வாசகன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7189
‘‘நீங்க சொல்வது சரிதான்... ஆனால் இது எல்லாமே மிகவும் வினோதமாக இருக்கிறதே !’’ நான் சொன்னேன்.
அவன் என்னுடைய கோட் காலரை என்ன காரணத்தாலோ தொட்டான். அதை மெதுவாகத் தடவியவாறு சொன்னான் : ‘‘ஆமாம்... இது வினோதமாகத்தான் இருக்கும். சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய அனுபவங்களைத் தாண்டி ஒரு மனிதன் ஏன் பயணிக்கக் கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நாம் மனம் விட்டுப் பேசுவோம். நான் ஒரு வாசகன் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வித்தியாசமான வாசகன். அதாவது - எதையும் ஏன் -?’’ என்று கேட்க விரும்பக்கூடிய, புத்தகங்கள் எப்படி எழுதப்படுகின்றன? - உதாரணத்திற்கு உங்களுடைய புத்தகங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படக்கூடிய ஒரு வாசகன்... நாம அதை விவாதிப்போம்.’’
‘‘ஓ... தாராளமாக...’’- நான் சொன்னேன்: ‘‘நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அப்படிப்பட்ட சந்திப்புகளும் உரையாடல்களும் எல்லா நாட்களிலும் இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லையே!’’- ஆனால் நான் பொய் சொன்னேன். உண்மையாகச் சொல்லப் போனால் அந்த முழு சம்பவமும் எனக்குப் பிடிக்கவில்லை. அந்த மனிதன் என்ன விரும்புகிறான்? எனக்கு யாரென்றே தெரியாத ஒரு மனிதனை, கிட்டத்தட்ட ஒரு போட்டி என்று நினைக்கிற அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு விஷயத்திற்கு இந்த சாதாரண சந்திப்பை எப்படி நான் அனுமதித்தேன்?
அவனுக்கு அருகில் நான் மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். மிகவும் அமைதியாகவும் கவனமாகவும் இருப்பதைப்போல் நான் காட்டிக் கொண்டேன். நான் அந்த விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது, எனக்கு அது சற்று சிரமமான விஷயமாகத்தான் இருந்தது. எனினும் நான் மனதில் மிகவும் உற்சாகமாக இருந்ததால், அவனுடன் பேச மாட்டேன் என்று கூறி அவன் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. அதனால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன்.
நிலவு எங்களுக்குப் பின்னால் இருந்தது. எங்களுடைய நிழல்கள் எங்கள் பாதையில் தெரிந்தன. அவை ஒரே கறுப்பு உருவமாக இணைந்து எங்களுக்க முன்னால் பனியில் நகர்ந்து போய்க் கொண்டிகரந்தன. நான் அவற்றைப் பார்க்கும்போது, எனக்குள் என்னவோ வளர்வதைப் போல உணர்ந்தேன். அந்த நிழல்களைப் போலவே இனம்புரியாத வகையில் எனக்கு முன்னால் ஏதோ கறுப்பாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது.
என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த மனிதன் ஒரு நிமிடத்திற்கு அமைதியாக இருந்தான். பிறகு, தன்னுடைய சிந்தனைகளின் எஜமானாக இருக்கும் ஒரு மனிதனின் தன்னம்பிக்கை நிறைந்த குரலில் அவன் பேசினான்:
‘‘மனிதர்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தைவிட முக்கியமானதும், வியப்படையச் செய்வதும் வேறொன்றும் இல்லை. சரிதானா?’’
நான் தலையை ஆட்டினேன்.
‘‘நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள். அப்படியென்றால் நாம் விஷயங்களை வெளிப்படையாகவே பேசுவோம். நீங்கள் இப்போதும் இளமையாக இருக்கும் காலகட்டத்தில், வெளிப்படையாகவே பேசுவோம். நீங்கள் இப்போதும் இளமையாக இருக்கும் காலகட்டத்தில், வெளிப்படையாக விவாதம் செய்வதற்கான வாய்ப்பை எந்தச் சமயத்திலும் இழந்து விடாதீர்கள்!’’
‘என்ன வினோதமான மனிதனாக இருக்கிறான்!’- நான் நினைத்தேன். திடீரென்று உண்டான ஆர்வத்தில் நான் மெதுவாகச் சிரித்துக்கொண்டே கேட்டேன்: ‘‘நாம் எதைப்பற்றி விவாதிக்கப் போகிறோம்?’’
