வாசகன் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7189
அதன்மூலம் இயற்கையிலேயே மனிதன் மிகவும் மோசமானவன், கோணல் புத்தி கொண்டவன், நேர்மையற்றவன், எல்லா நேரங்களிலும் எல்லா வழிகளிலும் பல வெளிச் சூழ்நிலைகளை நம்பியிருப்பவன், சக்தியற்றவன், கெட்ட எண்ணம் கொண்டவன், தான் தனியே இருக்கும்போது துண்டிக்கப்பட்டவன் என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். இந்த நேரத்தில் அவன் அனேகமாக இதை ஒப்புக் கொண்டிருப்பான் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவனுடைய ஆன்மா வித்தியாசமானதாகவும் மனம் பலவீனமானதாகவும் இருக்கின்றன. அவனுடைய நிலை ஏன் அப்படி இருக்கிறது?- புத்தகங்களில் தான் படைக்கப்பட்ட விதம் எப்படி என்பதை அவன் பார்க்கிறான் - குறிப்பாக அறிவாளித்தனத்துடன் என்று தவறாக நினைக்கும் அளவிற்குத் திறமையுடன் எழுதப்பட்டிருக்கும் நூல்களில். ஆனால் அது ஒரு வசிய சக்தியே. நீங்கள் ஒரு மனிதனை எப்படி சித்தரித்திருக்கிறீர்களோ, அப்படியேதான் அவன் தன்னைப் பார்க்கிறான். அவன் எந்த அளவிற்கு மோசமானவன் என்று காட்டியிருக்கிறீர்களோ அப்படியேதான் அவன் தன்னைப் பார்க்கிறான். சிறந்த மனிதராக வரக்கூடிய சாத்தியத்தை அவனால் பார்க்க முடிவதில்லை. அவனுக்கு அந்த சாத்தியத்தை நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? உங்களால் சாதித்துக் காட்ட முடியுமா, நீங்கள் உங்களை... என்ற நிலையில்? ஆனால், நான் உங்களை எதுவும் சொல்லாமல் விடுகிறேன். ஏனென்றால், நான் பேசுவதைக் கேட்கும்போது, உங்களை நியாயப்படுத்துவது எப்படி என்பதை உங்களால் சிந்திக்க முடியாது. நான் சொன்னதை மறுக்கவும் முடியாது. ஒரு ஆசிரியர், அவர் நேர்மையானவராக இருக்கும்பட்சம், எல்லா நேரங்களிலும் அவர் ஒரு கூர்ந்து கவனிக்கும் மாணவனாகவும் கட்டாயம் இருக்க வேண்டும். உங்களைப் போன்ற இன்றைக்கு இருக்கும் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நீங்கள் கொடுப்பதைவிட அவர்களிடமிருந்து மிகவும் அதிகமாக எடுத்த்க் கொள்கிறீர்கள். ஏனென்றால், எது இல்லையோ அதைப்பற்றிதான் நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
ஆனால் மனிதனிடம் உயர்ந்த விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். உங்களிடம் என்று சில விஷயங்கள் இருக்கத்தானே செய்யும்? மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து நீங்கள் எந்த வகையில் மாறுபடுகிறீர்கள்? அவர்களைப் பற்றி இரக்கமே இல்லாமல் மிகவும் மேலோட்டமாக, உங்களை நீங்களே ஆசிரியர்களாக நினைத்துக் கொண்டு, உன்னதமான விஷயங்களின் வெற்றிக்காக மோசமானவற்றை அழிக்க வந்தவர்கள் என்று காட்டிக்கொண்டு எப்படிச் செயல்படுகிறீர்கள்? ஆனால் கெட்டது, நல்லது - அவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டிய உங்களின் முயற்சிகளுக்கு நன்றி - இரண்டும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கயிறுகளாலான இரண்டு பந்துகளைப்போல - கருப்பிலும் வெள்ளையிலும் இருக்கும் அவை தங்களின் உண்மையான வண்ணத்தை ஒன்றின்மீது ஒன்றில் தடவிக்கொண்டு சாம்பல் நிறமாக மாறி விடுவதை நீங்கள் கவனித்தீர்களா? இல்லை. நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் இல்லை. உங்களைவிட பலசாலியான வேறு யாரையாவது அவர் தேர்ந்தெடுத்திருப்பார். அவர் அவர்களின் இதயத்திற்குள் வாழ்க்கையின்மீது, உண்மையின்மீது, மனிதர்களின்மீது அன்பு கலந்த காதல் இருக்கும்படி புகட்டி விட்டிருப்பார். நம்முடைய இருட்டில் அவை சக்தி, புகழ் ஆகியவையாக ஒளிர்ந்து வெளிச்சம் தந்து கொண்டிருக்கும். ஆனால் நீங்கள் சாத்தானின் வெற்றியைக் காட்டும் விளக்குகளைப் போல புகையுடன் எரிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய புகை மனிதர்களின் மனதிற்குள்ளும் ஆன்மாவிற்குள்ளும் நுழைந்து அவர்களை விஷம் கொண்டவர்களாக ஆக்கிவிட்டதே. தன்மீதே நம்பிக்கை இல்லாதவர்களாக அது அவர்களை விஷப்படுத்தி விட்டது. இப்போது சொல்லுங்கள் - நீங்கள் என்ன பிரச்சாரம் செய்வீர்கள்?’’
