தினா - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6779
மாதக் கடைசியில் பொதுக் கடைக்குச் செல்லும் போது தன்னுடைய ஒயினின் ஒரு பகுதியை நண்பர்களுக்கு மாதலா பரிமாறுவான். ஆனால், கங்காணி தன்னுடைய ஒயினை வேறு யாருடன் எந்தச் சமயத்திலும் பங்கு போட்டதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மதிய உணவின் போது பருகுவதற்காக அவருடைய மனைவி அனுப்பி வைக்கும் ஒயின் புட்டிகளை பெரும்பாலும் அவர் முழுமையாகப் பருகியிருக்கவே மாட்டார்.
ஒயின் சிவப்பும் மஞ்சளும் கலந்த அழுக்கடைந்த நிறத்தில் இருந்தது. புட்டியின்மீது வியர்வை படிந்திருந்தது. ஒயினைப் பழகும்போது, கங்காணி தன் கண்களை முழுமையாக மூடிக்கொண்டார்.
“மாதலா...'' ட்ஜிமோதான் அழைத்தான். “மாதலா, நாம் சென்று சாப்பிடுவோம்.''
நிழல்களுக்குக் கீழே வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த மனிதர்கள் ஓய்வெடுத்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். அவர்களில் மாதலாவிற்குத் தெரியாத பல மனிதர் களும்கூட இருந்தார்கள். ஆனால், அவனை எல்லாருக்கும் தெரியும். அவன் கடந்து சென்றபோது, அவனிடம் அவர்கள் விசாரிப்பார்கள்.
“மாதலா! நான் உன்னிடம் நேரடியாகக் கூறக் கூடாது. ஆனால், இதற்கெல்லாம் காரணம்- கங்காணித்தான். உன்னுடைய மகள் இங்கே வந்திருக்கிறாள். உன்னை அவள் பார்க்க விரும்புகிறாள்.''
அதற்குள் மரியா அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். “பிற்பகல் வணக்கம், அப்பா!''
“பிற்பகல் வணக்கம், என் மகளே!''
ட்ஜிமோ மரியாவிற்கு அருகில் வந்தான்: "மரியா, நீ பார்க்கவேண்டும் என்பதற்காக நான் உன் அப்பாவை இங்கே அழைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், நீ இங்கே இருக்கிறாய் என்ற விஷயத்தை மட்டுமே நான் அவனிடம் கூறியிருக்கிறேன். ஏனென்றால், உன் அப்பா எங்கே அமர்ந்திருக்கிறாரோ, அந்த இடத்திற்கு மிகவும் அருகில் தான் கங்காணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.''
“மரியா, வீட்டில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்?''
“மாதலா, அங்கே இருக்கும் நிழலுக்குச் சென்று நீ உன் மகளுடன் பேசிக் கொண்டிருப்பது தான் சரியாக இருக்கும். அங்கே சூரியனின் வெப்பம் இல்லை. அதுதான் சரியான இடம்... மரியா, நீ உன் அப்பாவை அந்த நிழலுக்கு அழைத்துச் சென்றுபேசு. அங்கே சூரியனின் வெப்பம் இருக்காது...''
ட்ஜிமோ மரியாவின்மீது மிகுந்த விருப்பம் வைத்திருக்கிறான் என்பதென்னவோ உண்மை. ஆனால், அவள் ஏராளமான மனிதர்களுடன் படுத்திருக்கிறாள் என்பதால், யாருமே அவளைத் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள் என்ற விஷயம் மாதலாவுக்கு நன்கு தெரியும்.
“எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் அப்பா. நான் உங்களைப் பார்ப்பதற்காகத்தான் வந்தேன்..''
“நான் நன்றாக இருக்கிறேன். மகளே!''
அங்கிருந்த எல்லா ஆண்களும் மரியாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அனைவரின் கண்களும் அவள் அணிந்திருந்த பல வண்ணங்களைக் கொண்ட மேலாடைக்குள் இருந்த அவளுடைய சரீரத்தின் அளவுகளையே மேய்ந்து கொண்டிருந்தன.
“பிற்பகல் வணக்கம், மரியா!'' எல்லோரும் அவளைப் பார்த்துக் கூறினார்கள். அப்போது அவளிடமிருந்து ஒரு பார்வை தங்களுக்குக் கிடைக்காதா என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவள் தரையிலிருந்து தன்னுடைய கண்களை உயர்த்தாமலே, அவர்களுக்கு அவள் பதில் வணக்கம் கூறினாள்.
சிறிது நேரத்திற்கு மாதலாவும் மரியாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
அங்கிருந்த எல்லா ஆண்களும் தன்னையே வெறித்துப் பார்ப்பதைப் பார்த்து மரியாவிற்கு என்னவோபோல இருந்தது.
