வாசகன்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7188
அந்த வீட்டை விட்டு நான் வெளியே வந்தபோது இரவாகிவிட்டது. சமீபத்தில் அங்கு கூடியிருந்த நெருங்கிய நண்பர்களுக்கு பிரகாசமான என்னுடைய கதையை நான் படித்துக் காட்டினேன். அவர்கள் என்னை அளவுக்கும் அதிகமாகப் புகழ்ந்து தள்ளினார்கள். ஆள் அரவமற்ற தெருவில் நடக்கும்போது, என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை என்பதை உணர்ந்தேன்.
பிப்ரவரி மாதத்தின் இரவு நேரம் மிகவும் தெளிவாகவும் மேகங்கள் இல்லாமலும் இருந்தது. நட்சத்திரங்கள் ஒளிவீசிக் கொண்டிருந்த வானம் பூமியின்மீது மெல்லிய குளிரையும், புதிதாக விழுந்து கொண்டிருந்த பனியையும் பரப்பிக் கொண்டிருந்தது. வேலிகள்மீது தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளைகள் என் பாதையில் ஆங்காங்கே விட்டு விட்டு நிழல் உண்டாக்கி விட்டிருந்தன. நீலநிற நிலவு வெளிச்சத்தில் பனித்துளிகள் சந்தோஷத்துடன் சிதறி விழுந்து கொண்டிருந்தன. ஓரு உயிர்கூட கண்களில் படவில்லை. கால்களில் படும்போது பனி உண்டாக்கிய ஓசை மட்டுமே, அந்த மனதில் தங்கிய இரவுப் பொழுதின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது.
ஆமாம்... இந்த உலகில் குறிப்பிடத்தக்க ஓருவனாக இருக்க வேண்டும். சுற்றியிருக்கும் மனிதர்கள் மத்தியில் தனி ஒருவனாகத் தெரிய வேண்டும் - நான் நினைத்தேன்.
என் கற்பனை என் எதிர்காலத்தை ஓவியமாகத் தீட்டியபோது ஒரு பிரகாசமான வண்ணத்தையும் விடவில்லை.
‘‘ஆமாம்... உங்க அந்தச் சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. அதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்’’- எனக்குப் பின்னால் ஒரு சிந்தனையைத் தூண்டும் குரல் கேட்டது.
நான் நடந்துகொண்டே சுற்றிலும் பார்த்தேன்.
கருப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்த ஒரு சிறிய மனிதன் என்னைத் தாண்டிச் சென்று, என்னுடைய பாதையில் நின்று கொண்டு என் முகத்தை தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டே கூர்மையான ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினான். அவனுடைய எல்லா விஷயங்களுமே மிகவும் கூர்மையாகவே இருந்தன. அவனுடைய பார்வை, அவனுடைய கன்ன எலும்புகள், அவனுடைய அளவெடுத்தாற் போன்ற தாடை... அவனுடைய முழு உருவமும் சீரான முறையின் கண்களை உறுத்துகிற அளவிற்குப் படைக்கப்பட்டிருந்தது. அவன் மெதுவாகவும், ஓசை உண்டாக்காமலும், பனியில் வழுக்குவதைப்போல நடந்தான். கதையைப் படித்த அறையில் அவனை நான் பார்க்கவில்லை. அவனுடைய குறிப்பைக் கேட்டு உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டு நின்று விட்டேன். அவன் யாராக இருக்கும்? எங்கிருந்து அவன் வந்தான்?
‘‘யார் நீங்க? நீங்க அங்கே இருந்தீங்களா?’’- நான் கேட்டேன்.
‘‘ஆமாம்... அந்த சந்தோஷத்தை நானும் அனுபவித்தேன்.
அவன் கம்பீரமான குரலில் பேசினான். அவனுடைய உதடுகள் மிகவும் மென்மையாக இருந்தன. அவனுடைய சிறிய மீசை அந்த உதடுகளில் மலர்ந்த சிரிப்பைச் சிறிதும் தடுக்கவில்லை. தொடர்ந்து இருந்துகொண்டிருந்த அந்தச் சிரிப்பு விரும்பத்தகாத ஒரு கருத்தை அவன்மீது உண்டாக்கியது. நான் விரும்பாத வகையில் ஏதாவது கடுமையான கருத்தை அவன் தனக்குள் வைத்திருப்பானோ என்ற எண்ணத்தை அது உண்டாக்கியது. அதற்காக அந்தப் புதிய மனிதனின் நடவடிக்கைகளை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு நான் ஒரு மனநிலையில் இல்லை. எனக்கு நானே சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்ததில் அவன்மீது நான் கொண்ட எண்ணம் ஒரு நிழலைப்போல கரைந்து போனது. அவனுடன் சேர்ந்து நான் நடந்தேன். அவன் என்ன கூறுவான் என்று ஆச்சரியத்துடன் பார்த்தேன். அன்று மாலையில் நான் அனுவித்த இனிய நிமிடங்களுடன் அவனும் ஏதாவது சேர்ப்பான் என்று மனதிற்குள் ரகசியமாக எதிர்பார்த்தேன். மனிதன் பேராசை பிடித்தவன். ஏனென்றால் அதிர்ஷ்டம் அவனைப் பார்த்து எப்போதும் அன்புடன் புன்னகைத்துக் கொண்டே இருக்கிறது.
