வாசகன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7189
எனக்குள் மென்மையான உணர்வுகளும் ஆசைகளும் இருப்பதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். நல்லவை என்று சொல்லப்படும் விஷயங்கள் எனக்குள் நிறையவே இருபபதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இவற்றையெல்லாம் இணைக்கக்கூடிய, வாழ்க்கையின் சகல அம்சங்களையும் உள்ளடக்கிய, தெளிவான, முழுமையான சிந்தனை எது என்பதைத்தான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் ஆன்மாவில் வெறுப்பு நிறையவே இருந்திருக்கின்றன. அது தொடர்ந்து அங்கு இருந்து கொண்டு செயல்பட்டிருக்கிறது. சில வேளைகளில் அது வெடித்து கோப நெருப்பாக வெளியே கிளம்பி வரவும் செய்திருக்கிறது. அதே நேரத்தில் என் மனதில் நிறைய சந்தேகங்களும் இருந்திருக்கின்றன. பல வேளைகளில் அவை என் மனதிற்குச் சுமையாகக்கூட இருந்திருக்கின்றன. நான் உள் மனதில் மிகவும் களைத்துப் போய் அல்லல்பட்டிருக்கிறேன். என்னை மீண்டும் வாழ்க்கைக்குள் கொண்டுவர எதனாலும் முடியாது. என் இதயம் இறந்த மனிதனின் இதயத்தைப்போல குளிர்ந்து போய்க் காணப்பட்டது. என் மனம் தூங்கியது. என் சிந்தனை கனவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் குருடனாக, செவிடனாக, ஊமையாக, இரவும் பகலும் எத்தனையோ நாட்களாக எந்தவித முடிவும் இல்லாமல், எதற்காகவும் ஆசைப்படாமல், எதையும் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன். அப்படிப்பட்ட நேரங்களில், சில தெரியாத காரணங்களால் புதைக்கப்படாமல் போன பிணத்தைப் போல நான் உணர்ந்திருக்கிறேன். அப்படி இருப்பதில் இருக்கும் கொடுமை வாழவேண்டிய தேவையைப் புரிந்து கொள்ளும்போது மேலும் அதிகமாகும். அப்படி இருப்பதில் அர்த்தம் குறைவு என்பதைப் போலவும் அதிக குழப்பமானதாகவும்கூட இருக்கும். சொல்லப் போனால் வெறுப்பில் இருக்கும் சந்தோஷத்தைக்கூட அது எடுத்து விடும்.
சரி... என்னுடைய செய்தி என்ன? நான் எதைக் கற்றுத்தர முயற்சித்தேன்? நான் முன்பு எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். மக்களுக்கு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது நீண்ட காலமாக மக்களுக்கு எவையெல்லாம் கூறப்பட்டு வருகின்றனவோ, அவையேதான் எப்போதும் அவர்களுக்குச் சொல்லப்படுகின்றனவா? மக்கள் கவனிக்க வேண்டும் என்று கூறப்படும் விஷயங்கள் அவர்களை மேலும் சிறந்தவர்களாக ஆக்கவில்லையா? இந்தக் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் அவர்கள்மீது, பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாகக் கொண்டு போய் திணித்துக் கற்றுத் தருவதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு, என்னுடைய முழுமையான புரிதலுடன் நான் அந்தக் காரியத்தைச் செய்கிறேனா? எனக்கு அருகில் அமர்ந்திருக்கும் இந்த மனிதனிடம் நான் என்ன கூறுவது? ஆனால் அவனோ என் பதிலுக்காகக் காத்திருந்து களைத்துப்போய் மீண்டும் பேசத் தொடங்கிவிட்டான்.
‘‘ஆசை உங்களுடைய புகழை இன்னும் அழிக்காமல் இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில், நான் இந்தக் கேள்விகளையே உங்களிடம் கேட்டிருக்கக் கூடாது. நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்கள்மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு அறிவுப் பூர்வமானதாக இருக்கிறது என்ற முடிவுக்குக் என்னால் வர முடிகிறது. ஏனென்றால், அதைத் துறப்பதால் உண்டாகும் தொல்லையால் கூட நீங்கள் மூழ்கிப் போய்விடக் கூடாது. அந்த விஷயத்திற்காக என்னுடன் நீங்கள் கொண்டிருக்கும் முரண்பாட்டால் உண்டான கோபத்திலிருந்து உங்களை விடுதலை செய்கிறேன். ஒரு சிறிய தவறு செய்த மனிதனிடம் - ஆனால் ஒரு பெரிய குற்றவாளியிடம் அல்ல... என்ற வகையில்... உங்களுடன் நான் பேசுகிறேன்.
