தினா - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6779
“நீங்கள் கட்டாயம் போய் சாப்பிட வேண்டும், அப்பா''. தன் கண்களை மூடியவாறு, மரியா முன்பு இருந்ததைவிட சத்தமான குரலில் கூறினாள்.
“ஆனால், என் வயிற்றில் பசி இல்லை...'' மாதலா ஆச்சரியம் தொனித்த கண்களுடன், தன் கைகளை விரித்துக்கொண்டே கூறினான்:'' என் வயிற்றில் பசியே இல்லை என்பதை நீ கட்டாயம் பார்க்க வேண்டும்.''
மரியா அதற்கு பதிலெதுவும் பேசவில்லை. “உனக்கு சாப்பிட விருப்பமில்லையா, என் மகளே?''
“உங்களைப் பார்க்க வருவதற்கு முன்னால், நான் உணவு சாப்பிடும் இடத்தில் சாப்பிட்டு விட்டேன். அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் போது, ஒரு நண்பர் என்னைப் பார்த்து உள்ளே வரும்படிக் கூறினார். அந்த நண்பர் சில உணவுப் பொருட்களை எனக்காக கொண்டுவந்து கொடுத்து விட்டு "இங்கே உட்கார். இது நீ சாப்பிடுவதற்காகத்தான்...' என்று சொன்னார். நான் சாப்பிட ஆரம்பித்தேன்.'' மரியா தன் கண்களைத் திறந்து, மீண்டும் அவற்றை உடனடியாக மூடிக் கொண்டாள்.
“அதற்கு மேலும் நீ பசியாக இல்லையா? இங்கே வந்து எங்களுடைய குழுவினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று நீ நினைக்கவில்லையா?'' மாதலா மிகவும் ஆர்வத்துடன் கேட்டான். “இல்லை அப்பா. அந்த நண்பர் எனக்கு சாப்பிடுவதற்கான நிறைய உணவுப் பொருட்களைக் கொடுத்தார். எனக்கு இப்போது பசியே இல்லை. நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நான் இங்கே உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.''
ட்ஜிமோ மாதலாவின் அருகில் வந்தான். “மாதலா, உன் மகள் என்ன கூறுகிறாளோ அது சரிதான்...''
அதை மாதலா ஒப்புக்கொண்டான்: ''சரி... நான் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். நீ இங்கே எனக்காகக் காத்திரு.''
தன்னுடைய தந்தை அங்கிருந்து எழுந்து போய்விட்டார் என்பதை உணர்ந்தவுடன் மரியா தன் கண்களைத் திறந்தாள்.
மாதலா ஒரு துண்டு "காய்'யை (தானியத்தால் உண்டாக்கப்பட்ட ஒரு வகை உணவு) "ம்ட்சோ வெலோ' (வேர்க்கடலை கொண்டு உண்டாக்கப்பட்ட ஒரு திரவ உணவு)விற்குள் மூழ்கச் செய்து, அதை தன் வாயை நோக்கி உயர்த்திக் கொண்டு சென்றான். மற்றவர்களும் அதையே செய்தார்கள். அவர்கள் மிகவும் அமைதியாகச் சாப்பிட்டார்கள். அந்த திரவ உணவு மிகவும் சிவையாகவும், தரமான கொழுப்புச் சத்து நிறைந்ததாகவும் இருந்தது.
தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மாதலா வால் மரியாவைப் பார்க்க முடியும். அவள் கூடத்தின் நிழலில் பாதி மறைந்து தெரிந்தாள். இவ்வளவு நேரமும் அதே திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாலும், கங்காணி அங்கு வருவதை அவன் பார்க்கவே இல்லை.
தரையிலிருந்து தன் கண்களை உயர்த்தாமலே, கங்காணி கேட்ட கேள்விகளுக்கு மரியா பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் காதில் கேட்க முடியாததற்கு, மாதலா மிகவும் வருத்தப்பட்டான். ஒரு மனிதன் தான் ஒரு பெண்ணுடன் படுக்க விரும்பும் விஷயத்தை வெளிப்படுத்தும்போது, அவன் ஒருத்தியிடம் என்ன வார்த்தைகளைக் கூறுவான் என்பதை அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
கங்காணி மரியாமீது மிகுந்த கோபத்தில் இருப்பதைப்போல தோன்றியது. ஆனால், சில நேரங்களில் அவர் மிகவும் இனிமையாகப் பேசுவார். அவர் ஒரு சிகரெட் பாக்கெட்டை தன்னுடைய பாக்கெட்டிற்குள்ளிருந்து வெளியே எடுத்து, அதைத் திறந்து, அவற்றிலிருந்து ஒரு சிகெரட்டை எடுத்துப் பற்ற வைத்து, எரிந்து கொண்டிருந்த நெருப்புக் குச்சியை அணைத்து விட்டு, சிகெரட்டை ஊதி ஒரு புகை மண்டலத்தை உண்டாக்கினார். அவர் தன்னுடைய கையை உயர்த்தி, காற்றில் நெருப்புக் குச்சியை ஆட்டிக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.