ஒரு நிமிட நேரத்திற்கு அவன் என்னையே வெறித்துப் பார்த்தான். பிறகு ஏதோ அதிக நாட்கள் மிகவும் நெருக்கமாகப் பழகிய நண்பர்களிடம் பேசுவதைப்போல, சர்வசாதாரணமான குரலில் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு சொன்னான்:
‘‘இலக்கியத்தின் நோக்கங்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசுவோம்!’’
‘‘சரி... ஆனால், இப்போதே நேரம் அதிகமாக ஆகிவிட்டதே!’’
‘‘நேரம் அதிகமா? இல்லை. உங்களுக்கு அப்படியொன்றும் அதிக நேரம் ஆகிவிடவில்லையே!’’
அந்த வார்த்தைகள் என்னை அதிர்ச்சியடையச் செய்தன. அவன் அந்த வார்த்தைகளை மிகவுவு அழுத்தமாக உச்சரித்தான். அவை மிகவும் பலமாக என் காதில் விழுந்தன. அவனிடம் சிலவற்றைக் கேட்க வேண்டும் என்பதற்காக நான் நின்றேன். ஆனால் அவன் என்னுடைய கையைப் பற்றி மெதுவாக இழுத்து, நடக்கும்படிச் செய்தான்.
‘‘நிற்காதீர்கள். என்னுடன் நீங்கள் நல்ல ஒரு சாலையில் இருக்கிறீர்கள்.... நாம் ஒருவரோடொருவர் தேவையான அளவிற்கு அறிமுகமாகி விட்டோம். என்னிடம் சொல்லுங்கள்- இலக்கியம் விரும்புவது என்ன? நீங்கள் இலக்கியம் படைத்திருக்கிறீர்கள். நீங்கள் அதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.’’
என்னுடைய கட்டுப்பாட்டை மீறி என்னுடைய வியப்பு வளர்ந்து கொண்டிருந்தது. இந்த மனிதன் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான்? இவன் யார்?
‘‘இங்கே பாருங்க’’- நான் சொன்னேன்: ‘‘நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் - இவை எல்லாம்...’’
‘‘இவை எல்லாம் ஒரு நல்ல முடிவுக்காகத்தான் நடக்கின்றன. என்னை நம்புங்கள்! நல்ல ஒரு விஷயத்திற்காக அல்லாமல் உலகத்தில் எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை. அதனால் நாம் கெகஞ்சம் வேகமாக முன்னோக்கி அல்ல- ஆனால், ஆழமாகப் போவோம்.’’
அவன் சொன்ன விஷயம் ஆர்வ்த்தைத் தூண்டக்கூடிய ஒன்றாகத்தான் இருந்தது. எனினும் அது என்னை என்னவோ செய்தது. நான் பொறுமை இல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். அவன் மெதுவாகப் பேசிக்கொண்டே என்னைப் பின் தொடர்ந்தான்.
‘‘என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் இலக்கியம் என்ன நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதற்கு விளக்கம் கூறுவதற்கு நீங்கள் சிரமப்படுகிறீர்கள். நானே அதற்கு விளக்கம் கூற முயற்ச்சிக்கிறேன்.’’
அவன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். பிறகு என்னுடைய முகத்தைப் புன்னகைத்தாவாறு பார்த்தான்.
‘‘மனிதன் தன்னைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவனுக்கு உதவுவதே இலக்கியத்தின் நோக்கம் என்று நான் சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். தன்மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையை மேம்படுத்துவதும், உண்மையைத் தேடுவதில் அவனுக்கு இருக்கும் ஆர்வத்தை வளர்த்து எடுப்பதும், மக்களிடம் இருக்கும் கீழ்த்தரமான, தரம் தாழ்ந்த விஷயங்களுக்கு எதிராகப் போராடச் செய்வதும், நல்ல விஷயங்களைக் கொண்டு வருவதும், மனித இதயங்களில் வெட்க உணர்வு, கோபம், தைரியம் ஆகியவற்றை உண்டாக்கச் செய்வதும், மனிதர்களை பலம் கொண்டவர்களாக ஆக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்வதும், புனிதமான அழகுணர்ச்சியுடன் அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு உதவி புரிவதும்... இதுதான் என்னுடைய கருத்து. சொல்லப்போனால் இது ஒரு மேலோட்டமான சுருக்கம். வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய எல்லா விஷயங்களையும் இதில் நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். சொல்லுங்க- இந்த விளக்கத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?’’
‘‘ஆமாம்... நீங்கள் சொல்வது சரிதான்’’- நான் சொன்னேன்: எப்படிப் பார்த்தாலும் அதுதான் உண்மை. இலக்கியத்தின் நோக்கம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவது என்பது எல்லாரும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதானே!’’