நீ மட்டுமே என் உயிர்! - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6612
லேபர் அறையின் கதவைத் திறந்து, டாக்டர் ப்ரியா வந்தாள்.
“சங்கர்... கொஞ்சம் வாங்களேன்...” ப்ரியா அழைத்ததும், சங்கர் ப்ரியாவின் அருகே சென்றான்.
“ஸாரி சங்கர்... குழந்தை நல்லபடியா பிறந்து நல்லா இருக்கு. பெண் குழந்தை. ஆனா... ஆனா... நிர்மலாவுக்குத் திடீர்னு ரத்தப் போக்கு அதிகமாயிடுச்சு. இது நான் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான விஷயம். லேபர் ரூமுக்குக் கூட்டிட்டு வர்ற வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம இருந்த நிர்மலாவுக்குத் திடீர்னு ஏன் இப்படி ஆச்சுன்னு ஒண்ணுமே புரியல. எவ்வளவோ முயற்சி செஞ்சும் நிர்மலாவோட உயிரைக் காப்பாத்த முடியலை. வெரி ஸாரி...”
“டாக்டர்...” அதிர்ச்சியில் தன்னையறியாமல் அலறினான் சங்கர்.
குழந்தையின் அழுகுரலுடன் அவர்கள் அனைவரது அழுகையும் சேர்ந்து கொள்ள, அங்கே சோகமான ஒரு சூழ்நிலை உருவாகியது.
15
கவலைகளை மறக்க வைக்கும் சக்தி எதற்கு இருக்கிறதோ இல்லையோ, காலத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே இருக்கிறது. காலத்தின் சக்தி மிக வலிமையானது. காலம் செல்லச் செல்ல... நிர்மலா மறைந்து போன துயரம், மெல்ல மெல்லக் குறைந்தது. இதற்கு மற்றொரு காரணம், நிர்மலா பெற்றெடுத்த குழந்தை!
அந்தக் குழந்தையின் முகம் துக்கத்தைக் குறைத்தது. தான் பெற்றெடுத்த மகள் நிர்மலாவின் இழப்பை, அவள் பெற்றெடுத்த குழந்தையின் பிறப்பால் ஓரளவு மறந்தாள் வசந்தா. சுகமான சுமையாக அமைந்துவிட்ட அந்த பேத்தியின் அழகிய முகம் கண்டு, பொக்கை வாய்ச் சிரிப்பொலி கேட்டுத் தன் துயரத்தை மறந்தாள். மனைவியின் மறைவிற்குப் பின்னர், மாமனார் வீட்டில் இருக்க மனமின்றி, முரளி அவனது பெற்றோர் வீட்டிற்குப் போய்விட்டான்.
குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழா எளிமையாக நடத்தப்பட்டபோது வந்திருந்த குழந்தையைப் பார்த்துவிட்டுப் போனான். குழந்தைக்குச் சரண்யா என்று சங்கர் பெயர் வைத்தான்.
சரண்யா மீது தன் உயிரையே வைத்திருந்தான் சங்கர்.
சரண்யாவைக் கொஞ்சிக் கொண்டிருந்த சங்கரிடம் பேச ஆரம்பித்தாள் வசந்தா.
“சங்கர், நிர்மலாவுக்கு வலி எடுத்ததுனால உன்னோட மகன்களை இங்கே கூட்டிட்டு வர்ற விஷயம் அப்படியே நின்னுபோச்சு. நிர்மலாவோட பேறுகாலம், அவனோட மரணம்ன்னு நாள் ஓடிப்போயிடுச்சு. இப்ப போய்க் கூட்டிட்டு வந்துடேன்ப்பா...”
“ஆமாம்மா. நானும் அதைப் பத்தி யோசிச்சுக்கிட்டுதான்மா இருக்கேன்.”
“யோசிக்கறதுலயே நாட்கள் ஓடிடக் கூடாது, சங்கர். நாளைக்கே நீ கிளம்பு...”
“சரிம்மா” என்றவன், சரண்யாவை மீண்டும் கொஞ்ச ஆரம்பித்தான். சங்கர் சரண்யா மீது தன் உயிரையே வைத்திருந்தான்.
“குடுப்பா அவளை. சாதம் ஊட்டணும்.” கை நீட்டிக் கேட்ட வசந்தாவிடம் வர மறுத்து, சங்கரின் மார்போடு ஒட்டிக் கொண்டாள் சரண்யா.
‘இந்தக் குழந்தை இப்படி என் மேல ஒட்டிட்டிருக்காளே... மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு என்னோட மகன்களையும் கூட்டிட்டு வந்துட்டா... இன்னும் கூடுதலான சந்தோஷம் கிடைக்குமே...’ நெஞ்சம் நெகிழ்ந்தது சங்கருக்கு. மதுரைக்குப் போன வேகத்திலேயே சுவரில் அடித்த பந்து போலத் திரும்ப வரப் போகிறான் சங்கர் என்பதை அப்போது யாரும் அறியவில்லை.
