வாசகன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7189
‘‘அப்படியென்றால் நீங்கள் என்ன பெரிய சேவை செய்திருக்கிறீர்கள்?’’- அந்த மனிதன் மெதுவான குரலில் கேட்டான். அவனுடைய வழக்கமான உரத்த சிரிப்பை இன்னொரு முறை அவன் வெளியிட்டான்.
‘‘இதை எல்லாம் நீங்கள் எதற்காகச் சொல்கிறீர்கள்?’’- நான் கேட்டேன். அவனுடைய சிரிப்பால் பாதிக்கப்பட்டதைப்போல் நான் காட்டிக்கொண்டேன்.
‘‘ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’’
‘‘வெளிப்படையாகக் கூறுவது என்றால்...’’- நான் கறாராக ஏதாவது சொல்ல வேண்டும் என்று வீணாக முயற்சித்தேன். வெளிப்படையாக என்றால் என்ன அர்த்தம்? இந்த மனிதன் அப்படியொன்றும் முட்டாள் இல்லை. மனிதர்களின் ‘வெளிப்படை’ என்பதன் எல்லைகள் எந்த அளவிற்கு வரையறை உள்ளவை, அவை சுயமரியாதை என்ற ஒன்றால் எந்த அளவிற்குக் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது என்பதெல்லாம் அவனுக்கு நன்றாகத் தெரியும். நான் மீண்டும் அவனைப் பார்த்தபோது, அவனுடைய புன்னகையால் ஆழமாக காயப்பட்டேன். அந்தப் புன்னகையில் அந்த அளவிற்குத் தாராளமாகக் கேலியும் வெறுப்பும் கலந்திருந்தன! பயத்தின் ஆரம்ப நிலைகளை நான் உணர்ந்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டுப் போய்விடுவது நல்லது என்று அந்த பயம் எனக்குச் சொன்னது.
‘‘குட் நைட்’’- நான் என்னுடைய தொப்பியை உயர்த்தியவாறு உடனடியாகச் சொன்னேன்.
‘‘ஏன்?’’- அவன் மென்னையான ஆச்சரியத்துடன் கேட்டான்.
‘‘அளவுக்கு அதிகமாக தமாஷ்கள் நடப்பது எனக்குப் பிடிக்காது.’’
‘‘நீங்கள் போகப் போகிறீர்களா? சரி... அது உங்கள் விருப்பம் ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் போய்விட்டால், பின்னர் நாம் எந்தச் சமயத்திலும் மீண்டும் சந்திக்க மாட்டோம்.’’
அவன் ‘எந்தச் சமயத்திலும்’ என்ற வார்த்தையை மிகவும் அழுத்தமாக உச்சரித்தான். அந்த வார்த்தை இறுதிச் சடங்கு மணியைப் போல என்னுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தது. அந்த வார்த்தையை நான் பொதுவாகவே வெறுத்தேன். அதற்காக பயப்படக்கூட செய்தேன். அது கனமானதாகவும் குளிர்ந்ததாகவும் இருந்தது. மனிதர்களின் நம்பிக்கைகளை அழிப்பதற்காக விதி அதற்கென்றெ படைத்து விட்டிருக்கிற பெரிய சுத்தியலாக அந்த வார்த்தையை நான் நினைத்தேன். அந்த வார்த்தை என்னை நிற்கச் செய்தது.
‘‘நீங்கள் விரும்புவது என்ன?’’- நான் கவலையுடனும் வெறுப்புடனும் கேட்டேன்.
‘‘நாம் கீழே உட்காருவோம்’’- அவன் மீண்டும் ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னான். என் கையை இறுகப் பற்றி, கீழே இழுத்து உட்கார வைத்தான்.
அந்த நிமிடத்தில் நாங்கள் நகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் இருந்தோம். அசைவே இல்லாத பனிபடர்ந்த கிளைகளைக் கொண்ட லோக்கஸ்ட், லிலாக் புதர்கள் சூழ்ந்த ஒரு பாதையில் இருந்தோம். நிலவு வெளிச்சத்தில் அவை என்மீது விழுந்து ஒளிர்ந்து கொண்டிருந்தன. பனிபடர்ந்த அடர்த்தியான அந்தக் கிளைகள் எங்கே என் நெஞ்சுக்குள் ஓட்டை போட்டு நுழைந்து என் இதயத்திற்குள் ஆழமாகப் போய்விடப் போகின்றனவோ என்றுகூட நான் நினைத்தேன்.
என்னுடன் இருந்த மனிதனின் நடவடிக்கைகளைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த நான் அவனையே அமைதியாக வெறித்துப் பார்த்தேன்.
அவனுடைய நடவடிக்கைகளைப் பற்றித் தெளிவான ஒரு விளக்கத்தை நானே கொடுக்க முயற்சித்தால், அது அவனுக்குக் கெடுதல் செய்கிற ஒரு விஷயமாகக் கட்டாயம் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் என் சிந்தனைகளை மெருகேற்றினான் என்பதென்னவோ உண்மைதான்.