ஒரு காலத்தில் நம் மத்தியில் மிகப்பெரிய எழுத்தாளர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையையும் மனித மனங்களையும் மிகவும் கூர்ந்து கவனித்தவர்கள். அவர்களுடைய எழுத்துக்களின் மூலம், மனிதர்கள் முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று உத்வேகம் பெற்றார்கள். மனிதனிடம் ஆழமான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை அந்த எழுத்துக்களின் மூலம் கற்றார்கள். அவர்கள் எந்தச் சமயத்திலும் அழிந்து போகக்கூடிய நூல்களை எழுதவில்லை. ஏனென்றால் அவற்றில் அழிவற்ற உண்மைகள் இருந்தன. அவர்களின் பக்கங்களில் அழகு நிரந்தரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்களின் கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் உலாவினர். உத்வேகம் பெற்று உயிரோட்டத்துடன் இருந்தனர். அந்தப் புத்தகங்களில் வீரமும் இருந்தது. அனல் தெறிக்கும் சினமும் இருந்தது. உண்மையான; வற்புறுத்தல் இல்லாத காதலைப் படைத்தனர். அவற்றில் மிகையான ஒரு வார்த்தைகூட இருக்காது. அந்தப் புத்தகங்கள்தான் உங்களுடைய மனதை வளர்த்தன என்ற விஷயம் எனக்குத் தெரியும். எனினும் நான் கூறுகிறேன் - உங்களுடைய மனம் மிகவும் மோசமாகவே அறிவூட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் உண்மையைப் பற்றியும், காதலைப் பற்றியும் எழுதுவது பொய்யானதாகவும் போலித்தனமானதாகவும் இருக்கிறது. அதைக் கூற வேண்டும் என்று உங்களை நீங்களே வலிய வற்புறுத்துவதைப் போல இருக்கிறது. நீங்கள் நிலவைப் போன்றவர். நீங்கள் பிரதிபலிக்கும் வெளிச்சத்தை வைத்து ஒளிவீசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் வெளிச்சம் பரிதாபப்படும் அளவிற்கு மிகவும் பலவீனமான இருக்கிறது. அது நிழல்கள் மீது விழுகிறது. அதன் பலவீனமான ஒளிக்கீற்று யாரையும் சூடு படுத்துவதில்லை. மக்களுக்கு உண்மையாகவே பயனுள்ள ஏதாவது விஷயத்தைத் தரும் விஷயத்தில் நீங்கள் மிக மோசமாக இருக்கிறீர்கள். அப்படி நீங்கள் தரும் விஷயம் வாழ்க்கையை அதன் சிந்தனை அழகுடனும் வார்த்தைகளுடனும் உன்னத நிலைக்கு மேம்படுத்துவதற்குப் பதிலாக, மனிதனுக்கு நீங்கள் தேவை என்ற அளவில் உங்களின் இருத்தல் விஷயத்தை அதன் மூலம் உயர்த்திக் கொள்கிறீர்கள். வாழ்க்கையிலிருந்தும் மக்களிடமிருந்தும் அதிகமாக எடுப்பதற்காக நீங்கள் தருகிறீர்கள். அன்பளிப்புகள் தருவதென்றால், அந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறீர்கள். சொல்லப் போனால் நீங்கள் கடனுக்குப் பணம் தரும் மனிதராகவே இருக்கிறீர்கள். உங்களுக்கு கட்டப்படும் வட்டிக்காக நீங்கள் உங்களின் அனுபவத்தில் ஒரு பகுதியை வழங்குகிறீர்கள். உங்களின் பேனா வெறுமனே உண்மையைப் பற்றி கிறுக்கல்கள் போடுகிறது. வாழ்க்கையின் மிக சாதாரண விஷயங்களை மிகவும் கவனமாகக் கிளறிப் பார்க்கிறது. சாதாரண மக்களின் சாதாரண இடத்து உணர்வுகளை விளக்கும்போது, ஒருவேளை நீங்கள் பல தாழ்ந்த நிலை உண்மைகளை வெளியிடலாம். ஆனால் அவர்களுக்காக ஆன்மாவை உயர்த்தும் வண்ணம் எதையாவது உங்களால் படைக்க முடியுமா? முடியாது ! சாதாரண இடத்தில் இருக்கும் குப்பைகளைத் தோண்டுவதில் பயன் இருக்கிறது என்பதில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். அதில் கவலையைத் தரும் சிறிய உண்மைகளைத் தவிர, அதற்குமேல் வேறு எதுவும் இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்.