மரியாவின் முதலிரவு - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7351
பண்ணை வீட்டின் அழுக்குகள் இல்லாத பெரிய கண்ணாடி ஜன்னல் வழியாக மங்கலான வெளிச்சம் படுக்கையில் விழுந்து கொண்டிருந்தது. தூரத்தில் பழமையான மெஹ்ரோலி கிராமத்தின் சிதிலமடைந்த வீடுகள் தெரிந்தன.
‘‘உண்மையாகச் சொல்லப் போனால் நான் ஏதாவதுதர வேண்டியது நண்பரே, உங்களுக்குத்தான். நீங்கதானே விஸ்வம்பர் ஸாஹ்னியை எனக்கு அறிமுகப்படுத்தியது! உங்களால இன்னும் ஒரு மாதம் இந்த நாட்டுல ஒரு பறவையைப் போல நான் சுதந்திரமா திரியலாம்...’’
‘‘வேண்டாம்... எனக்கு எதுவும் நீ தரவேண்டாம்.’’
அவன் கோட்டைக் கழற்றினான். சட்டைக்குள்ளிருந்து ஒரு ருத்ராட்ச மாலையை வெளியே எடுத்து நீட்டி, அதை நெற்றியில் ஒற்றினான்.
‘‘என்ன அது?’’
அவள் ஆர்வத்துடன் கேட்டாள்.
‘‘இக்கட்டான நேரங்கள்ல எனக்கு மன தைரியம் தர்றது இதுதான்.’’
அவன் அந்த ருத்ராட்சமாலையை மீண்டும் சட்டைக்குள் போட்டு கோட்டை எடுத்து அணிந்து அமைதியாக அவளுக்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அவனுடைய அறையிலிருந்த வெண்மையான சுவர்கள் வெறுமையாக இருந்தன. அங்கிருந்த நாற்காலிகளில் வெள்ளை குஷன்கள் போடப்பட்டிருந்தன. அந்த விசாலமான அறையே மொத்தத்தில் வெண்மையாக இருந்தது.
‘‘நான் போறேன்.’’ - அவள் எழுந்தாள். ‘‘ஒரு மாதம் கழிச்சு நிரந்தரமா திரும்பிப் போறப்போ நிச்சயம் நான் உங்களை வந்து பார்ப்பேன் - விடை பெறுவதற்காக.’’
‘‘கட்டாயம்...’’
அவன் அமைதியாகச் சிரித்தான்.
அவனுடைய தாய் மரணத்தைத் தழுவினாள்.
ஒருநாள் ‘குடுகுடா’ என்று புகை விட்டபடி ஓடிக் கொண்டிருக்கும் புகை வண்டியில் அவள் பத்தான்காரர்களின் நகரத்தில் வந்து இறங்கினாள். புகை வண்டி நிலையத்தின் அருகில் மலைகளின் நிழல் விழுந்திருந்தது. நல்ல வெயிலில் மூழ்கியிருந்த தெருவில் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. அவள் குதிரை வண்டியில் ஏறினாள்.
‘‘நீங்க எங்கே போகணும்?’’ - வண்டிக்காரன் கேட்டான். அவன் தன் தலையில் அழுக்குப் பிடித்த ஒரு கம்பளித் தொப்பியை வைத்திருந்தான்.
‘‘உனக்கு விருப்பமான இடத்துக்கு.’’
அவன் அவளை உற்றுப் பார்த்து விட்டு தன் கையிலிருந்த சாட்டையால் குதிரையின் பின் பக்கத்தைக் குத்தினான். டோங்கா முன்னோக்கி ஓடியது.
அகலம் குறைவான தெருக்களில் சலவை செய்யப்பட்ட ஆடைகளும் தொப்பியும் அணிந்த பத்தான்காரர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். பாதையோரத்தில் அமர்ந்து வியாபாரிகள் உலர்ந்த பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். கற்கள் பதித்த ஒடுகலான தெருக்களில் பல வண்ணங்களிலுள்ள ஆடைகள் விற்பவர்களும் பிரம்புக்கூடை விற்பவர்களும் கண்ணில் பட்டார்கள். இரண்டு சிறுவர்கள் வெறுமனே டோங்காவிற்குப் பின்னால் ஓடினார்கள். அவள் மகிழ்ச்சிப் பொங்க அவர்களுக்கு நேராக நாணயங்களை வீசி எறிந்தாள். நகரத்தின் எல்லைகளில், மலைகளில் வெயில் பிரகாசமாகத் தெரிவதாகவும், பின்னர் மங்கலாவதாகவும் இருந்தது.
‘‘உன் பேர் என்ன?’’
‘‘டோங்காக்காரன்.’’
‘‘இதுதான் உன் பேரா?’’
‘‘எல்லாரும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.’’
நான்கு பக்கங்களிலிருந்தும் குதிரைகளின் குளம்புச் சத்தமும் மணிகள் ஒலிக்கும் சத்தமும் கேட்டது. அகலம் குறைவான பாதைகள் வழியாக டோங்காக்கள் முனகியவாறு ஒடிக் கொண்டிருந்தன.
