கிருஷ்ணனின் குடும்பம் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6343
ஜலதோஷமும் காய்ச்சலும் வந்து படுத்த படுக்கையாய் இருந்த போது கூட காலையில் எழுந்து அவனுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். அழுக்கான சட்டையைச் சலவை செய்து கொடுப்பாள். அவளுக்கென்று இருந்த ஒரே மகன் அவன். அவனுக்காக மட்டுமே அவள் உயிர் வாழ்கிறாள். வாழ வேண்டும் என்ற விருப்பம் எப்போதோ போய்விட்டது. அவனுடைய தந்தை முன்பே போய்விட்டார். தாயும் உலகில் இல்லாமற்போனால் அவனுக்கென்று யார் இருக்கிறார்கள்? பாலனின் வயதைக் கொண்டவர்கள் எல்லாரும் திருமணம் முடித்து மனைவி, பிள்ளைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாலனுக்கு அப்படியொரு வாழ்க்கை அமையவில்லை. தானும் இல்லாமற்போய்விட்டால், அவன் நிலைகுலைந்து போய்விடமாட்டானா? அதனால் மட்டுமே அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பாலனுக்காக மட்டும். அவனுடைய சந்தோஷம்தான் அவளுக்கும் சந்தோஷம். அவனுடைய மனம் சிறிது கூட வேதனைப்படக்கூடாது. அவனுடைய முகம் ஒரு தடவை கூட வாடக் கூடாது. இந்த விஷயங்களை அவள் விரதமென வாழ்க்கையில் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாள். பாலனுடைய விருப்பங்கள் தான் தன்னுடைய விருப்பங்கள் என்று அவள் ஆக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய விருப்பங்கள் எதற்கும் தான் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். இப்படி பல விஷயங்களையும் கட்டிலில் படுத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தாள் லட்சுமியம்மா.
மதியநேரம் வந்தபோது சமையல் செய்து முடித்து துணிகளைச் சலவை செய்து காயப்போட்டுவிட்டு, குளித்து புடவை மாற்றிக் கொண்டு எப்போதும் போல சாவித்திரி வந்து கதவைத் தட்டினாள். சாதாரணமாக இந்த நேரத்தில் லட்சுமியம்மா அவளை எதிர்பார்த்து வெளியே பால்கணியில் அமர்ந்திருப்பாள். இன்று பலமுறைகள் கதவைத் தட்டினபிறகுதான் அவள் கதவையே திறந்தாள்.
"அம்மா, இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?"- சாவித்திரி கேட்டாள்: "முகம் ஒரு மாதிரி வெளிறிப் போய் இருக்கே?"
"எனக்கு சாகணும்போல இருக்கு. மகளே!"
"அதுக்கு இப்போ என்ன நடந்திருச்சு?"
"அவங்கவங்களுக்கு தோணுற மாதிரி வாழமுடியலைன்னா சாகறதுதானே நல்லது?"
சாவித்திரிக்கு எதுவும் புரியவில்லை. அவளைப் பொறுத்தவரை லட்சுமியம்மா மிகவும் கொடுத்து வைத்தவள். லட்சுமியம்மாவின் கணவர் மிகவும் புகழ்பெற்ற ஒரு மனிதர். சாவித்திரி சமீபத்தில் கிராமத்திற்குப் போயிருந்தபோது கோழிக்கோட்டிற்குப் போயிருந்தாள். உண்ணியின் வீடு கோழிக்கோட்டிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்குப் பக்கம் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவில் ஒரு ஆள் உயரத்திற்கு உள்ள ஒரு சிலை இருக்கிறது. உண்ணி அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டு சாவித்திரியிடம் சொன்னான்: "இது யாரோட சிலைன்னு உனக்குத் தெரியுமா? நம்ம லட்சுமியம்மாவோட கணவரோடது."
லட்சுமியம்மாவின் கணவர் இவ்வளவு பெரிய ஒரு மனிதர் என்பதே அப்போதுதான் சாவித்திரிக்குத் தெரிய வந்தது. இன்னொரு விஷயத்தையும் அப்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. பூங்காவில் இருந்த சிலைக்கு பாலனின் முகச்சாயல் இருந்தது. ஒரே பார்வையில் அந்தச் சிலை பாலனின் சிலையாக இருக்குமோ என்று யாருமே நினைத்து விடுவார்கள்.
பாலனும் புகழ்பெற்று வருகிறான். டி.பாலகிருஷ்ணன் என்ற பெயரில் ஒரு ஆங்கில புத்தகத்தை சமீபத்தில் சாவித்திரி பார்க்க நேர்ந்தது.
இவ்வளவு போதாதா லட்சுமியம்மாவிற்கு?
