கிருஷ்ணனின் குடும்பம் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6343
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றன. நகரத்தில் உள்ளவர்கள் நல்ல வசதியுடன் வாழ்வதற்காக வீடுகள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களை உண்டாக்கியும் அவற்றைச் சுமந்தும் வாழும் அவர்கள் சாயப்பொடியையும் நிலக்கரிப் புகையையும் சுவாசித்து நோய்வாய்ப் பட்டு வெகு சீக்கிரமே இறந்து போகிறார்கள்.
நீண்ட காலம் வாழ்வது என்பது அவர்களின் வாழ்க்கையில் நடக்காத ஒரு விஷயம்.
‘‘பாருங்க...’’ - இரண்டு நாட்கள் கழித்து அவன் தன் தாயிடம் சொன்னான்: ‘‘நம்ம அறைக்கு வெளிச்சம் தர்ற இந்த மின்சக்தி நாம வண்டியில வர்றப்போ பார்த்த அனல்மின் நிலையத்துல இருந்து வர்றதுதான்.’
இரண்டு அறைகளை மட்டுமே கொண்டிருக்கும் இருப்பிடம் அது. மிகவும் குறைவான மரப்பொருட்களும் வீட்டுச் சாமான்களும் மட்டுமே அங்கு இருந்தன. எனினும், எல்லாவற்றையும் பாலன் ஒழுங்காக வைத்திருந்தான். அந்த விஷயத்தில் லட்சுமியம்மாவிற்கு சந்தோஷம்தான். வீடு சுத்தமாக இருந்தால்தான், வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்று பொதுவாக அவள் கூறுவதுண்டு.
அவள் சிறிய பால்கணியில் போய் நின்றாள். முன்னால் அதே போன்ற சிறு பால்கணிகளைக் கொண்ட வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. எல்லா வீடுகளும் ஒரே அச்சில் இட்டு வார்த்ததைப் போல் இருந்தன. ஒரே மாதிரி இருக்கும் பால்கணிகள் ஜன்னல்கள் படிகள் காலையில் அவள் எழுந்து பார்க்கும்போது கையில் தூக்குப் பாத்திரங்களுடன் ஆண்கள் பால் பூத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பார்கள். மாலை நேரங்களில் பால் பூத்திற்குச் செல்பவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அந்த வழக்கம் மாறும். அன்று சாயங்காலம் பால் வாங்கப் போகும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் ஆண்களும் இருப்பார்கள். பாலன் அலுவலகத்திற்குப் போன பிறகு, தள்ளு வண்டிகளில் காய்கறிகளையும், பழங்களையும் வைத்துக் கொண்டு வியாபாரிகள் வருவார்கள்.
மதிய நேரத்தில் பெண்கள் பேசியவாறு காலனிக்கு வெளியே இருக்கும் பிரதான சாலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி வரும்போது அவர்களுடன் புத்தகப் பைகளைத் தூக்கிக் கொண்டு பள்ளிச் சீருடைகளுடன் குழந்தைகள் வருவார்கள். மதியத்தைத் தாண்டிவிட்டால் காலனி மிகவும் அமைதியாக இருக்கும். காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு பெரும்பாலும் காலியாக இருக்கும் தள்ளு வண்டிகளை மரங்களுக்குக் கீழே நிறுத்திவிட்டு மர நிழல்களில் வியாபாரிகள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். வெயில் குறைய ஆரம்பிக்கும்போது காலனி மீண்டும் சுறுசுறுப்பாகும். தள்ளு வண்டிகளில் மீதமிருக்கும் காய்கறிகளை லாபம் கிடைக்கிற மாதிரி வேகமாக விற்றுவிட்டு வியாபாரிகள் தூரத்தில் இருக்கும் தங்களின் கிராமங்களை நோக்கி திரும்பச் செல்வார்கள். வரிசையாக இருக்கும் கட்டிடங்களுக்கு இடையில் அகலம் குறைவாக இருக்கும் பாதையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்கள். வெயில் மேலும் கொஞ்சம் குறைகிறபோது கையில் காலி டிஃபன் பாக்ஸ் சகிதமாக வியர்த்துப் போய், கசங்கிப்போன ஆடையுடனும் காலில் சேறுபடிந்த காலணிகளுடனும் ஆண்கள் ஒவ்வொருவராகத் திரும்பி வீட்டுக்கு வருவார்கள். மாலைநேரம் வந்துவிட்டு வீடுகளில் டெலிவிஷன் செட்டுகள் இயங்க ஆரம்பிக்கும். தொடர்ந்து காலனி மீண்டும் அமைதியில் மூழ்கிவிடும்.
‘‘அம்மா, நாள் முழுவதும் இப்படியே உட்கார்ந்து உங்களுக்கு போர் அடிக்கலியா? பாலன் அண்ணன்கிட்ட சொல்லி ஒரு டி.வி. வாங்கித் தரச்சொல்ல வேண்டியதுதானே?’’
