தினா - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6779
ஆனால், இப்போது அவளைப் பொறுத்தவரை, மது அருந்துவது மட்டுமே முக்கியம். பணி செய்யும் தொழிலாளர்கள் இருக்கும்போது, அவள் அளவுக்கும் அதிகமாகக் குடிப்பாள்.
அவளுக்கு எதுவுமே தரவேண்டிய அவசியமில்லை. யாரென்று இல்லை. வயலில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரிதான்... அவளை பொதுக் கடைக்குப் பின்னாலிருந்த புல் மேட்டிற்கு அவர்கள் அழைத்துக் கொண்டு சென்றார்கள். அவள் உடனடியாகத் தூங்கி விடுவாள் என்ற விஷயமும், அழைத்துச் சென்ற மனிதன் எழுந்த பிறகுதான் அவள் கண் விழிப்பாள் என்பதும் எல்லாருக்குமே தெரியும்.
இப்போது அவனுக்கு வயதாகி விட்டது. அவளுடன் படுக்காத ஒரே மனிதன் அவன் மட்டுமே. எது எப்படியோ, அவனுக்கு பிட்ட ரோஸியை நன்கு தெரியும்.
மாதலா மேலும் இரண்டு செடிகளைப் பிடுங்கிவிட்டு, முழங்காலைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தான். ஒவ்வொரு மணித்துளி தாண்டும் போதும், சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. வேலையை நிறுத்திக் கொள்ளும்படி கங்காணி உத்தரவு பிறப்பிப்பதற்கு இன்னும் அதிக நேரமாகாது.
தன்னுடைய உடல்நலக் குறைவு காரணமாக, உள்ளுக்குள் கயிறுகள் ஒன்றோடொன்று முறுக்குவதைப்போல திடீரென்று அவனுக்குத் தோன்றியது. முதல் முடிச்சு விழுந்து விட்டதைப் போல அவன் உணர்ந்தான்.
கங்காணியின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தால், உள்ளுக்குள் கயிறுகள் இறுக்கியதைப் போன்ற ஒரு உணர்வை ஆரம்பத்தில் மாதலா உணராமல் இருந்தான். ஆனால், இப்போது தன்னுடைய குடல்களுக்கு இடையே முதல் முடிச்சு விழுந்திருப்பதை உணர்ந்தும், சதைகள் முறுக்கேறும் அளவிற்கு உடலுக்குள் கயிறுகள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்வதை நேரடியாகச் சந்திப்பதற்காக, அவன் உடலை நிமிர்த்தி வைத்துக் கொள்ளும் வீணான முயற்சியைச் செய்தான். எது எப்படியோ தன்னுடைய தொண்டைப் பகுதியிலிருந்து கீழ்நோக்கி இறங்கிய கயிறு நெஞ்சின் மையப் பகுதியில் சுருண்டு கிடந்து, வயிற்றை நோக்கி ஒருவித வேதனையை மிகவும் வேகமாக உண்டாக்கிக் கொண்டிருந்தது. பசியுடன் இருந்த அந்த மணித் துளிகளில், அவனுடைய கழுத்துப் பகுதியிலிருந்த நரம்புகள் புடைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட வெடிக்கும் நிலையில் இருந்தன. நிலை குலைந்து போய் அவனுடைய சரீரம் இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது. அவன் தன் கையில் வைத்திருந்த செடியின் இலைகள் நசுக்கப்பட்டு சிறுசிறு துண்டுகளாக ஆகிக் கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து அவை தாங்கமுடியாத ஒரு வாசனையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. இரண்டாவது முடிச்சு கிட்டத்தட்ட அவனுடைய சிறுநீரகங்களை வெடிக்க வைக்கும் நிலையில் இருந்தது. ஆனால், மாதலாவின் அழுத்தப்பட்ட உதடுகளிலிருந்து ஒரு சிறிய முனகல் சத்தம்கூட வெளிப்படவில்லை.
"அந்த மனிதர் ஏன் இன்னும் வேலையை நிறுத்தும்படி கூறாமல் இருக்கிறார்?'' மாதலா முணுமுணுத்தான். முணுமுணுத்துக் கொண்டே, ஒரு புதரின் கிளைகளை நோக்கி நகர்ந்து செல்ல முயற்சித்தான். “தினாவிற்கான மணி அடித்து, நிழல்கள்கூட இரண்டு பனை மரங்களின் உயரத்திற்கு நீண்டுவிட்டன...'' அவன் மெதுவான குரலில் கூறிக்கொண்டான்.
புதரைப் பிடித்து இழுத்தபோது, தன்னை விட்டு விலகிச் செல்லும் கால்களை அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. கிளைகளின் பிடிகையை விட்டுச் செல்ல, அவன் நிலை தடுமாறி தரையில் விழுந்தான்.
உள்ளுக்குள் விழுந்த முடிச்சு உண்டாக்கிய வேதனை வெளிப்பட, அவனுடைய கால்கள் மிகவும் வேகமாக விரிந்து நீண்டன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, தன்னுடைய சரீரம் மென்மையாகவும் வறண்டு போயும் இருந்த மண்ணில் பரவிக் கிடக்க, உள்ளுக்குள் இருந்த கயிறுகள் தன்னை இறுக்குவதைப் போல அவன் உணர்ந்தான். அவன் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு, வேதனைகள் மறைவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
தவழ்ந்துகொண்டே, அந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டு, தன் கையை செடிகளை நோக்கி நீட்டி அவற்றை மெதுவாகப் பிடித்து இழுத்தான்.
“கீழே படுத்துக் கொண்டு வேலை செய்ய உன்னை அனுமதிக்க மாட்டார்கள்.'' செடிகளைக் கீழே போட்டுக்கொண்டே அவன் முணு முணுத்தான். ஒரு சிறிய செடியின் தண்டுப் பகுதியை அவன் இறுகப் பற்றினான். ஆனால், அதை மேல் நோக்கிப் பிடித்து இழுப்பதற்கு முன்னால், சிறிது நேரத்திற்கு முன்பு தான் தரையில் விட்டெறிந்த சிறிய குவியலிருந்து, செடிகளைத் தனித்தனியே பிரித்து எண்ணினான்: “ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து...''
எண்ணி முடித்ததும், தன்னுடைய வலது கையில் வைத்திருந்த செடியை இறுகப் பிடித்து, அதை மற்ற செடிகளுடன் சேர்த்து வைத்தான். “ஆறு...''
“கீழே படுத்துக்கொண்டே வேலை செய்ய உன்னை அனுமதிக்க மாட்டார்கள்.'' தன் விரல்களால் ஆறாவது செடியின் இலைகளை நசுக்கிக் கொண்டே அவன் முணுமுணுத்தான்...
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டபடி தன் வலது பக்கத் தோளுடன் கீழே விழுந்து, அவன் தரையில் உருண்டான். தன்னுடைய தாடைப் பகுதியை முழங்காலின்மீது வைத்து அப்போது அழுத்தினான். ஒரு வகையான திருப்தியுடன், தன்னுடைய உடல்நல பாதிப்பிற்குக் காரணமான உள்ளே சுருண்டு கடந்த கயிறுகள், தன்னுடைய உடல் உறுப்புகளெங்கும் பரவிப் பின்னுவதை அவன் நினைத்துப் பார்த்தான். ஆறாவது செடியின் எஞ்சியிருந்தவற்றை, தன் வாயை நோக்கி அவன் பிடித்துத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டே அதைச் சுவைக்க ஆரம்பித்தான்.
“சரி... பையன்களே! நாம் போய் சாப்பிடுவோம்!''
“ஏழு... எட்டு... ஒன்பது... பத்து...'' மாதலா வேகமாக எழுந்து, நான்கு செடிகளை மேல் நோக்கிப் பிடுங்கினான். தொடர்ந்து தன் விரல்களை நெற்றியில் வைத்து கீழ் நோக்கி வழிக்கும் போது, தன் கண்களை மூடும்படிச் செய்த வியர்வைத் துளிகளை அவன் துடைத்தெறிந்தான்.
அவன் உடனடியாக அங்கிருந்து நகரவில்லை. வேலை செய்வதை நிறுத்துவதில் தான் மிகவும் அவசரமாக இருப்பதாக கங்காணி நினைத்துக் கொண்டால், அது ஒரு நல்ல விஷயமாக இருக்காது என்று அவன் எண்ணினான்.
அவன் சற்று மேலே தலையைக் காட்டியபோது, ஒரு கடைசி முடிச்சு உள்ளுக்குள் விழுந்திருப்பதைப் போலவும், ஒரு வகையான மயக்க நிலையையும் அவன் உணர்ந்தான். ந் குயானாவும் முத்தக்காட்டியும் ஏற்கெனவே அங்கு நின்று கொண்டிருந்தார்கள். கங்காணி அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். “கிளம்புகிற நேரம் என்றால் உங்களை நீங்களே சுரண்டிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருப்பீர்கள். வேலை முடிந்து போவதென்றால், இரண்டு மடங்கு வேகம் வந்துவிடும் உங்களுக்கு. உங்களை நான் ஒரு வழிபண்றேன்...''
கங்காணியின் உரத்த சத்தத்தைக் கேட்டதும், தன் தலையை உயர்த்தி காட்டிக்கொண்டிருந்த ஃபிலிமோன் தன் கண்களை கீழே தாழ்த்திக் கொண்டான். ஆனால், மாதலாவைப் பார்த்ததும், தைரியம் உண்டாகி, சவால் விடுவதைப்போல நேராகப் பார்த்தான்.