வாசகன் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7189
‘‘ஏற்கெனவே?’’- நான் அமைதியாகக் கேட்டேன். நான் அவனைப் பார்த்து பயந்தேன். சொல்லப் போனால் அதைவிட அதிகமாக என்னைப் பார்த்து நான் பயந்தேன்.
‘‘ஆமாம்.... நான் இப்போது உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மீண்டும் வருவேன். ஆனால் உடனடியாக அல்ல. காத்திருங்கள்!’’
அவன் புறப்பட்டான்.
அவன் எப்படிச் சென்றான்? நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் வேகமாகவும் ஓசை உண்டாக்காமலும் ஒரு நிழலைப்போல மறைந்துவிட்டான். நான் பார்க் பெஞ்சில் குளிரைப் பற்றிக் கவலைப்படாமல் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தேன். சூரியன் உதித்து வந்தது. அது பனி படர்ந்திருந்த மரக்கிளைகளில் பட்டுப் பிரகாசித்தது. இந்த வெளிச்சம் நிறைந்த பகல்பொழுது, இதற்கு முன்பு நான் பார்த்திராத ஒரு நாளாக எனக்குத் தெரிந்தது. சூரியன் எப்போதும்போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. பனிப் போர்வைக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இந்தப் பழைய பூமி சூரியனின் கதிர்கள் பட்டு, தாங்க முடியாத அளவிற்குப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.