‘‘என் குழந்தையே, அதை மட்டும் அவன்கிட்ட கேட்கவே கூடாது. டி.வி.ன்ற வார்த்தையைக் கேட்டாலே, பாலனுக்கு பயங்கரமா கோபம் வரும்.’’
‘‘என் வீட்டுக்காரரு டி.வி. முன்னாடி உட்கார்ந்தா எழுந்திரிக்கிறதே இல்ல. அலுவலகத்துல இருந்து வந்துட்டா டி.வி. முன்னாடி உட்கார்றதுதான் வேலை. தேநீர், சாப்பாடு எல்லாமே அதுக்கு முன்னாடி உட்கார்ந்துக்கிட்டுத்தான். பிள்ளைகளும் அப்பாவை மாதிரியே ஆயிடுவாங்களோன்னு ஒரே பயமா இருக்கு. ரெண்டு பிள்ளைகளுக்கும் முடிக்கவே முடியாத அளவுக்கு வீட்டுப்பாடம் இருக்கு.’’
‘‘சும்மா உட்கார்ந்திருக்கிறப்போ மனசுல தோணும்... ஒரு டி.வி. இருந்தா எதையாவது பார்த்துக்கிட்டு இருக்கலாமேன்னு இருந்தாலும் மகளே, பாலனுக்குப் பிடிக்காத எந்த விஷயத்தையும் நான் செய்யமாட்டேன்.’’
‘‘போரடிக்கிறப்போ, என் வீட்டுக்கு நீங்க வந்திடுங்கம்மா. காலனியில வழிதான் இப்போ உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்குமே!’’
காலனியில் சிறிய மார்க்கெட்டிற்கும் பால் பூத்திற்கும் பிரதான சாலையில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கும் போகும் வழிகளை இப்போது அவள் நன்கு அறிவாள். இங்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டனவே! எனினும் சாவித்திரியின் வீட்டிற்கு இதுவரை தனியாகப் போனதில்லை. எல்லா வீடுகளும் எல்லா வழிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. சில நேரங்களில் அவளுக்குத் தோன்றும் ‘காலனியில் இருக்கும் எல்லா மனிதர்களின் முகபாவங்கள்கூட ஒரே மாதிரிதான் இருக்கின்றனவோ’ என்று. இருந்தாலும், ஒருநாள் தனியாக அவளுடைய வீட்டிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று லட்சுமியம்மா முடிவெடுத்தாள். பாலனுக்கு எந்த விஷயத்தைச் செய்யவும் நேரமில்லை. வெயில் இறங்கும்போது காலனியில் இருக்கும் எல்லா ஆண்களும் அலுவலகங்களை விட்டு திரும்பி வந்தாலும், பாலன் வீட்டிற்கு வரும்போது பெரும்பாலும் நள்ளிரவு நேரம் ஆகிவிடும். எப்போதும் அவனுக்கு மீட்டிங்கும் விவாத மாநாடுகளும்தான்.
"பாலன் அண்ணனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாதா? அதுக்குப் பிறகாவது காலாகாலத்துல வீட்டுக்கு வந்திடுவார்ல! அம்மா, உங்களுக்கும் ஒரு துணை வந்த மாதிரி இருக்கும்."
"மனசுல ஆசை இல்லாம இல்ல. அவனும் இதை நினைக்கணும்ல!" சொல்லிச் சொல்லி எனக்கே அலுத்துப் போச்சு."
"என் கல்யாணம் ஒரு பெரிய பிரச்சினையா அம்மா?" -திருமணத்தைப் பற்றிப் பேசும் போது பாலன் கேட்பான்: "அதைவிட எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இப்போ இந்த நாட்டுல இருக்கு தெரியுமா?"
அவனுடைய தலைமுடியின் பின்பக்கம் நரை ஏறத்தொடங்கி விட்டது. அதைப் பார்க்கும் போது லட்சுமியம்மாவிற்கு மிகவும் சங்கடமாக இருக்கும். திருமணம் செய்ய நேரமில்லை என்று கூறும் ஒருவனை அவள் வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்க்கிறாள். அதைக் கேட்ட போது சாவித்திரி விழுந்து விழுந்து சிரித்தாள். அவளுடைய கணவன் உண்ணி வேலை கிடைத்து முதல் மாத சம்பளம் கையில் வாங்கியதுதான் தாமதம்- திருமணத்திற்காக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான். பாலனுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதை லட்சுமியம்மா நன்கு அறிவாள். எனினும், அவன் கையில் எப்போதும் காசு இருக்காது. சொந்தப் பணத்தைச் செலவழித்து அவன் தன்னுடைய மாத இதழை கொண்டு வருகிறானோ என்று அவள் சந்தேகப்பட்டாள். தட்டாறத்து கிருஷ்ணனின் மகனாயிற்றே! அப்படித்தான் நடக்க வாய்ப்பிருக்கிறது.