிப் பாய்ந்து கொண்டிருந்த நதியில் அவன் காகிதப் படகு விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். நதியின் கரையின் வழியாக நீண்ட தூரம் நடந்தபோது, கடலின் மிகப் பெரிய ஆர்ப்பரிப்பு கேட்கிறது. அவன் கடலுடன் நதி சேரும் இடத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தான். துடுப்போ படகோ இல்லாத காகிதத்தாலான சிறிய படகு அந்த இடத்தில் மூழ்கி விடும் என்பதை அவனால் நினைத் துப்பார்க்க முடியும். மூழ்கட்டும்! அதையும் பார்க்கலாமே! கடலின் நீலப் பரப்பில் அலைகள் அசைந்து கொண்டிருப்பதையும் பார்க்கலாம். அவனுடைய படகு அந்த இடத்தில் போய் சேர்ந்தது. படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. பாராசூட்டில் குதித்ததை திடீரென்று நினைத்துப் பார்த்தான். கண்களைத் திறந்து பார்த்த போது, அந்த காட்டு தேவதை அவனையே பார்த்துக் கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். ஒரு வேளை அவள் அழுதிருக்க வேண்டும். அவனுடைய கண்கள் தெளியத் தெளிய, அவளுடைய முகம் சிவப்பாக ஆகிக் கொண்டிருந்தது. சந்தோஷத்தால் உந்தப்பட்டு அவள் மெல்லிய புன்சிரிப்பைத் தவழ விட்டாள்.
அவள் தினமும் அவனுடைய கட்டிலுக்கு அருகில் இருப்பாள். அவளுடைய தந்தையும் தாயும் இடையில் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுப் போவார்கள். அவர்கள் கொடுக்கும் எரிச்சலான திரவத்தையும் பாலையும் அவன் சந்தோஷத்துடன் குடித்துக் கொண்டிருந்தான்.
எழுந்து அமர்வதற்கான பலம் கிடைத்தவுடன், அவளுடைய கொழுத்து உருண்டிருந்த கைகளால் தாங்கப்பட்டு அவன் எழுந்து உட்கார்ந்தான். ஓ! வெளியே வெப்பம் நிறைந்த காற்று வீசிக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். அவளுடைய சதைப் பிடிப்பான தோள்மீது சாய்ந்திருந்தபோது, சற்று தூங்க வேண்டும் போல அவனுக்கு இருந்தது. அப்போது அவன் மனதில் நினைத் தான்: "என் இதயமே!”
அந்த காட்டு தேவதையின் சதைப் பிடிப்பான ஸ்பரிசத்தில் அவனுடைய மனம் மயங்கிக் கிடந்தது. உடலில் சிலிர்ப்பும் புத்துணர்ச்சியும் உண்டாயின. தன்னுடைய மெலிந்துபோன கைகளை அவனால் பார்க்க முடியவில்லை. அவை தன்னுடையவை அல்ல என்று அவனுக்குத் தோன்றியது. மெலிந்து போன, தோல் உரிந்த, தோலில் சொறி பிடித்த கைகள்... எவ்வளவு பார்க்க சகிக்காதவையாக ஆகி விட்டிருக்கின்றன!
அவள் அவனுடைய தேவைகளை நன்கு தெரிந்து கொண்டிருந்தாள். தன்னுடைய தோள்மீது சாய்ந்து படுத்திருக்கும் அவனுடைய உடலில் இருந்து அவள் பேன், ஈரு ஆகியவற்றைக் கிள்ளி எடுத்து நகத்தில் வைத்து நசுக்கினான். அவன் தொட்டுக் காட்டியவுடன், அவள் உரோம தொப்பியைக் கழற்றுவதற்கு அவனுக்கு உதவினான்.
ஓ!
அவள் திகைத்துப் போய் நின்று விட்டாள். அவனுடைய நெஞ்சு முழுவதும் உரோமங்கள் வளர்ந்திருந்தன. அவளுக்கு அதன் காரணம் தெரியவில்லை. சிலிர்ப்படைந்து அவள் நின்று கொண்டிருந்தாள்.
அவனுக்கு சற்று உடல் நலம் திரும்ப கிடைத்து தனியாக எழுந்திருக்க முடியும் என்ற சூழ்நிலை உண்டானவுடன், ஹன்ஸராஜ் எல்லா விஷயங்களையும் அவனிடம் கூறினான். ராமச்சந்திரனுக்கென்றே தனிப்பட்ட விமானம் வந்து சேர்ந்திருந்தது. அவர்கள் மருந்துகளையும் தெர்மா மீட்டரையும் பாராசூட்டில் கீழே எறிந்தார்கள். விமானத்தின் இரைச்சல் சத்தம் கேட்டவுடன், காட்டு வாழ் மக்கள் குடிசைகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள். மருந்து களை பலமாக உதடுகளுக்குள் ஊற்றிப் பார்த்தார்கள். அது வெளியே வந்து கொண்டிருந்தது.
