கிருஷ்ணனின் குடும்பம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6343
ஆரம்பத்தில் ஒரு சாதாரண பெண்ணின் விருப்பங்களும் கனவுகளும் அவளுக்கும் இருந்தன. பிறகு அவை எதுவும் இல்லாமற் போய்விட்டன. இனிமேல் அவளுடைய மனதில் கடவுளைப் பற்றிய சிந்தனைகளுக்கு மட்டுமே இடம் இருக்கிறது.
தனிமையும் வெறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. பேசுவதற்குக்கூட யாரும் இல்லை. சாவித்திரி எந்தநேரம் வேண்டுமானாலும் வந்து பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன? அவளுக்குக் கணவனும் குழந்தைகளும் இருக்கிறார்களே! அந்த வெறுப்பில் அவளையும் அறியாமல் அவளிடம் ஒரு ஆசை உண்டாகி வளர்ந்தது ஒரு பூஜையறை இருந்தால்... ஒரு சிலை இருந்தால்... ஒரு காலத்தில் அவளுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் பகவான்தானே!
"நான் என் கணவர்கிட்ட சொல்லி வாங்கித் தரச் சொல்கிறேன்..."
"உண்ணிக்கு அது தேவையில்லாத கஷ்டமாக இருக்காதா?"
"இதுல என்ன கஷ்டம் இருக்கு? கடவுளோட அருள் கிடைக்கட்டும்."
எடுத்தால் கீழே வைக்க மனம் வராத ஒரு ஸ்ரீராமன் சிலையை உண்ணி வாங்கிக் கொண்டு வந்தான். மண்ணால் செய்யப்பட்ட சிலையாக அது இருந்தாலும் ஒருமுறை பார்ப்பதிலேயே அது ஏதோ உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைப் போல் தோன்றும். அதற்கு அதிக விலை இருக்கும் என்று அவள் நினைத்தாள். ஆனால், உண்ணி ஒரு பைசா கூட அவளிடம் வாங்கவில்லை. அறையைப் பெருக்கி சுத்தம் செய்து, நீர் தெளித்து, அவள் சிலையை ஒரு ஸ்டூலின் மீது வைத்தாள். உண்ணிதான் ஒரு கற்பூரத் தட்டையும் வாங்கிக் கொண்டு வந்தான். காலையில் படுக்கையை விட்டு எழுந்து அவள் குளித்து முடித்து, விளக்கைக் கொளுத்தினாள். அறையில் கற்பூரத்தின் வாசனை சுற்றிலும் பரவித் தங்கியது. அந்த நிமிடமே தான் இழந்த என்னவெல்லாமே மீண்டும் தனக்குக் கிடைத்திருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். விரக்தியும் தனிமையும் இல்லாமற் போயின. ஸ்ரீராமபகவானிடம் தன் மனக் கஷ்டங்களையும் கனவுகளையும் கூற ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் மவுனமொழியில் அவள் பகவானுடன் பேசினாள் என்றாலும் காலப்போக்கில் அவள் உரத்த குரலில் பேசுவதும் கண்ணீர் சிந்துவதும் சிரிப்பதுமாக மாறிவிட்டாள். மனிதர்கள் யாருடனும் தோன்றாத ஒரு நெருக்கம் அவளுக்கு எப்போதும் தெய்வங்களுடன் இருந்திருக்கிறது அல்லவா? ஸ்ரீராமபகவானுடன் அவள் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசினாள். சாவித்திரியின் பக்கத்து வீட்டுக்காரி ஒரு மாதச்சீட்டு ஆரம்பித்த போது அவள் இரண்டு சீட்டுகளில் சேர்ந்தாள். ஒரு சீட்டு பாலனின் பெயரிலும் இன்னொன்று கடவுள் பெயரிலும். கடவுள் பெயரிலிருக்கும் சீட்டுப்பணம் கிடைக்கிறது போது, அதைக் கொண்டு கடவுளுக்கு தங்கமாலை செய்து போட வேண்டும் என்று தீர்மானித்தாள்.
"மாலையும் வளையலும் செய்து போட எனக்கு மகளோ, மருமகளோ இல்லாட்டி என்ன? எனக்கு நீ இல்லையா?"- அவள் கடவுளைப் பார்த்துச் சொன்னாள்: "இல்லாததைப் பற்றி நினைச்சு நான் எந்தச் சமயத்திலும் சங்கடப்பட்டது இல்ல. என்ன இருக்குதோ, அதைக் கொண்டு திருப்திப்படுறதுதான் என் அனுபவத்துல இதுவரை நான் கத்துக்கிட்டது."
பிரார்த்தனையும் பூஜையும் ஆச்சரியப்படத்தக்க ஒரு மாற்றத்தை அவளிடம் உண்டாக்கியது. இரவில் மகன் வரத் தாமதமானால் அவளுக்கு ஒரு பதைபதைப்பாக இருக்கும். ஒருநாள் சாவித்திரியைப் பார்க்கவில்லையென்றால் அவளால் செயல்படவே முடியாது. காற்றும் மழையும் வந்தால் மனதில் ஒரு வகை பயம் தோன்றும். சாலை விபத்துக்களைப் பற்றியசெய்திகளை நாளிதழ்களில் வாசிக்கும் போதும் விபத்திற்கு இரையானவர்களின் புகைப்படங்களைப் பார்க்கிறபோதும் மனதே இடிந்து விட்டதைப் போல் இருக்கும். காலனியில் ஒரு வீட்டில் திருடன் நுழைந்துவிட்டான் என்பது தெரிந்த போது இரவு முழுக்க அவளுக்கு தூக்கமே வரவில்லை.
சாவித்திரியின் மூத்த மகனுக்கு மஞ்சள் காமாலை வந்த நாளன்று மூன்று நான்கு தடவைகள் தன்னுடைய முதுகு வேதனையைப் பற்றிக் கவலைப்படாமல் அவளுடைய வீட்டிற்குச் சென்று குழந்தையின் உடல்நிலையைப் பற்றி விசாரித்த வண்ணம் இருந்தாள். உண்ணி வெளியூர் பயணம் போயிருந்தபோது சாவித்திரியும் பிள்ளைகளும் எப்படித் தனியாக இரவு நேரங்களில் இருப்பார்கள் என்று நினைத்து நினைத்து அவளுக்கு உறக்கம் என்ற ஒன்று இல்லாமல் போனது. இப்போது அப்படி ஏதாவது நடந்தால் அவளுடைய மனம் சிறிதும் பாதிக்கப்படாது. கடவுள் சிலைக்கு முன்னால் விளக்கு கொளுத்தி கண்களை மூடி உட்கார்ந்து விட்டால் போதும், எல்லா குறைகளும் பனியைப் போல ஓடிவிடும். வாழ்வு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் உள்ள தெளிவான பதில் பிரார்த்தனைதான் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். பிரார்த்தனை செய்ய ஒரு மனமும் தெய்வங்களின் புகழை வார்த்தைகளால் சொல்ல ஒரு ஜோடி உதடுகளும் தொழுவதற்கு இரண்டு கைகளும் இருந்தால் வாழ்க்கை வளமானதே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குளித்து முடித்து, கடவுளுக்கு முன்னால் விளக்கைக் கொளுத்தி வைத்தபோது இந்த ஒரு முழுமையான மகிழ்ச்சிதான் அவளுக்குத் திரும்பக் கிடைத்தது.
நெற்றியில் நரம்புகள் குடைச்சல் உண்டாக்கி வேதனையைத் தந்தன. இடதுபக்கம் நெற்றிக்கு மேலே முடிக்குச் சற்று கீழேதான் முதலில் நரம்பு குடைச்சல் உண்டாக்க ஆரம்பித்தது. பிறகு அந்த குடைச்சலின் தொடர்ச்சி என்பதைப் போல வலது நெற்றி நரம்பும் இலேசாகத் துடித்தது. பிறகு இரண்டு பக்க நரம்புகளும் ஒரே நேரத்தில் துடித்தன. இடையில் தலைக்குள்ளிருந்து ஒரு அஸ்திரம் புறப்பட்டு வருவதைப் போல வலி பாய்ந்து வந்து நெற்றியைத் துளைத்துக் கொண்டு வெளியே போய்க் கொண்டிருந்தது.
அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. சாதாரணமாக இந்த நேரத்தில் அவள் பால்கனிக்குச் சென்று வெளியிலிருக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. காலனியிலிருந்த ஆண்கள் எல்லாரும் பணி செய்யும் இடங்களுக்கும் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கும் போய் விட்டிருந்தார்கள். இப்போது பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு காலனியாக அது மாறி இருந்தது. சில பால்கனிகளில் பெண்கள் அமர்ந்து கூந்தலை உலர வைத்துக் கொண்டிருந்தனர். மொட்டை மாடியில் சலவை செய்யப்பட்ட ஆடைகள் காய்ந்து கொண்டிருந்தன. கீழே சில பெண்கள் காய்கறி விற்பனை செய்பவர்களிடம் விலைபேசிக் கொண்டிருந்தார்கள். கையில் ப்ளாஸ்டிக் கூடைகளை எடுத்துக் கொண்டு காலனிக்குள் இருந்த மார்க்கெட்டிற்கு கூட்டமாகப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் போய்க் கொண்டிருந்தனர் சில பெண்கள்.
லட்சுமியம்மா கட்டிலில் படுத்திருந்தாள். வயிறு எரிந்தாலும், அவள் ஒரு துளி நீர் கூட குடிக்கவில்லை. பாலனும் எதுவும் சாப்பிடாமல்தான் அலுவலகத்துக்குப் போயிருந்தான். இப்படி நடப்பது இதுவே முதல்முறை.