மனைவியின் மகன் - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
‘‘அது எப்படி வேணும்னாலும் போகட்டும். அவங்க புத்திசாலியா இருந்திருக்காங்க. சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டு கணவனை சந்தோஷப்படுத்தி வாழ்ந்திருக்காங்க. அப்படித்தான் நீங்களும் ஒரு கணவனை அடைஞ்சீங்க... அப்படித்தானேம்மா?’’
‘‘நான் ஒரு கணவனை ஏற்றுக்கிட்டதுக்கு, நீ என் மேல கோபப்படுறியா?’’
‘‘நிச்சயமா இல்ல. நீங்க புத்திசாலித்தனமா நடந்திருக்குறதா நான் நினைக்கிறேன்.’’
‘‘ஆமா...’’ - சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘அதனால... அப்படி ஓரு ஆளை ஏற்றுக்கிட்டதால நீயும் வளர்ந்தே.’’
‘‘ஆமாம்மா! நான் வளர மருமக்கத்தாய அமைப்பு இல்லாமப் போச்சு. இருந்தாலும் நீங்க இப்படியொரு உறவை உண்டாக்காம இருந்திருந்தா, நான் ஒரு ஆளை ‘அப்பா’ன்னு... கூப்பிட்டிருப்பேன் அம்மா.’’
பிரபா ஜானகி அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அறிய வேண்டிய விஷயத்தை அவன் நெருங்கிவிட்டான். அவனுடைய ஆர்வம் கட்டுப்பாட்டை மீறிவிட்டிருந்தது. தன் தாயின் முகக்திலிருந்து கண்களை எடுக்காமல் அவன் சொன்னான்: ‘‘வாழ்க்கையில ‘அப்பா’ன்னு கூப்பிடுறதுல என்ன இன்பம் இருக்கப் போகுது? இருந்தாலும் எனக்கு ஒரு விஷயம் தெரியணும்மா. எதுனால அந்த மனிதரை நீங்க ஏத்துக்கல?’’
இடி விழுந்ததைப் போல ஜானகி அம்மா நடுங்கிப் போய் நின்றாள். அவளின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அவள் பதைபதைப்பான குரலில் சொன்னாள்: ‘‘இல்ல... நான் சொல்லமாட்டேன். நான் யார்கிட்டயும் சொன்னதில்ல. என் கணவர்கிட்ட கூட சொன்னதில்ல...’’
‘‘பதட்டப்படாதீங்கம்மா... சொன்னால்தான் என்ன?’’
‘‘நான் விரும்பின ஆளை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு என் தந்தை என்கிட்ட சொன்னாரு. இருந்தாலும் நான் சொல்லல...’’
‘‘ஏன் சொல்லலம்மா?’’
‘‘நான் யாரையும் விரும்பல...’’
பிரபாவால் அந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவன் ‘‘என்ன சொன்னீங்க?’’ என்று கேட்டதற்கு ஜானகி அம்மா திரும்பவும் ‘‘நான் யாரையும் விரும்பல’’ என்று உறுதியான குரலில் சொன்னாள்.
‘‘அம்மா, நீங்க அப்போ பார்க்க நல்லா இருந்திருக்கீங்க. நல்ல இளமையோட... நாம ரொம்பவும் அழகா இருக்கோம்ன்ற நினைப்போட... கனவுகள் கண்டு... சபலமான மனசு கட்டுப்பாட்டை மீறி...’’
பிரபா ஒரு நிமிடம் கட்டுப்பாட்டை மீறிய மனிதனாகிவிட்டான். அவன் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான்: ‘‘என்னால யூகிக்க முடியுது... அம்மா, நீங்க உணர்ச்சிவசப்பட்டு... காம எண்ணங்களுக்கு அடிமையாகி... யார் மேலயும் விருப்பம் இல்லாம... தப்பா நடந்து...’’
‘‘இல்ல... இல்ல மகனே!’’ - ஜானகி அம்மாவால் இனிமேல் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உண்டாகிவிட்டது. ‘‘இல்ல... இல்ல... அப்படி இல்ல... ஆர்வமும் இளமையும் இல்ல... இரத்தக் கொதிப்பு இல்ல. அந்த வாழ்க்கையில அப்படியெல்லாம் எதுவும் இல்ல. அந்த இருண்ட வீட்டுல அதுக்கெல்லாம் சாத்தியமே இல்ல. அங்கே சந்தோஷத்தோட ஒண்ணு சேர்ந்து இருக்க முடியாது. நான் காம வயப்படவும் இல்ல. எல்லாம் என் கெட்ட நேரம்.’’
பிரபப உரத்த குரலில் சொன்னான்: ‘‘ஆமா... பெண்களுக்குன்னே இருக்குற கெட்ட நேரம்!’’
