வாசகன் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7189
இந்த வார்த்தைகளைக் கூறிவிட்டு, அவன் நீண்ட நேர அமைதியில் ஆழ்ந்துவிட்டான். நான் அவனைப் பார்க்கவில்லை. வெட்கம், கோபம்- இவற்றில் எதை அதிகமாக உணர்ந்தேன் என்பதை என்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை.
‘‘என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’- முக்கியமான கேள்வி வெளியே வந்தது.
‘‘எதுவும் இல்லை’’- நான் சொன்னேன்.
மீண்டும் அமைதி.
‘‘பிறகு இப்போது எப்படி வாழ்வீர்கள்?’’
‘‘எனக்குத் தெரியாது’’- நான் சொன்னேன்.
‘‘நீங்கள் என்ன சொல்வீர்கள்?’’
நான் என் அமைதியைக் கடைப்பிடித்தேன்.
‘‘அமைதியாக இருப்பதைவிட உயர்ந்த உலக அனுபவம் கிடையாது.’’
இந்த வார்த்தைகளுக்கும் அதைத் தொடர்ந்து வந்த சிரிப்புக்கும் இடையில் இருந்த இடைவெளி என்னை வெறுப்படையச் செய்தது. நீண்டநேரம் மென்மையான இதயத்துடனும் சந்தோஷத்துடனும் சிரிக்க வாய்ப்பு கிடைக்காத ஒரு மனிதனைப் போல அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரித்தான். ஆனால் அந்த உரத்த சிரிப்பு என் இதயத்தில் ரத்தம் வடியச் செய்தது.
‘‘ஹா... ஹா... ஹா... நீங்கள் வாழ்க்கையின் ஆசிரியர்களில் ஒருவரா? இப்படிப்பட்ட குழப்ப நிலைக்கு மிகவும் சர்வ சாதாரணமாக இறங்கி வந்துவிட்டீர்களே! ஹா... ஹா... ஹா... என்னுடன் ஏதாவது செய்ய நேர்ந்தால், பிறக்கும்போதே வயதானவர்களாகப் பிறந்த உங்களைப் போன்ற ஒவ்வொரு இளைஞனும் இதே மாதிரி குழப்பமடையத்தான் செய்வார்கள். பொய்களின் கவசத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டிருப்பவன் அரக்கத்தனம், வெட்கமற்றதன்மை ஆகியவை கொண்டவன்- இவர்கள் மட்டுமே தன்னுடைய மனசாட்சியின் தீர்ப்புக்கு முன்னால் சிறிதும் அசையாமல் இருப்பார்கள். நீங்கள் எந்த அளவிற்கு பலசாலி! ஒரு சிறிய தள்ளலிலேயே நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்! ஏதாவது சொல்லுங்கள். உங்களை நியாயப்படுத்த என்னிடம் ஏதாவது சொல்லுங்கள். நான் சொன்னதை மறுத்துப் பேசுங்கள். வெட்கம், வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கும் உங்களின் இதயத்தை அவற்றிலிருந்து விடுதலை செய்யுங்கள். சிறிது பலமும் நம்பிக்கையும் உங்களிடம் இருப்பதைக் காட்டுங்கள். ஒரு நிமிடத்தில் உங்களின் முகத்தில் நான் எறிந்த வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக் கொள்ளப்போகிறேன். நான் உங்களுக்கு முன்னால் வளைந்து நிற்கிறேன்... நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதைக் காட்ட உதவும் ஏதாவது உங்களின் இதயத்தில் இருந்தால், அதை எனக்குக் காட்டுங்கள். எனக்கு ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார். ஏனென்றால், நான் ஒரு மனிதப் பிறவி. வாழ்க்கையின் இருட்டுக்குள் நான் என்னுடைய பாதையைத் தவறவிட்டுவிட்டேன். வெளிச்சத்தை நோக்கி, உண்மையை நோக்கி, அழகை நோக்கி, புதிய வாழ்க்கையை நோக்கிப் போகக்கூடிய ஒரு பாதையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாதையை எனக்குக் காட்டுங்கள். நான் ஒரு மனிதப் பிறவி. என்னை வெறுங்கள், என்னை அடியுங்கள். ஆனால் வாழ்க்கையின் இன்னொரு பக்கச் சேற்றிலிருந்து என்னைப் பிடித்து வெளியே கொண்டு வாருங்கள்! இப்போது இருப்பதைவிட நான் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன். அதை எப்படிச் செய்வது? எப்படி என்று எனக்குக் கற்றுத் தாருங்கள்.’’