“மாதலா, வந்து சாப்பிட வேண்டுமென்ற விருப்பம் உனக்கு இல்லையா?'' மீண்டும் ட்ஜிமோ கேட்டான்: “உண்மையாகவே, இதுதான் சாப்பிடுவதற்கான நேரம். ஏனென்றால், ந் குய்யானாவும் முத்தக்காட்டியும் ஏற்கெனவே உணவைத் தயாரித்து விட்டார்கள். உன் மகள் உன்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் விஷயம், கங்காணிக்குத் தெரியக் கூடாது என்பதற்காகக் கூறவில்லை. உண்மையிலேயே, இதுதான் சாப்பிடுவதற்கான நேரம்...''
“நான் என் மகளுடன் இருக்கிறேன், ட்ஜிமோ.''
கூடத்தின் ஒரு மூலையில் தன் கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு தோன்றிய கங்காணி அவர்களை நோக்கி வந்தார். “ஹலோ, மரியா! நீ இங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்? நீ மாதலாவைத் தூண்டில் போடுவதற்கு முயற்சிக்கிறாயா? அதற்கு சரியான ஆள் இல்லை, மாதலா. ஏனென்றால், அவனுக்கு வயது அதிகமாகி விட்டது. ஒருவேளை, ட்ஜிமோ... மரியா, நீ ட்ஜிமோவை வளைத்துப் போடுவதற்கு முயற்சிக்கிறாயா?''
“நான் ட்ஜிமோவைத் தூண்டில் போட்டு இழுக்க முயற்சிக்கவில்லை.'' மரியா கூறினாள். அவள் போர்த்துக்கீசிய மொழியில் பேசுவதற்கு முயற்சி செய்தாள்.
ஆச்சரியப்பட்ட கங்காணி, சிகரெட்டை தன் உதடுகளுக்குக் கொண்டு செல்லும் வழியில் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அவர் கேட்டார்: “ஆனால், நீ அவனுடன் படுக்க வேண்டுமென்று ஆசைப்படவில்லையா?''
தரையையே பார்த்துக் கொண்டிருந்த மரியா எந்தப் பதிலையும் கூறவில்லை.
“மாதலா, நாம் போய்ச் சாப்பிடுவோம். வயலில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், வேறு இடங்களில் பணி செய்பவர்களாக இருந்தாலும் ‘தினா'விற்கான நேரம் வந்தவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்.''
மாதலா அதற்கு உடனடியாக பதிலெதுவும் கூறவில்லை. அந்தச் சமயத்தில் அவன் தன்னுடைய மகளையே பார்த்துக் கொண்டிருந்தான். கங்காணி அவளுடன் உரையாடியபோது, அவள் என்ன நினைத்திருப்பாள் என்பதைக் கண்டுபிடிக்க அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். மரியா வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா, நீங்கள் போய் சாப்பிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.'' தன் பாதங்களை மணலுக்குள் பதிய வைத்துக்கொண்டே கூறினாள். தன்னுடைய நடுக்கத்தை தன் தந்தை நன்கு அறிவார் என்பதைப் புரிந்து கொண்டவுடன், அவள் வேகமாக தன் பாதங்களைப் பின்னோக்கி இழுத்தாள். தன் கைகளை தன்னுடைய மார்போடு குறுக்காக சேர்த்து வைத்திருந்த அவள், தன் முதுகுப் பகுதிகளை கைகளால் இறுகப் பற்றிக் கொண்டாள்.
மாதலா தன் மகளின் அருகில் வந்து, கீழ் நோக்கிக் கவிழ்ந்திருந்த இமைகளால் உண்டான நிழல்களுடன் இருந்த அவளுடைய கண்களைப் பார்க்க முயற்சி செய்தான்.
தன்னுடைய முகத்திற்கு மிகவும் அருகில் ஒலித்த ஆழமான குரலைக் கேட்டு, சற்று நகர்ந்து உட்கார்ந்த மரியா, தன் முதுகை கிட்டத்தட்ட திருப்பியவாறு தன் தந்தையிடம் கூறினாள்: “சரி... ஒன்றுமில்லை ஒன்றுமே இல்லை... அது என்னை என்ன நினைக்க வைக்கிறது என்றால்...'' அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு மேலும் கரிசனம் கலந்த குரலில் சொன்னாள். “எனக்குத் தெரியவில்லை. அப்பா, ஆனால் நான் நினைக்கிறேன். நீங்கள் போய் சாப்பிட வேண்டுமென்று...''
மாதலா மரியாவின் உடலைப் பிடித்து வட்டமாகத் திருப்பி, அவளையே பார்த்தான். அவனுடைய கால்கள் வளைந்து பரப்பி காணப்பட்டன. அவன் இமைகளுக்குப் பின்னால் முழுமையாக மூடிவிட்டிருந்த கண்களைப் பார்க்க முயற்சி செய்தான். “நீ அப்படி நினைக்கிறாயா?'' அவன் கேட்டான்.