‘‘நான் ரொம்பவும் அடக்க ஒடுக்கமா இருந்ததுகூட ஒரு காரணமா இருக்கலாம். ‘முடியாது’ன்னு சொல்லத் தெரியாத குணம்... கையை விடுவிக்கணும்னு கூட தோணாதது... நான் வேலைக்காரனனை அண்ணே’ன்னு மரியாதையா கூப்பிட்டேன். நாம ரொம்பவும் சாதாரணமானவங்கன்னு என் தாய் எனக்குச் சொல்லித் தந்திருந்தாங்க. கையைப் பிடிச்சப்போ எதுவும் செய்ய முடியாம அதுக்கு இணங்கிப் போக மட்டும்தான் என்னால முடிஞ்சது. நான் ஏழையாச்சே? ‘என்னை கெடுத்துடாதீங்க’ன்னு நான் சொன்னேன். பேசாதேன்னு கோபமா வார்த்தைகள் வந்ததும் நான் பேசாம இருந்துட்டேன். இப்போ உன்கிட்ட அதைத் சொல்ல வேண்டிய நிலை.’’
ஜானகி அம்மா உணர்ச்சி கொந்தளிக்க நின்று கொண்டிருந்தாள். அவளிடம் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் கூறுவதற்கு ஆர்வமாகவும் இருந்தாள். அப்படி சொன்னால், மனம் நிம்மதியாக இருக்கும். ஆனால், அவளால் முடியவில்லை.
‘‘இல்ல... என் இரத்தக் கொதிப்பு இல்ல, இளமை இல்ல, காமம் இல்ல... கட்டுப்பாட்டை மீறிய மனம் இல்ல... நான் நிரபராதின்றதை என்னால நிரூபிக்க முடிஞ்சா... அந்த சம்பவத்தில் தலை முடியோட அசைவைக் கூட... நான் எப்படி அதைச் சொல்லுவேன்? சொன்னேன்னா உலகம் நான் செய்த தப்பை மன்னிச்சாலும் மன்னிக்கும்.’’
பிரபா இப்படி நினைக்கவில்லை. இப்படி ஒரு குழந்தை பிறப்பான் என்று அவன் எண்ணியிருக்கவில்லை. பெண்ணும் ஆணும் முழுமையான சம்மதத்துடன்தான் இணைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். நிலை கொள்ளாத மனதுடன் பிரபா அந்த அறைக்குள் இப்படியும் அப்படியுமாய் நடந்தான். ஜன்னல் கம்பிகளைப் பிடித்து இழுக்க வேண்டும்போல் அவனுக்கு இருந்தது. ஒரு பெண்ணின் பலவீனத்தின் சின்னம்! பெண்ணும் ஆணும் முறைப்படி இணைந்து பிறந்தவனல்ல அவன்! தான் எப்படிப் பிறந்தோம் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தச் சம்பவத்தை தன்னுடைய அகக் கண்களால் அவன் பார்த்தான். ஒரு அப்பாவிப் பெண்ணிடம் ‘பேசாதே’ என்று ஒரு மிருகம் கோபமான குரலில் கூறுகிறது! பிரபாவிற்குத் தன் மீதே வெறுப்பு தோன்றியது.
அந்தப் பழைய வீட்டின் இருட்டில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? அங்குள்ள சுவர்களில் கட்டாயம் இரத்தத்துளிகள் இருக்கும்!
பிரபா கேட்டான்: ‘‘அது யாரு?’’
‘‘நீ வருத்தப்படுவே.’’
‘‘இல்ல... சொல்லுங்க அம்மா.’’
‘‘உனக்குத் தெரியும். உன் வாழ்க்கையில் உனக்குன்னு இருக்குற ஒரே சொந்தம். உனக்கு பொம்மை வாங்கித் தந்தாருல்ல.. உன் மேல அன்பு காட்டினாருல்ல.. அந்த ஆளுதான். இந்த வீட்டைச் சுற்றி சுற்றி வந்துக்கிட்டு இருந்தாரு. என்னோட வாழ்க்கையிலும் என் கணவரோட வாழ்க்கையிலும் கெட்ட கனவா இருந்தாரு அந்த ஆளு. பாவம்! உன்னை கொஞ்சுறதுக்காக வந்தாரு அந்த நாடோடி.’’
‘‘நிறுத்துங்க. கோபனோட அப்பா யாரு?’’
‘‘நீ ஏன் அப்படி கேக்குற?’’
‘‘அதை அவனோட அப்பா அவன்கிட்ட கேக்குறாரு.’’
அடுத்த நிமிடம் ஜானகி அம்மா ‘அய்யோ’ என்று உரத்த குரலில் கத்தியவாறு தரையில் விழுந்தாள். அது தெரியாமல் பிரபா வெளியேறி போய்க் கொண்டிருந்தான்.
12
இருபத்தொரு வருடங்களாக எவ்வளவு பெரிய பாரத்தை ஜானகி அம்மா சுமந்திருக்கிறாள்! அது அவளை இவ்வளவு காலமும் அழுத்தி பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அந்தப் படுகுழியை விட்டு அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு ஆளிடம் அந்த ரகசியத்தை வெளியிட்டாகிவிட்டது. அதன்மூலம் இதயத்திலிருந்த பாரம் இல்லாமற்போனது. இனிமேல் தான் ஒரு தப்பு செய்தவள் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது.