கிருஷ்ணனின் குடும்பம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6343
‘‘பயமா? எதுக்கு?’’
அவள் பேசாமல் தரையைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். அவன் இரக்கத்துடனும் அன்புடனும் அவளைப் பார்த்தான். அன்றைய ‘தேசாபிமானி’யின் முதல் பக்கத்தில் எ.கெ.ஜி.யுடன் நின்றிருக்கும் அவனுடைய புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. தன்னுடைய கணவன் ஒரு பெரிய மனிதன் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இரவில் நெடுநேரம் ஆகும்வரை அவன் அமர்ந்து படிப்பதையும் எழுதுவதையும் அவள் பார்ப்பாள். அவன் கொண்டுவரும் மலையாள மொழியில் உள்ள புத்தகங்களைப் படிக்கும்போது அவளுக்கு ஒன்றுமே புரியாது. அவனைப் பார்ப்பதற்காக பல இடங்களில் இருந்தும், தூரத்தில் இருக்கும் ஊர்களில் இருந்துகூட ஆட்கள் வருவார்கள். படிப்படியாக தட்டாறத்து கிருஷ்ணனின் மனைவியாக தான் ஆனது குறித்து லட்சுமி பெருமைப்படத் தொடங்கினாள். தன்னையும் அறியாமல் அவன்மீது ஒரு மதிப்பு அவளுக்கு உண்டாகி வளர்ந்து கொண்டிருந்தது.
தான் எவ்வளவு அவசரமான காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் தன்னுடைய மனைவி சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் அதில் முதலில் கவனம் செலுத்த அவன் மறக்கமாட்டான். ஒருமுறை திருவனந்தபுரத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது அவன் அவளுக்காக ஒரு ஜரிகை போட்ட புடவையை வாங்கிக் கொண்டு வந்தான். தலசேரிக்குப் போனால் கண்ணாடி வளையல்களையோ சாந்துப் பொட்டையோ வாங்கிக் கொண்டு வருவான். இந்த அளவிற்கு பரந்த மனம் படைத்த, அறிவுள்ள ஒரு கணவனைத் தந்ததற்காக அவள் பகவானுக்கு நன்றி கூறுவாள்.
‘‘படிக்கிறதுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா வேண்டாம்...’’ அவன் சொன்னான்: ‘‘நேரம் கிடைக்கிறப்போ நான் சொல்லித் தர்றேன்.’’
அவள் கவனித்தாள். அவன் இப்போது மேஜைக்கு அருகில் அமர்ந்து எழுதுவதோ வாசிப்பதோ இல்லை. கட்டிலில் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்துகொண்டுதான் அந்த இரண்டு விஷயங்களையும் செய்கிறான். அவன் தன்னுடைய எழுதும் மேஜையை பிரார்த்தனை செய்வதற்கும் பூஜைக்கும் அவளுக்காக விட்டுத் தந்திருக்கிறான்.
மண்டல காலம் வந்தது. ஜன்னல் வழியே பார்த்தால் வெளிறிப் போய்க் காணப்படும் வயல்களில் பனி படர்ந்திருப்பது தெரியும். நீருக்கு பனிக்கட்டியின் குளிர் இருக்கும். எனினும், சூரியன் உதிப்பதற்கு முன்பு அவள் படுக்கையை விட்டு எழுந்து குளித்து ஈரக்கூந்தலுடன் கோவிலுக்குச் செல்வாள்.
‘‘லட்சுமி...’’ - அவன் மாடியில் ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அழைத்தான்: ‘‘அங்கேயே நில்லு. ஒரு விஷயம் சொல்லட்டுமா?’’
வாசலுக்கு வந்த அவள் அங்கேயே நின்றாள். கால்கள் முன்னோக்கி அசையவில்லை. வெளியே வயல் படிப்படியாக வெளுத்துக் கொண்டிருந்தது. மூச்சுவிடும் காற்று குளிர்ச்சியாக இருந்தது. வயல்களிலிருந்து கிளம்பிவந்த குளிர்ந்த காற்று அவளைத் தழுவிவிட்டு கடந்து போனது. தெற்குப் பக்கம் இருந்த ஜாதி மரத்திலிருந்து ஒரு பறவை ஓசை எழுப்பியவாறு பறந்துபோனது.
‘‘காங்கிரஸ்காரங்க சொல்லிச் சொல்லி சிரிக்கிறாங்க. இனிமேலும் அவங்க பேசுறமாதிரி இடம் கொடுக்காதே.’’
லட்சுமி பேசாமல் நின்றாள்.
‘‘நான் சொல்றேன்னு வருத்தப்படக்கூடாது. நீ உன் மனசுல இருக்குற தெய்வத்தை மறக்க முயற்சிக்கணும். இல்லாட்டி தட்டாறத்து கிருஷ்ணனோட மனைவியா வாழறது உனக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயமா இருக்கும்.’’
அவள் திரும்பவும் மாடிக்கு வந்தாள்.