‘‘நான் அசாதாரணமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவற்றையெல்லாம் உதறிவிடுங்கள். அது எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்த வெறுக்கத்தக்க ஒரு கருத்து! அப்படி நினைப்பதன் மூலம் ஒருவரைச் சரியாகப் புரிந்துகொள்ள பல வேளைகளிலும் எப்படி எல்லாம் மறுத்து விடுகிறோம். அந்த நபர் நம்மைவிட அதிகமான உண்மைத் தன்மை கொண்டவர் என்று ஒருவரைப் பற்றி நினைப்பதும், அந்த நினைப்பு தொடர்ந்து உள்ளே ஆழமாக நுழைந்து, ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் உறவை அது எந்த அளவிற்குப் பெரிதாக பாதிக்கிறது என்பதும் யோசிக்கப்பட வேண்டியவை.’’
‘‘ஆமாம். உண்மைதான்’’- நான் சொன்னேன். அந்த மனிதனுக்கு முன்னால் இருப்பது என்பதே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘‘ஆனால் நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் நான் கட்டாயம் போகவேண்டும். எனக்கு நேரமாகிவிட்டது.’’
‘‘அப்படின்னா... போங்க’’- அவன் தோளைக் குலுக்கியவாறு சொன்னான்: ‘‘போங்க... ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உண்மையான அடையாளத்தை இழப்பதற்காக நீங்கள் அவசரப்படுகிறீர்கள்.’’அவன் என் கையை விட, நான் நடந்து சென்றேன்.
வோல்காவிற்கு மேலே மலை மீது இருக்கும் பூங்காவில் அவனை நான் விட்டுவிட்டு வந்தேன். அந்த மலை பனியால் மூடப்பட்டிருந்தது. ஆங்காங்கே ஒற்றையடிப் பாதைகள் கருப்பு நிற ரிப்பன்களைப் போல அங்கு காணப்பபடும். அவனுக்கு முன்னால் நதியைத் தாண்டி ஒரு பெரிய அமைதியான சமவெளி இருந்தது. அவன் அங்கிருந்த பெஞ்ச்சுகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டு, எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பாதையின் வழியாக நடந்து சென்றேன். நான் அவனிடமிருந்து போகக்கூடாது என்று நினைத்தாலும் நடந்து கொண்டே இருந்தேன். நான் மெதுவாக நடப்பதா? வேகமாக நடப்பதா? அவன் எனக்கு எந்த அளவிற்குச் சிறியவன் என்பதை நான் காட்டவேண்டும் என்றால் எப்படி நடந்தால் சரியாக இருக்கும்?
மிகவும் புகழ்பெற்ற மெட்டு ஒன்றை அவன் விசில் அடிக்க அது என் காதில் விழுந்தது. குருட்டு மனிதன் ஒருவனை வழிநடத்திச் செல்லும் இன்னொரு குருட்டு மனிதனைப் பற்றிய நகைச்சுவை கலந்த சோகப் பாடல் அது. அவன் எதற்காக அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தான் என்று நான் நினைத்தேன்.
அந்தச் சிறிய மனிதனைப் பார்த்த நிமிடத்திலிருந்து நான் இனம்புரியாத, சிறிதும் எதிர்பாராத, உணர்ச்சிகள் நிறைந்த இருட்டு வளையத்தில் முழுமையாக நான் சூழப்பட்டிருந்ததை உணர்ந்தேன். என்னுடைய சமீபகால குழப்பங்களும் பிரச்சினைகளும் நிறைந்த மனம் மிகப்பெரிய சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
‘நீ எப்படித் தலைவனாக முடியும்
நீயே பார்க்க முடியாத சாலையிலல்?’
நான் அந்த மனிதன் விசில் அடித்துப் பாடிய பாடலில் இருந்த வரிகளை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
நான் திரும்பி, பின்னால் பார்த்தேன். ஒருகையைத் தன்னுடைய முழங்காலில் வைத்துக்கொண்டு, தாடையை கையில் வைத்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு அவன் விசில் அடித்தான். அவனுடைய முகத்தில் நிலவு ஒளிர்ந்து கொண்டிருதது. அவனுடைய கருப்பு மீசை பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நிறைய அறிவு கொண்டிருக்கும் ஒரு மனிதன் அருகில் இருக்கிறான் என்ற உணர்வால் உந்தப்பட்டு, நான் திரும்பிப் போக முடிவெடுத்தேன். நான் அவனை நோக்கிச் சென்று, அவனுக்கு அருகில் அமர்ந்து மெதுவாக- ஆனால் ஆர்வத்துடன் சொன்னேன்: ‘‘சரி... நாம் எளிய வார்த்தைகளில் பேசுவோம்.’’