டோங்காக்காரன் வண்டியை நிறுத்தினான். மரத்தால் ஆன பால்கணிகளும் படிகளும் உள்ள பெரியதும் பழையதும் ஆன ஒரு கட்டிடம் அது. பால்கணியில் பூசப்பட்டிருந்த பச்சைச் சாயம் மங்கிப் போயிருந்தது.
இறங்கவில்லையா என்று கேட்பது மாதிரி டோங்காக்காரன் அவளைப் பார்த்தான். அவள் நீண்ட பாவாடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு படியில் கால் வைத்துக் கீழே இறங்கினாள். அவளின் சிறிய தோல் பையை அவன் எடுத்து கீழே வைத்தான்.
‘‘அதோ... நேரா மேல ஏறிப் போனா போதும்.’’
டோங்காக்காரன் மரப் படியைச் சுட்டிக் காட்டினான். அவள் மேலே பார்த்தாள். பால்கணியின் சிதிலமடைந்த கைப்பிடிகளில் வண்ணத் துணிகள் உலரப் போடப்பட்டிருந்தன. அங்கு தொப்பி அணிந்த ஒரு வயதான ஒரு மனிதன் தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
‘‘மேலே என்ன இருக்கு?’’
அவள் கேட்டாள். டோங்காக்காரன் அவளை அங்கே கொண்டு வந்து இறக்குகிறான் என்றால், அங்கு என்னவோ விசேஷம் இருக்க வேண்டும் அல்லவா? அவன் பதிலெதுவும் சொல்லாமல் ‘எல்லாம் உனக்குத் தெரியும்’ என்பது மாதிரி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் அவனுக்குக் கூலியைத் தந்துவிட்டு படிகளில் ஏறினாள்.
சாயம்போன விரிப்பு விரிக்கப்பட்ட ஒரு மேல் தளத்திற்கு அவள் ஏறிச் சென்றாள். ஜன்னல்கள் இல்லாததால் அங்கு ஒரே இருட்டாக இருந்தது. பாதி உலர்ந்த ஆப்ரிக்கட் பழத்தின் வாசனை அங்கு தங்கியிருந்தது.
‘‘யார் அது?’’
கதவைத் திறந்து ஒரு வயதான மனிதன் அந்த இடத்திற்கு வந்தான். சிறிது பகல் வெளிச்சம் அங்கு இருந்தது. வயதான அந்த மனிதனின் தலையிலிருந்த பெரிய கம்பளித் தொப்பி அவனுடைய நெற்றியை முழுமையாக மறைத்தது.
‘‘என் பேரு மரியா.’’
‘‘உன்னை இங்கே கொண்டுவந்தது ரஹ்மதுல்லாவா?’’
‘‘ஆமா...’’
அந்த டோங்காக்காரனின் பெயர் ரஹ்மதுல்லாவாக இருக்குமோ?’’
‘‘உட்காரு.’’
வயதான மனிதன் சொன்னான். அவன் வட்டமாக இருந்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஆப்ரிக்கட் பழத்தை அவளுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தான். அவள் ஒரு பழத்தை எடுத்து மேற்தோலை நீக்கிவிட்டு சுளையை எடுத்து வாய்க்குள் போட்டாள். நிறம் மங்கிப்போன விரிப்பில் சப்பணமிட்டு அமர்ந்து அவள் வயதான மனிதனின் முகத்தைப் பார்த்தாள்.
‘‘என் பேரு அமானத்துல்லா. நாலு தலைமுறைகளாகவே எங்க குடும்பம் இங்கேதான் வசிக்குது. அதுக்கு முன்னாடி எங்க முன்னோர்கள் பெஷாவரில் இருந்தாங்க. உலர்ந்த பழ வகைகளை ஏற்றி அனுப்புறதுதான் எங்களோட குலத்தொழில். எனக்கு ஆம்பளை பசங்க இல்ல. வயசாயிடுச்சு. கஷ்டப்பட்டு வேலை செய்ய முடியாது. அதனால கொஞ்ச நஞ்சம் சட்ட விரோதமான காரியங்களை நான் செய்துக்கிட்டு இருக்கேன். நானும் கல்யாணம் ஆகாத இளைய மகளும் வாழணும்ன்றதுக்காக கருணை வடிவமான அல்லா இந்த வயசான காலத்துல என்னை மன்னிக்கட்டும்.’’
அவன் உள்ளே சென்று ஈயத் தாளில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கொண்டுவந்து அவளிடம் தந்தான்.
‘‘ரஹ்மதுல்லாவோட ஆள்ன்றதுனால தர்றேன். இல்லாட்டி அறிமுகமில்லாதவங்ககிட்ட நான் வியாபாரமே வச்சுக்கிறது இல்ல.’’
அவள் பொட்டலத்தைத் திறந்து முகர்ந்து பார்த்தாள்.
‘‘சந்தேகம் வேண்டாம். அருமையான சரக்கு.’’
வயதான மனிதன் சொன்னான்: ‘‘நாலு தலைமுறையா ரொம்பவும் நேர்மையா உலர்ந்த பழங்கள் வியாபாரம் செய்துக்கிட்டு வந்தோம். இப்போ வேற வழி இல்லாததுனால...’’
அவள் பொட்டலத்தை தோல் பைக்குள் வைத்துவிட்டு பணத்தைத் தந்தாள்.