நான் நினைத்தேன்- இந்த மனிதன் மிகச் சரியாக என்னிடம் வெளியிட்டிருக்கும் கோரிக்கைகளை என்னால் திருப்திப்படுத்த முடியுமா? வாழ்க்கை போராட்டமயமாகிக் கொண்டிருக்கிறது. மக்களின் மனங்கள் நாளுக்கு நாள் அதிகமாகும் ஏராளமான சந்தேகங்களால் நிறைந்து விட்டிருக்கிறது. நிச்சயம் ஒரு வழி கண்டுப்பிடிக்கப்பட வேண்டும். அது எங்கே இருக்கிறது? ஒரு விஷயம் எனக்குத் தெரிகிறது- ஒருவன் கடுமையாக முயற்சி செய்வது சந்தோஷம் தரக்கூடிய ஒன்று அல்ல. சந்தோஷத்திற்காக ஏன் கடுமையான முயற்சி செய்ய வேண்டும்? வாழ்க்கையின் அர்த்தம் அங்கு இல்லை. மனிதன் தன் முயற்சியால் மட்டும் திருப்தியடைந்து விடமாட்டான். அவன் அதற்கெல்லாம் மேலானவன். வாழ்க்கைக்கான அர்த்தம் வெற்றியின் பலத்திலும் அழகிலும் இருக்கிறது. நம் இருத்தலின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கான இறுதி முடிவைக் கொண்டிருக்கிறது. ஆனால் அது முடியும் வாழ்க்கையின் பழைய எல்லைக் கோடுகளுக்குள் அல்ல. அவை ஒவ்வொருவருக்கும் மிகவும் குறுகலானவையாக இருக்கும். அதற்குள் மனித உற்சாகத்திற்குத் தேவைப்படும் சுதந்திரத்திற்கான இடமே இல்லை.
அவன் மீண்டும் சிரித்தான். ஆனால் இப்போது சிரிப்பு மிகவும் மென்மையாக இருந்தது. சிந்தனைகளால் வேட்டையாடப்பட்ட இதயத்தைக் கொண்ட ஒரு மனிதனின் சிரிப்பாக அது இருந்தது.
‘‘எவ்வளவு மனிதர்கள் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்! அவர்களில் சிலர் மட்டும், அவர்களை ஞாபகப்படுத்தும் வகையில் எதையெதையோ விட்டுச் சென்றிருக்கிறார்களே! அது ஏன்? நாம் கடந்த காலத்தைப் பார்ப்போம். அதைப் பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கிறது. நிகழ்காலத்தில் தன்னுடைய மரணத்திற்குப் பிறகு பூமியில் எந்த அடையாளத்தையாவது விட்டுச் செல்லும் ஒரு மனிதன்கூட இல்லை. மனிதன் தூக்கத்தில் காணாமல் போய்விட்டான். அவனை எழுப்புவதற்கு யாரும் அவனைத் தேடவில்லை. அவன் தூங்கி, மிருகமாக மாறிவிட்டான். அவனுக்குத் தேவை சாட்டை அடி. அந்த அடி விழுந்த பிறகுதான் அவனுக்கு அன்பைப் பற்றிய ஞாபகமே வரும். அவனைத் துன்பப்படுத்துவதற்காக பயப்பட வேண்டாம். அன்புடன் நீங்கள் அடித்தால், அவன் உங்களின் அடியைப் புரிந்து கொண்டு, தனக்கு அது தேவைதான் என்று அவன் நினைப்பான். விரக்தி அடைந்து அவன் தவிக்கும்போது, தனக்குத்தானே வெட்கப்படும்போது, நீங்கள் தொடர்ந்து அவன்மீது அடியுங்கள். அப்போது அவன் மறுபிறவி எடுப்பான்... மக்கள்? சில நேங்களில் தங்களுடைய தந்திரத்தனமான செயல்களாலும், சிந்தனைகளின் வக்கிரத்தாலும் நம்மை ஆச்சரியப்பட வைத்தாலும், அவர்கள் இப்போதும் குழந்தைகள்தான். அவர்களுக்கு எப்போதும் அன்பு தேவைப்படுகிறது. அவர்களின் ஆன்மாவிற்கு புதிய முழுமையான உணவை அளிக்கும் தொடர் முயற்சிகள் தேவைப்படுகிறது. உங்களால் மக்கள் மீது அன்பு செலுத்த முடியுமா?’’
‘‘மக்கள்மீது அன்பு செலுத்துவதா?’’- நான் மீண்டும் சந்தேகத்துடன் கேட்டேன். உண்மையாகவே நான் மக்கள்மீது அன்பு வைத்திருந்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நான் உண்மையானவனாக இருக்க வேண்டும். இல்லை. எனக்குத் தெரியாது. தன்னைப் பற்றித் தானே யார் கூற முடியும்? நான் மக்கள்மீது அன்பு வைத்திருக்கிறேன். தன்னைக் கூர்மையாக ஆராய்ச்சி செய்திருக்கும் எந்த மனிதனும் அந்தக் கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதில் கூறுவதற்கு முன்னால் ஆழமாகச் சிந்திப்பான். நம்முடைய சொந்த நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் நாம் எந்த அளவிற்குத் தூரத்தில் விலகிப் போய் இருக்கிறோம் என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.
‘‘நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே? நீங்கள் எதுவும் சொல்லவில்லை என்றாலும், நான் உங்களைப் புரிந்து கொண்டேன்.... இப்போது நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.’’