தினா
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6779
இடுப்பை வளைத்து குனிந்து, கைகள் தரையை நோக்கி தொங்கிக் கொண்டிருக்க, மாதலா மதிய நேரத்தில் அடிக்கப்படும் பன்னிரண்டு அடிகளின் கடைசி அடியைக் கேட்டான். தலையை உயர்த்தி, பத்து எட்டுகளுக்கு அப்பால் கதிர்களுக்கு மத்தியில், பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் ட்ரவுசர் அணிந்து வந்துகொண்டிருந்த கங்காணியைப் பார்த்தான். அதற்குமேல் நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை. ஏனென்றால், கட்டளை மிகப்பெரிய சத்தமாக மாற்றப்பட்டு காதில் விழும்போது, தன்னுடைய வேலையை அவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவனுடைய ஆடையற்ற முதுகிற்கு நேர் மேலாக சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனினும் இவ்வளவு நேரமும் இருந்ததைவிட அதன் வெப்பம் இப்போது பரவாயில்லாமல் இருந்தது. தன்னுடைய நாசியின் நுனியிலிருந்து, பாதத்திற்கருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கல்லின்மீது விழுந்த வியர்வைத் துளிகளைக் கொண்டு அவன் நேரத்தைக் கணக்கிட்டான். கங்காணி மிகவும் கோபத்தில் இருக்கவேண்டுமென்று அவன் நினைத்தான். பத்து அடிகளுக்கு அப்பாலிருந்த கால்களை அவன் மீண்டும் பார்த்தான். அவை அப்போதும் அதே இடத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டான். அவற்றைத் தாண்டி தன்னுடைய கண்களை நகர்த்தியபோது, மிகவும் உயரமாக வளர்ந்திருந்த தானியக் கதிர்களைவிட இன்னொரு மடங்கு உயரத்தில் ஒரு கறுப்பு நிழலாக ஃபிலிமோனின் உடல் தெரிவதைப் பார்த்தான். அவனும் வேலையை நிறுத்தச் சொல்லி வரும் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னுடைய முதுகில் ஒரு பகுதியில் உண்டான வலி அவனால் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. இது போதாதென்று தினாவை (தொழிலாளர்களின் உணவு) பற்றிய சிந்தனைகள் வேறு அவனை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன. தன் தலையை உயர்த்தியபோது, தானே ஏற்படுத்திய அந்தச் செயலால் கழுத்தின் தசைகள் வேதனையை உண்டாக்க, அவன் தன் கைகளை முழுமையாக கீழ் நோக்கித் தொங்கவிட்டான். தான் பிடுங்கவேண்டிய- வழவழப்பான இலைகளைக் கொண்ட கொழுகொழு என்று வளர்ந்திருந்த- களைகளைத் தொடும் அளவிற்கு அது தொங்கிக் கொண்டிருந்தது.
அதன் மெல்லிய தண்டுப் பகுதி பலமாக படும் வரை, அவன் விரல்களை நீட்டிக் கொண்டிருந்தான். கிளைகளுக்கு மத்தியில் அவன் தன்னுடைய விரல்களை நுழைத்தபோது, தன்னுடைய சரீரத்தை அவன் நன்கு நிமிர்த்தி வைத்திருந்தான். அதற்குமேலும் நிமிரக்கூடிய அளவிற்கு அந்தச் செடியிடம் சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய அளவில் பலமில்லையென்றாலும், அவனுடைய முழங்கால் மூட்டுக்குப் பின்னாலிருந்த சதைப் பகுதிகள் மிகவும் பயங்கரமாக வலித்தன. தொடர்ந்து அவன் அந்தச் செடியைப் பிடித்து மேலே தூக்கினான். அதன் வெள்ளை நிற வேர்களில் இறுக ஒட்டிக்கொண்டிருந்த கறுப்பு மண்ணின் அடர்த்தியான வாசனையை முகர்வதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.
அந்தச் செடியின் வேர்களை தன்னுடைய மேலுதட்டிற்கு அருகில் வைத்து ஆழமாக முகர்ந்துகொண்டே, பூமியில் இருந்த துளையைப் பார்த்தான் அவன். சொல்லப் போனால்- அன்றைய நாள் மிகவும் வெப்பமாகவே இருந்தது. சிறிதுகூட நீராவி இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணம்.
புலர்காலைப் பொழுதில், காலை நேரத்தின் ஆரம்ப நேரங்களில், சாயங்காலப் பொழுதின் பனித் துளிகளுடன் பரந்து கிடக்கும் வயல் வெளிகள் இன்னும் ஈரத்தன்மையுடன் இருக்க, மண்ணின் சிறுசிறு துளைகளில் இருந்துகூட நீராவி பரவலாகக் கிளம்பி மேலே வந்து கொண்டிருக்கும். வேலை செய்வதில் அந்த அளவிற்கு களைப்பு தோன்றாது. ஆனால், சூரியன் மேலே இருக்கும்போது, பிடுங்கப்பட்ட செடிகளால் உண்டான குழிகளில் இருந்து மட்டுமே நீராவி கிளம்பி மேலே வரும். அதுகூட மிகவும் குறைவான நேரம் மட்டுமே தங்கி நின்றிருக்கும்.