மறுநாள் காலையில் அவள் தன் கைகளைத் திறந்தபோது பழையமாதிரி அவன் மேஜைக்கு அருகில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். பகவானோ, கற்பூரத் தட்டோ அங்கு இல்லை. அவன் மேஜையை சுத்தம் செய்து வைத்திருந்தான். எப்போதும் தன்னுடன் வைத்திருந்த சிறு வயது கிருஷ்ணனின் அந்தச் சிலையை பிறகு அவள் ஒருமுறைகூட பார்த்ததே இல்லை.
‘‘பாலா, முழு மனசோட நான் வரல’’ - லட்சுமியம்மா சொன்னாள்: ‘‘பிறந்த ஊர்ல கிடந்து சாகறதைத்தான் நான் விரும்புறேன்.’’
‘‘அம்மா, இப்போ ஒண்ணும் நீங்க சாகப்போறது இல்ல. நீங்க ரொம்ப வருடங்கள் உயிரோட இருப்பீங்க.’’
‘‘அதைக் கடவுள் தீர்மானிப்பாரு.’’
‘‘நம்ம விஷயங்களை நாமதான் பெரும்பாலும் தீர்மானிக்கிறோம். கடவுள் இல்ல. நாம அம்மை இல்லாமச் செய்யலியா? ஜலதோஷத்தை இல்லாம ஆக்கறது மாதிரியில்ல இப்போ சயரோகத்தை சிகிச்சை செய்து மாத்தறோம்?’’
அவன் தன் தாயைப் பார்த்து கண்களால் சிரித்தான். அவர்களின் வலது பக்கத்தில் ஒரு பெரிய மரம் கடந்து போனது.
‘‘இப்போ பிரசவம் நூறு சதவிகிதம் எந்தவித பிரச்சினையும் இல்லாம பாதுகாப்பா நடக்குது. குழந்தைகள் சாகறது இல்ல. மனிதர்களுக்கு ஆயுள்காலம் கூடிவருது. இறக்காத வயதான மனிதர்களால் ஐரோப்பாவுல ஒரு பெரிய தலைவலியே உண்டாகுது. ரொம்பவும் சீக்கிரமே நம்ம நாட்டுலயும் அது ஒரு பிரச்னையா வரப்போகுது.’’
லட்சுமியம்மா தன் மகன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். முன்பு கிருஷ்ணன் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி கூறும்போது அவள் இப்படித்தான் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பாள். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அறிவும் விஷய ஞானமும் தனக்கு இல்லை என்பது அவளுக்கு நன்கு தெரியும். தந்தையைப் போலவே இருந்தான் மகனும். தூக்கத்தை இழந்துவிட்டு படித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது எதையாவது எழுதிக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். ஒரே ஒரு வித்தியாசம்தான். மேஜையின்மீது இருந்த மண்ணெண்ணெய் விளக்கின் இடத்தில் இப்போது டேபிள் லேம்ப் இருக்கிறது.
கூட்டமாக மாடுகளும், கன்றுகளும் பின்னால் கடந்து போயின. தூரத்தில் ஒரு மலை தெரிந்தது.
‘‘அம்மா, என்ன சிந்தனையில இருக்கீங்க?’’ - பாலன் கேட்டான். ‘‘நாம வந்துட்டோம்.’’
‘‘எனக்கே வெறுப்பாயிடுச்சு, மகனே. எவ்வளவு நாட்களாக இந்த வண்டியிலேயே இருக்குறது?’’
வலது பக்கம் புகைக்குழாய்கள் வேகமாக வருவதும் போவதுமாக இருந்தன.
‘‘அம்மா, பாருங்க’’ - பாலன் வெளியே சுட்டிக் காட்டினான். கூட்டமாக இருந்த ஓலைக் குடிசைகளுக்கு மேலே ஒரு செங்கொடி பறந்து கொண்டிருந்தது. அவள் பார்த்தபோது குடிசைகள் மறைந்து விட்டன.
‘‘நீ என்னை எப்போ ஹரித்துவாருக்கு அழைச்சிட்டுப் போகப்போற? அப்பாவுக்கு ஒரு காரியம் செய்யணும்.’’
‘‘அதுக்கு இப்போ எனக்கு விடுமுறை இருக்கா என்ன? ஹரித்துவாருக்குப் போகணும்னா ரெண்டு நாட்களாவது விடுமுறை வேணும்.’’
மீதியிருந்த கேஷுவல் விடுமுறைகளை எடுத்துக் கொண்டுதான் பாலன் தன் தாயை அழைத்துக் கொண்டு வருவதற்காக கிராமத்திற்கே போனான்.
‘‘எப்போ உனக்கு வசதிப்படுதோ, அப்போ போவோம்.’’
வெளியே மேகங்கள் பல வண்ணங்களில் காட்சியளித்தன. கட்டிடம் கட்டுவதற்குப் பயன்படும் கற்களும், சாயமும் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படும் இடமது. அவன் எல்லாவற்றையும் தன் தாயிடம் விளக்கிச் சொன்னான். ஒரு பெரிய அனல் மின் நிலையமும் அங்கு இருக்கிறது. மிகக் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் அங்கு இருக்கிறார்கள்.