விண்வெளிப் பயணம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 9827
முன்பு பயணித்த ராக்கெட்டில் இருந்தவர்களுக்கு அது முடியாமல் போனது. ராக்கெட் பூமியின் வட்டத்தைவிட்டு புறப்பட்டவுடன், அதில் பயணம் செய்பவர்களின் எடை மிகவும் குறைய ஆரம்பித்துவிடும். அவர்கள் வெட்ட வெளியில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு இயந்திரத்திலிருந்து இன்னொரு இயந்திரத்தை அடைவதற்கு அதற்கென்று உள்ள காலணிகள் கட்டாயம் வேண்டும்.
சந்திரனை அடைவதற்கு முன்பே கேடு வந்து தகர்ந்த எத்தனையோ ராக்கெட்டுகள் வெட்ட வெளியில் கிடப்பதை பிள்ளைகள் பார்த்தார்கள். பூமி இப்போது மிகவும் சிறிய ஒரு உருண்டையாகத் தோன்றியது.
ஜிம்மி சொன்னான் : “ராக்கெட்டின் பயணிக்கும் திசையை முப்பத்தாறு டிகிரி மேற்குப் பக்கமாக திருப்பணும்!”
“எதற்கு?” - உர்ஃபி கேட்டான்.
“கிழக்குப் பக்கத்திலிருந்து ஒரு வால் நட்சத்திரம் வந்து கொண்டிருக்கிறது. அதன் மீது ராக்கெட் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.”
“என்னால எதையும் பார்க்க முடியலையே!”
ஜிம்மி கோபப்பட்டான் : “உங்களால் எப்படிப் பார்க்க முடியும்? ரேடார் எச்சரிக்கிறது. சீக்கிரமே திசையை மாற்றுங்க.”
மோகினி கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தாள் : “வேண்டாம் அண்ணா! நான் வால் நட்சத்திரத்தைப் பார்க்கணும். அதன் வால் மிகவும் நீளமாக இருக்குமா ஜிம்மி?”
“ஆமாம்...”
“நாயின் வாலைவிட நீளமாக இருக்குமா? குரங்கின் வாலைவிட நீளமாக இருக்கும் இல்லையா? நான் அதன் வாலில் வெடியைக் கட்டி நெருப்பு வைப்பேன். அப்போ தமாஷைப் பார்க்கலாம்.”
“பைத்தியக்காரி! வால் நட்சத்திரத்தின் வாலுக்கு எத்தனையோ ஆயிரம் மைல் நீளம் இருக்கும். அதன் வாலின்மிது பூமியின் அளவைக் கொண்ட ஏராளமான வெடிகளைக் கட்டலாம். அது நம்முடைய ராக்கெட்டிற்கு அருகில் எங்காவது கடந்து சென்றால் விபத்து நடக்கும். சீக்கிரமா ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மேற்குப் பக்கமாக மாற்றணும்!”
“ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மாற்றினால் சந்திரனை விட்டு விலகிப் போய்விட மாட்டோமா?” - உர்ஃபி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.
ஜிம்மி ஓடி வந்து ராக்கெட் பயணிக்கும் திசையை மாற்றினான்.
“முதலில் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அதற்கப் பிறகு சந்திரனுக்குப் போவோம்.”
5
செம்பு மனிதர்களின் நகதரத்தில் உணவு - மின்சக்
ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மாற்றியதும், கருப்பு நிற ஆகாயம் பிரகாசமானதாக மாறியது. ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டு கடந்து சென்றன. ஜிம்மி ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மாற்றியபோது நாஸ் கேட்டாள் : “நீ என்ன செய்தாய்? ஆகாயம் தீபாவளியைக் கொண்டாடுவதைப் பார்க்க நீ விடவில்லை.”
“அதில் ஒன்றே ஒன்று நம் ராக்கெட்டின் மீது மோதினால் நாம் வெட்ட வெளியில் போய் கிடக்க வேண்டியதுதான். சந்திரனை அடைய முடியாமலே போய்விடும்” - ஜிம்மி விளக்கினான்.
“மிகவும் கஷ்டப்பட்டு வால் நட்சத்திரத்தின் பாதிப்பில் இருந்து தப்பினோம்” - உர்ஃபி மனதைத் தேற்றிக் கொண்டு சொன்னான்.
“அந்த பாழாய்ப் போன நட்சத்திரத்தின் வாலை நம்பக்கூடாது. அது மோதினால் நம்முடைய பூமிகூட தகர்ந்து போயிடும்” - ஜிம்மி சொன்னான்.
“வால் நட்சத்திரம் எப்போதும் நம்மை விட்டு விலகி இருக்கிறது என்பது நம்முடைய அதிர்ஷ்டம்” - நாஸ் சொன்னாள்.
“எனக்குப் பசிக்கிறது” - உர்ஃபி சொன்னான்.
“எனக்கும் பசிக்கிறது” - மோகினியும் சேர்ந்து கொண்டாள்.
“சமையலறையின் சொந்தக்காரி நீதான். நீ எங்கள் எல்லோருக்கும் உணவு தா! யாரும் இயந்திரத்தின் அருகில் இருந்து நகர முடியாது” - நாஸ் சொன்னாள்.
மோகினி உர்ஃபிக்கும் நாஸுக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொடுத்தாள். அவளும் சாப்பிட்டாள். ஜிம்மி பெட்ரோல், க்ரீஸ் ஆகியவற்றைத்தான் சாப்பிடுவான். ரொட்டியைச் சாப்பிடுவதற்கு மத்தியில் உர்ஃபி சொன்னான் : “மோகினி தயார் பண்ணின ரொட்டி நல்ல சுவையுடன் இருக்கு.”
ஜிம்மி பெட்ரோல் குப்பியைத் தன் உதட்டுடன் சேர்த்து வைத்துக் கொண்டு சொன்னான் : “பெட்ரோலும் நல்ல ருசியுடன்தான் இருக்கு. மணமும் இருக்கு. இதை எங்கேயிருந்து வாங்கினீங்க?”
“கால்டெக்ஸ் கம்பெனியில் இருந்து.”
“இல்லை... இல்லை... இது நெருப்பு மலையிலிருந்து வந்த பெட்ரோல்” - மோகினி சொன்னாள்.
ஜிம்மி வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்துவிட்டான்.
“என்ன ஆச்சு ஜிம்மி?” - நாஸ் பதைபதைப்புடன் கேட்டாள்.
ஜிம்மி அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதே இடத்தில் அப்படியே அவன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
“ஜிம்மி! ஜிம்மி!” என்று அழைத்தவாறு உர்ஃபி இயந்திரத்திற்கு அருகிலிருந்து எழுந்து செல்வதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தான். அதற்குள் நீல கிரகணங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரம் ராக்கெட்டிற்கு நேர் எதிரில் வந்து கொண்டிருப்பதை அவன் பார்த்துவிட்டான். உர்ஃபி ராக்கெட்டின் போகும் திசையை மாற்ற முயற்சித்தான். அதற்குள் நட்சத்திரம் ராக்கெட்டை நெருங்கி விட்டிருந்தது.
உர்ஃபி ராக்கெட்டை நட்சத்திரத்திற்கு அருகிலிருந்து விலக்கிக் கொண்டு செல்வதற்கு மிகவும் தீவிரமாகப் போராடினான். ஆனால், ராக்கெட் நட்சத்திரத்தின் ஈர்ப்பில் சிக்கிக் கொண்டு சுற்ற ஆரம்பித்தது.
மோகினி உரத்த குரலில் சிரித்தாள்.
“அமைதியாக இரு” - நாஸ் அவளைத் திட்டினாள்: “வாழ்க்கை ஆபத்தில் சிக்கிக்கொண்டு இருக்கும் தருணத்திலா சிரிப்பது?”
மோகினி சிரித்துக் கொண்டேயிருந்தாள். சிறிது நேரம் கழித்து நாஸும் சிரிக்க ஆரம்பித்தாள். உர்ஃபிக்கு எதுவுமே புரியவில்லை. ஒருவேளை அவர்களின் அந்தச்சிரிப்பு இயல்பான ஒன்றாக இல்லாமல் இருக்குமோ? நட்சத்திரத்தின் பாதிப்பால் அந்தச் சிரிப்பு உண்டாகியிருக்கலாம். உர்ஃபி அடுத்த நிமிடம் பொத்தானை அழுத்தினான். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வெளிச்சட்டை ராக்கெட்டை மூடியது. அந்த வெளிச்சட்டை உலோகங்களால் செய்யப்பட்டது. வெளிச்சட்டையை அணிந்தவுடன் ராக்கெட்டிற்குள் இருட்டு வந்து பரவியது. இன்னொரு பொத்தானை அழுத்தியவுடன், பல்புகள் எரிய ஆரம்பித்தன. அப்போது ஜிம்மி வாயை மூடிக்கொண்டிருந்தாலும், அவனுடைய கண்களில் பிரகாசம் சிறிதும் இல்லாமலிருந்தது. உடனடியாக உர்ஃபி ஸ்பானரைக் கொண்டு வந்து தன் தம்பியின் மண்டை ஓட்டைத் திறந்து பார்த்தான். டைனமோவின் செயல்பாடு நின்று போயிருந்தது. மின்சக்தியைக் கொண்டு டைனமோவை இயங்கச் செய்தான. ஜிம்மி மீண்டும் கண்களைத் திறந்து வேலை செய்ய ஆரம்பித்தான்.