16
மதுரை. மதுரை மாநகரினுள் நுழைந்த சங்கருக்குப் பழைய நினைவுகள் கரைபுரண்டன. ஜானகியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனது, அழகர் கோவிலுக்குப் போனது இன்னமும் அவனது இதயத்தில் பசுமையாக இருந்தது.
ஜானகியைத் திருமணம் செய்து கொண்ட புதிதில் அவளை அழைத்துக் கொண்டு மதுரை நகர் முழுவதும் சுற்றினான். மதுரையின் மதுரமான மணமுள்ள மல்லிகைச் சரத்தை ஜானகிக்கு வாங்கிக் கொடுப்பான். மல்லிகைப்பூ என்றால் ஜானகிக்குக் கொள்ளைப் பிரியம். அடர்த்தியாகக் கோத்திருக்கும் மல்லிகைச் சரத்தைத் தலை நிறையச் சூடிக் கொண்டு சங்கரின் மனதைக் கிறங்கடிப்பாள்.
அளவற்ற அவர்களின் அன்பையும், ஆசையையும் அடையாளமிட்டுக் காட்டுவதற்குக் குழந்தைகள் பிறந்த பின்னர், அவர்களது அன்பு மேலும் பிரவாகமாகப் பெருகியது.
‘’பெருகிய அன்பு... கருகிப் போகுமளவு என் தூய்மையான அன்பிற்குத் துரோகம் செய்துவிட்டாள் ஜானகி. என்னைப் பெத்தவங்களை விட்டுட்டு, கூடப் பிறந்தவளை விட்டுட்டு, ‘நீ மட்டுமே என் உயிர்’ன்னு ஓடி வந்தேனே... எனக்கு ஏனிப்படித் துரோகம் செஞ்சுட்டா? பாவி... அவளைப் பத்தி நினைக்கறதே தப்பு. அவள் தண்டிக்கப்பட வேண்டியவ. ஆனா எனக்குப் பிறந்த என் மகன்கள்? அந்தப் பிஞ்சுகள் என்ன தப்பு செஞ்சாங்க? நான் என் மகனைக்ளைப் பார்க்கணும். கொஞ்சணும். என் கூட கூட்டிக்கிட்டுப் போகணும். என்னோட அம்மா, அப்பாவைப் பாட்டி தாத்தான்னு அறிமுகப்படுத்தணும். சரண்யா கூட இந்தப் பையன்களையும் சேர்த்து வளர்க்கணும். எனக்கு என் பிள்ளைங்க வேணும்...’
நெஞ்சத்தில் பொங்கிய பாசத்தில், அவனது கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. முன்பு அவள் ஜானகியுடன் குடும்பம் நடத்திய இடத்திற்கு வந்ததும் காரை நிறுத்தினான். இறங்கினான்.
அவன் குடியிருந்த வீட்டிற்குச் சென்றான். வீட்டில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து சிலர் வெளியே வந்தனர். அவர்களிடம் விசாரித்தான் சங்கர்.
“இந்த வீட்ல இருந்தவங்க...”
“தெரியலயே. ரொம்ப நாளா பூட்டிதான் கிடக்கு.”
“பாமாக்கான்னு ஒருத்தங்க குடி இருந்தாங்க. அவங்க...?”
“பாமாக்காதான் செத்துப் போச்சே தம்பி! அந்த அக்காவுக்குக் கர்ப்பப் பையில கேன்ஸர் வந்து, செத்துப் போச்சு. அது சரி, நீங்க யாரு தம்பி? யாரைத் தேடி வந்தீங்க? பாமாக்காவையா?”
“அ... ஆமா... இ... இல்லை.... இங்கே... பாமாக்கா குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் நான் குடியிருந்தேன்... சும்மா... பார்த்துவிட்டுப் போகலாம்னு வந்தேன்...”
“இந்த இடமெல்லாம் கை மாறிப் போச்சு தம்பி. யார் யார் எங்கெங்கே போனாங்களோ தெரியல...”
“சரிங்க. நன்றி. வரேன்.”
“சரி தம்பி.”
ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளித்த உணர்வுகளை மறைத்து அவர்களிடம் விடை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டான் சங்கர். எங்கே...? என் பிள்ளைகள் எங்கே?... ஜானகியை மனதிற்குள் திட்டியபடியே காருக்குள் ஏறி காரைக் கிளப்பினான்.
‘வேணும். எனக்கு இதெல்லாம் வேணும். பெத்தவர் பேச்சைக் கேக்காம, பிடிவாதமா அவளைக் கல்யாணம் பண்ணி, அவள் மட்டுதான் என் உயிர்ன்னு வாழ்ந்த எனக்கு இந்தத் தண்டனை வேணும்தான்.’
கோபமும், வருத்தமும் மாறி மாறி அவனைத் தாக்கின. திருச்சியை நோக்கி காரைச் செலுத்தினான்.
17
சங்கரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் வசந்தா. சங்கரது காரின் ஹாரன் கேட்டுப் பரபரப்புடன் எழுந்தாள்.
சங்கரின் கார் பங்களாவின் போர்டிகோவில் வந்து நின்றது. ஆவலுடன் பார்வையை ஓட விட்டாள் வசந்தா.