அவர் தான் புகைத்துக் கொண்டிருந்த சிகெரட்டை முடித்தவுடன் மரியாவின் பக்கம் தன்னுடைய முதுகைத் திருப்பியவாறு, அந்தக் கூடத்தின் மூலையில் மறைந்து போனார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே திசையை நோக்கி மரியாவும் நடந்து சென்றாள்.
கங்காணி மரியாவுடன் உரையாடிக் கொண்டிருந்த இவ்வளவு நேரமும், அவள் தரையைவிட்டு தன்னுடைய கண்களை உயர்த்தவே இல்லை.
சாப்பிடுவதற்கு இன்னும் கொஞ்சம் "காய்'தான் இருந்தது. ஆனால், யாருடைய பசியும் முழுமையாகத் தீர்க்கப்பட்டு விடாது என்று உறுதியாக நினைத்தான் மாதலா. கடைசித் துண்டு அந்த குழுவின் சமையல்காரர்களின் ன்குய்யானாவிற்கும் முத்தக்காட்டிக்கும் இருந்தன. "ம்ட்சோவெலோ'வின் எஞ்சிய பகுதியும்கூட அவர்களுக்குத்தான்.
உறிஞ்சிக் கொண்டும், விரல்களை நக்கிக் கொண்டும் இருந்த மாதலா, அவற்றைத் தேய்த்துக் கொண்டே, தன் தலை முடிகளின் மீது விரல்களால், வருடினான். சாப்பிட்டு முடித்துவிட்டதால், அவன் எழுந்தான்.
மற்றவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
மீண்டும் வயலுக்குள் செல்வதற்கு முன்னால், அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. அதனால், ஓய்வெடுப்பதற்கு ஒரு இடத்தைத் தேடி மாதலா சுற்றிலும் பார்த்தான்.
‘க்ரால் குழு'வைச் சேர்ந்த மனிதர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார்கள். முன்பு தானிருந்த அதே இடத்திற்கு மாதலா மீண்டும் திரும்பி வந்தான்.
சிறிது நேரத்திற்கு முன்னால் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்த அந்த இளைஞன் இப்போது அவனை முற்றிலும் ஒரு கிண்டல் கலந்த முக பாவனையுடன் பார்த்தான்: “மாதலா, உன் மகள் பின்னால் நின்று கொண்டிருக்கிறாள்... கங்காணியுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்...''
‘க்ரால் குழு' தலைவனான எலியாஸ் இந்த கிண்டல் கலந்த வார்த்தைகளை விரும்பவில்லை. அவன் சொன்னான்: “மனிதர்கள் சில விஷயங்களைப் பற்றி புரிந்துகொள்ள முடியாமலிருந்தால் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்துவிட வேண்டும்...'' அவன் அந்த இளைஞனிடம் நேரடியாகச் சொல்லாமல் சொன்னான்.
அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதி தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. தன்னுடைய இடது பாதத்திற்கு அருகிலிருந்த ஒரு செடியைத் தொடுவதற்காக மாதலா கையை நீட்டினான். அந்தச் செடியின் கிளைகளைத் தொட்டவுடன், அதன் மென்மையான தண்டுப் பகுதியை தன் மணிக்கட்டில் சுற்றிய அவன், அந்தச் செடியை ஒரு தீர்மானத்துடன் பிடித்து இழுத்தான். அந்தச் செடி ஒரு மெல்லிய வெடிப்பு உண்டாவதைப்போல மண்ணுக்குள்ளிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தது.
ட்ஜிமோ அருகில் வந்தான் “மாதலா, நீ சந்தோஷப்படுவது மாதிரி, நான் ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்புகிறாயா?'' என்று அவன் கேட்டான். அதற்கு மாதலா எந்தவொரு பதிலும் கூறவில்லை. ட்ஜிமோவுக்குப் பின்னால், வயலுக்குச் செல்லக்கூடிய வழியில், கங்காணி முன்னோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார். பத்தடிகளுக்குப் பின்னால், அவரைப் பின்பற்றி மரியா நடந்து சென்று கொண்டிருந்தாள்.
மாதலா அந்த ஜோடியை தன்னுடைய கண்களால் பின்தொடர்ந்தான். மண்ணில் தான் பார்க்கமுடியாத ஏதோவொன்றை அவன் தேடிக் கொண்டிருந்தான். மனதில் கற்பனை செய்து கொண்டிருந்த ஒரு செடியை அவனுடைய விரல்கள் மூடிக்கொண்டிருந்தன.