அவன் செடியைக் கீழே போட்டுவிட்டு, கவனித்தான். எதுவுமே இல்லை. உயரமான தானியக்கதிர்களின் இலைகளிலிருந்து புறப்பட்டு வந்த காற்றை மட்டும் உணரமுடிந்தது.
அவன் மீண்டும் தன்னுடைய சரீரத்தை நிமிர்த்து வைத்துக்கொண்டான். தான் கையில் பிடித்திருந்த செடி, அதற்குமேலும் பூமியில் இல்லாத நேரம் வரை, அவன் தன் சரீரத்தைச் சற்று பின்னோக்கி வளைத்து வைத்திருந்தான். இப்படித்தான் அவன் தன்னை பல சிரமமான அசைவுகளிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தான். இன்னும் சொல்லப்போனால் ஒரு செடியைப் பிடுங்க முயலும்போது, அவனுடைய சரீரத்தின் கழுத்துப் பகுதியிலிருந்த தசைகள்தான் உண்மையாகவே இயங்கிக் கொண்டிருந்தன.
அவனுடைய கையின் தசைகள், செயல்படவில்லை. வேர்களை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த மண்ணுக்குள்ளிருந்து செடிகளைப் பிடுங்குவதற்கான பலத்தைக் கொண்டு வருவதற்காக, அவன் அவ்வப்போது குனிந்து கொண்டிருந்தான்.
"தினா'விற்கான இறுதி மணி அடிப்பதைக் கேட்டபோது, அவன் ஏழாவது செடியைப் பிடுங்கிக் கொண்டிருந்தான். மாதலா தானியக் கதிர்களின் வழியாக மீண்டும் பார்த்தபோது, கங்காணியின் குரல் இன்னும் செவிகளில் விழவில்லையே என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டான். அவன் சிறிதுநேரம் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டான். ஆனால், காற்றின் மெல்லில் முணுமுணுப்புச் சத்தம் மட்டுமே கேட்டது.
தாங்கமுடியாத அளவிற்கு வேதனை உண்டாகும்வரை, மாதலா முன்னோக்கி வளைந்தான். செடியை இறுகப் பற்றிக்கொண்டே அவன் பின்னோக்கி வளைய, அது தரையிலிருந்து பெயர்ந்து தனியே வந்தது. அதன் வேர்களிலிருந்து தேள் ஒன்று தாவிக் குதித்தது. செடியை நேரடியாகத் தூக்க முடியாததாலும், கையில் ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்ததாலும், அதை அவன் தப்பித்து ஓடும்படி விட்டுவிட்டான். ஆனால், அவன் பயந்தே போய் விட்டான். தான் அந்த தேளால் கொட்டப்பட்டிருந்தால், மூன்று நாட்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வேதனையை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்த மாதலா இன்னும் சொல்லப்போனால் நான்காவது நாளன்று தான் இறந்துபோனாலும் போகலாம் என்றும் நினைத்தான். உண்மைதான்... அந்த அளவிற்குப் பெரிதாக இருக்கும் ஒரு தேளின் விஷத்தை, வேதனையுடன் மூன்று நாட்கள் தாங்கக் கூடிய அளவிற்கு அவன் பலமற்றவனாக இருந்தான்.
காலைப் பொழுதின் ஆரம்ப நேரங்களில், விட்டில் பூச்சிகள் பிடுங்கப்பட்ட செடிகளின் இலைகளிலிருந்து குதித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தேள்களும், பல்லிகளும், ஏன்.... பாம்புகளும்கூட தென்படும். இதே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோதுதான், ஒரு பாம்பு கடித்ததைத் தொடர்ந்து, பிட்டரோஸி மரணத்தைத் தழுவினான். வேறு யாருக்குமே பிட்டரோஸியைத் தெரியாது. ஆனால், அங்கிருந்த எல்லாருக்குமே அவனுடைய மனைவியைத் தெரியும். அந்தச் சம்பவம் நடந்தபிறகு, பொதுக் கடையில் விற்கப்படும் தனக்கான மதுவிற்கு யாரெல்லாம் பணம் தருகிறார்களோ, அந்த மனிதர்களுடனெல்லாம் அவள் படுக்க ஆரம்பித்தாள். யார் தனக்கு இருபது எஸ்க்குடோக்கள் (ஐந்து ஷில்லிங்குகள்) அளிக்கிறார்களோ, அவர்களுடன் மட்டுமே தான் படுக்க முடியும் என்று ஆரம்பத்தில் அவள் கூறிக் கொண்டிருந்தாள்.