அந்த மனிதனின் சூடான மூச்சு என் கன்னத்தில் படுவதை நான் உணர்ந்தேன். அவனுடைய பார்வையைச் சந்திப்பதற்கு பயந்து நான் என் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். அவனுடைய வார்த்தைகள் என்னுடைய மூளைக்குள் நெருப்புப் பொறிகளைப் போல எரிந்து கொண்டிருந்தன. நான் அதைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் அதைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய சாதாரண கேள்விகளுக்குப் பதில் சொல்வது என்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை வேதனையுடன் நான் உணர்ந்தேன். நான் பதில் எதுவும் கூறவில்லை.
‘‘அதனால் நீங்களும் உங்களைப் போன்ற மற்றவர்களும் எந்த வாசகர்களுக்காக எழுதினீர்களோ, அந்த வாசகன் கோபமடைந்து கேட்பான் - ‘‘என்ன நோக்கத்திற்காக நீங்கள் எழுதுகிறீர்கள்?’’ என்று நீங்கள் எவ்வளவோ எழுதுகிறீர்கள். மக்களின் இதயங்களில் அன்பான உணர்வுகளை எழுப்ப வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? இல்லை. நீங்கள் சக்தியற்ற - உயிரற்ற வார்த்தைகளால் அதை எந்தச் சமயத்திலும் செய்ய முடியாது. வாழ்க்கைக்குப் புதிதாக உங்களால் எதையும் தர முடியாது. சொல்லப் போனால் இருந்த பழையதையேகூட நீங்கள் குழப்பி, தாறுமாறாக்கி, வடிவமே இல்லாத ஒன்றாக்கி விடுகிறீர்கள். உங்களைப் படிக்கும்போது நாங்கள் எதையும் தெரிந்துகொள்ளவில்லை. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம் - உங்களைத் தவிர, எல்லாமே சாதாரண இடங்கள், சாதாரண மக்கள், சாதாரண சிந்தனைகள், சம்பவங்கள்... மனிதனின் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாவைப் பற்றியும், அது மறுமலர்ச்சி அடைவதைப் பற்றியும் யார் எப்போது பேசப் போகிறார்கள்? உருவாக்குவதற்காக அழைப்பு எங்கே? தைரியம் நிறைந்த பாடங்கள் எங்கே இருக்கின்றன? ஆன்மாவை மேம்படுத்திக் கொண்டு செல்லும் நம்பிக்கை தரும் வார்த்தைகள் எங்கே?
நீங்கள் திரும்பத் திரும்ப உருவாக்கிக் கொண்டிருக்கும் விஷயங்களைவிட வாழ்க்கை வேறு எதையும் தரவில்லை என்று நீங்கள் கூறிவிடலாம். ஆனால், அப்படிச் சொல்லாதீர்கள். அது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். வார்த்தைகள் என்ற கொடுப்பினையைக் கையில் வைத்துக்கொண்டு, தன்னைத்தானே சக்தி அற்றவன் என்று வாழ்க்கையைப் பார்த்துக் கூறுவதும், அதற்குமேல் எழ முடியாமல் இருப்பதும், மனிதனுக்கு அவமானம் தரக்கூடிய செயல் என்பதுதான் உண்மை. வாழ்க்கையில் நீங்கள் அதே இடத்திலேயே நின்று கொண்டு, இப்போது வாழ்க்கையிடம் இல்லாதவற்றை உங்களின் சிந்தனையின் செயல்பாட்டால் படைக்க முடியாமல் இருந்தால் உங்களின் வேலையால் என்ன பயன்? உங்களின் அழைப்பிற்கு நீங்கள் என்ன நியாயம் கூறுவீர்கள்? சம்பவங்களே நடைபெறாத வாழ்க்கையின் குப்பைத்தனமான படங்களைத் தந்து, அவர்களின் மனங்களைத் குழப்பத்திற்குள்ளாக்கி, எவ்வளவு பெரிய கெடுதலை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். விஷயங்களைச் சித்தரிக்கும் ஆற்றல் உங்க¬ளுக்கு இல்லை என்பதை நீங்கள் கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய உங்களின் சித்தரிப்பு ஒரு வெட்கப்படத்தக்க சூழ்நிலையை உங்களிடம் உண்டாக்கும் . இருத்தலின் மற்ற வடிவங்களைப் படைக்க வேண்டும் என்ற வேட்கையை அது உண்டாக்கும். வாழ்க்கையின் நாடித்துடிப்பை உங்களால் வேகப்படுத்த முடியுமா? மற்றவர்கள் பண்ணியதைப்போல சக்தியால் அதை உங்களால் நிறைக்க முடியுமா?’’