‘‘மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து நாம் தனித்து இருக்கிறோம் என்று உணர்வதே ஒரு நல்ல விஷயம்தான் இல்லையா?’’ - அந்த மனிதன் கேட்டான்.
அவனுடைய அந்தக் கருத்து மீது மாறுபட்ட கருத்து எதுவும் எனக்கு இருப்பது மாதிரி தெரியாததால் அவன் சொன்னதை உடனடியாக நான் ஒப்புக் கொண்டேன்.
அதைக்கேட்டு அவன் உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான். தன்னுடைய சிறிய கைகளை மெல்லிய விரல்களுடன் உணர்ச்சியால் உந்தப்பட்ட மாதிரி பிசைந்தான்.
‘‘நீங்க ஒரு மகிழ்ச்சி நிறைந்த மனிதர் !’’ நான் அவனுடைய சிரிப்பால் பாதிக்கப்ட்டுக் கூறினேன்.
‘‘ஆமாம்... நான் சந்தோஷம் நிறைந்த மனிதன்தான்.’’ - அவன் ஒப்புக் கொண்டான். அப்போது புன்னகைத்துக் கொண்டே தன் தலையை ஒரு பக்கமாக அவன் சாய்த்தான். ‘‘அதே நேரத்தில் நான் கேள்விகள் கேட்பவனும் கூட நான் விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எப்போதும் விருப்பம் உள்ளவன். எல்லா விஷயங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தொடர்ந்து இருக்கும் ஒரு உள் அரிப்பு அது. அதுதான் என்னை விடாமல் இயக்கி நடைபோடச் செய்து கொண்டிருக்கிறது. நான் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த உங்களின் வெற்றியை அடைவதற்கு நீங்கள் செலவு செய்தது என்ன?’’
நான் அவனையே பார்த்தேன். தயங்கிக் கொண்டே பதிலைச் சொன்னேன் :
‘‘ஒரு மாத வேலை.... கூட கொஞ்சம் நாட்கள் ஆகியிருக்கலாம்.’’
‘‘அப்படியா?’’ - அவன் ஆச்சரியத்துடன் பதில் சொன்னான் : ‘‘சிறிது உழைப்பு, அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய அனுபவம்... அவற்றுக்கு எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களுடைய கருத்துப்படி ஆயிரக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது = உங்களுடைய புரிதலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விலை அப்படியொன்றும் பெரிது என்று கூறுவதற்கில்லை. அதைத் தொடர்ந்து எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகும். அதாவது - காலம் செல்லச் செல்ல... ஹா... ஹா...! நீங்கள மரணத்தைத் தழுவும்போது, ஹா... ஹா... ஹா...! எல்லாவற்றிற்கும் ஏற்கெனவே எங்களுக்குக் கொடுத்திருப்பவற்றைவிட இன்னும் கொஞ்சம் தரவேண்டும் என்று மனதில் நினைப்பீர்கள். இல்லையா?’’
அவன் மீண்டும் தன்னுடைய வழக்கமான உரத்த சிரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வெளியிட்டான். தன்னுடைய கூர்மையான கறுத்த கண்களால் என்னை மெதுவாக அளவெடுத்துப் பார்த்தான். நானும் அவனை ஆராய்ச்சி செய்தேன். அவனைத் தலையிலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு மெதுவான குரலில் கேட்டான் :
‘‘மன்னிக்கணும். நான் இப்போது யாருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்?’’
‘‘நான் யார்? என்னை உங்களால் யூகிக்க முடியவில்லையா? சரிதான்... தற்போதைக்கு நான் யார் என்பதைக் கூற மாட்டேன். ஒரு மனிதன் என்ன உங்களிடம் சொல்லப் போகிறான் என்பதை விட அவனுடைய பெயர் என்ன என்பது அப்படியொன்றும் உங்களுக்கு முக்கியமான விஷயம் இல்லையே?’’