
‘‘எல்லாருக்கும் தேவைப்படுவதே எளிமைதான்’’- அவன் ஒப்புக்கொண்டான்.
‘‘என்னை ஈர்க்கிற அளவிற்கு உங்களிடம் ஏதோ ஆற்றல் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னிடம் நீங்கள் கூற விருப்பப்படும் சில விஷயங்கள் உங்களிடம் உண்மையாகவே இருக்கின்றன என்று நினைக்கிறேன். சரிதானா?’’
‘‘கடைசியில் நீங்கள் கேட்பதற்கான தைரியத்தைப் பெற்று விட்டீர்கள்’’- அவன் சிரித்துக்கொண்டே வியப்புடன் சொன்னான். ஆனால் இப்போது அவனுடைய சிரிப்பு மிகவும் மென்மையானதாகவும், அதில் சந்தோஷ அலைகள் இருப்பதைப்போலவும் நான் உணர்ந்தேன்.
‘‘சரி... சொல்லுங்கள்...’’- நான் சொன்னேன்: ‘‘எந்த விதமான உங்களின் வேறுபாடுகளும் இல்லாமல்- முடியுமானால்...’’
‘‘நல்லது. ஆனால் இந்த வேறுபாடுகள் உங்களின் கவனத்தை இழுப்பதற்குத் தேவைப்பட்டன என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். எளிமையாகவும் தெளிவாகவும் இருந்த நம்முடைய ஆர்வத்தை நான் வாழ்க்கை தாறுமாறாக ஆக்கிவிட்டது. அது அளவுக்கும் அதிகமான கடுமைத்தன்மையுடனும், அளவுக்கு மேலே குளிர்ச்சியானதாகவும் இருக்கிறது. எதையும் வெப்பப்டுத்தவோ மென்மைப்படுத்தவோ உள்ள ஆற்றலை நாம் இழந்துவிட்டோம். ஏனென்றால், நாமே குளிர்ந்து கடுமையாகவும் இருக்கிறோம். சொல்லப் போனால் நமக்கு மீண்டும் பார்வைகள், கற்பனைகள், கனவுகள், சிந்தனைகள் தேவைப்படுகின்றன. நாம் உருவாக்குகிற வாழ்க்கையில் வண்ணங்கள் இல்லாமல் போய்விட்டன. அது மிகவும் சாதாரணமாகவும் சுவையற்றதாகவும் ஆகிவிட்டது. புதிதாகப் படைக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் நாம் நினைத்த உண்மை, நம்மை நசுக்கி அழித்துவிட்டது. நாம் என்ன செய்ய வேண்டும்? நல்லது... நாம் முயற்சி செய்வோம். சொல்லப்போனால் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் கற்பனையும் குறிப்பிட்ட காலத்திற்கு பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதற்கு உதவி செய்யும். அவன் எதை இழந்தானோ அதை மீண்டும் அவன் அடைவதற்கு அது உதவும். அவன் இழந்ததென்னவோ உண்மைதானே? இனிமேலும் பூமியின் எஜமானன் என்று மனிதன் தன்னைக் கூற முடியாது. அவன் வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டான். அவன் ஒருகாலத்தில் இந்த பூமியில் கம்பீரமாக இருந்த நிலைக்கான உண்மைகளுக்கு முன் முதுகு வளைந்து நின்றுவிட்டான். நான் சொல்வது உண்மைதானே? தானே உண்டாக்கிக் கொண்ட சில விஷயங்களை முன் வைத்து, அவனே ஒரு முடிவையும் எடுத்து அதை மாற்ற முடியாத சட்டம் என்கிறான். அந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்துவிட்டதன் மூலம், தன்னிச்சையான படைப்புத் தன்மை என்ற அம்சத்தை நோக்கிய தன் பாதையையே அடைத்துவிட்டோம் என்பதை அவன் கவனிக்கத் தவறிவிட்டான். படைப்பதற்காக அழியக்கூடிய உரிமைக்கான போராட்டத்தில் அவன் தன்னைத் தானே குறுக்கிக் கொண்டான்.
அவன் இதற்கு மேலும் போராடத் தயாராக இல்லை. அவன் வெறுமனே பின்பற்றுகிறான்... அவன் எதற்காகப் போராடுகிறான்? வீரியத்துடன் போராடுவதற்கு அவன் என்ன நோக்கங்களை வைத்திருக்கிறான்? அதனால்தான் வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவும், சோர்வு நிறைந்ததாகவும் இருக்கிறது. அதனால்தான் மனிதனின் படைப்பு உத்வேகம் தேங்கி நின்றுவிட்டது. மனதிற்குச் சிறகுகள் கிடைக்குமா என்பதற்காகவும், மனிதனின் நம்பிக்கை தன் மீது படவேண்டும் என்பதற்காகவும் சிலர் கண்ணை மூடிக்கொண்டு தேடுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் முடிவற்ற அம்சங்கள் இருக்கக்கூடிய- மனிதத்துவத்தை ஒன்றிணைக்கக்கூடிய- கடவுள் வாழக்கூடிய அந்த இடத்தை அடைவதே இல்லை. உண்மையைத் தேடிச் செல்லும் பயணத்தில் தங்களின் பாதையைக் கோட்டை விட்டவர்கள் அழிந்துவிடுவார்கள் ! அவர்கள் அழியட்டும். நாம் அவர்களைத் தொல்லைப்பபடுத்த வேண்டாம். அவர்கள் மீது பரிதாபப்படவேண்டாம். இந்த உலகில் ஏராளமான பேர் இருக்கிறார்கள் ! அரிப்பு - அது முதலில் தேவை. அதாவது - கடவுளைக் காண வேண்டும் என்ற ஆர்வம். கடவுளைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்ட மனங்கள் வேண்டும். அப்படிப்பட்ட அரிப்பையும் ஆர்வத்தையும் கொண்டவன் அவர்களுடன் இருப்பான். அவர்களுக்கு அவன் வாழக்கையைத் தருவான். ஏனென்றால் அவன்தான் முழுமையை அடைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவன். நான் சொல்வது உண்மைதானே?’’
‘‘ஆமாம்’’ - நான் சொன்னேன் : ‘‘நீங்கள் சொல்வது சரிதான்.’’
‘‘நீங்கள் ஒப்புக் கொள்வது குறித்து சந்தோஷம்’’ - என்னுடன் இருந்த அந்த மனிதன் ஒரு பெரிய சிரிப்புடன் என்னையே கூர்ந்து பார்த்தான். பிறகு, அமைதியாக எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நீண்ட நேரம் அமைதியாக இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. பொறுமை இல்லாமல் நான் தவித்தேன். தூரத்தில் பதித்த கண்களை எடுக்காமல் அதே நேரத்தில் என்னையும் பார்க்காமலே அவன் கேட்டான் : ‘‘உங்களின் கடவுள் யார்?’’
இந்தக் கேள்வியைக் கேட்பது வரையில் அவன் மிகவும் அமைதியாகவும் அன்புடனும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதே ஒரு சுவையான அனுபவமாக இருந்தது. எல்லா சிந்திக்கும் மனிதர்களைப் போல, அவனும் சற்று கவலை கொண்ட மனிதனாக இருந்தான். அந்த குணம்தான் அவனை என்னுடன் மிகவும் நெருக்கமாக்கியது. நான் அவனைப் புரிந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். என்னுடைய வியப்பு என்னை விட்டுப் போக ஆரம்பித்தது. ஆனால் அவன் தனக்குத்தானே உண்மையாக இருக்கும் பட்சம், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த மனிதனும் விடையைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் ஒரு இக்கட்டான கேள்வியை இப்போது அவன் கேட்டுவிட்டான். என் கடவுள் யார்? எனக்கு அது தெரியுமா?
இந்தக் கேள்வியால் நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். யார்தான் தோற்காமல் இருக்க முடியும். என்னுடைய இடத்தில் யார்தான் தன்னுடைய சிந்திக்கும் ஆற்றலை அப்படியே காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்? அவன் தன்னுடைய கூர்மையான கண்களால் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, என்னுடைய பதிலுக்காகக் காத்திருந்தான்.
‘‘பதில் சொல்ல வேண்டிய நீங்கள் நீண்ட நேரம் மவுனமாகவே இருந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கேள்வியை இந்த மாதிரி கேட்டிருந்தால். ஒருவேளை என்னிடம் சில விஷயங்களைக் கூற உங்களால் முடிந்திருக்கும். நீங்கள் ஒரு எழுத்தாளர். ஆயிரக்கணக்கான மக்கள் உங்களைப் படிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தியைப் பதிய வைக்க விரும்புகிறீர்கள்? மற்றவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா என்று எப்போதாவது மனதில் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?’’
என்னுடை மனதின் உள் வேலைகளை இந்த அளவிற்கு அருகில் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு இதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் உண்டானது இல்லை. பிறரை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நான் மிகைப்படுத்துகிறேன் அல்லது என்னை நானே துயரத்திற்கு ஆளாக்கிக் கொள்கிறேன் என்று யாரும் நினைக்கக் கூடாது. ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook