வாசகன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7189
அந்த வினோதமான மனிதன் சற்று நேரத்திற்குத் தன் பேச்சை நிறுத்தினான். நான் மிகவும் அமைதியாக அவனுடைய வார்த்தைகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
‘‘நான் என்னைச் சுற்றிலும் ஏராளமான அறிவாளிகளைப் பார்க்கிறேன். அவர்களில் சிலர் உயர்ந்த மனம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்ட அவர்கள் உடைந்து போய் இதயத்தில் நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நான் எப்போதும் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன் - ஒரு மனிதன் எந்த அளவிற்கு நல்லவனாக இருக்கிறானோ, பரிசுத்தமானதாகவும் ஆன்மாவில் நேர்மை குணம் கொண்டவனாகவும் இருக்கிறானோ, தன்னிடம் இருக்கும் சிறிய அளவு சக்தியை வைத்துக் கொண்டு அவன் வாழ்வதற்கு மிகுந்த வேதனையும் கஷ்டமும் படுகிறான். பெரும்பாலான அப்படிப்பட்ட மக்கள் தனிமையில் விடப்பட்டவர்களாகவும் கவலை நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அதைவிடச் சிறந்த நிலைக்காக எந்த அளவிற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதை உருவாக்குவதற்கான பலம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் அந்த அளவிற்கு நசுக்கப்பட்டவர்களாகவும் பரிதாபப்படும் நிலையிலும் இருப்பதற்கு - உரிய நேரத்தில் அவர்கள் மேலெழுந்து வருவதற்கு உதவக்கூடிய வார்த்தைகள் கூறப்படாதது தானே காரணம்?’’
‘‘இன்னும் சில விஷயங்கள்...’’ - அந்த மனிதன் தொடர்ந்து சொன்னான் : ‘‘ஆன்மாவைச் சுத்தம் செய்யும் சந்தோஷமான சிரிப்பை உங்களால் எழச் செய்ய முடியுமா? உங்களைச் சுற்றிலும் பாருங்கள். மனிதர்கள் எப்படிச் சிரிக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டார்கள். அவர்கள் கசப்புடன் சிரிக்கிறார்கள். அவர்கள் பொறாமையுடன் சிரிக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் கண்ணீர் மூலம் சிரிக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியில் ஒரு சந்தோஷமான, உண்மையான சிரிப்பை, வயதான மனிதர்களிடமிருந்து பெரும்பாலும் வரக்கூடிய சிரிப்பை நீங்கள் எந்தச் சமயத்திலும் கேட்டிருக்க முடியாது. நல்ல சிரிப்பு ஆன்மாவை நலத்துடன் வைத்திருக்கும். மனிதன் சிரிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். ஏனென்றால் மிருகங்களிடம் இல்லாத பல உயர்ந்த விஷயங்களில் சிரிப்பும் ஒன்று. கவலைகள் நிறைந்த சிரிப்பைத் தவிர, மக்களிடம் உங்களால் வேறு எந்தச் சிரிப்பையும் வெளிக்கொண்டு வரமுடியுமா? தாழ்ந்த தன்மையைக் கொண்ட சிரிப்பு மட்டுமே அவனிடம் இருக்கிறது. அவன் கோமாளித்தனமாக இருக்கிறான். அதற்குக் காரணம் அவனிடம் இருக்கும் கீழான தன்மைகள். உங்களின் கற்றுத்தரும் உரிமையில் சில நல்ல நோக்கங்கள் இருக்க வேண்டும். அவை நல்ல உணர்வுகளை, இருக்கும் சிலவற்றை அழித்துப் புதிதாக சிலவற்றைப் படைக்கக்கூடிய சக்தியை அளிப்பவையாக இருக்க வேண்டும். கோபம், வெறுப்பு, வீரம், வெட்கம், தோல்வி, விரக்தி- பூமியில் இருக்கும் எல்லாவற்றையும் இந்த நெம்புகோல்களைக் கொண்டுதான் அழிக்க முடியும். உங்களால் இப்படிப்பட்ட நெம்புகோல்களை உருவாக்க முடியுமா?அவற்றைச் செயல்படுத்த உங்களால் முடியுமா? மக்களிடம் பேசுவதற்கான உரிமை உங்களுக்கு வேண்டுமென்றால், அவர்களிடம் இருக்கும் குறைகளைப் பார்த்து உங்களுக்குப் பெரிய அளவில் வெறுப்பு வரவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து அவர்களின் மீது பெரிய அளவில் அன்பு உண்டாக வேண்டும். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் எதுவும் உங்களின் இதயத்தில் இல்லையென்றால், எதையாவது கூறுவதற்கு முன்னால் மீண்டும் அமைதியாக சிந்தித்துப் பார்ப்பது நல்லது.’’
பொழுது விடிந்து கொண்டிருந்தது. ஆனால் என்னுடைய ஆன்மாவில் எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் இருள் நிறைந்திருந்தது. மனதில் ரகசியமாக எதையும் வைத்திருக்கும் பழக்கம் இல்லாத அந்த மனிதன் பேசிக்கொண்டே போனான். சில நேரங்களில் இந்தச் சிந்தனை என்னிடம் உண்டாகத்தான் செய்தது: ‘இவன் மனிதன்தானா?’
அவன் சொன்ன விஷயங்களில் நான் ஆழமாகப் பாதிக்கப்பட்டு விட்டேன். அதைப்பற்றி மேலும் சிந்திப்பதற்கு முன்னால், அவனுடைய வார்த்தைகள் ஊசிகளைப்போல என் மூளைக்குள் நுழைந்து கொண்டிருந்தன.
‘‘மொத்தத்தில் வாழ்க்கை மிகவும் ஆடம்பரமாகிவிட்டது. அது புதிய தளங்களை நோக்கி முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது. அது ஆழமாகவும் போய்க் கொண்டிருக்கிறது. அந்தப் போகும் போக்கு மெதுவாக இருக்கிறது. அதற்குக் காரணம் நம்மிடம் அதை வேகப்படுத்துவதற்கான பலமோ ஆற்றலோ இல்லை. ஆமாம் வாழ்க்கை வசதி மிக்கதாக ஆகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் கேள்விகள் கேட்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். யார் பதில்களைக் கூறுவது? நீங்கள்தான்- நீதிபோதகர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட நீங்கள்தான் பதில் கூறவேண்டும். மற்றவர்களிடம் விளக்கிக் கூறும் அளவிற்கு வாழ்க்கையைச் சரியானபடி நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்குத் தெரியுமா? எதிர்காலம் என்ன வேண்டுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா? வாழ்க்கையின் சோகங்களால் பாதிக்கப்பட்டு, ஒடிந்துபோய் ஆன்மாவை இழந்து கிடக்கும் மனிதனைத் தட்டி எழுப்புவதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? மனிதன் உற்சாகமே இல்லாதவனாக ஆகிவிட்டான். அவனுக்கு வாழ்க்கையின் மீது சிறிதளவே ஆர்வம் இருக்கிறது. மதிப்புடன் வாழவேண்டும் என்ற அவனுடைய ஆசை கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. அவன் மிகவும் எளிமையாக, ஒரு பன்றியைப் போல வாழ விரும்புகிறான். உங்கள் காதில் விழுகிறதா? ‘நேர்மை’ என்ற வார்த்தையைக் கேட்டால் அவன் பயங்கரமாக சிரிக்கிறான். சதையும் தடிமனான தோலும் கொண்ட ஒரு குவியல் எலும்புகளின் உருவமாக மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான். அந்தப் பெரிய எலும்புக் குவியல் உத்வேகத்தால் செயல்படவில்லை. அதற்கு பதிலாக காமத்தால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவனுக்கு கவனிப்பு தேவைபப்படுகிறது. துரிதமாக செயல்படுங்கள்! அவன் மனிதப் பிறவியாக இருக்கும்போதே, அவன் வாழ்வதற்கு உதவி செய்யுங்கள். நீங்களே அழுதுகொண்டும் முனகிக் கொண்டும் தவித்துக்கொண்டும் இருக்கும் நிலையில், வாழ வேண்டும் என்ற அவனுடைய ஆசைக்கு உங்களால் எப்படி உதவ முடியும்? அவன் துண்டிக்கப்பட்டு இருக்கும் நிலையை வேறொரு நிலையில் இருக்கும் உங்களால் எப்படி விளக்கிக் கூற முடியும்? வாழ்க்கை அழுகிப் போன விஷயங்களால் நாறிக் கொண்டிருக்கிறது. இதயங்கள் கோழைத்தனத்தாலும் அடிமைத்தனத்தாலும் நிறைந்திருக்கின்றன. மனங்களும் கைகளும் சோம்பேறித்தனத்தின் மென்மையான கயிறுகளால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கறைபட்ட தன்மைகளுக்குள் நீங்கள் எதைச் செலுத்த முடியும்? எந்த அளவிற்குச் சிறியவர்களாகவும் மோசமானவர்களாகவும் இருக்கிறீர்கள் நீங்கள்! உங்களைப் போன்றவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறீர்கள்! ஒளிரும் இதயத்தையும் எல்லாரையும் அரவணைக்கக் கூடிய பலமான மனதையும் கொண்ட, உறுதி படைத்த அன்பான மனிதன் தோன்றினால் மட்டுமே இது சாத்தியம்! வெட்கப்படத்தக்க அமைதியான சூழ்நிலை சக்தி படைத்த வார்த்தைகளால் ஒலிக்கும். அவை மணியின் ஓசைகளைப் போல் முழங்கிக் கொண்டிருக்கும். இருந்தும் இறந்தவர்களைப் போல இருப்பவர்களின் விரக்தி அடைந்த ஆன்மாக்கள் உலுக்கப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்...’’