சுவாசம் நிற்கப் போகிறது. நிற்கிறது. நின்றது. கேப்டன் கிராமத்தின் தலைவனிடம் விறகு கேட்டார். "நடப்பது நடக்கட்டும். எங்களுக்கென்று சொந்தமான சிகிச்சை இருக்கிறது' என்றான் கிராமத்தின் தலைவன். அவர்கள் எருமையை அடித்து வேக வைத்து, பயங்கரமான அக்னி குண்டத்திற்குச் சுற்றிலும் நடனமாடிக் கொண்டும் செண்டைகள் அடித்துக் கொண்டும் இருந்தார்கள். கேப்டனுக்கு முன்னோக்கி செல்வதற்கான தகவல் வந்து சேர்ந்தது. அஸ்ஸாம் ரைஃபில்ஸைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களையும் ஹன்ஸராஜையும் அங்கேயே இருக்கும்படி கூறினார்.
“நான் இறக்க மாட்டேன்.''
ராமச்சந்திரனுக்கு சிரிப்பு வந்தது.
மரணம் என்ன மூன்று சீட்டு விளையாட்டா? அப்போது அவனுக்கு அதுவரை தோன்றாத பயம் தோன்றியது. தன் தாய் கூறிய விஷயங்கள் என்னென்ன என்பதை அவன் நினைப்பதில் மூழ்கினான்.
கட்டிலில் அசைவே இல்லாமல் ஒடுங்கிக் கொண்டு படுத்திருக்கும்போது, அவனுடைய மனதில் ஒன்றோடொன்று தொடர்பே இல்லாத எவ்வளவோ சிந்தனைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன. காட்டுவாழ் மனிதர்களின் குடிசைகளுக்கு அருகில் சிறிய கால்களைக் கொண்ட, வெளுத்த நிறத்தில் நிர்வாண கோலத்தில் இருந்த சிறுவர்கள் சிறிய வில்களைக் கொண்டு குறி தீர்மானித்து அம்புகளை எய்து பழகிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். இளம் வயதில் அவனுக்கு வேட்டையாடுவதில் அதிகமான ஆர்வம் இருந்தது. தன்னுடைய வளர்ப்பு நாயுடன் சேர்ந்து வெளியேறி அவன் நடந்து திரிவான். பிறகு, தென்னை மட்டைகளின் வழியாகக் குதித்தோடிக் கொண்டிருக்கும் அணில்களை கவணை பயன்படுத்தி கல்லால் அடித்து விழச் செய்வதும், சேம்பின் விதையை பூமிக்குள்ளிருந்து தோண்டி எடுக்கும் எலியின் இருப்பிடங்களை நாயைப் பயன்படுத்தி அழிப்பதுமாக இருப்பான். ஒரு நிமிடம்கூட அவன் வெறுமனே இருக்க மாட்டான். அவனுடைய அன்னைக்கு அவனை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் இடையில் அவ்வப்போது அழைத்துக் கொண்டே இருப்பாள். அவன் தென்னை மரத்திற்குக் கீழே நின்று கொண்டிருப்பான். அப்போது ஒரு நாள் அவனுடைய தாய்க்கு கோபம் வந்து விட்டது. “டேய்... ஊர் சுற்றி மகனே!'' என்று கத்தினாள். பிறகு, அவளே அமைதியாகவும் ஆகி விட்டாள். ஆண் பிள்ளையைப் பெற்ற வயிறு அமைதியானது.
கட்டிலை விட்டு எழுந்து தட்டுத் தடுமாறி நடக்க வேண்டும்போல இருந்தது. வழுக்கி எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயம் இருந்தது. அப்போது அந்த காட்டு தேவதை குடிசையை விட்டு வெளியே வருவாள். அவள் அவனுடைய இதயத்தில் நிறைந்து விட்டிருந்தாள். கழுத்து வரை தொங்கிக் கொண்டிருந்த அவளுடைய கருத்த, அடர்த்தியான கூந்தல் சிவந்து போயிருந்த கன்னங்களில் பரவிக் கிடந்தன. அவள் வரும்போதெல்லாம் குடிப்பதற்கு எதையாவது கொண்டு வருவாள். அந்த ஆதிவாசிகளுக்கு மிகவும் வீரியமாக இருக்கும் மதுவைத் தயாரிப்பதற்குத் தெரியும்.