"அம்மா, இன்னைக்கு ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?"- சாவித்திரி கேட்டாள்: "உங்களுக்கு என்ன ஆச்சும்மா?"
லட்சுமியம்மா எதுவும் பேசவில்லை. அவள் தன் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள். அவளுடைய இரண்டு கால்களிலும் வீக்கம் இருந்தது.
வெளியே இளம் வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பெண்கள் தனியாகவும் கூட்டமாகவும் காலனி வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சாவித்திரி எவ்வளவு வற்புறுத்தியும் லட்சுமியம்மா வெளியே வரவில்லை. அவள் மதியம் வரை லட்சுமியம்மாவுடன் இருந்தாள். குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் நேரத்தில் அவள் அங்கிருந்து கிளம்பினாள். லட்சுமியம்மா மீண்டும் தன்னுடைய தனிமைச் சூழ்நிலையில் இருந்து கொண்டு வீங்கிப் போயிருந்த தன் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றி நரம்புகள் இப்போதும் விட்டு விட்டு குடைச்சல் தந்து கொண்டிருந்தன. இடது பக்க நரம்பை யாரோ பிடித்து இழுப்பதைப் போல் இருந்தது. அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து அவள் தூங்கி விட்டாள். மாலை வரை அந்தத் தூக்கம் தொடர்ந்தது. உண்மையில் சொல்லப் போனால் அவள் உறங்கவில்லை. தன்னுடைய சொந்த வாழ்க்கையை ஒரு திரைப்படத்தைப் போல அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். நினைவிற்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலை அது. அந்த நிலையில் பலமுறை அவள் தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். வார இதழ்களின் அட்டைகளில் பார்த்திருக்கும் முகம். பாலனும் தன் தந்தையின் வழியைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். சமீபத்தில் அவனுடைய புகைப்படம் பத்திரிகையில் பிரசுரமாகி வந்ததை அவள் பார்த்தாள். இனிமேல் வார இதழ்களின் அட்டைப்படங்களில் அவனுடைய முகம் அடிக்கடி வரலாம். தந்தையும் மகனும் பெரியவர்கள். அவர்களுக்கு தவறு நேராது. ஒருவேளை, தவறு இருப்பது தன்னிடம்தானோ? தன்னுடைய அறிவுக்கு எட்டாத, தன்னால் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களும் உலகத்தில் இருக்கலாம். கணவன், மகன்- இரண்டு பேர் அளவிற்கு அறிவு இல்லாத தனக்கு அந்த விஷயங்கள் எப்போதும் புரிந்து கொள்ள முடியாதவையாகவே இருக்கலாம்....
"அம்மா, தூங்குறீங்களா?"
பாலனின் குரலைக் கேட்டு அவள் தன் கண்களைத் திறந்தாள். கதவுக்குப் பக்கத்தில் மங்கலான இருட்டில் அவளுடைய மகன் நின்றிருந்தான். எப்போதும் இல்லாத வகையில் பாலன் சீக்கிரமே வீடு திரும்பியிருக்கிறான். அவன் உள்ளே வந்து விளக்கைப் போட்டான்.
"அம்மா, நீங்க ஒண்ணும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. எனக்குத் தெரியும்-."
அவன் உணவுப் பொட்டலத்தை மேஜை மீது வைத்தான்.
"சாப்பிடுங்கம்மா."
"பசி இல்ல, பாலா."
"எனக்குத் தெரியும்"- அவன் தலையைக் குலுக்கினான்: "அம்மா, உங்களுக்கு என் மேல கோபம்."
"எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல."
"நாடு பற்றி எரியுதும்மா. மனிதர்கள் பிராணியைப் போல செத்து விழுறாங்க. எல்லாத்துக்கும் காரணம் உங்க கடவுள்தாம்மா."
லட்சுமியம்மாவின் முகம் அமைதியாக இருந்தது. அவள் எதுவும் பேசவில்லை. முதல் தடவையாகப் பார்ப்பதைப் போல அவள் தன் மகனைப் பார்த்தாள்.
"என்னம்மா, என்ன சிந்திக்கிறீங்க?"
"இவ்வளவு காலம் தட்டாறத்து கிருஷ்ணனோட மனைவியா வாழ்ந்தேன். அப்படி வாழ்றது சாதாரண விஷயமில்லே" லட்சுமியம்மா சொன்னாள்: "இனிமேல் டி.பாலகிருஷ்ணனோட தாயா வாழணும். அதுவும் சாதாரண விஷயமில்ல. எது எப்படியோ, மகனே உன் அம்மாடா நான்..."
குடைந்து தளர்ந்து போன நரம்புகள் அவள் நெற்றியில் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தன.